Friday, November 6, 2020

ரிடர்ன்

 

காலையிலிருந்தே மொபைல் ஃபோனை ஐந்து நிமிடத்திற்கொருதரம் பார்த்துக்கொண்டிருந்தாள் சுதா. போன வாரம் ஆர்டர் செய்திருந்த ஹேண்ட்லூம் ஸாரி (ஸாரி, கைத்தறிப் புடவை) அவுட் ஃபார் டெலிவரி என்று மெஸேஜ் வந்திருந்தது. ஆவலுடன் டெலிவரி பாய்-யின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்தாள். ஃப்ளாட் என்பதால் அவள் செக்யூரிட்டிக்கு தகவல் சொன்னால்தான் அவனை உள்ளே அனுப்புவார்கள்.


! வந்துவிட்டது. உடனே செக்யூரிட்டிக்கு சொல்லி ஐந்து நிமிடத்தில் டெலிவரியும் ஆகிவிட்டது. ஆசையுடன் திறந்து பார்த்தாள். பளபளவென்று பிரகாசமான வண்ணங்களில் நெய்து அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த புடவை. உடனே பிரித்து விரித்து கண்ணாடி முன் நின்று தோளில் சார்த்தி அழகு பார்த்துக்கொண்டாள். அழகான டிசைன். அதற்கேற்ப தலைப்பு. இவ்வளவு மேட்சிங்காக கடையில்கூட கிடைக்காது. அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. கூடவே தன்னையும் மெச்சிக்கொண்டாள். நல்ல வேளை. ஆன்லைன் வியாபாரம் கற்றுக்கொண்டது எவ்வளவு செளகரியம்? வீட்டிலிருந்தபடியே நினைத்த நேரத்தில் நினைத்தவற்றை நினைத்த வண்ணத்தில் வாங்குவது அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. இதுவே கடைக்குப் போயிருந்தால் எத்தனை மணி நேரம் அலச வேண்டியிருக்கும்?


மகிழ்ச்சியுடன் திரும்பி மடித்து வைக்கத் தொடங்கினாள். என்னது இது? கண்ணாடியில் கோளாறா? இல்லை நான்தான் சரியாகப் பார்க்கவில்லையா? பார்டர் நான் ஆர்டர் செய்தமாதிரி இல்லையே? சந்தேகம் வந்தது. மீண்டும் ஃபோனை எடுத்து ஆர்டரை சரிபார்த்தாள். ஆம் அவள் நினைத்தது சரி. பார்டர் கலரும் சரி, அளவும் சரி, புகைப்படத்தில் இருந்ததைவிட சற்று வேறுபட்டிருந்தது. ஐயையோ! இப்போது என்ன செய்வது? ஆயிரத்து அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கியது வீணா என்று மனம் தத்தளித்தது. உடனே தன் ஆர்டர் விவரங்களையும் டெலிவரி விவரங்களையும் சரிபார்க்கத் தொடங்கினாள். ஆஹா! இதோ இருக்கிறது நமக்கு விடை என்று மனம் குதூகலித்தது. காரணம், வாங்கிய பொருட்களை திருப்பிக் கொடுக்கவும் வசதி இருப்பதை அவள் அப்போதுதான் அறிந்துகொண்டதுதான்.


ஐந்து நிமிடம் அதிலேயே துழாவித் துழாவி எதற்காக என்ன காரணத்திற்காக எல்லாம் வாங்கிய பொருட்களை திருப்பி அனுப்பலாம் என்பதை அறிந்துகொண்டாள். புடவையை அப்படியே மறுபடியும் வந்தமாதிரியே பேக் செய்து ரிடர்னுக்கு விண்ணப்பித்தாள். அடுத்த நாள் வந்து வாங்கிக்கொள்வதாக பதில் வந்தவுடன் நிம்மதியானாள்.


மறுநாள் அதே நேரத்திற்கு அதே டெலிவரி பாய் வந்து வாங்கிக்கொண்டான். ஏன் மேடம், எதற்காக திருப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவனிடமும் ஆர்டர் செய்தது வேறு வந்தது வேறு என்று பதில் சொல்லி விஷயத்தை முடித்தாள். அவனிடம் பேசிய சில நிமிடங்களில் அவன் பெயர் மொய்தீன் என்பதையும் இந்த ஏரியாவுக்கு பெரும்பாலும் அவன்தான் வருவான் என்பதையும் அறிந்துகொண்டாள். மூன்று நாட்களில் செலுத்திய பணமும் திரும்பி வந்தது அவளுக்கு ஆன்லைன் வியாபாரத்தில் நம்பிக்கையை அதிகரித்தது.


சில வாரங்கள் உருண்டோடின. ஒரு வார இறுதியில் கணவன் குமார் வெளியில் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான். போறதுதான் போறோம், கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி ஒரு ரெண்டுமணி நேரம் ஷாப்பிங் ஏதாவது பார்த்துவிட்டு பிறது டின்னருக்குப் போகலாமே என்று வேண்டுகோள் விடுத்தாள். அவனும் ஒத்துக்கொள்ளவே ரெஸ்டாரண்ட்டுக்குப் போகும் வழியில் உள்ள மாலிலேயே ஷாப்பிங் செய்யத் தீர்மானித்தார்கள்.


மால் என்னவோ கவர்ச்சியாகத்தான் இருந்தது. எஸ்கலேட்டர் என்ன, ஃபவுன்டன்கள் என்ன, அங்கங்கே ஜோடியாகத் திரியும் இளவட்டங்கள் என்ன, மூலைக்கு மூலை ஐஸ்க்ரீம், பீட்ஸா, குக்கீஸ், ஸோடா என்று சாப்பிட குடிக்க விதவிதமான பண்டங்கள் பானங்கள் எல்லாம் கண்ணைக் கவரும் அளவு இருந்தன. எவ்வளவு பணம் இருந்தாலும் அத்தனையும் அதற்கு மேலும் செலவழிக்கப் போதுமான கடைகளும் இருந்தன.


அகல விரிந்த கண்களுடன் அவள் அத்தனையையும் நோட்டம் விட்டவாறே தனக்கு நிஜமாகவே என்ன தேவை என்று நினைத்துப்பார்த்து கடைசியில் ஒரு ஜோடி காலணிகளும் ஸ்டைலாக ஒரு ஹேண்ட் பேக்-கும் வாங்கலாம் என்ற முடிவுடன் அவற்றிற்கான கடைகளில் நுழைந்தாள். எவ்வளவு அலசியும் அவள் விருப்பத்திற்கேற்ற பொருட்கள் கிட்டவில்லை. ஓன்று, மாடலில் ஏதாவது குறை இருந்தது. அல்லது அளவு சற்று பொருத்தமில்லாமல் இருந்தது. அவள் விருப்பத்திற்கேற்ப இருந்தால், அது விலை மிகவும் அதிகமாக இருந்தது. குமார் பரவாயில்லை என்றாலும் அவளுக்கு அவ்வளவு பணம் அவற்றில் போட மனமில்லாமல் அவைகளை நிராகரித்துவிட்டாள். நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்ததனால் ஒரு வழியாக போதும் என்று முடிவு செய்தனர். அவர்களுடைய ஷாப்பிங் எதுவும் வாங்காமல் விண்டோ ஷாப்பிங்காகவே முடிந்தது.


இந்த ஏமாற்றத்தை சரிசெய்ய ஈடுகொடுத்தாற்போல டின்னர் அமைந்தது குமாருக்கு சற்று நிம்மதியாக இருந்தது. இதமான குளிரில் மென்மையான வெளிச்சத்தில் நீண்ட நேரம் எண்ணங்களையும் பண்டங்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறியபடியே சாப்பிட்டு முடித்து திருப்தியுடன் வீடு திரும்பினர்.


மறுநாள் குமார் ஆபீஸுக்குச் சென்றபின் தான் முந்தைய தினம் கடைகளில் பார்த்த காலணி மற்றும் கைப்பை முதலியவை ஆன்லைனில் கிடைக்கிறதா என்று பரிசோதிக்க எண்ணினாள் சுதா. முதலில் காலணி. என்ன ஆச்சரியம், நேற்று அவள் கடையில் விலை அதிகம் என்ற ஒரே காரணத்தால் வேண்டாம் என்று வாங்காமல் விட்ட காலணி, அதே வண்ணம் அதே அளவு கொண்ட அதே காலணி, அவள் நேற்று பார்த்த விலையில் பாதியைவிடக் குறைவாக குறிப்பிடப்பட்டிருந்தது! டெலிவரி 5 முதல் 7 நாட்கள் என்று போட்டிருந்தது. பரவாயில்லை என்று முடிவெடுத்து ஆர்டர் செய்தாள்.


பின்னர் கைப்பை. மறுபடியும் ஆச்சரியம், அவள் நேற்று பார்த்ததை விட மிக அதிக அளவிலான பலவித வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளுக்கான தெரிவுகளுடன் அமைந்திருந்தன. ஒவ்வொன்றாகப் பார்க்க அவள்தான் நேரம் செலவிடவேண்டும். அதனாலென்ன, வீட்டுக்குள் வேலைகளெல்லாம் முடித்துவிட்டு ஹாய்-யாக ஃபேனுக்குக் கீழே ஊஞ்சலில் அமர்ந்து நிதானமாகப் பார்த்து கடைசியில் அவளுக்குப் பிடித்தமான ஒன்றைத் தேர்வு செய்தாள். ஆர்டர் செய்தாள். இது 7 முதல் 10 நாட்களில் வரும்போல் குறிப்பிடப்பட்டிருந்தது. காக்கத்தான் வேண்டும். வேறு என்ன வேலை? நாட்களை எண்ணத் தொடங்கினாள்.


ஒரு சில நாட்களில் அவள் சமைத்துக்கொண்டிருக்கும்போது மொய்தீன் போன் செய்தான். காலணி வந்தது. டீ சாப்பிடறியாப்பா? என்று அக்கறையுடன் விசாரித்து வாங்கிக்கொண்டாள். மொய்தீன், இல்லை மேடம், இப்போ நிறைய பேர் ஆன்லைன்ல வாங்குறதால நிறைய டெலிவரி இருக்கு, நின்னா லேட்டாயிடும், தாங்க்ஸ் என்று பணிவுடன் மறுத்து சென்றுவிட்டான்.


சமையலை முடித்துவிட்டு ஆவலுடன் பாக்கெட்டை திறந்து பார்த்தாள். அவள் அன்று விரும்பிய அதே காலணி. ஆஹா என்று சந்தோஷத்துடன் அணிந்து கொண்டு நடந்து பார்த்தாள். சிறிது லூஸாக இருப்பதுபோல் தோன்றியது. கழட்டி அளவைப் பார்த்தாள். அவள் நினைத்தது சரி. அவளுடைய அளவு 7. இந்தக் காலணியின் அளவு 8. ஆர்டரையும் பில்லையும் திரும்பிப் பார்த்தாள். இரண்டிலுமே அவள் கேட்டிருந்தாற்போல 7ஆம் அளவுதான் பதிவாகியிருந்தது. ஆனாலும் வந்ததென்னவோ 8ஆம் அளவு. சே! ஏன் தான் நம் அதிர்ஷ்ட்டம் இப்படி இருக்கிறதோ என்று வந்த காலணியை அப்படியே மறுபடி பேக் செய்து திருப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டாள்.


மறுநாள் மொய்தீன் வந்து வாங்கிக்கொண்டான். ஏன் மேடம் திருப்பறீங்க என்று கேட்டதற்கு வேறு என்னப்பா பண்ணறது? ஏழாம் நம்பர் சைஸ்-ன்னு ஆர்டர் பண்ணா ஏழாம் நம்பர்-ன்னு பில் போட்டு எட்டாம் நம்பர் அனுப்பிச்சிருக்காங்க...வேணும்னா பாக்கெட் பிரிச்சிக் காட்டட்டுமா? என்றாள் சுதா. ஐயோ அதெல்லாம் வேண்டாம் மேடம், நாங்களும் அவங்களுக்கு என்ன காரணத்தால ரிடர்ன் பண்ணறீங்கன்னு சொல்லனும்..அதனால் தான் கேக்கறோம்...தப்பா நெனச்சிக்காதீங்க...என்று கேட்டுக்கொண்டு விடைபெற்றான். போகும்போது, சைஸ்தான் பிராப்ளம் என்கிறதாலே அவங்களே சரியான சைஸை உடனேயே அனுப்பிச்சிடுவாங்க மேடம், நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதலும் சொல்லிவிட்டுச் சென்றான்.


நான்கு நாட்கள் கழித்து மீண்டும் மொய்தீனிடமிருந்து கால். உள்ளே வர அனுமதி தகவல் சொன்னபின் வந்தான் மொய்தீன். இப்போது அவனிடம் இரண்டு பார்சல். ஒன்று அவள் கேட்ட அளவில் மாற்றுக்காலணி. மற்றொன்று அவள் ஆர்டர் செய்திருந்த கைப்பை.


இரண்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு தயங்கி நின்றான் மொய்தீன். என்னப்பா நிக்கிற, ஏதாவது வேணுமா? என்று கேட்டாள் சுதா. மேடம், நீங்க தப்பா நினைக்கலைன்னா….. என்று இழுத்தான் மொய்தீன். என்ன சொல்ல வருகிறான் இவன்...ஏதாவது கடன் கிடன் கேட்பானோ என்ற சந்தேகத்தோடு, தப்பா நினைக்க மாட்டேன், சொல்லு...என்றாள் சுதா.


மேடம், இப்பா நான் காவிரி நகர், ரயில் காலனி, மாதாபுரம் போயிட்டு அப்புறம் திரும்பிப் போவேன்..நாளைக்கும் நாளான்னிக்குமா ரெண்டு நாள் லீவு கேட்டிருக்கேன் மேடம். அப்புறம் ரெண்டு நாள் ஹாலிடே வேற… அதனால… நீங்க தப்பா நினைக்கலேன்னா… என்று மறுபடி இழுத்தான்.


உம், சொல்லு என்றாள் சுதா.


இல்ல மேடம்...இப்ப நான் போயி திரும்பறத்துக்குள்ளே பார்சல நல்ல பாத்து இதுல ஒண்ணையோ இல்ல ரெண்டையுமோ திருப்பணும்னா ஒரு ரெண்டு மணிநேரத்தில எனக்கு சொல்லிட்டீங்கன்னா நான் திரும்பும் வழியிலேயே கலெக்ட் பண்ணிப்பேன்... உங்களுக்கும் இன்னிக்கே வேலை முடியும்….இல்லாட்டி நாலு நாள் வெயிட் பண்ண வேண்டிவரும்..ன்னு சொல்றதுக்குத்தான் எப்படி சொல்றதுன்னு யோசிச்சேன் மேடம்...தப்பா நினைக்காதீங்க...என்ற சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தான் மொய்தீன்.


இதில் தப்பாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது என்ற சிந்தனையுடன் பார்சலைப் பிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திற்குள்ளானாள் சுதா.


Wednesday, October 7, 2020

பறி

 

எநதவுயிரையுஙகொலலாதவொருசநநியாசியொருயேரிகரைமேலேபோறான. போகுமபோதநதயேரியிலேயொருசெமபடவனமீனபிடிததான. சநநியாசிசெமபடவனைபபாரததுநீயெபபோகரையேறுவாயெனறான. ஐயாயெனபறிநிரமபினாலகரையேறுவேனெனறான.


1826-ஆம வருடம் (ஆம், 1926 இல்லை, 1826! - அதாவது கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்!) அப்போதைய சென்னை தமிழ் சங்கத் தலைவராக இருந்த தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட கதாமஞ்சரி என்று நூலின் முதல் கதை இது.


தற்போதைய எழுத்துருக்களின் உபயோகத்தால் படிப்பதற்கு ஓரளவு சுலபமாக இருக்கிறது. அந்தக் கால அச்செழுத்துகளோடு படிக்க சற்று கடினமாகவே இருந்தது எனக்கு.


சுருக்கமாக (அல்லது விளக்கமாக) கதை இதுதான்: எந்த உயிரையும் கொல்லாத (அல்லது உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க விரும்பாத) சந்நியாசி ஒருவன் ஒரு ஏரியின் கரை மேல் நடந்துகொண்டிருக்கிறான். அவனுடைய பார்வை ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு செம்படவன் (மீனவன்) மேல் விழுகிறது. சுதந்திரமாக நீந்தும் மீன்களுக்கு எமனாக அவன் இருப்பதைக் கண்டு, அப்பா நீ (இந்த வேலையை விட்டு) எப்போது கரை ஏறுவாய்? எனக் கேட்கிறான். அதற்கு அந்த மீனவன். ஐயா, எனது பறி (பிடித்த மீன்களைப் போட்டுவைக்கும் கூடை) நிரம்பினால் நான் கரை ஏறிவிடுவேன் என்று பதிலளிக்கிறான். (அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை என் விளக்கம்). மீண்டும் ஒரு முறை முதல் நான்கு வரிகளைப் படித்துவிடுங்கள்.


இவ்வளவுதான். நான்கே வரிக் கதை. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று இந்தக் கதையைப் படித்ததிலிருந்து மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.


சந்நியாசி மீன்களின் துன்பம் எப்போது தீரும் என்கிறானா?


மீனவன், சந்நியாசி என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும்...தன் கூடை நிரம்பும் வரை தன் வேலை தொடரும் என்று உணர்த்துகிறானா?


அல்லது (ஒருவேளை) சந்நியாசிக்கு மீன் வேண்டுமானால் அவன் கூடை நிரம்பும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறானா?


சந்நியாசி மீன்களுக்காக பரிதாபப்படுவது சரியா? மீன் பிடித்து விற்கவில்லையென்றால் மீனவனின் குடும்பத்தினர் வயிறு காயாதா? அது துன்பமில்லையா? ஆகையால் சந்நியாசி கேட்பது தவறா?


எப்போது முடிக்கவேண்டும் என்று அறிந்தபின்கே காரியத்தில் இறங்கவேண்டும் என்று சந்நியாசி தன் கேள்வி மூலம் குறிப்புணர்த்துகிறானா?


அல்லது வயிறு நிரம்பவேண்டி (அதிக அளவில் உற்பத்தியாகும் சிற்றறிவின) உயிரைப் பறிப்பது பாவமில்லை. பறி நிரம்பினால் கரையேறிவிடுவேன், நிரம்பியதற்கு மேலும் பிடிக்கமாட்டேன் என்று செம்படவன் சந்நியாசியிக்கு பாடம் புகட்டுகிறானா?


அல்லது அவன் ஒரு சித்தனா? எந்நேரமும் எதையோ தேடும் உள்ளத்திற்கு தேடுவது கிடைத்து சிந்தை தெளிந்துவிட்டால் அதன்பின் கரையேறுவது எளிது என்று சூட்சுமம் உணர்த்துகிறானா?


சும்மா இருக்கிற மனதை இந்த மாதிரி ஒரு கதை தூண்டில்போட்டு இழுக்கிறதே!


இந்தக் கதையில் என்னைக் கவர்ந்தது பறி என்னும் சொல். அகராதியில் தேடினால் மீன்பிடிக்குங்கருவி என்ற பொருள் காணப்படுகிறது. பறிபோட, பறிவைக்க, பறிபின்ன, பறிமுடைய என்னும் வார்த்தைகள் பறி என்பது இன்னும் உபயோகத்தில் இருப்பதைக் காட்டுவதாகவே தோன்றுகிறது. நகரத்தில் வாழும் நமக்கு எலியைப் பிடிக்க '"பொறி'' வைத்துதான் பழக்கம்.


சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரம் என்ற சுற்றுலாத் தலத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு இடுப்பளவு தண்ணீரில் மீனவர்கள் ஒரு கையில் ஒருபுறம் அகன்ற பெரிய வாயும் மறுபுறம் வலை அல்லது வலைபோல் குச்சிகளால் மூடப்பட்ட குறுகிய வாயுடைய கூடை போன்ற பொறிகளை நீரின் வாட்டத்திற்கேற்ப வைத்துக்கொண்டு தண்ணீரில் பொறுமையாக அமர்ந்துகொண்டு மீன்கள் மாட்டுவதற்காக காத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். முதலில் அவர்கள் நெஞ்சளவு நீரில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்றே நினைத்தேன். அவர்கள் எழுந்தபின்புதான் இடுப்பளவைவிட குறைந்த ஆழம் கொண்ட தண்ணீரில் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் என்பது விளங்கியது.


பறிக்கு வருவோம். இந்த மீன்பிடிக்கும் பொறி(device, contraption) தான் பறியாகியதோ? அல்லது மீன்களின் உயிரைப் பறிப்பதாலோ?


எது எப்படியோ, முற்றுப்பெறாத இந்த நான்கு வரிக்கதை என் சிந்தையைப் பறிகொண்டதென்னவோ உண்மை!Tuesday, October 6, 2020

இருண்டதெல்லாம்

 

இப்போதெல்லாம் காலையில் சீக்கிரமாகவே எழுந்திருக்கப் பழகிவிட்டிருந்தான் மாதவன். வாசற்கதவுக்கு வெளியில் மாட்டியிருக்கும் பையில் பால் பாக்கெட் போடும் சத்தம் கேட்டவுடனேயே முதலில் அதை வெளியில் எடுத்து சானிடைஸர் ஸ்ப்ரே செய்து பின்னர் கிச்சன் சிங்க்கில் ஒரு முறை குழாய்த் தண்ணீரில் நன்கு கழுவிவிட்டபின்தான் பாலை ப்ரிட்ஜுக்குள் வைப்பான். இத்தனை சுத்தமாக வீட்டில் வேறு யாருக்கும் செய்ய அக்கறை இல்லை.


அப்பாவுக்கு வயதாகிவிட்டது. சொன்னால் கேட்கமாட்டார். நானெல்லாம் கறந்த பாலை அப்படியே குடிச்சவண்டா...என்னையெல்லாம் கொரோனா ஒண்ணும் பண்ணாது என்று அதட்டிவிடுவார். அவர் அந்தக் காலத்து மனுஷன். அவரை வேண்டுமானால் கொரோனோ பார்த்து பயப்படலாம். அதற்காக மற்றவர்களை விட்டுவிடுமா என்ன? சொன்னால் அவருக்குப் புரியாது.


அம்மா அப்பாவுக்கு பயப்பட மாட்டாள். ஆனால் இந்த விஷயத்தில் மருமகள் மாமனாரின் செயலை விரும்பாததால் அவளும் விரும்பாவிட்டால் மருமகளோடு ஒத்துப்போகிறமாதிரி ஆகிவிடும் என்பதால் ஒன்றும் சொல்லாமல் விலகியிருந்தாள்.


மனைவி யாருடைய பேச்சையும் கேட்கமாட்டாள். அதெப்படி அவர் சொல்லலாம். வீட்டில வயசானவங்க குழந்தைங்க எல்லாம் இருக்கும்போது சேஃப்டி ஃபாலோ பண்ணித்தான் ஆகனும்...ஆனா எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. இத பாருங்க... வீட்டுக்கு உள்ளே வர சாமான் எல்லாமே சுத்தமா சானிடைஸ் பண்றது உங்க பொறுப்பு...நாளைக்கு யாருக்காவது ஏதாச்சும் வந்தா உங்களைத்தான் சொல்லுவேன்...ஜாக்கிரதை...என்று மிரட்டிவிட்டிருந்தாள்.


மிரட்டினாலும் பரவாயில்லை...அட்லீஸ்ட் தன் பக்கம் இருக்கிறாளே என்று நினைத்துக்கொண்டிருந்தான் மாதவன். ஆனால் ஒரு நாள் தற்செயலாக அவள் பக்கத்து ஃப்ளாட் ரஞ்சனியிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டான்.


எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ரஞ்சனி...ஓரேயடியா கறந்த பால் குடிக்காட்டியும் வெளில போறப்ப மாஸ்க் போட்டுண்டு சரியான டிஸ்டன்ஸ் கீப் பண்ணா போறாதா என்ன? வந்தவுடனே கைகாலை நல்லா கழுவிண்டா போச்சு. அவ்வளவு தானே? இந்த பேஸிக்கை சரியா செய்றதை விட்டுட்டு எல்லாத்தையும் பாத்து பயப்பட்டுண்டு அதை இப்படி க்ளீன் பண்ணு, இதை இத்தன தடவை துடை..ன்னு என்னோட பிராணனை வாங்கிண்டு இருந்தா நான் மாத்திரம் இளிச்ச வாயா என்ன? அதான் என்னென்ன பண்ணணுமா எல்லாத்தையும் நீங்களே பண்ணிக்கோங்கோன்னு அவர் கிட்டயே பொறுப்பை தள்ளிட்டேன். மனசில தைரியம் வேணும்...அது இல்லாம எல்லாத்துக்கும் பயப்பட்டுண்டு எல்லார் மேலயும் சந்தேகப்பட்டுண்டு இருந்தா அவங்களோட காலம் தள்றது ரொம்ப கஷ்டம் ரஞ்சனி…


அடிப்பாவி...நீ வேல செய்யாம இருக்கத்தான் என் கிட்ட தள்ளிட்டியா … என்ற மனதில் பொருமினாலும் வேறு வழி இல்லாததால் அவனே தன் சக்திக்கும் நேரத்திற்கும் ஏற்றவாறு சமாளித்துக் கொண்டிருந்தான்.


ஒரு வழியாக காப்பி குடித்தபின் பாத்ரூம் போய்விட்டு வந்து, பேப்பர் படிக்கலாம் என்று டைனிங் டேபிளுக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி. அவனது அப்பா வழக்கத்தைவிட சீக்கிரம் எழுந்து வந்து உட்கார்ந்திருந்தார். அவர் கையில் துண்டு ரிப்பன்காளாக அன்றைய பேப்பர். என்னப்பா இது? பேப்பரை ஏன் படிக்காமலே கிழிச்சீங்க? என்று கேட்டான். நான் என்னடா பண்ணறது? யாரோ பேப்பர் மேல தண்ணி கொட்டி ஈரமாக்கியிருக்காங்க...கையில எடுத்தவுடனே அக்கக்கா கிழியுது….என்றார்.


அவனுக்கு அப்போதுதான் உரைத்தது. பேப்பர் மேல் சானிடைஸர் ஸ்ப்ரே செய்யும் போது அந்த பாட்டில் சரியாக வேலை செய்யவில்லை. குண்டூசி வைத்து சற்று குடைந்து மீண்டும் அடிக்கும்போது மொத்தமாக கொட்டித்தீர்த்தது. காய வேண்டும் என்று அவன்தான் பேப்பரை டைனிங் டேபிள் மீது பரப்பிவிட்டிருந்தான். காய்வதற்குள் அப்பா எடுத்து பிரித்து மேய்ந்துவிட்டிருந்தார். அது தண்ணி இல்லப்பா….சானிடைஸர் என்ற சொல்ல வாயெடுத்தான்..ஆனால் அவர் அவனை, ஏண்டா, பேப்பருக்கெல்லாமா சானிடைஸர் பூசுவாங்க? நியூஸ் எல்லாம் சுத்தாமாயிடுமா? என்ற ஏளனம் செய்வார் என்று ஊகித்து மெளனமாக அமர்ந்தான்.


அவனுக்கு எரிச்சலாக வந்தது. வீட்டில் இருந்தால் நிச்சயம் பொறுமை இழந்து தானே ஒரு கலகத்தை கிளப்பிவிடுவோம் என்று பயந்து ஒரு நடை வெளியில் போய் காய்கறியாவது வாங்கி வரலாம் என்று கிளம்பினான். ஒரு குல்லாவும் மாஸ்க்கும் அணிந்து இடையில் இருந்த கண்ணுக்கு ஒரு கூலிங் கிளாஸையும் நிரப்பிக்கொண்டு போனான். கண் வழியாகக் கூட கிருமி உள்ளே புகுந்துவிடுகிறதாமே?


பூசணி, பறங்கி, சேனை போன்ற ஏற்கெனவே வெட்டி வைக்கப்பட்ட காய்களை ஜாக்கிரதையாக தவிர்த்தான். யாராவது எடுத்துப் பார்த்து மீண்டும் வைத்திருக்கலாம் அல்லவா? கொஞ்சம் உருளை, கத்திரி, செளசெளா மாத்திரம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான். பையை கவனமாக ஓரத்தில் வைத்துவிட்டு சானிடைஸர் ஸ்ப்ரே அடித்து கைகளை சுத்தம் செய்துகொண்டு, சுதா, காய்கறி வாங்கி வெச்சிருக்கேன்...ஒரு மணி நேரம் யாரும் தொடாதீங்க...நானே கழுவிக் குடுத்தப்புறம் கட் பண்ணலாம்...என்று கத்தினான். அவன் மனைவி மெளனமாக தலையில் அடித்துக்கொண்டாள். என்னிக்குத்தான் இந்த கொரோனா கருமாந்திரம் ஒழியுமோ? அதுவரைக்கும் டெய்லி இவரோட கூச்சலை வேற கேக்கணும்….என்று பொருமினாள்.


மீனாக்குட்டி உள் அறையிலிருந்து ஒரு லாலி பாப் சப்பிக்கொண்டே வெளியே வந்தாள். அதைப் பார்த்த மாதவன் முகம் வெளிறி, அடீயேய், இது எங்கேயிருந்து வந்தது? யார் குடுத்தா? கழுவினியா? என்று சரமாரியாய் கேட்டான். குழந்தை இதை எதிர்பார்த்தவளாய், போப்பா...இது நாலஞ்சு மாசமா டேபிள்ளேயேதான் இருந்திச்சு..இதுலல்லாம் கொரோனா வராது...அப்படியே வந்திருந்தாலும் இப்போ போயிருக்கும்...டேஸ்ட்கூட நல்லாத்தான் இருக்கு...இண்ணொண்ணு இருக்கு...ஒனக்கு வேணுமா? என்று பதில் கேள்வி கேட்டாள்.


மொதல்ல வெளிய இருக்கிற தின்பண்டமெல்லாம் தூக்கிப் போடணும்...எதையாவது தின்னுட்டு ஒடம்புக்கு வந்தா நான்தானே பாத்துக்கணும்? என்று முணுமுணுத்தவாறே உள்ளே சென்றான் மாதவன். சென்ற வேகத்தில் குழந்தை தாணுவைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தான். என்ன பண்ணிட்டிருக்கீங்க வீட்டில எல்லாரும்? இதோ பாருங்க ...சானிடைஸர் கையிலயும் மூஞ்சிலயும் தடவிண்டு இருக்கான்..நல்ல வேளை கண்ணுல படலை...முதல்ல அவனை க்ளீன் பண்ணி குளிப்பாட்டுங்க...என்று கத்தினான்.


சுதா ஓடி வந்தாள். இதுக்குத்தான் கைக்கெட்டின இடத்திலேயெல்லாம் சானிடைஸர் வெக்காதீங்கன்னு அடிச்சுக்கறேன்...யாரு கேக்கறா? சுத்தம் வேண்டியது தான்...அதுக்கோசறம் ஒரு அளவு வேண்டாமா? போற போக்கில சாம்பார் ரசத்திலல்லாம் கூட சானிடைஸர் போட்டுத்தான் சமைக்கணும்னு சொல்லுவீங்க போலிருக்கே...சே….என்று ஓலமிட்டுக்கொண்டே ஒரு கையில் குழந்தையையும் இன்னொரு கையில் டவலையும் தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்கு ஓடினாள்.


டொக் டொக்...கதவைத் தட்டும் சத்தம்.

"யாரு பாரு சுதா" கத்தினான் மாதவன்.

நான் தான் குழந்தையை குளிப்பாட்டிட்டிருக்கேன்னு தெரியும்ல…” அதைவிட அதிகமாகக் கத்தினாள் சுதா.

சரி, சரி, இதோ நானே பாக்கறேன்" என்று அலுத்துக்கொண்டே போய் கதவைத் திறந்தான் மாதவன் வந்திருந்தது பிக் பாஸ்கட் டெலிவரி பாய்.

ஏம்ப்பா...மாஸ்க்கெல்லாம் போடறது இல்லியா?”

இருக்கு சார்….இவ்வளவு வெயிட் தூக்கிட்டு கேட்லேர்ந்து வீட்டுக்குள்ள வர்றதுக்குள்ளே வேர்த்து மூச்சு முட்டுது சார்...அதனாலதான் கழட்டியிருக்கேன்….இதோ பாருங்க" என்று ரஜினி ஸ்டைலில் ஒற்றை விரலை காலருக்குள் விட்டு சுழற்றி பின்பக்கம் போயிருந்த மாஸ்க்கை எடுத்துக் காண்பித்தான் டெலிவரிபாய்.

நல்லா பேசுங்க...கொரோனா மூச்சுக் காத்துலேயே பரவுதாம்...இப்படி மாஸ்க்கும் போடாம சத்தமா வேற பேசினா ரொம்ப சுலபமா உங்கேட்டிருந்து எங்களுக்கு வந்துடும் தெரிஞ்சிக்கோ" என்றான் மாதவன்.

ஏன் சார், உங்ககிட்டேருந்து எங்களுக்கு வராதா? சொல்லப்போனா நாங்கதான் நிறைய ரிஸ்க் எடுக்கறோம்...எந்த வீட்டுல கொரோனா இருக்கு எந்த வீட்டுல இல்லைன்னு தெரியாம எல்லார் வீட்டுக்கும் டெலிவரி பண்ணனுன்னு எங்க தலையெழுத்து...சீக்கிரம் செக் பண்ணிக்கோங்க சார்...இன்னும் நாலு வீட்டுக்குப் போகணும்" என்று புலம்பினான் டெலிவரிபாய்.

மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல் அவனை கட் பண்ணி அனுப்ப முனைந்தான் மாதவன்.


டெலிவரி பசங்ககிட்டேல்லாம் எதுக்குங்க வம்பு உங்களுக்கு? வாங்கி வெச்சிண்டு அனுப்ப வேண்டியதுதானே? சரி, அதுல சேமியா மாத்திரம் எடுத்துக் குடுங்க….உப்புமா பண்ணனும் அப்பாவுக்கு...இன்னிக்கு சாப்பிட மாட்டாராம்" என்றபடி குழந்தையின் தலையைத் துவட்டிக்கொண்டே பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் சுதா.


ஏய் ஏய் அதை எடுக்காதே...கருமம் பிடிச்ச டெலிவரி பாய் மாஸ்க்கும் போடலே க்ளவுஸும் போடல...எதுல எந்த வியாதி இருக்குமோ...கொஞ்சம் இரு...எல்லாத்தையும் சானிடைஸ் பண்ணித் தறேன்...அதுக்கப்புறம் சமைக்கலாம்...என்று கத்தியபடியே சானிடைஸர் எடுக்க விரைந்தான் மாதவன்.


வாஷ்பேசின் ஒரு ஓரத்தில் சானிடைஸர் பாட்டில். இன்னொரு ஓரத்தில் கரும்பச்சையாய் ஒரு உருண்டை. ஏதோ நாற்றம் எடுத்தாற்போல் இருந்தது மாதவனுக்கு. அருகில் சென்று முகர்ந்து பார்த்து சரேலென்று விலகினான். என்னதிது கண்ணறாவி? சாணி உருண்டை மாதிரி இருக்கு? ஒரே நாத்தம்...இதை யாரு இங்கே வெச்சா? என்று கத்தினான். சுதா அவனது அம்மாவைச் சுட்டிக் காண்பித்து கண்ணை உருட்டினாள்.


அம்மா! இது என்னது? உன் வேலையா? சாணியெல்லாம் வீட்ல வெச்சிருக்கே? என்று ஆத்திரமாய்க் கேட்டான்.


என்னடா இது எல்லாத்துக்கும் கத்தறே? நாளைக்கு வெள்ளிக்கிழமை...நல்ல நாள்...வாசல்ல மெழுகனும் நான்தான் பசும்பால்காரன்கிட்ட சொல்லி வரவழைச்சேன்...சாணி தெளிச்சி மெழுகினா கொரோனாவாது கிரோனாவாவது? எதுவும் உள்ள தலை காட்டாது தெரிஞ்சிக்கோ! என்று அம்மா அவள் பக்க நியாயத்தை எடுத்து வைத்தாள்.


பேஷ் பேஷ்! பையன் சானிடைஸர் பைத்தியம்! அம்மா சாணிடைஸர் வைத்தியம்! என்று இடைச்செருகினார் அப்பா.


என்ன என்னைப் பாத்தா பைத்தியமா தெரியுதா உங்களுக்கெல்லாம்? உங்க நல்லதுக்காகத்தானே இத்தனையும் செய்யறேன்? என்று பதிலுக்குக் கத்தினான் மாதவன்.


சுதா சமாதானத்துக்கு வந்தாள். உங்களை யாரும் ஒண்ணும் சொல்லலை. ஆனா, அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் விஷம். அதைத் தெரிஞ்சுக்கோங்க. கொரோனாவுக்கு பயப்பட வேண்டியது தான். ஆனா உலகத்தில கொரோனாவைத்தவிர வேற வேலை எதுவுமே இல்லையா என்ன? வேளா வேளைக்கு குளிக்கணும், சாப்பிடணும், ஆபீஸ் வேலை பாக்கணும், ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட பண்ணணும்..கொரோனா..கொரோனான்னு எப்பப்பாத்தாலும் சானிடைணுரும் கையுமா இருந்தா மத்த வேலையெல்லாம் எப்படி நடக்கும்? கொஞ்சம் விட்டுக்கொடுத்துத்தான் போகணும்...என்று அட்வைஸ் செய்தாள்.


ஆமாண்டீ...இப்போ கத்துவீங்க...யாருக்காவது கொஞ்சம் உடம்பு சரியில்லேன்னா பாப்போமே...அப்போ எல்லாம் பேயறைங்சா மாதிரி இருப்பீங்க..என்று பதிலுக்கு கத்தினான் மாதவன். அதன் பிறகு வீடே அமைதியானது. சிறிது நேரம்.


திடீரென்று மீனாக்குட்டியின் அழுகை சத்தம். என்னடி ஆச்சு? ஏன் அழறே? என சுதா கேட்க, அழுகை இன்னும் தீவிரமாயிற்று. அம்மா எனக்கு பயம் இருக்கும்மா...எனக்கு கொரோனா வந்திருக்கும்மா….நான் செத்துப்போயிடுவேனாம்மா? என்று கேட்டுக்கொண்டே பலமாக விக்கி விக்கி அழுதாள் மீனா. ஏண்டி இப்படியெல்லாம் பேசறே? என்ன ஆறதுன்னு சரியா சொல்லு...என்னங்க… இங்கே வாங்க இவ என்னமோ ஒளர்றா என்னன்னு விசாரிங்க….என்று பாதி பயத்துடன் கணவனை துணைக்கு அழைத்தாள் சுதா.


மாதவன் ஓடி வந்தான். அவனைப் பார்த்ததும் அம்மாவிடம் ஒடுங்கிக் கொண்டாள் மீனா. சொல்லுடி...அப்பாகிட்ட சொல்லு….என்று சுதா தூண்ட, மீனா அழுதுகொண்டே, அப்பா...டாக்டர்கிட்ட போகவேணாம்ப்பா….அப்புறம் கொரோனான்னு என்னை தனியா கூட்டிண்டு போயிடுவாங்கப்பா...ப்ளீஸ்...நான் இனிமே உங்களைக் கேக்காம எதுவும் சாப்பிட மாட்டேன்ப்பா...என்று கேவிக் கொண்டே அழுதாள். மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மொதல்ல அழுகையை நிறுத்திட்டு அழாம சொல்லு உனக்கு என்ன ஆறதுன்னு...கொரோனாவா இல்லியான்னு நான் பாக்கறேன்...என்று சற்று ஆதரவாகப் பேசினான்.


கோலிகுண்டு போன்ற கண்களில் இருந்து நீர் வழிய, மீனா விக்கிக் கொண்டே, அந்த லாலிபாப் சாப்பிட்டேனில்ல...கொஞ்ச நேரத்திலே தொண்டை வலிக்கறா மாதிரி இருந்தது...நீங்கள்ளாம் திட்டுவீங்கன்னு யார்கிட்டையும் சொல்லாம் ஃபிரிஜ்லேந்து தண்ணி மாத்திரம் குடிச்சேன்...இப்போ வலி இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு..இது கொரோனாவாப்பா? என்று


மாதவனுக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. அடி பைத்தியமே, இதுக்கா இப்படி பயப்பட்டே? இது வெறும் தொண்டை ப்ராப்ளம்தான்...ரொம்ப பழைய மிட்டாயை எடுத்து சாப்பிட்டிருக்கே...அதனால இருக்கும்...தொண்டைல பிராப்ளம் வந்தா வெந்நீர் குடிக்கணும்.. நீ மேதாவித்தனமா யார் கிட்டயும் கேக்காம ஜில் தண்ணி குடிச்சா தொண்டை இன்னும் மோசமாத்தான் ஆகும்….ஒண்ணும் கவலைப்படாதே...வெந்நீர்ல உப்பு போட்டு ஒரு மணிநேரத்துக்கு ஒரு தடவை கொப்பளிச்சிட்டே இரு...சாயங்காலத்துக்குள்ள சரியாப் போயிடும் பார்….என்று அவளை அணைத்துக்கொண்டு தலையை கோதிவிட்டபடியே சமாதானம் செய்தான் மாதவன். அழுகை நின்று முகத்தில் சிரிப்பு தவழ, அப்போ அந்த இன்னொரு மிட்டாயையும் சாப்பிட்டுவிட்டு கார்கிள் பண்ணட்டுமா? என்று மீனா குறும்பாகக் கேட்க அனைவரும் சிரித்தனர்.


குழந்தையின் பயம் அவனுள் அபாய எச்சரிக்கை எழுப்பியது. சுதா சொல்வது சரிதான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்..பயப்படுறவன் பார்வைக்கு பார்ப்பதெல்லாம் கொரோனா...உலகத்திலிருந்து ஒழிக்கிறார்களோ இல்லையோ..முதலில் உள்ளத்திலிருந்து கொரோனாவை ஒழிக்கவேண்டும் என்று உறுதி பூண்டான் மாதவன். மீனாக்குட்டியைத் தூக்கி முத்தமிட்டு, வா குட்டி, சாமானெல்லாம் எடுத்து வைக்கலாம்….என்று முதல் முறையாக சானிடைஸர் எடுக்காமல் வேலைக்கு இறங்கினான்.


Saturday, September 19, 2020

தும்பி

 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ பழியியது

கெழீஇய நட்பின் மயிலியற் செரி எயிற்று அரிவை கூந்தலின்

நறியதும் உளவோ நீயறியும் பூவே

சொல் பார்க்கலாம்...என்று சீண்டினான் கணவன்


என்ன, நேத்திக்கு திருவிளையாடல் பாத்ததுக்கு இன்னனிக்கு மூடு வந்திருக்கோ ஐயாவுக்கு? அது பழியியது இல்லை, பயிலியது! இப்போ அது எதுக்கு? காலைல ஏகப்பட்ட வேலை கெடக்கு.. வேலைக்காரி வேற வருவாளா மாட்டாளா தெரியல.. ஏதாவது டவுட்டுன்னா நேரா அந்த தும்பிகிட்டயே கேட்டுக்குங்க...நான் வரலை இந்த விளையாட்டுக்கு..என்று படபடவென பொரிந்தாள் கல்பனா.


ஏண்டா டென்ஷனாகுற? என்ன ஹெல்ப் வேணும் சொல்லு..நான் செய்யறேன்.. ஆமாம்.. இன்னிக்கு ஹாலிடேதானே .. மூடு வந்தா என்ன தப்பு .. எப்படியும் லாக்டவுனாலயும் கொரோனாவாலயும் அவனவன் பயந்துக்கிட்டு வீட்டோட இருக்கான்...யாரும் வரப்போறதில்ல...இன்னிக்கு நம்ம ராஜ்யம் தானே... வேலையெல்லாம் நிதானமா செஞ்சிக்கிட்டா போச்சு...என்று வம்புக்கிழுத்தான் முரளி.


அவர்கள் இளம் தம்பதி. திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றது. இன்னமும் குழந்தை இல்லை. முரளி ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறான் . கல்பனாவும் படித்தவள்தான் ஆனால் என்னவோ இன்னொருவரிடம் வேலைக்குப் போகும் எண்ணம் அவளுக்கு ஆரம்பித்திலிருந்தே இல்லை. ஒன்றோ இரண்டோ பெற்றுக்கொண்டபின் வீட்டோடு இருந்துகொண்டு ஏதாவது தொழில் செய்யலாம் என்பது அவள் எண்ணம். அதற்கான அறிவும் திறமையும் நம்பிக்கையும் அவளுக்கு நிறையவே இருந்தது. எனவே தனிக்குடித்தனத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்


ஆனால் இந்த லாக்டவுன் அறிவிப்புக்குப் பின் நடைமுறைச் சிக்கல்கல்கள் அவ்வப்போது வந்ததன. அவர்கள் இருக்கும் கேட்டட் கம்யூனிட்டியில் கொரோனா வந்துவிடக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். எந்த பிளாக்கில் யாருக்கு சிறிது அறிகுறி வந்தாலும் உடனே டெஸ்ட் எடுக்க வேண்டும், வேலையாட்களை நிறுத்த வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள். அவை மிகத் தற்காலிகமாக இருந்தாலும் அவளுக்கு எரிச்சலைத் தந்தது.


அப்படித்தான் இன்றும் வேலைக்காரி வரப்போவதில்லை என்ற அனுமானத்தில் அவள் சிறிது பதட்டமாக இருந்தாள். ஆனால் முரளி கெட்டிக்காரன். வேலையிலும் சரி, வீட்டிலும் சரி சக மனிதர்களை சரியாக எடைபோட்டு அவர்களுக்குத் தக்கமாதிரி நடந்துகொண்டு எல்லா இடத்திலும் நல்ல பெயர் பெற்றிருந்தான். மனைவிமீது மிக்க அன்பு கொண்டிருந்தான். விளையாட்டுக்கு சீண்டினாலும் அவள் கண்ணில் நீர் வழிந்தால் நிஜமாகவே அவன் நெஞ்சில் உதிரம் கொட்டும். அவளும் அவன்மேல் உயிராக இருந்தாள்.


ஐயாவுக்கு அவ்வளவு அக்கறை இருந்தா சூப்பர்வைஸர்கிட்ட கேட்டு இன்னிக்கு வேலைக்காரியை விடுவாங்களா இல்லையா கேட்டு ஒருவேளை விடல்லைன்னா எல்லா பாத்திரத்தையும் தேச்சுக் குடுத்திடுவீங்களாம்...என்றாள் கல்பனா.


அதுக்கென்ன.. தாராளமா... ஆனா அதுக்கு மோட்டிவேட் பண்றாமாதிரி சூப்பரா ஸ்ட்ராங்கா ஒரு காபி மாத்திரம் போட்டுக்குடேன்...அது சரி, நீ என்ன பண்ணப் போறியாம்?


நீங்கதான் ஏதோ தும்பிகிட்ட கேக்கச் சொல்லிருக்கீங்களே...நான் மொட்டை மாடிக்குப் போய் அங்கே ஏதாவது தும்பி இருக்கா பாத்துட்டு அங்க இல்லன்னா ...கார்டனுக்கும் போய் பாத்துட்டு வரேன்... என்று சீண்டினாள்.


சரி...நீ என்ன வேணும்னாலும் பண்ணு.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு இப்போ காப்பி கிடைக்குமா கிடைக்காதா?


அப்படி வாங்க வழிக்கு...காப்பி இல்லேன்னா..அதுவும் நான் போடலைன்னா உங்களுக்கு வேலையே ஓடாதே...என்று செல்லமாய் கன்னத்தில் கிள்ளு கிள்ளிவிட்டு காப்பி போடச் சென்றாள்.


அப்போது அவனுடைய போன் ஒலித்தது.


இன்னிக்கு யாரு போன் பண்றாங்க என்று சலித்துக்கொண்டே போனை எடுத்தான் முரளி. அவனது முகம் மாறியது குட் மார்ணிங் சார்....யெஸ் சார்...ஆமாம் சார்.. ஆபீஸ்ல செக்யூர்டா லாக் அண்ட் கீலேதான் இருக்கு.. ஆமாம் சார்....என் கண்ட்ரோல்லதான் சார் இருக்கு....


கல்பனா காப்பி கொண்டு வந்து வைத்தாள் அவளைக்கூட பார்க்காமல் போனிலேயே கவனமாக இருந்தான் முரளி.


ஹண்ட்ரெட் பர்ஸண்ட் சேஃபாத்தான் சார் இருக்கு... ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் சார்...


அவள் காப்பியை எடுத்துக்கொள்ளும்படி சைகை காட்டினாள் அவன் சற்றுப் பொறு என்பதுபோல் பதில் சைகை காட்டி போனில் பேச்சைத் தொடர்ந்தான்


இன்னிக்கே வேணுமா சார்? ஆபீஸ் மூடியிருக்குமே சார்.. நம்ம ப்ளோர் செக்யூரிட்டி யார் இருப்பாங்கன்னு தெரியாது...ன்று மெல்ல இழுத்தான் உடனேயே, நோ ப்ராப்ளம் சார்..நான் காண்டாக்ட் பண்ணிக்கறேன்.. நீங்க எப்போ வர்றதா இருக்கீங்க சார்?...பதினொண்ணா சரி சார்...நான் பத்தரைக்கே அங்கே போய் சேஃபைத் தெறந்து டாக்குமெண்ட் எடுத்து வைக்கறேன் சார்..சுமாரா எவ்வளவு நேரம் வேலையிருக்கும் சார்? உங்களுக்கு ப்ரஞ்ச், மீல் ஏதாவது வேண்டியிருக்குமா ரெஸ்டாரண்டெல்லாம் எவ்வளவு சேஃப்ன்னு தெரியல சார்.... என்று பதட்டமாகப் பேசினான்


அவ்வளவுதான்...முரளி ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்கு ஜூட்..ன்பதைப் புரிந்துகொண்ட கல்பனா சற்று சோகமானாள் அதைக் கவனித்த முரளி உடனேயே அவளை சமாதானப்படுத்தினான் நீ கவலைப்படதே பேபி..இதோ பத்து நிமிஷத்துல பாத்திரம் நான் ரெடி பண்ணிக் குடுத்திடறேன்..ஒரு ரெண்டு இல்ல மூணு மணி நேரம் சமாளிச்சிக்கோ..நான் சட்டுண்ணு ஆபீஸ் போயி எம்டியோட வேலையை முடிச்சிக் கொடுத்திட்டு வந்துடறேன்...வரே வரும்போது நான் போகமாட்டேன்னு சொல்லமுடியாதில்லையா அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா கண்ணா..என்றபடி எழுந்தான்


அரை மணி நேரத்திற்குள் வேலைகளை முடித்து குளித்து உடை மாற்றி ஆபீஸுக்கு கிளம்பிச் சென்றான் முரளி. கல்பனாவுக்கு போரடித்தது முரளி திரும்பி வந்தபின் சமையலைப் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி துணிகளை மாத்திரம் மடித்து வைக்க நினைத்து பால்கனிக்குச் சென்றாள். பால்கனியின் இரண்டு ஓரத்திலும் வைக்கப்பட்டிருந்த பூத்தொட்டிகள் அவள் கவனத்தைக் கவர்ந்தன


எப்போது வந்தன இந்தத் தொட்டிகள் என்று ஆச்சரியப்பட்டாள் அவற்றில் ஒன்றிரண்டு பட்டு ரோஜா பூக்கள் மலர்ந்திருந்தன மேலும் நிறைய மொட்டுக்கள் அரும்பியிருந்தன அவளுக்கு பட்டு ரோஜா என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் இவை எப்போது, எப்படி வந்தன? முரளிதான் தனக்குத் தெரியாமல் சர்ப்ரைஸாக இருக்கவேண்டும் என்று வைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்து மகிழ்ச்சியில் மூழ்கினாள் தன் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் கணவன் வாய்க்க எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டாள் அந்தக் கணத்தில் அவன் அங்கிருக்க வேண்டும் என்று விரும்பினாள் உடனே அவனுக்கு போன் செய்தாள்


அடுத்த நொடியே முரளி போனை எடுத்தான். னால், எடுத்தவுடனே, கண்ணம்மா, பீஸ்ல எம்டி இருக்கும்போது நிதானமா பேச முடியாது கண்ணா, தாவது அவசரம்னா மாத்திரம் சொல்லு..இல்லாட்டி வேலை முடிஞ்ச உடனே நானே போன் பண்றேன்..என்றான்


ஏமாற்றமடைந்த கல்பனா, ஒண்ணுமில்லீங்க, வீட்டுக்கு வந்தப்புறம் பார்த்துக்கலாம்...சாப்பிட வந்திடுவீங்கதானே என்று கேட்டுக்கொண்டு போனை வைத்தாள்.


கிட்டத்தட்ட இரண்டு மணி வரை நெட்டி நிமிர்த்திவிட்டார் எம்டி. நம்ம ஊர்லதான்யா லாக் டவுனெல்லாம். ஸ்வீடன் க்ளையண்ட்டுக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது கொஞ்ச காலம் டிலே ஆகிறதுக்கே காம்பென்ஸேஷன் அது இதுன்னு பேசறான்...து தான் அவனோட காண்ட்ராக்ட்ல என்னவெல்லாம் கமிட் பண்ணியிருக்கோம், இது வரைக்கும் பண்ணதுக்கு அவன் சரியா பேமெண்ட் குடுத்திருக்கானா எல்லாம் பார்க்கிறதுக்குத்தான் உன்னை வரச்சொன்னேன். நல்ல வேளை, ம்ம பக்கம் ஏதும் ஃபால்ட் இல்ல..இது வரைக்கும் கமிட்மெண்ட் கீப் அப் பண்ணியிருக்கோம்...இனிமே அவன் பணம் ரிலீஸ் பண்ணாத்தான் அடுத்த ஸ்டேஜ் எடுத்துப்போம்னு தைரியமாச் சொல்லலாம்....ரொம்ப தேங்க்ஸ் முரளி, சாரி உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்....ஐ லைக் யுவர் வொர்க் அண்ட் ஆட்டிட்டியூட்...கீப் இட் அப்...என்று பாராட்டி கைகுலுக்க வந்து பின்னர் வேறு வழியில்லாமல் கும்பிட்டு வணக்கம் சொல்லி விடைபெற்றார்.


எம்டியையே கும்பிட வைத்த கொரோனாவை நினைத்து சிரித்தபடியே வீட்டுக்குப் புறப்பட்டான் முரளி.


காலிங் பெல் அழுத்தியவுடனேயே விரைவாய் வந்து கதவைத்திறந்தாள் கல்பனா. முரளி உள்ளே

நுழைந்தவனை அழுத்தி கட்டிக்கொண்டாள் ஏய், ன்ன ஆச்சு இன்னிக்கு? ஆபீஸுக்குத் தானே போனேன் என்றபடியே அவளது தலைமுடியை கோதிவிட்டான்


அதை எப்போ கொண்டுவந்து வெச்சீங்க?


எதை?


எதை? ஒண்ணும் தெரியாத பாப்பா..பதில் சொல்லாட்டி உதைதான்!


யம்மாடி, நீ செஞ்சாலும் செய்வே...உனக்குப் பிடிக்குமேன்னு தான் செஞ்சேன்...உன்னை நான் முதல்ல பாத்து பேசும்போது உனக்கு எது ரொம்ப பிடிக்கும்னு கேட்டேன்...ஞாபகமிருக்கா? அப்போ நீ சொன்ன பதிலை வெச்சுத்தான் இதை வாங்கி வெச்சேன்... ஏன் பிடிக்கலையா?


ஆமாம்..பிடிக்கலை...


பிடிக்கலையா? அப்போ நீ அன்னிக்கு சொன்னது பொய்யா?


சேச்சே...நான் பொய்யெல்லாம் பேசறதில்லை..

அப்போ இது பிடிச்சிருக்குத் தானே?


இல்லை...பிடிக்கலை...


அது தான் கேக்கறேன், ஏன்?


ஏன்னா அதை நான் காலைல மொதல்ல ஆசையாப் பாக்கும்போது நீங்க பக்கத்தில இல்லை...


அடிப்பாவி..இவ்வளவுதானா நான் பயந்தே போயிட்டேன் இப்போதான் நான் வந்துட்டேனே..வா போய் பாக்கலாம்..இப்போ பிடிக்கும்தானே?


இப்பவும் வேணாம்...


சரியாப்போச்சு....ஏன்?


இப்போதான் நீங்க வந்திட்டீங்களே....அது வேணாம்!


முரளிக்கு தலை சுற்றியது இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது! இறுக்கி அணைத்துக்கொண்டே, ரி இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே


உங்க தும்பிகிட்டயே கேளுங்க...பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் உள்ளதா என்பதைப் போல பெண்களுக்கு எது ஏன் எப்போது பிடிக்கும் என்பதற்கும் பதில் இருக்கிறதா என்று!


கல்பனாவின் விழிகளின் ஓரம் நீர் தளும்பியதைப் பார்த்த முரளிக்கு ஒன்று மாத்திரம் நன்கு புரிந்தது அவள் இதயத்திலும் நிறைய ஈரம் இருக்கிறது!


Thursday, August 13, 2020

காக்கா முட்டை

 

ஐந்து ஆறு ட்ரிப் அடித்தாகிவிட்டது காலையிலிருந்து. முந்தின நாள் அலைச்சலிலிருந்து ஞாபகம் வைத்துக்கொண்டு சரியான இடங்களுக்குப் போய் பார்த்த பொருட்கள் அதே இடத்தில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொண்டு ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வந்து சேர்த்ததிலேயே களைப்பாக இருந்தது. சற்று ஓய்வெடுக்கலாம் என்று நிழலில் அமர்ந்தான் அவன்.


என்னா ஒக்காந்துட்டே…? சும்மா நாலு சுத்து சுத்திட்டு கொஞ்சம் சாமான் கொணாந்து போட்டா போறுமா? எத்தினி வேல இருக்கு இன்னும்..? என்று படபடத்தாள் அவன் மனைவி.


சும்மா கரையாதேம்மே...நா என்னா சும்மாவா ஒக்காந்திருக்கேன்? இந்த கொரோனா வந்தாலும் வந்திச்சு எங்கியுமே எந்த வேலயும் நடக்கல….சாப்பாடும் கெடைக்கல…. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கட்டமெல்லாம் திருப்பி கட்ட ஆரம்பிச்சிருக்காங்க… அங்கங்க மரம் வெட்டி, மணல் கொட்டி, கம்பி கட்டி….. இப்பத்தானே தொழிலே தொடங்கியிருக்கு? ஒன் அவசரத்துக்கு சாமான் எல்லாம் கிடைக்குமா? கொஞ்சம் பொறுமாயாய்த்தான் இருக்கணும்…. சும்மா கூவிக்கினே இருந்தா வேல நடந்துருமா என்னா? என்று பதிலுக்கு அங்கலாய்த்தான் அவன்.


நீ என்னய்யா, ஆம்பள...ஒனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல…. நான் பொஞ்ஜாதிதானே எல்லாத்தையும் சுமக்கணும்...சரி நான் போய் நீ கொணந்ததுலே எது தேறும் எது தேறாதுன்னு பாத்து வெக்கிறேன்… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திக்கினு அப்புறம் எனக்கு இன்னும் என்னான்னா வேணுமோ கொஞ்சம் சீக்கிரம் பாத்து கொணந்திடுய்யா… என்று சற்று இறங்கி வந்தாள் அவள்.


பொறு…. செஞ்சிக்கிட்டேதானே இருக்கேன்? அப்படி என்னாடி அவசரம் ஒனக்கு?


இல்லய்யா..எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்கு மேல தாங்காதுய்யா… அதுக்குள்ள வீட்ட முடிச்சிடனும்….சொல்லிட்டேன் … ஆமா….


எப்பிடிடீ முடியும்… நானும் எவ்ளோ அலயறேன்… நேத்தி பாத்துவெச்ச சாமான் காலைல போய் பாத்தா அதுக்குள்ள வேற யாரோ எடுத்துட்டிருக்காங்க….அதென்னா ரெண்டு நாள்….கொஞ்சம் பொறுமையா நாலு நாள்ளதான் ரெடி பண்ணலாமே?


அதெல்லாம் ஒனக்குப் புரியாதுய்யா….சரி நான் ஒன்ன ரொம்ப புடுங்கல… ஆனாகூட இருக்கிற சாமான் சுத்தமா போறாது…


அப்போ நா என்னதான் செய்யணுங்கறே?


ஒனக்கு அலயறது கஷ்டமாயிருக்குன்னு தெரியுது… நீ கஷ்டப்படுறியே தவிர புத்தியில்லெ உனக்கு… நான் சொன்னா கோவம் மாத்திரம் வரும்…


அப்படி என்னாடீ நான் புத்தியில்லாமே பண்ணிட்டேன்?


நீயே பாரேன்… நானும் நேத்தி காலைலிருந்து கஷ்டப்பட்டுட்டிருக்கேன்… நீ கொணந்த சாமான் ஒண்ணாவது தோதாயிருக்கா பாரு? எனக்கு எப்படி வேணும்முன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா ஒனக்கு?


யம்மா...ஒன்னோட பேசி மாளாது எனக்கு…. நீ சரியாச் சொல்லு… நான் போய் எங்கேருந்தாலும் தூக்கிக்கிணு வந்துர்ரேன்… அப்பறம் இது சரியில்லே அது சரியில்லேன்னு சொல்லாதே….


ஆமா… நா சொன்னா அப்பிடியே சொன்னாமாரி கொணந்திருவே நீ! ஒனக்கு அவ்ளோ சாமார்த்தியம் இருந்திருந்தா இந்நேரம் நா பங்களாவே கட்டியிருப்பேன்..


அப்பா என்னை என்னாதாண்டி பண்ணச் சொல்றே?


நீ ஒண்ணியும் பண்ண வேணாம்….கொஞ்ச நேரம் பத்திரமா பாத்துக்கோ….நான் ஒரு நடை போய் பாத்துட்டு வந்து என்னா வேணும் எப்படி வேணும்முன்னு சொல்றேன்… அத மாத்திரம் கரெக்டா கொணந்திருவியாம் நல்ல பிள்ளயாட்டம்… என்று சொல்லி அவள் புறப்பட்டாள்.


இந்தப் பொம்பளைங்களோடவே ரோதனைதான்…. என்று நொந்துகொண்டே காவல் காக்க அமர்ந்தான் அவன்.


இரண்டு மூன்று மணி நேரம் ஆகியும் அவள் திரும்பவில்லை.. அவனுக்குக் கவலையாயிற்று… உட்டகார முடியவில்லை. அவன் தேடப் போனாலோ அந்த சமயம் அவள் திரும்பி வந்து தான் காவலுக்கு இல்லை என்பதைக் கண்டால் அவன் கதி அதோகதிதான்...என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயும் இங்கேயும் பார்த்துக்கொண்டே அருகிலேயே நடந்துகொண்டிருந்தான்.


அப்பாடா...சற்று நேரத்தில் அவள் திரும்பினாள். கொஞ்கம் நிம்மதி...கொஞ்சம் கோபத்துடன் என்னாடீ இவ்ளோ நேரம்? நா காத்துக்கெடக்கேனேன்னு தோணலியா ஒனக்கு? என்று ஆரம்பித்தான்.


ஆங்? நிறுத்து ஒன் பொலம்பல...ஒனக்கு ஒத்தாசை செய்யனுமேன்னு பொம்பள நான் கஷ்டப்பட்டு சுத்திட்டு வந்திருக்கேன்…. என்ன வையறியா நீ….கொத்திடுவேன்… ஜாக்கிரதை… என்ற மிரட்டிவிட்டுத் தொடர்ந்தாள்..


இங்க பாரு...சரியா கேட்டுக்கோ….இம்மா நேரம் சும்மா சுத்தல நானு...கரெக்டா வெவரமா பாத்துக்கினு வந்திருக்கேன்….சால்ஜாப்பு எதுவும் சொல்லாம இப்ப போனாலுஞ்சரி, வெள்ளன போனாலுஞ்சரி, நான் சொல்ற எடத்தில இருக்கிற சாமான மாத்திரம் நீ தூக்கிட்டு வந்திட்டேன்னா போதும்…


சரி சொல்லு...நீ மாத்திரம் எவ்வளவு கெட்டிக்காரின்னு பாக்கலாம்….


கெட்டியோ பொட்டியோ...நா சொன்னத செஞ்சா ஒனக்கு அலச்சல் மிச்சம் தெரிஞ்சிக்கோ…. ஜாஸ்தியானா நாலு இல்லாட்டி மூணே ட்ரிப்புல கொண்ந்திடலாம்….அரை நாளுக்கு மேல ஒனக்கு வேலை இல்ல…. மிச்சம் எல்லாம் நீ ஒத்தாசை செஞ்சா நாள இல்லாட்டி நாளன்னிக்கு மதியத்துக்குள்ள நான் முடிச்சிடுவேன்…


சரிடியம்மா...ஒன் ஆசைப்படியே ஆவட்டும்….எங்க போவனும் என்னா பண்ணனும்….சொல்லு…


சரியா கேட்டுக்கோ...அப்பறம் சுத்தவிட்டேன்னு சொல்லாதே...தெரியுதா? மொதல்ல தெருமுனை ஆலமரத்துக்கிட்ட போ...அங்கே நேத்து நுங்கு வெட்டின இடத்துல நறுக்கிப்போட்ட பன ஓல கொஞ்சம் கிடக்கும்...அதுலேந்து நடுக்காம்போட இருக்கிற ஒல ஒரு நாலஞ்சி கொண்டுவா..


அப்புறம்…?


நம்ம அம்மன் கோயில் கொளம் இருக்கில்ல...அதோட படிக்கட்டுக்கு எதுது புது வீடு கட்டிக்கினு இருக்காங்க...இன்னிக்கு கம்பி கட்டிட்டிருந்தாங்க...வெட்டிப்போட்ட மிச்சம் மீதி கம்பி எவ்ளோ தூக்க முடியுமோ அவ்ளோவும் கொண்டா...


சரி….அப்பறம்…?


நம்ம பக்கத்து வீட்டு தென்ன மரம் புது குருத்து விட்டிட்டிருக்கு...அதுலேந்து எளசா பிச்சிக் கொண்டாரணும்...அதுவும் எவ்ளோ முடியுமா பாரு….முடியலன்னா மரம் பக்கத்தலதான இருக்கு...மீதி நான் பாத்துக்கறேன்…


அவ்ளோதானா? இன்னும் ஏதாச்சும் இருக்கா…


இத மொதல்ல முடி….அப்புறம் சொல்றேன்..


இவ்வளவு கண்டிஷனோடு முடியுமா? முடிந்தது. அவள் கெட்டிக்காரிதான். சரியாக நோட்டம் பார்த்துவிட்டுத்தான் சொல்லியிருக்கிறாள். அவள் சொன்ன மாதிரி அடுத்தநாள் மதியத்திற்குள்ளாகவே வேலை முடிந்துவிட்டது. கொண்டு வந்ததையெல்லாம் ஓரிடத்தில் கொட்டியிருந்தான். அவளும் அதைப் பார்த்துவிட்டு, பரவால்லியே, சரியாத்தான் கொணந்திருக்கே...என்று பாராட்டவும் செய்தாள்.


அவள் சொல்லித்தான் செய்தாலும், சரியாகச் செய்திருக்கிறோம் என்ற பெருமையுடன் அவளருகே ஆசையாக நெருங்கி, சரி, இப்போ சொல்லு...என்னா சமாச்சாரம், ஏன் இந்த அவசரம்? என்ற கேட்டான்.


அவள் வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, எல்லாம் நாளைக்கு காலைல உனக்கே தெரியும்… இப்ப நான் சொல்றதையெல்லாம் செய்...அதுக்கு முன்னாடி அங்கே சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன் பாரு...சாப்டுட்டு வா...என்று அன்புடன் சொல்லவே, சீக்கிரம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வந்து அவள் ஆணைக்குக் காத்திருந்தான்.


மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. கொண்டுவந்த பொருட்களை கனகச்சிதமாக உபயோகித்து தன் புத்திசாலித்தனத்தை அவனுக்கு பிரகடனப் படுத்தினாள் பத்தினி.


ஆஹா! அற்புதம்! எங்கே எப்போ கத்துண்டே இத்தனை சமாச்சாரம்? என்ற அவளை மெச்சிக்கொண்டு அந்தி சாய்ந்தவுடன் அருகருகே அடைக்கலமானர் தம்பதியினர்.


காலை வெளிச்சம் பரவும் முன்னரே அவனை எழுப்பினாள். தலையே வேகமாக அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டு, என்ன? என்ற கேட்டான் அவன். அவள் தன் பார்வையை உட்பக்கம் திருப்பினாள். அவள் பார்த்த திக்கை நோக்கி அவன் திரும்ப, அவளின் காலடியின் கீழ் ஒளிர்ந்தன நகைப்பேழையுள் போர்த்ப்பட்டிருந்த சிறு கிண்ணிகள் போன்ற மூன்று வெளிர்நீல முட்டைகள்!


அடிக்கள்ளி! இதைத்தானா என்னிடம் மறைத்தாய்? இதற்குத்தானா இத்தனை ஆட்டம் ஆடினாய்? நம் வாரிசுகளை பாதுகாக்கத்தான் வீடு கட்ட என்னை இந்த விரட்டு விரட்டினாய்? என்று ஆச்சரியமாகக் கேட்டபடி தானும் அவளும் சேர்த்துக் கட்டிய கூட்டை பெருமையுடன் நோட்டம் விட்டான் அவன், அந்த ஆண் காகம்.


இவைகளை பாதுகாத்து குஞ்சுகள் பொரித்து வளர்ந்து பறக்கும் வரையில் நீதான் என்னையும் இவைகளையும் உன் கண்ணைப்போல் காக்க வேண்டும் என்று உரிமையோடு கட்டளையிட்டு அவனருகில் நெருங்கி அமர்ந்தாள் அன்னைக் காகம்.