தெரியாத விடை
அவருக்கு கண் இருட்டிக்கொண்டு வந்தது. வீட்டில் யாரும் இல்லை. குழந்தை அச்சுதனும் அவரும் மட்டும்தான். தாய் யசோதா பத்து நிமிடம் முன்புதான் வெளியில் சென்றாள். அப்பா ஒரு அரை மணிநேரம் பாத்துக்கோங்கப்பா.... இன்னிக்கு விட்டா திரும்ப என்னிக்கு ரேஷன் கிடைக்கும்னு தெரியாது. காலைலயே ருக்கு சொன்னா...நேத்தே நெறய லோடு வந்துருக்காம்...இன்னிக்கு இந்த நேரத்துக்குப் போனா கூட்டமும் இருக்காது...வேணுங்கறத எல்லாம் ஒரே நடைல வாங்கிண்டு வந்துடலாம்..னு. கொழந்த தூங்கிட்டிருக்கான் அவன் எழுந்தா நேர உங்ககிட்டதான் வருவான். நாலு உலர்ந்த திராட்சை இல்லாட்டி ரெண்டு பிஸ்கட் எடுத்துக் குடுஙகோ….அவன் சமத்தா சாப்பிடுவான்.. அதுக்குள்ளே வந்துடுவேன்.. என்று சொல்லிவிட்டுப் போனாள்.
அவருக்குக் கலக்கமாக இருந்தது. இதுவரை இந்த மாதிரி ஆயாசமாகவோ கண்ணை இருட்டிக்கொண்டோ வந்ததில்லை. பகவானே..யசோதா சீக்கிரம் வந்தா தேவலை என்று மனதிற்குள் மருகினார்.
அவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும். மனைவி அபிராமி பத்து வருடங்களுக்கு முன்பே விடைபெற்றுச் சென்றுவிட்டாள். அதுவும் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, இருக்கும்ஒரே சொத்தான ஒற்றை அறை வீட்டையும் அவருடைய சொற்ப சேமிப்பையும் எல்லாம் வைத்தியத்திற்கே செலவழிக்கும்படியாக வாயில் பெயர் நுழையாத ஏதோ ஒரு நோயில் விழுந்து கஷ்டப்பட்டு ஒருவழியாக யாருக்கும் பெரிதாக துக்கம் ஏற்படாத ஒரு கட்டத்தில் மறைந்தாள்.
அவர் பரம்பரையிலேயே யாருக்கும் அதிகமாக குழந்தைகள் இல்லை. அவருக்குத் தெரிந்து அவர் பக்கமும் சரி, அபிராமி பக்கமும் சரி, எங்கோ தூரத்தில் ஓரிவருக்குத்தான் ஒன்றுக்குமேல் குழந்தைகள். அவரும், அபிராமியும் அவரவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள். அதுபோல அவருக்கும் அபிராமிக்கும் ஒரே பெண் யசோதா. அவளும் அவருக்கு நாற்பதுக்கு மேல் ஆகும்போதுதான் பிறந்தாள். அபிராமியின் மறைவுக்குப் பின்னர்தான் அவள் திருமணமும் நடந்தது.
அவருடைய ராசியோ என்னவோ மாப்பிள்ளை ராகவனுக்கும் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. ஒரு ஜெர்மன் கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை பார்க்கிறான். காலையில் கம்பெனி பஸ் ஏழு மணிக்கெல்லாம் தெருமுனையில் வந்து ஏற்றிக்கொண்டு சென்று, டாணென்று மாலை ஆறு மணிக்கு கொண்டுவந்தும் சேர்த்துவிடும். ஏனோ தெரியவில்லை, மனைவியை கட்டாயமாக வேலைக்குச் செல்லக்கூடாது, முழுநேரம் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளவேண்டும் வரும் சம்பளத்தில் சிக்கனமாய் செலவு செய்து வீட்டை நிர்வாகம் செய்யவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான்.
அன்பாக நடந்து அவளை நல்லபடியாய் வைத்துக் கொண்டிருந்ததால் யசோதா தனக்கும் வேலைசெய்து சம்பாதிக்கும் ஆசை இருந்தாலும் அதை மறந்து அவன் இஷ்டப்படியே வீட்டோடு இருந்தாள். வருமானம் தாராளமாக இல்லாவிடினும் நிச்சயம் பற்றாக்குறை இல்லை. அவளது கல்வியறிவால் ஓரளவு பணம் சேமித்து அதை சரியான முறையில் சிறுகச்சிறுக பெருக்கவும் கற்றுக்கொண்டிருந்தாள். குழந்தையைப் பார்த்துக்கொள்வது, அவனுக்குப் பாடம் கற்றுத்தருவது, தோட்டவேலை செய்வது, ஓய்வுநேரத்தில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றாற்போல் தையல், வடகம் போன்ற உபயோகமான வேலைகளில் ஈடுபடுவது என்று சந்தோஷமாகவே இருந்தாள் யசோதா.
அபிராமிக்குப் பின் சொந்த வீடும் போய், சேமிப்பும் கரைந்து. மிக்குறைந்த அளவே பென்ஷனும் வந்தபடியால் அவருக்கு வேறு வழியில்லாமல் யசோதாவுடன் இருக்கவேண்டிய சூழ்நிலை. யாருக்கம் தொந்தரவில்லாமல் கூடியமட்டும் தன் சொந்தத் தேவைகளை குறைத்துக்கொண்டு வரும் பென்ஷனை ராகவனுக்குத் தெரியும்படியாக அப்படியே யசோதாவிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு ஒத்தாசையாக வீட்டுவேலைகள் செய்துகொண்டு காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார். பொழுது முழுவதும் வெராண்டாவில் இருக்கை. இரவு ஹாலில் படுக்கை. சலனமில்லாத வாழ்க்கை. அவருடைய உலகமெல்லாம் யசோதாவும் அச்சுதனும் தான்.
அச்சுதனுக்கு நான்கு வயதாகிறது. பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளியில் சேர்த்திருந்தார்கள். காலை எட்டரை மணிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு மீண்டும் மாலை மூன்றரைக்குப்போய் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவது அவருடைய வேலை. கடந்த இரண்டு நாட்களாக அவனுக்கு காய்ச்சல் இருந்ததால் பள்ளிக்குச் செல்லவில்லை. காலையிலும் ஜுரம் இருந்ததால் சிரப் மருந்து கொடுத்திருந்தாள் யசோதா.
சொல்லிவைத்தாற்போல் அவள் சென்று கால் மணி நேரத்தில் அச்சுதன் விழித்தெழுந்தான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வெராண்டாவில் உட்கார்ந்துகொண்டிருந்த தாத்தாவிடம் வந்தான். அம்மா எங்கே தாத்தா என்று கேட்டான். அடடா...எழுந்திட்டியா குட்டி….எங்கிட்ட வா….. அம்மா ரேஷன் கடைக்குப் போயிருக்கா… இப்ப வந்துடுவா… உனக்கு என்ன வேணும், என்ன பிடிக்கும்னு சொல்லு… தாத்தா எடுத்துத் தர்றேன்… திராட்சையா, பிஸ்கட்டா? என்று கேட்டுக்கொண்டே அன்புடன் அவனை மடியில் வைத்துக் கொள்ளத் தூக்கினார். மீண்டும் கண்ணை இருட்டிற்று.
சற்றே பயந்தார். அச்சுதன் கையை உயர்திக்கொண்டு தன்னைத் தூக்கிக்கொள்ளும்படியாக சைகை செய்தான். எனக்கு திராட்சை வேணும் எடுத்துக்குடு தாத்தா என்று சொன்னான்.
அவனைத் தூக்காமல் அவன் கையை மட்டும் பிடித்துக்கொண்டு, வா.. அம்மா உம்மாச்சி பக்கத்துலதான் திராட்சை வெச்சிருப்பா… நான் எடுத்துத் தர்றேன் .. என்று கூறியபடியே எழுந்து அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
உனக்கு திராட்சைன்னா ரொம்ப பிடிக்குமா கொழந்தே?
ஆமாம்..தாத்தா… அதுதான் பிஸ்கட்டவிட தித்திப்பா இருக்கு…. உனக்கு என்ன பிடிக்கும் தாத்தா?
எனக்கு ஒன்னத்தான் ரொம்பப் பிடிக்கும்.
அப்படின்னா என்னை தின்னுடுவியா?
சேச்சே, பிடிச்சது வேற….பிடிச்சவா வேற….உனக்கு என்னைப் பிடிக்குதா?
ஓ, ரொம்பப் பிடிக்கும்.. நீ என்ன கேட்டாலும் தருவேன்…
அப்படியா என் செல்லம்…. இதோ இந்த திராட்சை அத்தனையும் கேட்டா தந்திடுவியா?
அத்தனையுமா? என்று ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, ஓ தந்திடுவேனே….அம்மாதான் அலமாரிலே பாட்டில்லே இன்னும் நிறைய வெச்சிருக்காளே….
அடி சக்கை…..அத தெரிஞ்சுதான் அத்தனையையும் தரேங்கறியா?
இல்ல தாத்தா….நீ வேற ஏதாவது கேட்டா கூட குடுப்பேன். நீ எனக்கு என்ன குடுப்பே?
நானா? நானும் நீ என்ன கேட்டாலும் தருவேன்….என் உயிரையேகூட குடுப்பேன் அச்சுதா…
உயிர்..ன்னா என்ன தாத்தா? அது எப்படி இருக்கும்?
எப்படி விளக்குவது என்று யோசித்தார். உயிரா? அது ஒரு சக்திடா கண்ணா.. கண்ணுக்குத் தெரியாம உள்ள இருக்கும்…. அது இருந்தாத்தான் நாம எல்லாம் எழுந்துண்டு நடந்துண்டு பேசிண்டு இருப்போம்…..அது இல்லன்னா இதோ இந்த பொம்மை மாதிரி வெறுமன அசையாம கெடப்போம்…. என்றார்.
ஆனா இந்த பொம்மை சாவி குடுத்தா ஓடுமே தாத்தா?
கரெக்ட்டுடா கண்ணா. அந்த சாவி மாதிரிதான் உயிர்.
ஆனா நமக்கு யாரும் சாவி குடுக்கறதில்லியே தாத்தா?
குழம்பினார். நம்மோட சாவியெல்லாம் ஏற்கெனவே உள்ளே இருக்குடா கொழந்தே….நாம பொறக்கறச்சயே உம்மாச்சி நம்மள சாவி குடுத்துதான் அனுப்பறார்…
அப்ப சாவி தீந்துட்டா உம்மாச்சி நம்மள திரும்பி எடுத்துண்டுடுவாரா தாத்தா?
மீண்டும் கண்ணை இருட்டிற்று. தலை சுற்றினாற்போலவும் இருந்தது. அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டார். இன்றைக்குப்பார்த்து ஏன் இப்படி ஆகிறது? யசோதா இன்னும் வரவில்லையே என்று ஆதங்கத்துடன் வாசற்படியைப் பார்த்தார்.
சொல்லு தாத்தா? உம்மாச்சி திரும்பி எடுத்துண்டுடுவாரா? உம்மாச்சியாலதான் சாவி குடுக்க முடியமா? என்னோட சாவி தீர்ந்துபோனா நீ என்ன செய்வே?
அவருக்குத் தலை நிஜமாகவே சுற்றியது. குழந்தை ஏன் இன்றைக்கென்று இப்படியெல்லாம் கேட்கிறான்?
அப்படியெல்லாம் பேசாதடா கொழந்தே, நீயெல்லாம் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்….
அப்ப பாட்டியை உம்மாச்சிதானே கொண்டுபோனார்? ஏன் இன்னும் சாவி கொடுத்து கொண்டுவந்து விடலே? உம்மாச்சி நல்லவரா கெட்டவரா?
கடவுளே…..என்ன ஆகிக்கொண்டிருக்கிறது இங்கே? இத்தனை நாள் கழித்து ஏன் அபிராமியை ஞாபகமூட்டுகிறான் அச்சுதன்? என்று அயர்ந்தார். அவருக்கு குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.
செத்த சும்மாயிருடா கொழந்தே….நான் ஒன்னக் குழப்பிட்டேன்னு நெனைக்கறேன். உயிர்ன்னா...அது சாவி மாதிரிதானே ஒழிய சாவி இல்ல..
போ தாத்தா … நீ என்ன ஏமாத்தற…. எனக்கு திராட்சை போறும்….இப்போ உயிரைக் குடு பாப்போம்….அது என்னன்னு நான் பாக்கணும்…
அதிர்ந்தார்…..பகவானே..அச்சுதா...பரந்தாமா….கொழந்தைதான் கேக்கறானா இல்ல நீதான் கேக்கறியா புரியலியே… என்று புலம்பினார். கண்களில் நீர் முட்டியது. அவர் பார்வையில் அச்சுதன் முகமும் பரந்தாமன் படமும் மாற்றி மாற்றி அலைபோல் அசைந்தன.
என்ன தாத்தா...அழறியா...ஒனக்குத் தெரியலேன்னா பரவால்ல...உம்மாச்சிகிட்ட கேட்டுச் சொல்லு… என்றான் அச்சுதன்.
கேட் திறக்கும் சப்தம் கேட்டது.. அப்பப்பா என்ன வெய்யில்… என்ன கூட்டம் என்று அங்கலாய்த்தபடியே உள்ளே நழைந்தாள் யசோதா…வெராண்டாவை ஒரு நோட்டம் விட்டவள், எங்கே அப்பாவைக் காணோம் என்று யோசித்தபடியே உள்ளே வந்தாள்.
பூஜை அறை வாசலில் அப்பா உட்கார்ந்திருந்த கோலம் அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சுற்றுமுற்றும் பார்த்தபடியே அச்சுதா, அச்சுதா என்று மகனை அழைத்தாள்.
அச்சுதன் படுக்கை அறையிலிருந்து ஓடி வந்தான்…. அம்மா…. என்று கட்டிக்கொண்டான். ஏண்டா தாத்தா அங்கே ஒக்காந்திருக்காரு? நீ எப்போ எழுந்தே? என்ன பண்ணிண்டிருக்கே? என்று சரமாரியாய் கேள்விகளைத் தொடுத்தபடியே அவனை தூக்கிக்கொண்டு அப்பாவிடம் ஓடினாள்.
அப்பா, அப்பா, என்று அவரை எழுப்ப முயன்றாள். ஆனால் அவர் அப்படியே சரிந்து விழுந்தார். அம்மா….தாத்தாவை டிஸ்டர்ப் பண்ணாதே ….நான்தான் அவரை உம்மாச்சிகிட்ட உயிர்ன்னா என்னன்னு கேட்டுண்டு வரச் சொல்லியிருக்கேன்….என்று விளக்கத் தொடங்கினான் அச்சுதன். அதைக் கேட்ட யசோதா...அப்பா….. என்று மீண்டும் அலறியடியே தந்தையின் முகத்தை அசைத்தபடியே அழத்தொடங்கினாள்.

1 Comments:
Nice . Simple and expressive language. I enjoyed reading. How some times kids question and it co incides??
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home