Monday, December 19, 2016

அவன் பித்தனா

அது மிகப் பழமையான கோவில்.  தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. நானும் என் மனைவியும் திருப்பதி சென்று திரும்பிக்கொண்டிருந்தோம். வீடு திரும்பும் வழியில் உள்ளதால் எங்கள் கார் டிரைவர் அந்தக் கோவிலுக்குச் செல்லலாம் என்று ஒரு யோசனை சொல்ல, எங்களுக்கும் நேரம் இருந்ததால் சரியென்று ஒப்புக் கொண்டோம். பிரதான சாலையிலிருந்து திரும்பி சற்றே குறுகலான சாலைகள் வழியே சிறிது நேரம் சென்று அந்தக் கோவிலை அடைந்தோம்.

கார் கதவைத் திறந்தவுடனே அவன் ஓடி வந்தான்.  அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.  மிகவும் மெலிந்த தேகம்.  பழைய கிழிந்த கந்தல் ஆடைகளையே அணிந்திருந்தான்.  ஆனால் அவன் பார்வையில் ஒரு கூர்மை தெரிந்தது.  எங்களுக்கு மிகஅருகில் வந்து யாசகம் கேட்டான்.  கோவிலுக்குச் செல்லும் அவசரம். எப்படியாவது அவன் நகர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் பர்ஸைத் திறந்து அகப்பட்ட பத்து ரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்தேன்.  அவன் அதை கவனித்து மகிழ்வான் என்ற என் எதிர்பார்ப்பு பொய்யானது.  ஒருவித உணர்ச்சியும் காண்பிக்காமல் பணத்தை வாங்கிக்கொண்டு அவன் நகர்ந்தான்.

வேகவேகமாக கோவிலுக்குள் சென்ற எங்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.  நம் தமிழ்நாட்டுக் கோவில்களெல்லாம் மாலை நான்கு மணிக்கெல்லாம் திறந்துவிடுவார்கள்.  இந்தக் கோவிலிலோ நேரம் மாலை ஐந்தரை மணியை நெருங்கிக்கொண்டிருந்தபோதும் அப்போதுதான் கோவிலில் நீர் தெளித்து பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.  உள்ளே கர்ப்பக்கிரகத்திலும் யாருமில்லை. கதவு அடைத்திருந்தது.  கேட்டதில் இன்னும் சற்றுநேரத்தில் திறந்துவிடுவார்கள் என்றார்கள்.  வேறு வழியின்றி சிறிது நேரம் வெளிப் பிரகாரத்தில் அமைந்திருந்த மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டே பொழுதை கழித்துக்கொண்டிருந்தோம்.

சற்று நேரத்தில் கதவைத் திறந்தார்கள்.  இறைவனை தரிசித்தபின் வெளிவரும்போது வெளிவாசலுக்கருகே தொன்னையில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  நான் எனக்காக ஒன்றும், நீண்ட நேரமாக வெளியில் காத்துக்கொண்டிருப்பாரே என்ற இரக்கத்தில் டிரைவருக்கு ஒன்றுமாக இரண்டு தொன்னைகளில் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

வழியில் மீண்டும் அவன் கண்ணில் தென்பட்டான். அவன் என்னையே கவனித்துக்கொண்டிருப்பதுபோல் எனக்குப் பட்டது.  எங்கே அவன் என் கையில் வைத்திருக்கும் பிரசாதத்தை பிடுங்கிக்கொள்வானோ என்று அஞ்சினேன்.  அவன் பார்வையை சந்திப்பதைத் தவிர்த்து நேராக டிரைவரிடம் சென்று ஒரு தொன்னையை நீட்டினேன்.  டிரைவர் அதை வாங்கிக்கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக எங்களை நோக்கி வருவதை கவனித்தேன்.  அவனுக்கு தமிழ் தெரியுமா என்ற சந்தேகம் என் மனதுக்குள் இருந்தாலும்  கோவிலைக் காட்டி உள்ளே பிரசாதம் தருகிறார்கள் போய் வாங்கிக்கொள் என்று கூறினேன்.

அவன் நான் சொல்வதை கவனித்ததுபோல் தெரியவில்லை. நேராக அருகில் வந்தான். என்ன செய்யப்போகிறானோ என்று திகிலுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.  அவன் நேராக டிரைவரிடம் சென்று தன் பேண்ட் மற்றும் சட்டைப் பையில் கைவிட்டு அவற்றில் இருந்த பணத்தையும் சில்லறைக் காசுகளையும் மொத்தமாக அள்ளி எடுத்து டிரைவரின் கையில் திணித்தான். என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே ஆசீர்வதிப்பது போல் கையசைத்து டிரைவரிடம் தெலுங்கில் ஏதோ சொல்லிவிட்டு வந்த வேகத்தில் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

அவன் என்ன சொன்னான் என்று டிரைவரிடம் கேட்டேன்.  டிரைவர் அதற்கு ஒரு சிறிய கதையே சொன்னார். அவனுக்கு டிரைவர்கள் மேல் அலாதி மரியாதையாம்.  ஏனெனில் அவர்கள் நேரம் காலம் பார்க்காமல். உணவு ஓய்வு பற்றிக் கவலைப்படாமல் உழைப்பவர்களாம்.  அதனால்  டிரைவரின் பேரில் அக்கறை கொண்டு நான் பிரசாதம் கொண்டுவந்து கொடுத்ததைப் பார்த்து அவனுக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாம்.  அதனால் என்னை வாழ்த்தியதுடன் என்னுடைய டிரைவராகிய அவரிடம் தான் செல்லும் வழியில் காணும் பிற டிரைவர்கள் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதற்கு அவன் சேர்த்துவைத்த பணத்தைக் கொடுங்கள் என்று கொடுத்தான் என்றும் சொன்னார்.


சரியான பித்தன் தான் போலிருக்கிறது என்று சற்றே அச்சம் குறைந்தவனாக அவன் எங்கே இருக்கிறான் என்று திரும்பிப் பார்த்தேன்.  அவ்வளவு நேரம் எங்கிருந்தாலும் கண்ணில் பட்டுக்கொண்டிருந்த அவன் அந்த விநாடி முதல் கண்ணுக்குத் தென்படவேயில்லை!  பித்தனா சித்தனா என்று என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு எங்கோ சென்று விட்டான் அவன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home