Saturday, January 7, 2017

வியூகம்


அன்று காலையிலேயே ப்ளானிங் ஆரம்பித்து விட்டது. “உங்கள் சகோதரிகள் வந்திருக்கிறார்கள்.  தீபாவளிக்கே அவர்களுக்கு சேலை வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று சாயந்திரம் சீக்கிரம் வந்து விடுங்கள்.  அவர்களையும் அழைத்துச் சென்று அந்த புதிய கடையில் சில்க் காட்டன் மிக நன்றாக இருக்கிறது அவர்களுக்கும் வாங்கித்தந்து நானும் பிடித்திருந்தால் ஒன்றோ இரண்டோ வாங்கிக் கொள்கிறேன்” என்று என் மனைவி தன் வியூகத்தை வகுத்தாள்.

தாய்சொல்லைத் தட்டாதே, மனைவி சொல்லை மீறாதே என்ற மந்திரங்களுக்கு கட்டுப்பட்டும் கஷ்டப்பட்டும் அன்றோ அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம்? எனவே நான் வாய் திறக்காமல் இருந்தேன்.  பதில் சொல்லாததாலேயே என் மெளனத்தை சம்மதமாக அவர்களிடமும் அறிவித்து விட்டாள்.

“சாயந்தரம் ஐந்து மணிக்கெல்லாம் ரெடியாக இருங்கள், அவர் ஆபீஸிலிருந்து நேராக வந்து உங்களை அழைத்துக்கொண்டு என் ஆபீஸுக்கு வந்து என்னையும் அழைத்துக் கொண்டு நான் சொன்னேனே புதிதாக ஆரம்பித்திருக்கும் அந்தக் கடைக்குப் போய் எல்லோருக்கும் புடவை வாங்கித்தருகிறாராம்” என்று தன் வியூகத்தின் முதல் திட்டத்தை செயல்படுத்தினாள்.

சாயந்திரமும் ஆயிற்று. வார்த்தை தவறிவிட்டாய் என்று யாரும் பாடிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் நேரம் தவறாமல் அந்தந்த இடங்களுக்குச் சென்று அனைவரையும் அழைத்துக்கொண்டு புடவைக் கடைக்கும் சென்றவிட்டோம்.

அந்தக் கடை மிகவும் சிறிதாக இருந்தது.  வாசலில் காரை பார்க் செய்ய்கூட இடம் இல்லை.  எனவே அவர்களை கடையில் இறக்கி விட்டு எனது காரை சற்றுத் தள்ளி இருந்த பார்க் அருகே நிறுத்திவிட்டு நடந்து வந்து மீண்டும் கடைக்குள் நுழைந்தேன்.  “எங்களுக்கு சற்று நேரம் ஆகலாம்.  நீங்கள் வேண்டுமானால் கொஞ்சநேரம் உலாத்திவிட்டு வாருங்கள்” என்று அன்பாகக் கட்டளையிட்டாள் என் மனைவி.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  அனுபவம் பேசியது. எப்படியும் இவர்கள் சீக்கிரம் செலக்ட் செய்யப் போவதில்லை.  அரை மணி நேரம் அத்தனை சேலைகளையும் ஒவ்வொன்றாக புரட்டிப் பார்த்து எந்தக் கலர் புடவைக்கு எந்த பார்டர் இல்லையோ அதைக் காண்பிக்கும்படி கேட்பார்கள்.  கடைக்காரருக்கு எப்படியோ, பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு பொறுமை போய்விடும். சேல்ஸ்மேன் (அல்லது உமன்) கதி இவர்கள் வாங்குவதை நம்பியே இருப்பதால் வேறு வழியின்றி உள்ளே சென்று இன்னும் கொஞ்சம் புடவைகளை கட்டுக்கட்டாகக் கொண்டு வந்து விரிப்பார்கள்.

அடுத்த அரை மணிநேரம் இந்தப் புதிய கட்டுகளில் உள்ள சேலைகளையெல்லாம் அலசியபின் “இந்த பார்டருக்கேற்றார்போல் வேறு சேலைகள் காண்பிக்க முடியுமா?” என்று கேட்பார்கள்.  பழையன கழிந்து புதியன புகுதல் போல் பொறுமை சென்ற இடத்தில் பிளட்பிரஷர் புகுந்திருக்கும். 

இன்னும கொஞ்சம் நேரம் உள்ளே இருந்தால் நமக்கு ஆபத்து என்று உணர்ந்து, விதி வலியது என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், நாம் சற்று நேரம் மற்ற கவனச்சிதறல்களில் மனதை ஒருமைப்படுத்தினால்தான் நமக்கு நல்லது என்ற தெளிவு ஏற்பட்டு வெளியே வருவோம்.
“அரிது அரிது ஆண்மகனாகப் பிறப்பது அரிது அதனினும் அரிது புடவைக் கடையில் பொறுமை காப்பதுதானே ….” என்று கே.பிசுந்தராம்பாளின் குரலில் வெண்கல வரிகள் மனதில் ஒலிக்க, சற்று நேரம் பார்க்கில் உட்கார்ந்து வருவோம் என்று புறப்பட்டேன்.  கேபி.சுந்தராம்பாளை மட்டும் ஏனோ அத்தனை திரைப்படங்களிலும் ஒரே புடவையில் பார்த்ததுபோல் தோன்றியது.

சென்னை நகரின் கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் பார்க்குகள் மட்டும் எப்படியோ நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.  மக்கள் மத்தியிலும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு பெருகியிருப்பதாலோ அல்லது மற்ற பொழுதுபோக்கு செலவுக்கான வருமானம் குறைந்திருப்பதாலோ தெரியவில்லை, பார்க்குகளில் என்னமாய் கூட்டம் அலைமோதுகிறது?

அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டேன். பக்கத்தில் இருந்த முதியவர் ஒருவர் ஓரிரு பக்கங்களே கொண்ட நியூஸ் பேப்பரை திரும்பத்திரும்ப புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தார்.  அப்படி என்னதான் சுவாரஸ்யமாக இருக்கிறதோ என்று எட்டிப் பார்த்தேன்.  நான் பார்ப்பதைக் கண்டவுடன் எழுந்து சென்றுவிட்டார். சே, அவர் நிம்மதியைக் குலைத்துவிட்டோமே என்று வருத்தத்துடன் இனி யார் செயலிலும் குறுக்கிடக்கூடாது என்ற தீர்மானத்துடன் வெறுமனே வெட்டவெளியை நோக்கியபடி உட்கார்ந்திருந்தேன். 

மனது அத்தனை சீக்கிரம் நாம் சொல்வதைக் கேட்குமா என்ன? சீக்கிரமே கண்கள் வெறென்ன காட்சிகள் கிடைக்கும் என்று அலையத் தொடங்கின. பார்க்கின் அயலார் கூட்டத்தின் நடுவில் அடையாளம் தெரிந்துவிடாத தனிமையில் இளம் ஜோடிகள் நெருங்கி அமர்ந்து அவரவர் செல்போன்களை இயக்கிக்கொண்டிருந்தனர். அழகான குழந்தைகளை தள்ளுவண்டியில் அமர்த்தி பெருமையோடு தள்ளிக் கொண்டிருந்த தாய்மார்களின் பின்னே பை, பாட்டில், பிளாஸ்க் இத்யாதிகளைச் சுமந்தபடியே அவர்களின் கணவர்கள் (நீங்களாக தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள், ஒருத்திக்கு ஒருவர்தான்) பொறுமை பழகிக் கொண்டிருந்தனர்.

ஓடக் கற்றுக்கொண்டிருந்த குழந்தைகள் அதில் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.  கற்றுக்கொண்டுவிட்ட குழந்தைகள் தத்தம் பெற்றோரை ஓடி வரும்படி அழைத்துக்கொண்டிருந்தார்கள்.  அவரவர் வயதிற்கேற்றார்போல் சிறுவர்களும் சிறுமியர்களும், இளைஞர்களும் இளைஞிகளும்  சிறுசிறு கூட்டம் கூட்டமாக உலகத்தில் பேசுவதற்கு இத்தனை விஷயம் இருக்கிறதா என்று எண்ணும் அளவுக்கு எதையோ உற்சாகமாக பேசியபடியே நடந்துகொண்டிருந்தனர்.  வயதானவர்கள் மட்டும் ஏனோ தனித் தம்பதியராகவோ அல்லது தனியாகவோ மட்டும் அமர்ந்திருந்தனர்.

ஓரிரு இளைஞர்கள் பின்னால் மட்டும் அந்த பார்க்கிலிருந்த ஏழெட்டு நாய்கள் வாலைக்குழைத்துக் கொண்டு அவர்கள் செல்லுமிடமெல்லாம் அவைகளும் தொடர்ந்துகொண்டிருந்தன.  அங்கங்கே ஒன்றிரண்டு பூனைகள் மற்றும் அணில்கள் கூட விளையாடிக்கொண்டிருந்தன.

மாலை முடிந்து இரவு கவியத்தொடங்கியது.  வெளிச்சம் அகன்றதும் மாலையில் மலரும் அல்லிபோல் இரவில் இயங்கும் இயந்திரங்களான நம் சென்னைக் கொசுக்கள் புறப்பட்டு அசையாமல் அமர்ந்திருந்த முதியோர்ளை முடுக்கிவிட்டன.  எங்கிருந்து வந்தன இத்தனை கொசுக்கள், இவைகளை அழிக்கவே முடியாதா என்று எண்ணும்போதே கொசுக்களை கபளீகரம் செய்யவென்றே படைத்தாற்போல வெளவால்கள் புறப்பட்டு நாம் வீடியோ கேம்களில் பார்க்கும் விமானப்படை சண்டையைப்போல் கீழிருந்து மேலும் மேலிருந்து கீழும் தரையை ஒட்டியும் உயரமாகவும் மாற்றி மாற்றி வாயைத் திறந்தபடியே பறந்து தங்களால் ஆன கொசு ஒழிப்பு சேவையைச் செய்துகொண்டிருந்தன.

திடீரென்று விசில் சப்தம் கேட்டது.  என்னவோ ஏதோ என்று சுற்றுமுற்றும் பார்த்தேன்.  தினப்படி பார்க்குக்கு வரும் வழக்கம் கொண்டிருந்த பலரும் தத்தம் பெஞ்ச்சுகளிலிருந்து எழுந்தபடியே, ‘பார்க்கை மூடப் போகிறான்” என்று தனக்கேயோ அல்லது ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கோ சொல்லிக்கொண்டே நகர்ந்தனர்.

இயற்கையோடு ஒன்றிவிட்டிருந்த என்னை இந்த விசில் சப்தம் எழுப்பி புடவைகளோடு ஒன்றிவிட்டிருந்த பெண்மணிகளின் நினைவை வரவைக்கவே, என் மனைவிக்கு போன் செய்தேன். பதினைந்து ரிங்குகளுக்குள் எடுத்து, “கிட்டத்தட்ட முடித்துவிட்டோம்.  இன்னும் பதினைந்து நிமிடங்கள்தான்.  பிறகு பில் போட்டுவிடலாம்.  நீங்கள் கார் எடுக்கச் செல்லலாம்” என்று தன் வியூகத்திலிருந்து வெளி வரும் வழியைக் காட்டினாள்.

வீக்கம் என்பது பணத்திற்கும் விலைவாசிக்கும் மட்டுமல்ல, நேரத்திற்கும் உண்டு என்பது அன்று நிரூபிக்கப்பட்டது.  எப்படியோ அந்த நாள் திட்டங்கள் நல்லபடியாக நடந்தன என்றமட்டும் எனக்கு மகிழ்ச்சி.

ஊரிலிருந்த வந்திருந்த சகோதரிகள் மீண்டும் ஊர் திரும்பிவிட்டனர்.  ஒரு வாரம் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கழிந்தது.  இன்று எனக்கு விடுமுறை.  ஆனால் என் மனைவிக்கு ஆபீஸ் உண்டு.  காலையில் வேலைக்குக் கிளம்பும்போது கேட்டாள், “இன்றைக்கு என்ன பிளான்?” என்று.  அப்போதே அசரீரி ஒலித்தது “பிளான் ஏற்கெனவே போட்டாச்சு ஜாக்கிரதை!”

விதி ஒன்றை நிர்ணயித்துவிட்டால் நாம் அதை மாற்ற முடியுமா என்ன? ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை என்ற பாடல் மனதில் ஒலிக்க, சம்சாரக்கடலின் கரையில் சாயாமல் நிற்கவேண்டுமானால் நாணலென வளைந்துகொடுப்பதே மேல் என்பதால் “எனக்கு இன்றைக்கு லீவ்தான், ரெஸ்ட்தான். எங்காவது போகலாம் என்றால் போகலாம். நீ சொல்”  என்றேன்.

என்றைக்கும் மூடியிருக்கும் ஏடிஎம் இன்றைக்குத் திறந்திருப்பதைப் பார்த்ததுபோல் பரவசத்துடன் என் மனைவி, “வீட்டில் சும்மாதானே இருக்கப்போகிறீர்கள்? சாயந்திரம் அந்தப் புடவைக் கடைக்குப் போகலாமா?” என்றாள்.  சற்றே வியப்புடன், “இப்போதுதானே வாங்கினோம், மீண்டும் புடவை வாங்கவேண்டுமா என்ன?”  என்று கேட்டேன்.
“சேச்சே.  விலைவாசி விற்கும் விலையில் மறுபடி மறுபடி புடவை வாங்குவார்களா என்ன?  அன்றைக்கு வாங்கின புடவைகளில் இரண்டு மூன்று எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என்றாள் என் அருமை மனைவி.

பாரபட்சமில்லாமல் கடைக்காரர்களோடும் சேர்ந்தே விளையாடியிருப்பதை அறியாமல் என்னுடன் மட்டும் தான் விளையிடியிருக்கிறது என்று அவசரப்பட்டு நொந்துகொண்டோமே என்று நினைத்து விதியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.
0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home