Sunday, December 10, 2017

ஆற்றாமை

மீனாத்தாளுக்கு நேரம் ஆக ஆக மனதில் பயமும் அதிகரித்துக்கொண்டே இருந்ததுபள்ளிக்குச் சென்றிருந்த அவளுடைய மகன் வேலு இன்னும் வரவில்லைவழக்கமாக ஐந்தரை மணிக்கெல்லாம் வந்துவிடுவான்இன்று நேரம் ஆறு மணியை நெருங்கிக்கொண்டு இருந்தது.  நல்ல வெய்யில் காலமாதலால் இன்னும் அரை மணி நேரம் வெளிச்சம் இருக்கும்அதற்குள் போனால்தான் உண்டுஇருட்டி விட்டால் தர மாட்டார்கள்நாளைக்கு வா என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார்கள். இவன் என்னடாவென்றால் இன்றைக்குப் பார்த்து நேரம் கடத்துகிறான்ஏனென்று தெரியாமல் உள்ளுக்கும் வெளிக்குமாய் அரை நிடத்திற்கொருமுறை வீதி ஓரத்தைப் பார்த்தபடியே தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
அதோ யாரோ ஒரு பையன் பையை வீசிக்கொண்டே வருவதுபோல் தெரிகிறதே என்று கண்ணை சற்று குறுக்கிக்கொண்டு பார்த்தாள்நல்ல வேளை, வேலுதான்உடனே உள்ளே போய் கஞ்சியில் கொஞ்சம் உப்பும் ஒரு வத்தல் மிளகாயும் உள்ளங்கையில் தேய்த்து அதை கலக்கி லோட்டாவில் வழிய வழிய நிரப்பிக்கொண்டு அவன் வீட்டுக்குள் வரும் முன்னரே வாசலில் லோட்டாவோடு வரவேற்றாள்.
வாடி வேலுக்கண்ணு.. இந்தா இந்தக் கஞ்சியை சட்டுன்னு குடிச்சுப்புட்டு எனக்கு ஒரு சின்ன வேலை மட்டும் செஞ்சிக்குடுத்துடுடா கண்ணுஎன்று செல்லத்துடன் ஒரு வேண்டுகோளையும் வைத்தாள்அப்போதே தெரிந்தது வேலுவுக்கு, தன்னை அம்மா எங்கோ அனுப்பப் போகிறாள் என்றுஅவனுக்கும் அம்மா மேல் பிரியம் அதிகம்ஆகையால் மொத்த கஞ்சியையும் ஒரே மிடற்றில் குடித்துவிட்டு எங்க போகனும் சொல்லுஎன்றான்.
உள்ளே சென்று ஒரு நைந்துபோன துணிப்பையை எடுத்துக்கொண்டு வந்தாள் மீனாத்தாள்ஒண்ணுமில்லேடா கண்ணுவீட்டிலே ஒரு மணி கூட நொய் இல்லே.. உங்கப்பாரு வேற இன்னும் ஊரிலிருந்து வரலேவந்தா ஒரு மூட்டை அரிசி கொணந்திடுவார்அவர் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்போல இருக்குஇன்னிக்கு மத்தியானம் நான் வேலை செய்யற மேட்டுத்தெரு அலமேலு அம்மாகிட்ட கேட்டிருக்கேன்..ரெண்டு படி நொய் குடுக்கறேன்னு சொன்னாங்கஅதான் நீ எப்ப வருவேன்னு பாத்திட்டிருந்தேன்.   செத்த வேகமா அவங்க வீட்டுக்கு ஓடிப்போய் இந்தப் பையிலே நொய் வாங்கிண்டு வந்திடுடா கண்ணுஇருட்டறத்துக்குள்ளே போகனும்டா கண்ணு.. அதான் நான் போகாம ஒனக்கோசரம் காத்துட்டிருந்தேன்.. நீயானா ஒரே நிமிஷத்திலே ஓடிப்போய் வந்துடுவேநான் இந்த நொண்டிக்காலோட போறதுக்கே அரை மணி ஆகும்அதான்….என்றாள்.
அவ்வளவுதானே.. குடு பையை என்று அந்த துணிப்பையை வாங்கிக்கொண்டு சிட்டாய்ப் பறந்தான் வேலு.
மீனாத்தாள் ஏழையானாலும் ரோஷக்காரிகோபமும் அதிகம்சிறுவயதில் ஜுரம் வந்து ஒரு கால் வளர்ச்சி சற்று குறைந்து போனதால் விந்திவிந்திதான் நடப்பாள்அதனால்வேறு மற்றவர்களுடன் பழகுவதிலும் நாட்டமின்றி தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பாள்படிப்பும் ஏறவில்லைஆனால் கைவேலையில் கெட்டிக்காரிவீட்டு வேலைகள் அனைத்தும் யார் தயவுமின்றி ஒற்றை ஆளாகவே செய்துவிடும் திறமையும் பலமும் பெற்றிருந்தாள்.   யாருடைய வம்புக்கும் போகமாட்டாள்காலாகாலத்தில் ஒரு கல்யாணம் செய்துவைத்து விடலாம் என்று அவளுடைய தாய் சரியான நேரத்தில் முயற்சிகள் எடுத்தாலும் மீனாத்தாளின் கால் ஊனம் மட்டுமே மாப்பிள்ளைகளுக்குப் பிரதானமாகத் தெரிந்ததுசிலபேர் வெளிப்படையாக வேண்டாம் என்று மறுத்தனர்சிலபேர் சீர் மற்றும் வரதட்சிணை பணத்தை ஊனத்தை காரணம் காட்டி கூச்சமின்றி வெளிப்படையாகவே அதிகமாகக் கேட்டனர்அதிர்ஷ்டவசமாக தூரத்து சொந்தமான தனபால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மணம் செய்துகொள்ள முன்வந்தான்கல்யாணம் நடந்து நான்கைந்து ஆண்டுகள் சந்தோஷமாவே வாழ்ந்து வந்தாள் மீனாத்தாள்.
ஆனால் அவள் வாழ்வில் விதி விளையாடியதுஅவளது அன்னை திடீரென்று காலமானாள்அதே நேரத்தில் தனபாலும் அவன் வேலை செய்த தனியார் கம்பெனி நஷ்டத்தில் இழுத்து மூடவே வேலையை இழந்தான்எவ்வளவு முயன்றும் வேறு வேலை கிடைக்கவில்லைபின்னர் யார் தயவிலோ வெளி மாநிலத்தில்தான் வேலை கிடைத்ததுசொற்ப சம்பளம்தான்ஆனால் வந்து செல்லும் செலவே அதிகம் என்பதால் அவன் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வருகிறான். வேலுவின் பள்ளிச் செலவும் அதிகரித்துக் கொண்டே போவதால் அதையும் குறைத்துக் கொண்டான்பற்றாக்குறையை சரிகட்ட மீனாத்தாள் வீட்டு வேலைகள் செய்ய வேண்டி வந்ததுமகனின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தயங்காமல் சுணங்காமல் அந்தச் சுமையை விருப்பத்துடனே ஏற்றாள்.
பட்ட காலிலே படும் என்பது போல் தனபாலுக்கு இந்த வேலையும் இல்லாமல் போனதுஆனால் வெளிமாநிலத்தில் வேலை செய்தபோது வேற்று மொழிகளையும் ஓரளவு கற்றுக்கொண்டதனால் அவன் மனம் தளராமல் கிடைத்த வேலை எதுவானாலும் ஏற்றுக்கொண்டு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும்போதே ஒரு மூட்டை அரிசி மற்றும் பொருட்களோடு தான் வந்து போகிறான். ஆனால் போனமுறை ஒன்றும் கொண்டுவரவில்லைவேறு நல்ல வேலைக்கு புரோக்கர் மூலமாக முயற்சிப்பதால் முன்பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளித்துக்கொள் என்று மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறான்ஆனாலும் வரவேண்டிய சாமான்கள் இல்லாததால் இருந்த கைக்காசை வைத்துக்கொண்டு போனமாதம் ஒப்பேற்றிவிட்டாள் மீனாத்தாள்இந்த இரண்டு வாரமாகத்தான் காசும் இல்லாமல் சாமான்களும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
இந்த வெய்யில் காலத்தில் கால் வேறு சரியில்லாமல் மெதுவாக நடக்க வேண்டியிருப்பதால் வெய்யிலுக்கு முன்பே வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என்றுதான் அலமேலு அம்மா வீட்டுக்கு வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே சென்றிருந்தாள்அலமேலு அம்மாவுக்கு என்ன களைப்போ, இவள்மேல் கோபித்துக் கொண்டாள்இப்படி சீக்கிரம் வந்து பாத்திரம் விழும் முன்னமே தேய்ச்சிட்டா மாதிரி பண்ணிடலாம்னு பாக்கிறியா? என்று பொல்லாப்பு பேசினாள்சட்டென்று கோபம் வந்தாலும் நிலைமையை மனதில் கொண்டு பொறுத்துப் போனாள் மீனாத்தாள்சாந்தமாகவே பதில் சொன்னாள்அப்படியெல்லாம் இல்லீம்மா..வெய்யில் மண்டையைப் பொளக்குதுகால் வேற சரியில்லையாஉச்சிக்கு முன்னமே வீட்டுக்குப் போகலாம்னுதான் கொஞ்சம் சீக்கிரம் வந்தேம்மா.. ஒண்ணும் பரவாயில்லைநான் கொஞ்சம் அப்படி ஒக்காந்துக்கறேன்நீங்க உங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு பாத்திரம் போடுங்க..தேய்ச்சுட்டுப் போறேன்.. என்று இனிமையாகப் பேசி அலமேலு அம்மாவை சமாளித்தாள்
வேலையெல்லாம் முடித்து கிளம்பும்போது தயக்கத்துடன் தான் கேட்டாள் மீனாத்தாள்அம்மா வீட்டிலே பணம் இல்லே சாமானும் இல்லேஒரு அஞ்சு படி அரிசி கொடுத்தீங்கன்னா உதவியா இருக்கும்மாபையனுக்கு சோறாக்கவாவது வேணுமில்லேஎன்று கெஞ்சினாள்அலமேலு அம்மாவுக்க முகம் மாறியதுஅதுதானா இன்னிக்கு காலையிலேயே ஒரு திட்டத்தோட வந்திருக்கேசரி சரி பாக்கலாம்அஞ்சு படியெல்லாம் கஷ்டம்.. ஒரு ரெண்டு படி நொய் வேணா தர்றேன்..அதுகூட இப்போ கேக்காதேஅய்யா வேலைக்குப் போன பிறகு மத்தியானமா வாஎன்றாள்.
தப்பா நினைக்காதீங்கம்மாஇந்தக் காலோட திரும்பி அவ்வளவு தூரம் வர்றது கஷ்டம்மாநான் வேணா வேலுவை.. அதாம்மா என் பையன்அவன் இஸ்கூலிலிருந்து வந்தவுடனே அனுப்பட்டுமாம்மா என்று வேண்டுகோள் விடுத்தாள்சற்றே மனமிரங்கிய அலமேலு அம்மா, சரி அனுப்பு..ஆனா சீக்கிரம் அனுப்புவிளக்கு வெச்சபிறகு வெள்ளை எதுவும் கொடுக்கக்கூடாதும்பாங்க.. பாத்துக்கோஅவன் லேட்டா வந்தா நான் கொடுக்க முடியாது என்று ஒரு நிபந்தனை விதித்தாள்.
ஏதோ இதற்காகவாது சம்மதித்தாளே என்று சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டாள் மீனாத்தாள்அப்படித்தான் இப்போது வேலுவை அனுப்பியிருக்கிறாள்.
வேலு கதவைத் தட்டவும் உள்ளிருந்து எட்டிப்பார்த்தாள் அலமேலு அம்மாஎன்னடா இவ்வளவு நேரம் கழிச்சு வர்றேஉன் அம்மா நீ ஸ்கூல்லேர்ந்து வந்தவுடனே அனுப்பறேன்னாங்கநீ என்னடான்னா இருட்டறத்துக்கு முன்னாடி வர்றேசரி இரு இதோ வர்றேன்கொண்டா பையை என்று பையை வாங்க கையை நீட்டினாள்நிஜார் பாக்கெட்டிலிருந்து பையை எடுத்துக் கொடுத்தான் வேலுஅதை எடுத்துக் கொண்டு உள்ளே போன அலமேலு அம்மா சற்று நேரத்தில் வெளியே வந்தாள்ஏண்டா.. உன் அம்மாகிட்ட வேற பையே இல்லையாஇந்த லட்சணத்திலே அஞ்சுபடி வேற கேட்டா.. இந்தப் பை ரெண்டு படியே தாங்குமா தெரியலேஇந்தா ஒரு படி நொய் குடுக்கறேன்ஒண்ணும் பேசாம வாங்கிட்டுப் போ..என்று கொடுத்தனுப்பினாள்.
சுவற்றில் அடித்த பந்து போல அதே வேகத்துடன் ஓட்டமாய்த் திரும்பினான் வேலு. அதற்குள் இருட்டி விடவே அவன் வீட்டுத் தெரு முனையில் திரும்பும்போது அங்கிருந்த நாய் ஒன்று இவனைப் பார்த்துவிட்டு குரைத்தபடி விரட்டத் தொடங்கியதுஅலறி அடித்துக்கொண்டு மேலும் வேகமாக ஓடினான் வேலுவீட்டு வாசலை அடைந்து மீனாத்தாளிடம் பையைக் கொடுத்தபடியே அம்மா அந்த கறுப்பு நாய் என்னையே துரத்துதும்மா..என்றான்.
பையை வாங்கினாள் மீனாத்தாள்என்னடா இத்துணூண்டு இருக்குவழியிலே கொட்டிட்டியா? என்று சந்தேகத்துடன் கேட்டாள்இல்லம்மா..பை நல்லால்லேன்னு இவ்வளவுதான் குடுத்தாங்க அந்த அம்மாஎன்றான் வேலுமூன்று நாளுக்குக்கூட காணாத நொய் அளவைப் பார்த்து மீனாத்தாளுக்குக் கோபமாக வந்ததுஇவ்வளவு வேலை செய்கிறோம்..ஒரு கஷ்டத்துக்குத் தானே கேட்கிறோம்கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சொன்னதுக்குப் பாதி கொடுத்தனுப்பியிருக்கிறார்களே என்று அலமேலு அம்மா மேல் ஆத்திரம் வந்தது அவளுக்குவெளியே
குரைத்தக் கொண்டிருந்த நாய் இப்போது அவள் வீட்டு வாசலுக்கே வந்து வேலுவைப் பார்த்து இன்னும் ஆக்ரோஷமாக குரைத்ததுஅடி நாயே..ஏழைங்களைப் பார்த்தா அவ்வளவு எளப்பமாப் போச்சா உங்களுக்கெல்லாம் என்று ஆத்திரத்துடன் கையிலிருந்து பையை ஒரு முடிச்சாக்கிக் கொண்டு அதாலேயே நாயின் தலையில் பலமாக ஒரு அடி கொடுத்தாள் மீனாத்தாள்.
ஏற்கெனவே நைந்திருந்த பைத்துணி அந்த வீச்சின் வேகம் தாங்காமல் நாயின் தலையைத் தாக்கிய இடத்தில் பொத்திக் கிழிந்து வேலு வாங்கி வந்த ஒரு படி நொய்  தாழ்வாரம் பூராவுமாக சிதறிக் கொட்டியதுதலையில் கைவைத்தபடி அழுதுகொண்டே உட்கார்ந்தாள் மீனாத்தாள்செய்வதறியாமல் நின்றான் வேலு.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home