Sunday, February 5, 2017

மாத்தி யோசி

நம்முடைய இந்து தர்மம் கீதை மூலமாகச்சொல்கிறது, கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று.

நாம் எதையும் எதிர்ப்பார்க்காமல் எந்த ஒரு செயலையும் செய்கிறோமா?
காரணத்தை முன்வைத்துத் தான் எந்தக் காரியத்திலும் இறங்குகிறோம். ஆனால் முன்னோர்கள் ஏன் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தால், ஒன்று புரிகிறது.  பலனை எதிர்ப்பார்க்காதே, சரி.  ஆனால் கடமையைச் செய் என்பது முக்கியம். பலன் உடனேயும் கிடைக்கலாம், பிறகும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.  ஆனால் கடமையைச் செய்யாமலே பலன் கிடைக்குமா?

விதை விதைப்பது, நீர் ஊற்றுவது நம் கடமை. பலன் நமக்குக் கிடைக்கலாம், நம் சந்ததியினருக்குக் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். விதையே விதைக்காமல் மரம் வேண்டும் பழம் வேண்டும் என்று ஆசைப் பட்டால் நடக்குமா?

அதுபோல் தான் நன்றியும்.  நமக்கு ஒருவர் உதவி செய்தால் நாம் திரும்ப உதவி செய்வது நம் கடமை.  ஒருவேளை நமக்கு உதவி செய்தவருக்கே உதவி தேவைப்பட்டு அச்சமயத்தில் நாம் அவருக்குத் திரும்ப உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அது நம் அதிர்ஷ்ட்டம்.  ஆனால் பெரும்பாலும் அவ்வாறு அமைவதில்லை.

இதைப்பற்றி வீட்டில் கலந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவ்வையாரின் செய்யுள் நினைவுக்கு வந்தது.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா
நின்று தளரா வளர்தெங்கு தாளுண்டநீரைத்
தலையாலே தான் தருதலால்

சாதாரணமாக நமக்குச் சொல்லி வந்த கருத்து என்னவென்றால் நான் முன்னமேயே குறிப்பிட்டது போல் நாம் ஒருவர்க்கு ஒரு உதவி செய்தால் அவர் எப்போது திரும்பித் தருவார் என்று அஞ்சவேண்டியதில்லை - எப்படி தென்னை மரத்திற்கு நாம் தாளில் (வேரில்) ஊற்றிய தண்ணீரை அது சுவையான இளநீராகத் தலைமூலம் தருகிறதோ அதுபோல அவரும் தரவேண்டிய சமயத்தில் தருவார் என்பதாகும்.

சற்றே மாற்றி யோசித்துப் பார்ப்போமா?  தென்னைக்கு நாம் அதன் தாளில் தண்ணீர் ஊற்றுகிறோம்.  ஆனால் நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது?  வேறோர் இடத்திலிருந்து - அதாவது தலையிலிருந்து.  அது போல் நாம் ஒருவர்க்கு உதவி செய்தால் வேறோர் சமயத்தில் இன்னொருவர் நமக்கு உதவி செய்வார்.   செய்யுளைப் பார்த்தால், நன்றிதான் திரும்பி வருகிறது.  செய்தவர் அல்லர்.  அந்த ஒருவர் என்று தருவார் எனவேண்டா என்று சொல்லாமல் அந்நன்றி என்று தருங்கொல் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, நாம் காலுக்குத் தண்ணீர் ஊற்றினால் தலை நமக்கும் மற்றவர்க்கும் தண்ணீர் தருவதைப்போல, ஒருவர் நமக்கு உதவி செய்தால் நாம்  அவருக்குத்தான் திரும்ப உதவி செய்ய வேண்டும் என்பதில்லை.   வேறு ஒருவர்க்கு தக்க சமயத்தில் உதவி செய்வதே அந்நன்றியை நாம் காண்பிக்கும் விதம் ஆகும் என்பது என் தாழ்மையான கருத்து.

சரியோ தவறோ, யோசிப்பதற்கு நிறைய இருக்கிறது..

2 Comments:

Blogger Jeevan said...

உங்கள் கருத்தோடு நான் ஒன்றுபடுகிறேன்... அருமையான விளக்கம்!

February 9, 2017 at 7:04 AM  
Blogger Raghu said...

மிக்க நன்றி, ஜீவன்.

February 14, 2017 at 6:24 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home