Tuesday, July 28, 2015

Ahalya



My attempt at translating the story of a recent popular short film, Ahalya.

அகல்யா
மூலம் - பெங்காலி - இயக்குநர் - சுஜாய் கோஷ்
தமிழாக்கம் - ரகு

(பதினைந்தே நிமிடங்கள் ஓடும் இந்கத் குறும்படத்தை முதல் முறை பார்த்ததிலேயே கவரப்பட்டு உடனேயே நினைவில் இருந்ததை எழுத்தில் பதிவுசெய்த முயற்சி இது. குணங்களைக் கொண்டு பிழைகளை மன்னிக்கவும்)

போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராசென் பிரபல கலைஞர் கெளதம் சாதுவின் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த அழகான இளம்பெண் போலீஸை எதிர்பாராத வியந்த விரிந்த கண்களுடன் அவரை உள்ளே வரவேற்று ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தாள். கெளதம் சாது வீடு இதுதானே? அவர் இருக்கிறாரா? என்று கேட்ட இன்ஸ்பெக்டரிடம், இருக்கிறார், இதோ அழைக்கிறேன் என்று கூறி, காபி ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்றும் கேட்டாள்.

அப்போது அந்த ஹாலில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைகளில் ஒன்று திடீரென்று படார் என்ற சப்தத்துடன் கீழே விழுந்தது. மெதுவாக அதை மேலே எடுத்து அதன் இடத்தில் வைத்த இந்திராசென் அதை மிகுந்த வியப்புடன் கவனித்தார். தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

இப்படித்தான் இன்ஸ்பெக்டர் இந்தப் பொம்மைகள் அவ்வப்போது தானாக விழுகின்றன. எப்படி என்றே எனக்குப் புரியவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் இருங்கள் இதோ டீ கொண்டுவருகிறேன் என்று உள்ளே சென்றாள் அவள்.

அப்போது மாடியிலிருந்து இறங்கி வந்தார் முதியவர் கெளதம் சாது. அவரைப் பார்க்கும்போதே அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பது தெரிந்தது. மிகுந்த கலைநயத்துடன் அமைத்திருந்த அந்த ஹாலில் கம்பீரமாக நடந்து வந்து இன்ஸ்பெக்டர் இந்திராசென்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். வாருங்கள் இன்ஸ்பெக்டர்.. நீங்கள் ஏன் என்னைக் காண வந்திருக்கிறீர்கள் என்று நான் அறியலாமா? என்னால் உங்களுக்கு ஏதாவது உதவ முடியுமா? என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பொம்மை கீழே விழுந்தது.

ஒரு முனகலுடன் எழுந்து குனிந்து அதை எடுக்கப்போன கெளதம் சாது இப்படித்தான் இன்ஸ்பெக்டர் இந்த வீட்டில் .. என்று தொடங்கும்போதே இந்திராசென் குறுக்கிட்டு, தெரியும் மிஸ்டா சாது.. உங்கள் மகள் என்னிடம் சொன்னார் என்றார்.

மகளா? ஐயோ இன்ஸ்பெக்டர்.. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்.. அவள் என் மகள் இல்லை, என் மனைவி அகல்யா.. ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். இவ்வளவு வயதான எனக்கு இவ்வளவு இளமையான அழகான பெண் மனைவியாக இருப்பாள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கெளதம் சாது சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு ட்ரேயில் டீ கப் மற்றும் சாசரில் சில பிஸ்கட் சகிதம் மீண்டும் ஹாலில் பிரவேசமானாள் அகல்யா.

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் இந்திராசென்.

பார்த்தீர்களா இன்ஸ்பெக்டர்? எவ்வளவு அழகாக இருக்கிறாள் என் மனைவி? என் படைப்புகளுக்கெல்லாம் அவள் தான் உயிர்ப்பூட்டுபவள். அவள் என் அருகில் இருந்தால்தான், அவளைப் பார்த்துக்கொண்டே இயங்கினால் தான் என் படைப்புகள் இந்தனை உயிர்ப்புடன் விளங்குகின்றன. சொல்லப்போனால் அவளால்தன் நான் இன்று இவ்வளவு பிரபலமாக விளங்குகிறேன் என்றார் கெளதம் சாது.

முகத்தில் வெட்கம் தவழ, சற்று சும்மாயிருக்கிறீர்களா கொஞ்சம்? என்று அவரை அதட்டிவிட்டு நீங்கள் டீ எடுத்துக்கொள்ளுங்கள் இன்ஸ்பெக்டர் என்று சென்னிடம் தட்டை நீட்டினாள் அகல்யா.

அவள் முகத்தைவிட்டு தன் கண்களை அகற்றாமலே டீ கோப்பையை எடுத்துக்கொண்டார் இந்திராசென். கணவர் பக்கம் திரும்பிய அகல்யா டீ வேண்டுமா? என்றாள்.

டீயா? எனக்கா? என்று பெரிதாக சிரித்த சாது, சற்று நகர்ந்து ஹாலின் ஒரு மூலையில் இருந்த ப்ரிட்ஜின் மேல் இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்தார். எனக்கு உற்சாகம் கொடுப்பதெல்லாம் என் அகல்யாவும் இந்த விஸ்கியும் தான் இன்ஸ்பெக்டர். இந்த இரண்டின் துணையுடன் தான் நான் என் கலைப் படைப்புகளை சாதித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நான் சிறிது விஸ்கி எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டவாறே பதிலை எதிர்பார்க்காமல் சிறிய கோப்பையில் ஊற்றிக்கொண்டார்.

உங்களுக்கு? என்று சாது கேட்டதற்கு நான் வேலை நேரத்தில் மது அருந்துவதில்லை என்ற பதில் மூலம் மது அருந்தும் பழக்கம் உண்டு என்பதை உறுதிப்படுத்தினார் இந்திராசென். கெளதம் சாது மீண்டும் பேசத்தொடங்கினார்.

உங்கள் சந்தேகம் நியாயம்தான் இன்ஸ்பெக்டர். அதனால் தான் நானும் இவளிடம் தினமும் சொல்கிறேன், ஏன் வயதான என்னுடன் காலம் கழிக்கிறாய்? வயதான என்னால் படுக்கையில் மட்டும் என்ன சுகம் தர முடியும் உனக்கு? உன்ககேற்ற நல்ல அழகான இளைஞனை மணம் செய்து கொண்டு சந்தோஷமாக இரு என்று.. என்று அவர் சொல்லிககொண்டிருக்கும்போதே வெட்கத்தால் சிவந்த முகத்துடன் குறுக்கிட்ட அகல்யா, உங்களுக்கு யாரிடம் எப்போது எதைப் பேச வேண்டும் என்கிற விவஸ்தையே இல்லை.. நான் மேலே செல்கிறேன். நீங்கள் இன்ஸ்பெக்டரிடம் அவர் என்ன கேட்கிறாரோ அதற்கு மாத்திரம் பதில் சொல்லிவிட்டு வாருங்கள்.. நான் வருகிறேன் இன்ஸ்பெக்டர்.. என்று கூறி மாடி மேல் சென்றுவிட்டாள்.

மீண்டும் அவளையே இன்ஸ்பெக்டா பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்த சாது, அகல்யா நிஜமாகவே மிக அழகுதான் இல்லையா இன்ஸ்பெக்டர்? என்று கூறி, சாரி உங்களுக்கு என்னிடம் என்ன வேண்டும் என்பதைக் கூறுங்கள் என்றார்.

இந்திராசென்னும், சரி நானும் விஷயத்திற்கு வருகிறேன்.. என்று கூறி சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டினார். இந்த போட்டோவிலிருப்பனை
உங்களுக்குத் தெரியுமா? அவன் பற்றிய விவரங்கள் ஏதாவது தெரிந்தால் என்னிடம் மறைக்காமல் சொல்லிவிடுங்கள். ஏனெனில் நான் விசாரித்தவரை இவன் கடைசியாக உங்களைப் பார்க்க வந்ததாகத்தான் கேள்விப்பட்டேன். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? என்றார்.

அந்தப் படத்தை உற்றுப்பார்த்த சாது, இவனா? இவன் ராஜ். இவனை எனக்கு நன்றாகத் தெரியும். இவன்தான் நான் கடைசியாக செய்த பொம்மைக்கு மாடலாக இருந்தவன். ஆனால் .. நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா என்பதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.. என்றார்

நான் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. இவன் ராஜ் என்பது சரி. இப்போது அவன் எங்கே? என்றார் இன்ஸ்பெக்டர்.

ஏன்? அவனுக்கு என்ன? என்றார் கெளதம்.

அவனை இரண்டு மாதமாகக் காணவில்லை என்று புகார் வந்திருக்கிறது. விசாரித்ததில் நான் முன்பேசொன்னதுபோல அவனை கடைசியாக பார்த்தவர்கள் எல்லோருமே அவன் உங்கள் விலாசம் கேட்டதாகவோ அல்லது உங்கள் வீட்டிற்குச் சென்றதாகவோதான் சொல்கிறார்கள். எனவே உங்கள் விளக்கம் தேவை என்றார் இந்திராசென்.

சரி, இன்ஸ்பெக்டர். நான் சொல்வதை நம்புவது உங்களைப்போன்ற திறமைமிக்க இளைஞர்களுக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனாலும் கேளுங்கள். எல்லாவற்றிற்கும் இந்தக் கல் தான் காரணம் என்று சொல்லியபடியே அங்கு கண்ணாடியினாலான ஒரு பெட்டிக்குள் இருந்த உள்ளங்கை அளவிலான ஒரு கூழாங்கல்லை எடுத்துக் காண்பித்தார் கெளதம்.

மேலும் தொடர்ந்தார். இது வெளி உலகிற்குத் தெரியாம்ல் என்னிடம் இருக்கும் ஒரு ரகசியமான பொக்கிஷம். இந்தக் கல் இருக்கிறதே இது சாதாரணக் கல் அல்ல. இது ஒரு மந்திரக்கல். இதைக் கையில் எடுத்துக்கொண்டு நாம் நம் உருவத்தை மாற்றிக்கொள்ள முடியும். நாம் யாராக மாற நினைக்கிறோமா அவர் போலவே தோற்றம் கொள்ள முடியும்.

நீங்கள் தேடி வந்த ராஜ் என்னிடம் மாடலாக பணிபுரியும் போது இருந்த சில நாட்களில் இந்த ரகசியம் பற்றி நான் யாரிடமோ பேசிக்கொண்டிந்ததை அவன் கேட்டுவிட்டான். அன்று முதல் இந்தக் கல் மீதே அவன் கவனம் இருந்தது. மேலும் அவன் ஒருவித பதட்டத்தில் இருந்தான். யாரிடமிருந்தோ தப்பிச்செல்ல அவன் முயன்றுகொண்டிருந்தான் என்று எனக்குப் பட்டது.

ஒரு நாள் அகல்யா தனது செல்போனை இங்கேயே வைத்துவிட்டு மேலே சென்றிருந்தாள். அப்போது அவளது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஒரு நிமிடம் - ஒரே ஒரு நிமிடம் நான் மாடி ஏறி அவளிடம் போனை கொடுத்துவிட்டு வருவதற்குள் அவன் மாயமாகிவிட்டிருந்தான். ஆம். அவனைக் காணவில்லை. ஆனால் கதவிற்கருகில் இந்தக் கல் கீழே விழுந்திருந்தது. அவன் நல்லவன். அதனால் தான் கல்லை இங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்கிறான். அதற்குப்பின் நான் அவனைப் பார்த்ததில்லை. அவன் வேறு உருவம் எடுத்துக்கொண்டு இங்கிருந்து சென்றிருக்கிறான் என்று நினைக்கிறேன் என்றார் கெளதம்.

என்ன போலீஸ் என்றால் கிண்டலாக இருக்கிறதா? என்னை இந்தக்கதையை நம்பச் சொல்கிறீர்களா? என்று சற்றே கோபமாக கேட்டார் இந்திராசென்.

நான்தான் முன்னமே சொன்னேனே இன்ஸ்பெக்டர், இதைநம்புவது சிரமமாகத்தான் இருக்கும் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கெளதம்.

இந்திராசென் முகம் இறுகியது. இல்லை. இதை நான் நம்பப் போவதில்லை. ராஜ் காணாமல் மறைந்ததற்கும் அவனைப்போலவே தத்ரூபமாக இருக்கும் இந்த பொம்மைக்கும் ஏதோ சம்பந்தம் இருககிறது. எழுந்திருங்கள். சந்தேகத்தின் பேரில் உங்களை நான் கைது செய்கிறேன் என்றார் இந்திராசென்.

அப்போது மேஜைமேல் இருந்த செல்போன் ஒலித்தது. மாடியிலிருந்து அகல்யா, டார்லிங் தயவு செய்து அந்த போனை மாத்திரம் ஒரு நொடி இங்கு வந்து கொடுத்துவிட்டுச் செல்கிறீர்களா? என்று கேட்டாள்.

அவளது கோரிக்கையைக் கேட்டு எழுந்த கெளதம் ஒரு நொடி சிந்தனைக்குப்பின் அந்தக் கல்லை கையில் எடுதுக்கொண்டு இந்திராசென்னிடம், இன்ஸ்பெக்டர் நான் சொல்வது எல்லாம் உண்மைதானா என்பதை நீங்களே சோதனை செய்தகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தாருங்கள். இந்தக் கல்லை கையில் வைந்துக்கொண்டு நங்கள் என்னைப்போல மாறவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இந்த போனை அகல்யாவிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள். பிறகு நீங்களே நம்புவீர்கள் என்றார்.

திகைத்துப்போன இந்திராசென், என்ன விளையாடுகிறீர்களா கெளதம்? போலீஸிடம் இந்த ஏமாற்றுவேலையெல்லாம் வேண்டாம். முடிவு விபரீதமாக இருககும் என்று எச்சரிக்கிறேன். மரியாதையாக உண்மையைச் சொல்லிவிடுங்கள். எங்கே ராஜ்? என்றார்.

ஏன் இன்ஸ்கெக்டர், பயமாக இருக்கிறதா? உண்மையை நீங்களே உணர வேண்டும் என்பதற்காகத்தான் சொன்னேன் என்றார் கெளதம். பரவாயில்லை, நானே போய் தருகிறேன் என்ற சொல்லியபடியே எழுந்தார் கெளதம்.

தான் பயப்படுகிறோம் என்று கெளதம் சாது எண்ணிவிடக்கூடாது என்ற தன்மான உணாவு உந்த சற்று தயக்கத்துடன் சாதுவைத் தடுத்து அந்தக் கல்லை அவரிடமிருந்து வாங்கிக்கொண்ட இந்திராசென் மற்றொரு கையில் செல்போனையும் எடுத்துக்கொண்டு மாடி ஏறினார்.

என்ன ஆகுமோ என்ற பயமும் அகல்யாவை காண்போம் என்ற எதிர்பார்ப்பும் ஒன்று சேர திக் திக் என்று இதயம் படபடக்க ஒவ்வொரு படியாய் மாடியிலுள்ள அவர்களது படுக்கை அறையை நெருங்கினார் இந்திராசென். அவர் எதிர்பார்த்தது போலவே அழகு தேவதையாய் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அகல்யா. படுத்த கோலத்தில் அவளது இளமை அழகு இன்னும் எடுப்பாய் தர்ய சற்றே நிலைகுலைந்த இந்திராசென் தான் வந்ததை அறிவிக்க மிக மெலிதாக தொண்டையை கனைத்தவாறே செல்போனை நீட்டினார்.

தன்னைக் கண்டு என்ன நினைப்பாளோ அல்லது என்ன செய்வாளோ என்ற எண்ணத்தோடு நின்ற இந்திராசென்னிடம், அவள்புன்னகையுடன் திரும்பி ஆர்வத்துடன் அவரிடமிருந்து செல்போனை வாங்கிக்கொண்டு, டார்லிங் ஏன் நீங்கள் எனக்கு சுகம் அளிப்பதில்லை என்று பொய்எல்லாம் சொல்கிறீர்கள்? என்று செல்லமாய்க் கடிந்தாள். சற்றே குழம்பிய இந்திராசென், அவளது பதில் எங்கேயோ இடிக்கிறதே என்று எண்ணியவாறு தலை நிமிர்ந்தபோது எதிரே நிலைக்கண்ணாடியில் தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தார்.
ஆம் அதில் அகல்யாவின் அருகில் செல்போனைக்கொடுத்துவிட்டு விலகியவாறு தெரிந்த உருவம் .. தன்னுடையது அல்ல.. கெளததம் சாதுதான் கண்ணாடியில் தெரிந்தார். தான் காண்பது நிஜம்தானா என்று குழம்பி தன்னையே கிள்ளிப் பார்த்தக்கொண்டிருந்த இந்திராசென்னிடம் அகல்யா மீண்டும், கீழே போய் சீக்கிரம் அந்த இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு வாருங்கள்.. நான் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்றாள்.

குழப்பத்துடனும் கலக்கத்துடனும் சரி என்று சொல்லிவிட்டு திரும்பி நான்கு படிகள் கீழே இறங்கியதும் இந்திராசென் மனதில் ஆயிரம் எண்ணங்கள், ஆசைகள் அலைபாய்ந்தன. மீண்டும் மீண்டும் தான் கண்டதை நினைவூட்டிப் பார்த்தார். அகல்யாவின் கண்களுக்கு தான் நிச்சயம் கெளதமாகத்தான் தெரிந்தோம் என்பதை உறதி செய்து கொண்டார்.
ஏன் மீண்டும் ஒரு முறை அவளைக் காணக்கூடாது என்று மனம் மீண்டும் பேதலித்தது. கடமை உணாவு காற்றில் பறக்க ஒருவித வெறி பிறக்க தன்னிலை மறந்து இறங்கிய கால்களை நிறுத்தி மீண்டும் மாடி ஏறினார். கவவைத்திறந்த அவரை அகல்யா படுக்கையிலிருந்து எழுந்து வந்து, இவ்வளவு சீக்கிரம் அவரை அனுப்பிவிட்டீர்களா? என்ற கேட்டு இறுக்க அணைத்தாள். அவள் இறுக்க.. இறுக்க… சூழலின் இறுக்கத்தில் உணாச்சியின் விளிம்பில்.. பதட்டத்தின் உச்சியில்.. இறுகி நிலைமறந்த அவர்….

விழித்துக்கொண்டபோது ஒரே இருட்டு. எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. கை கால்களெல்லாம் கட்டிவைத்தாற்போல் ஒரு இயக்கமற்ற நிலை. சுற்றுமுற்றும் திரும்ப முயற்சித்தாலும் முடியவில்லை. தனக்கா, ஒரு திறமையான போலீஸ் அதிகாரிக்கா இந்த நிலை என்ற எண்ணம் அவரை கொதிப்படையச் செய்ய மேலும் பிரயாசையுடன் கை கால்கள் மற்றும் கழுத்தையும் அசைக்க முயன்றார். மிகுந்த முயற்சிக்குப் பின் ஒரு சிறு ஒளிக்கீற்று தோன்றினாற்போல் இருந்தது. மிகக்குறுகிய அந்தக் இடைவெளி வழியே பார்க்க முயன்றவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை.

ஆம். அவர் கண்டது கெளதம் வீடடின் அதே ஹால். கெளாதம் சாது, அகல்யா மற்றும் வேறோர் இளைஞன் மூவரும் பேசிக்கொண்டிருப்பது மெலிதாகக் காதில் கேட்டது. இப்படித்தான் விஷால், இந்த வீட்டில் பொம்மைகள் அவ்வப்போது தானாக விழுகின்றன. எப்படி என்பதே புரியாத மர்மமாக இருக்கிறது என்றார் கெளதம். இந்திராசென்னின் இதயம் குலுங்கியது. மிஸ்டர்..., இந்த ஆள் சொல்வதை நம்பாதீர்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என்று உரக்கக் கத்த வேண்டும் என்று மனம் துடிதுடித்தது. மீண்டும் எப்படியாவது இந்தக் கட்டுகளை அகற்றிக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று எண்ணியவாறு முறுக்கேறிய உடலை மேலும் முறுக்கினார். முன்னும் பின்னும் உடலை சாய்த்தால் கட்டு தளரலாம் என்றெண்ணி உடலை சாய்க்க முயற்சி செய்தார்.

படார்.. என்று விழுந்த போலீஸ் பொம்மையை கீழிருந்து எடுத்து சரியாக வைத்தான் விஷால்.



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home