தெய்வம்
மதுவும் ரமணனும் பள்ளித் தோழர்கள். உயர்நிலைப் பள்ளியின் ஆரம்ப வகுப்பிலிருந்தே இருவரும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். மது மிகவும் புத்திசாலி, கெட்டிக்காரன், நன்றாகப் படிப்பவன். பள்ளியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது மட்டுமல்லாமல் அவைகளின் நிர்வாகத்திலும் உண்மையான ஆர்வத்தோடு விரும்பி தானாகவே ஆசிரியர்களுக்கு உதவுவான். எனவே ஆசிரியர்கள் மத்தியில் அவனுக்கு நல்ல பெயர்.
ரமணனும் மக்கல்ல. படித்தால் மதுவுக்கு இணையாக மதிப்பெண் வாங்குமளவுக்கு புத்திசாலிதான். ஆனால், மிகவும் விளையாட்டுப்பிள்ளை. எப்போது எப்படி நடந்து கொள்வது என்ற விவரமில்லாமல் விஷமத்திலும் துடுக்குத்தனத்திலும் நாட்டம் மிக்கவனாகவே இருந்தான். நல்ல வளர்த்தி. அதற்கேற்ப நன்றாக உண்பான். உணவு இடைவேளைக்கு முன்பே அத்தனை மாணவர்களின் டிபன் பாக்ஸிலிருந்தும் சிறிது உணவு நிச்சயம் குறைந்திருக்கும். அதற்கு ரமணனே காரணம். ஆனால் அவன் ரவுடி அல்ல என்பதாலும் அவனால் மற்றவர்களுக்கு வேறு தொந்தரவு எதுவும் இல்லை என்பதாலும் சக மாணவர்கள் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமலும் அதே சமயம் அவன்மேல் பழி உணர்ச்சி எதுவும் இல்லாமலும் இருந்தனர்.
உயர்நிலைக் கல்வியின் மிக முக்கியமான பத்தாம் வகுப்பில் அப்போது காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. மற்ற தேர்வுகள் எல்லாம் எப்படியோ சமாளித்த ரமணனுக்கு அறிவியல் மட்டும் சோதனையாக அமைந்தது. அறிவியல் ஆசிரியரும் சற்று கண்டிப்பானவர். மிகச் சரியாக பதில் எழுதினாலே முழு மதிப்பெண் கொடுக்க மாட்டார் ஏனோதானோ என்று மழுப்பினால் நிச்சயம் சிகப்பு மையினால் குறுக்கே ஒரு பெரிய கோடு கிழித்து பூஜ்யத்தை அந்த பதில் முழுவதும் அடங்கும் வண்ணம் பெரிதாகப் போடுவதோடு வகுப்பிலும் காண்பிப்பார்.
பதில் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த ரமணனுக்கு தேர்வு முடிந்து விடைத்தாள்கள் கொடுக்கும் நேரம் நேரப்போகும் அவமானத்தை நினைத்தால் சற்று பயமாக இருந்தது. சுற்றுமுற்றும் நோட்டம் விட்டான். கண்காணிப்பாளர் தமிழாசிரியர் மணவாளன் தூரத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தார். வலது பக்கம் சுலைமான். சுமாராகப் படிப்பவன். இடது பக்கம் ஜனா. அவனும் இவனைப்போலவே விழித்துக்கொண்டு இருந்தான். முன்னால் பார்த்தான். மது. அவனுக்கு எல்லாம் தெரியும் என்பதால் மிக மும்முரமாக எழுதி விடைத்தாளை முடிக்கும் தருவாயில் இருந்தான். ஓரிரு சந்தேகங்களையாவது அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் ஸ்…ஸ் என்று மெல்ல கூப்பிட்டுப் பார்த்தான். மது காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. இன்னும் சற்று அழுத்தமாக ஒலியெழுப்பிப் பார்த்தான். அப்போதும் அவன் கவனிக்கவில்லை. டேய் மது! கொஞ்சம் திரும்பிப் பாருடா என்றான். மது பயத்துடன் லேசாகத் திரும்பி, என்ன? என்று கேட்டான். நாலாம் கேள்விக்கான பதில் மாத்திரம் இந்த்த தாளில் எழுதி அப்படியே பின்னால் பாஸ் பண்ணுடா.. என்றபடியே தன்னுடைய விடைத்தாள் ஒன்றையும் சற்று எட்டி மதுவிடம் சேர்த்துவிட்டான் ரமணன். மதுவிற்கு பயம் வந்துவிட்டது. அதெல்லாம் வேணாம்டா…மாட்டிக்கிட்டா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் என்று முணுமுணுத்தான். கொஞ்சம் உதவி பண்ணுடா ப்ளீஸ்…என்று ரமணன் சற்று உரக்க பேசும்போது மணவாளன் கவனித்துவிட்டார்.
என்னடா நடக்குது அங்கே? என்று விரைவாக ரமணன் இருக்கும் இடத்திற்கு வந்தார். ஒண்ணுமில்ல சார்.. என் பேனாவில் இங்க் தீர்ந்துவிடும்போல் இருக்கு..அதனால் மதுகிட்ட வேற பேனா இருக்கா என்று கேட்டேன் சார்… என்று சமாளிக்கப் பார்த்தான். அப்படியாடா? ஒழுங்காச் சொல்லு என்று மதுவை அவர் மிரட்டப்போக அப்போது ரமணன் கொடுத்த விடைத்தாளை மேஜையின் கீழே அவசர அவசரமாக தள்ளிவிட முயற்சித்தான் மது. ஆனாலும் அவர் பார்த்துவிட்டார். என்ன பேப்பர் அது? பிட் அடிக்கிறீங்களா? என்று கோபத்துடன் அதை மதுவிடமிருந்து பிடுங்கிப் பார்க்கும்போதுதான் அது ரமணனுடைய விடைத்தாள் என்பதை கண்டுகொண்டார். மீண்டும் அவர் மதுவை மிரட்ட, வேறு வழியில்லாமல் நடந்ததைச் சொன்னான் மது.
ரமணனை அப்போதே அவர் அறையிலிருந்து வெளியே போய் நிற்கச் சொன்னார். அது மட்டுமல்லாமல் தேர்வு நேரம் முடிந்தபின் ரமணன் மற்றும் மதுவை நேராகத் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று அவர் மீண்டும் ஒருமுறை விசாரிக்கவும் வைத்தார். தலைமை ஆசிரியர் ரமணனை கோபித்துக்கொண்டதோடு மீண்டும் இம்மாதிரி நடந்தால் பள்ளியிலிருந்து விலக்கிவைக்க வேண்டியிருக்கும் என்று பலமாக எச்சரிக்கை வேறு கொடுத்தார். நல்ல வேளை, பெற்றோர்களை அழைத்து வா என்று சொல்லவில்லை. ரமணனுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. இப்படி எல்லோருக்கும் தெரிந்துபோவதைவிட குறைவான மதிப்பெண் பெற்றிருந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது.
எப்படியோ இந்தப் பிரச்சினையை தன்னுடைய விளையாட்டு புத்தியினாலேயே சீக்கிரத்தில் மறந்துவிட்டான் ரமணன். ஆனால் அதற்குப் பிறகு மதுவிடம் மட்டும் சற்று முகம்கொடுத்துப் பேசமலே இருந்தான். மதுவிற்கு சிறிது வருத்தம் தான். தேர்வு அறையில் நடந்ததற்கு தான் சிறிதும் காரணம் இல்லை என்றாலும் இப்படி ரமணன் மாட்டிக்கொள்ளும்படி ஆகிவிட்டதனால் அவனுக்கும் ஒரு சிறு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டேயிருந்தது. அவன் எல்லா விஷயங்களிலும் கவனம் உள்ளவனாக இருந்ததனால் இவர்களிடையே நட்பில் ஏற்பட்ட தொய்வை வெகு சீக்கிரத்திலேயே சரி செய்துவிட வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தான்.
அதற்கேற்ப ஒரு வாய்ப்பும் அமைந்தது. அவர்கள் பள்ளி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாக அது அமைந்ததனால் சிறப்பாக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகியிருந்தது. மற்ற பல போட்டிகளுடன் இயல், இசை, நாடக நிகழ்வுகளையும் உள்ளடக்கி அமர்க்களாமாக தயார்செய்து கொண்டிருந்தனர் அனைவரும்.
நாடக நிகழ்ச்சியில் அக்காலத்தில் நடிகர் மனோகரைப் போன்று மிகுந்த கலை மற்றும் காட்சி நயத்துடன் ஒரு நாடகம் அமைத்தால் என்ன என்று மணவாளன் யோசனை கூறியது தலைமை ஆசிரியருக்கும் பிடித்துப்போகவே, பக்தப் பிரகலாதன் கதையை சுருக்கமாக பதினைந்து நிமிடங்களில் தயாரித்து மேடையேற்றுவது என்று முடிவு செய்தனர்.
மதுவிற்கு இது ஒரு மிக நல்ல சந்தர்ப்பமாகத் தோன்றியது. தான் இரணியனாகவும் ரமணன் நரசிம்மராகவும் நடித்தால் தன்னைக் கொல்லும் சாக்கிலாவது ரமணன் மனம் சாந்தியடையும், நட்பில் ஏற்பட்ட விரிசல் மறைந்துவிடும் என்று நம்பினான். எனவே மிகுந்த முன்னேற்பாடுடன் பலவிதமாக மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டு ரமணனிடம் வேண்டுகோள் விடுத்தான். ரமணா, நாம் அரங்கேற்க இருக்கும் நாடகத்தில் உனக்கு ஒரு சிறப்பான வேடம் மனதில் நினைத்திருக்கிறேன். கவலைப் படாதே..உனக்கு ஒரே நிமிடம் தான் வேலை. வசனம் கூட ஒன்றும் பேசவேண்டியிருக்காது. உன்னுடைய உருவத்திற்கும் பொருத்தமான வேடம் இது. சரியாகச் செய்தால் நீதான் நாடகத்தின் ஹீரோவாக அமைவாய்…என்று பீடிகைபோட்டு ஒருவழியாக சம்மதிக்கவும் வைத்துவிட்டான் மது. என்ன தோன்றிற்றோ திடீரென்று மணவாளன் இரணியன் வேடத்தை தான் எடுத்துக்கொள்வதாக கேட்டுக்கொண்டார். வேறு வழியில்லாமல் மது ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று.
தமிழாசிரியர் மணவாளன் முன்னிலையில் ஒத்திகை பார்க்கும்போதெல்லாம் ரமணனை நன்றாக உற்சாகப்படுத்தி கவனித்துக்கொண்டான் மது. நாடகத்தில் ரமணனுடைய பங்கு என்ன என்பதையும் விவரமாக விளக்கினான். ஒண்ணும் கவலையே படாதே ரமணா… நாடகத்தின் கடைசி இரண்டு நிமிடத்தில்தான் நீ வருகிறாய்… பிரகலாதனாக நடிக்கும் சரவணனிடம் அவனது தந்தை இரணியனாக நடிக்கும் தமிழாசிரியர் எங்கே உன் நாராயணன்.. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறாயே, இதோ இந்தத் தூணில் இருப்பாரா என்று கேட்டபடியே அங்கிருக்கும் தூணைக் காலால் உதைப்பார். அப்போது அந்தத் தூண் இரண்டாகப் பிளக்கும். உள்ளேயிருந்து சிங்க முக வேடத்தில் நீ வெளிப்பட்டு அவரை அப்படியே தூக்கி அருகில் இருக்கும் வாசற்படியில் அமர்ந்து உன் மடியில் அவரைக் கிடத்தி ஆக்ரோஷத்துடன் அவர் வயிற்றைக் கிழிப்பது போல் நடிக்க வேண்டும் அவ்வளவுதான்… அதற்குப் பின் திரை விழும்..அதற்குப் பின் ஒரு நிமிடக் கதையை மற்றவர்கள் நிறைவு செய்வார்கள்.. என்று விளக்கினான். ரமணனும் புரிந்தாற்போல் தலையசைத்தான்… ஒத்திகையில் ஒத்துழைப்பும் கொடுத்தான்.
அந்த நாளும் வந்தது. சிறப்பு விருந்தினர்களின் பேச்சுக்கள் எல்லாம் முடிந்தபின் கதை, கட்டுரை, பாட்டு போன்ற சிறிய போட்டிகள் ஒவ்வொன்றாக அரங்கேறின. அவைகளும் முடிந்த பின் தலைமை ஆசிரியரே மேடைக்கு வந்து பெருமையாக பக்தப் பிரகலாதன் நாடகம் பற்றி அறிவித்தார்.
அனைவரும் உற்சாகத்துடன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
நாடகத்தின் கடைசிக் கட்டம். சொன்னபடியே இரணியன் அரங்கத்தின் ஓரமாக இருந்த அந்தத் தூணை நெருங்கி இதோ இந்தத் தூணிலும் இருப்பானா உன் நாராயணன்? என்று எகத்தாளமாகக் கேட்க, கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்துடன் பலத்த ஓசையுடன் அந்தத் தூண் இரண்டாகப் பிளந்தது. மனித உடலுடன் சிங்கத்தின் தலையுடன் ஆர்ப்பரித்துக்கொண்டே வந்த நரசிம்மர், இரணியனை அப்படியே தன் இரு கையால் ஏந்தி ஒரு சுழற்று சுழற்றி தட்டாமாலை சுற்றினார். வாசற்படியின் விளிம்பில் அமர்ந்து அவனை தன் மடியில் கிடத்தியவர், மீண்டும் ஒரு உறுமலுடன் எழுந்து நின்றார். அப்போது இரணியனைப் பிடித்திருந்த கைகள் சற்று தளர்ந்தன. பற்றிக்கொள்வதற்கு ஒரு பிடிப்பும் இல்லாமல் இரணியன் வேடத்தில் இருந்த மணவாளன் டமால் என்று மேடையில் விழுந்தார். மேடையில் இருந்தவர்களுக்கு இந்த திடீர் நெருக்கடியில் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. நல்ல வேளை திரை இயக்குபவர் உஷாராக இருந்தததனால் சட்டென்று திரையை மூடினார். ஒரே ஒரு நிமிட தாமத்திற்குப் பின் திரை விலகி நாடகம் நல்லபடியாக நடந்தேறியது.
பலத்த கரகோஷத்திற்குப்பின் அனைவரும் கலைந்தனர். அரங்கிலிருந்து இறங்கியதும் தலைமையாசிரியர் மணவாளனுக்கு கீழே விழுந்ததில் ஒன்றும் அடி படவில்லையே என்று அக்கறையுடன் விசாரித்தார். மணவாளனும் மதுவும் மட்டும் ரமணனிடம் வந்து, என்ன இப்படி திடீரென்று நீயாக ஏதோ செய்துவிட்டாயே ரமணா? உட்கார்ந்து மடியில் கிடத்தி வயிற்றைக் கிழிப்பதுதானே உன் வேலை? நாங்கள் சொல்லிக்கொடுத்ததில் இரணியனைத் தூக்கிச் சுற்றுவது, எழுந்து நிற்பது எல்லாம் இல்லையே? என்றனர்.
அவர்களை தீர்க்கமாக பார்த்து சலனமில்லாத குரலில் பதில் சொன்னான் ரமணன்: தெய்வம் நின்று கொல்லும்!
3 Comments:
Dear Raghu, Excellent narration, free flowing and at the same time gripping. Unexpected Climax with a twist and pun, saying Deivam Ninru Kollum - and the God literally standing and punishing - Ramanan having the last laugh brought out nicely. Kudos to you - Dr Parthasarathy
Excellent Raghu!! Very Nice. Unexpected climax. Mainly his personal vengeance is not known to the Audience. Punch Dialogue Superb...
Regards
Padma
Raghu, Aatramai is good. from where you choose names....?? the regular happennings, penned in an intersting manner. I enjoyed.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home