Friday, April 19, 2019

நம்பிக்கை

சரியான கூட்டம். இத்தனைக்கும் அமாவாசைகூட இல்லை. பொதுவரிசையில் நின்றால் குறைந்தது ஒன்றரை மணி நேரசமாவது ஆகும். குழந்தையோ சற்று வளர்ந்த பெண் குழந்தை. அவ்வளவு நேரம் தூக்கிவைத்துக்கொள்வதும் சிரமம். வேறு வழியில்லாமல் சீக்கிரம் உள்ளே செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கையில் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி அவனுக்கும் மனைவிக்குமாக சேர்த்து சிறப்பு வரிசையில் செல்ல இரண்டு சீட்டுகள் வாங்கிக்கொண்டான் அவன்.

ஏய் சித்ரா, இந்தப் பக்கமாக வா. நேரா சாமிகிட்டயே போயிடலாம். சீக்கிரம் வா… என்று கூவிக்கொண்டே குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டான். மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு அவசரம் அவசரமாக கணவனைப் பின் தொடந்தாள் சித்ரா.

அவனும் சித்ராவும் வேகம் வேகமாக நடந்து கோவில் சிப்பந்திகள் காட்டிய வழியில் நேராகவும் வளைந்தும் சென்று இரண்டு அல்லது மூன்று வாசற்படிகள் ஏறி இறங்கி ஒருவழியாக கர்ப்பக்கிரகத்துக்கு முன் உள்ள மண்டபத்தில் ஏழெட்டுபேர் மட்டுமே இருந்த சிறப்பு வரிசையில் சேரந்துகொண்டனர். அவனுக்கு குழந்தையையும் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்து வந்ததில் சற்று மூச்சுவாங்கியது. நல்லவேளையாக உள்ளே குளிர்காற்று சுழலும் வசதி செய்யப்பட்டிருந்ததால் சற்றே களைப்பு நீங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

வரிசை மெதுவாக நகர்ந்தது. மூலவர் முன் வந்து நின்றாகிவிட்டது. அர்ச்சனை, பிரார்த்தனை ஏதாவது இருக்கா? என்று அர்ச்சகர் கேட்க, அவன் வாய் திறக்குமுன் சித்ரா கண்ணீருடன் பேசலானாள்.

குழந்தையைப் பாருங்க சாமி… அவ்வளவு அழகா லக்ஷ்மி மாதிரி இருக்கா..ஆனா கால்ல மட்டும் பலமில்லாம போச்சு சாமி… கைத்தாங்கல் இல்லாம அவளால நடக்க முடியல சாமி… பொண் குழந்தை இப்படி இருந்தா நாங்க எப்படி அவளை ஸ்கூல்ல சேக்கறது…, எப்படி முன்னுக்கு கொண்டறது.., எப்படி பாத்துக்கப்போறோம்னே விளங்கலையே சாமி…. இவளை நினைச்சு நினைச்சு தூக்கமே போச்சு சாமி.. இந்தப் பெருமாள்தான் வியாதியெல்லாம் தீர்க்கறவருன்னு எங்க கிராமத்தில சொன்னாங்கன்னு உடனே இங்கே கூட்டியாந்திருக்கோம் சாமி… டவுன்ல பாக்காத டாக்டர் இல்லை… யாரும் தைரியம் குடுக்கலே சாமி… அதனாலதான் பயப்படறோம் சாமி… என்று தன் பிரச்சினையை வாய்விட்டு அழுதுகொண்டே அர்ச்சகரிம் முன்வைத்தாள் சித்ரா.

வயதான அர்ச்சகர். இதுமாதிரி எத்தனை பேரைப் பார்த்திருந்தாலும் அவருக்கே இந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் கண் கலங்கியது. நிஜமாகவே லக்ஷ்மிகரமான முகம். அந்தக் குழந்தையைப் பார்த்தால் கொஞ்சாமல் நகரவே முடியாது. அவ்வளவு அழகான குழந்தை. ஆனால்…? தூக்கிக் கொண்டிருக்கும் குழந்தையைக் கீழே வைத்தால் நிற்பாள். அவ்வளவுதான். அரை அடிகூட அவளால் எடுத்துவைக்க முடியாது. யாராவது அவளது இரண்டு கைகளையும் தூக்கி உதவிசெய்தால் மட்டுமே ஒரு கால் மாற்றி ஒரு கால் ஊன்ற முடியும். இந்தப் பிஞ்சுக்கு ஏன் இந்த தண்டனை? விதியின் மேல்தான் பழிபோட வேண்டுமா? இறைவன் என்றொருவன் உண்மையாகவே இருக்கிறானா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழும்.

கவலைப்படாதேம்மா. சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கே. இவர் சாதாரண ஸ்வாமி இல்லை. இவருடைய பேரே வைத்ய வீரராகவர். முழு நம்பிக்கையோடு இவரையும் வெளி சந்நதியில் இருக்குற தாயாரையும் பிரார்த்தனை பண்ணிண்டு அப்படியே கோவிலுக்கு வெளில இருக்கிற குளத்திலே வெல்லத்தையும் நல்லா வேண்டிண்டு கரைச்சுட்டுப் போ. சரியான உடனே திரும்பி வந்து வெல்லம் கரைக்கிறேன்னு வேண்டிண்டு நம்பிக்கையோட பிரார்த்திச்சுக்கோ. சீக்கிரம் குணமாகும் பார். நம்பிக்கையை விட்டுடாதே… என்று ஆசீர்வதித்தபடியே தீர்த்தமும் சடாரியும் வழங்கினார்.

தாயார் சந்நதிக்கும் கூடவே வந்தார். இங்க பாரும்மா… உன் வேண்டுதலையெல்லாம் இந்தத் தாயார் கிட்ட சொல்லு. இவள் நிச்சயமா பெருமாள் காதுல விழறாமாதிரி எடுத்துச் சொல்லி உன் சங்கடத்தைத் தீர்த்து வைப்பா.. என்று பிரார்த்தனை நிறைவேறும் வழியும் சொல்லித் தந்தார்.

பிரார்த்னையெல்லாம் முடிந்து வெளியே வந்தனர். வண்டியை பார்க் செய்திருந்த இடம் வரை வந்தபின் குழந்தையை சித்ராவிடம் கொடுத்துவிட்டு தன் மொபெட்டை ஸ்டார்ட் செய்தான் அவன். வழியெங்கும் எதுவும் பேசவில்லை. முக்கால் மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள். குழந்தையைப் படுக்கவைத்துவிட்டு சமைக்கச் சென்றாள் சித்ரா.

மதிய உணவின்போது மெதுவாக கணவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

ஏங்க, நாம காலைல கோவிலுக்குப் போனோமில்லையா? என்று ஆரம்பித்தாள்.

ஏற்கெனவே உடலாலும் மனதாலும் களைத்திருந்த அவன், எங்கே பெரிய வேலை ஏதாவது சொல்லப்போகிறாளோ என்ற சிந்தனையில் சலிப்புடன், ஆமாம் அதுக்கென்ன இப்போ? என்றான்.

இல்லீங்க… நீங்க வண்டியை பார்க் செய்யப் போயிருக்கும்போது நம்ம குழந்தை மாதிரியே இன்னொரு குழந்தையைப் பார்த்தேங்க… என்றாள்.

அதுவும் நொண்டியா? என்றான். அவளுக்கு சுருக்கென்று தைத்தது.

நம்ம குழந்தையை நீங்களே அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. அதை விடுங்க… அந்தக் குழந்தைக்கும் நம்ம குழந்தை மாதிரியே கால் வீக்காதான் இருக்குங்க… ஆனா அது நல்லா நடக்குது. நான் அந்த அம்மாவிடம் விசாரிச்சேன்… அவங்களும் முதல்ல அந்தக் குழந்தைக்கும் நம்ம குழந்தை மாதிரியேதான் பிரச்சினை இருந்ததாம். அந்தக் கோயில்ல தான் அவங்களும் பிரார்த்தனை வெச்சாங்களாம். அப்போ அவங்ககூட லைன்ல நின்னிட்டிருந்த ஒருத்தர் தான் டவுன்ல புது ஆஸ்பத்திரியில நல்லா பாக்கிறாங்க.. அங்க போய் காட்டுங்கன்னு சொன்னாங்களாம்.. அவங்களும் அதே மாதிரி போய் காட்டினதுலேருந்து கொஞ்ச கொஞ்சமா ரெண்டே மாசத்திலே அந்த குழந்தைக்கு நல்லா சரியாயிடுச்சாம். நாமளும் நம்ம குழந்தையை அதே ஆஸ்பத்திரில காட்டலாமா?

புது ஆஸ்பத்திரியா? அது பிரைவேட் ஆச்சே… ரொம்ப செலவாகுமே…

ஆனா ஆயிட்டுப் போகுதுங்க… நம்ம குழந்தையைவிடவா காசு முக்கியம்? நான் வேணா எனக்கு சீதனமா குடுத்த நகை நட்டு நிலம் எல்லாம் குடுத்துடறேன்…. வித்துட்டாவது முதல்ல குழந்தையை சரி பண்ணிடலாங்க…

என்னமோ நாளைக்கே சரியாகிடப்போறா மாதிரி நீ சொல்றே… வெறும பாக்கிறதுக்கே இருநூறு முன்நூறுன்னு கேப்பாங்க… அதுவுமில்லாம கவமென்ட் ஆஸ்பத்திரில அனுபவம் நெறைய இருக்கிற டாக்டர் சொல்லாததையா இந்தப் புது டாக்டர் சொல்லிடப்போறாரு?

ஏங்க வெதண்டாவாதம் பேசறீங்க… சாமியே சொன்னாரில்ல… நம்பிக்கையோட இரும்மா அப்படீன்னு? எனக்கு நம்பிக்கை இருக்குங்க… அந்தக் கோவிலுக்குப் போனதிலேர்ந்து நம்ம குழந்தைக்கு நிச்சயம் நல்ல வழி பொறக்குமுங்க…

இவ்வளவு நீ சொல்றதனால நான் வேணா நாளைக்குப் போயி பாக்கறேன்…. மொதல்ல அந்த டாக்கர் பேரு என்னா விசாரிச்சியா?

இல்லீங்களே… ஆனா ஒரு நிமிஷம் இருங்க… அந்த அம்மாவோட போன் நம்பர் வாங்கி வெச்சிருக்கேன்… நீங்களே பேசி வெவரம் கேட்டுக்குங்களேன்… என்று சொல்லி முந்தானையில் முடிந்திருந்த ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்துக் கொடுத்தாள் சித்ரா.

அவன் அந்த காகிதத்தை வாங்கிக்கொண்டு அந்த நம்பருக்கு போன் செய்தான். எதிர்முனையில் அந்த அம்மாதான் பேசினாள். விவரத்தைச் சொன்னவுடனேயே கோவிலில் பார்த்ததை நினைவுகொண்டு தைரியமும் சொன்னாள்.

ஒண்ணும் கவலைப் படாதீங்க….அந்த ஆஸ்பத்திரிலே ரொம்ப நல்லா பாக்கறாங்க…. நம்ம வருமானத்துக்கேத்தா மாதிரிதான் பீஸ் வாங்கறாங்க.. டாக்டரும் ரொம்ப கெட்டிக்காரர்… நம்பிக்கையா போங்க… நிச்சயம் பெருமாள் காப்பாத்துவார்…. என்றாள்.

சற்றே பொறுமை இழந்து, சாமியெல்லாம் இருக்கட்டும்மா… முதல்ல அந்த டாக்டர் பேரைக் கொஞ்சம் சொல்லறீங்களா? என்று கேட்டான்.

அதான் சொன்னேனே, பெருமாள்..ன்னு! என்றாள் அந்தம்மா.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home