Thursday, August 8, 2019

குறை(க்கும் வழி) ஒன்றும் இல்லை!

இப்போதெல்லாம் ஆபீஸில் வேலை பார்க்கும் நண்பர்கள் பலரும் போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.  வயது ஒன்றுதான் தடையக இருக்குமே தவிர வயிறு நிச்சயமாக இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  ஆம், வீதிக்கு நான்கு ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் மற்றும் தலப்பா, தொப்பி என்று ஓட்டல்கள் வகைவகையாக முளைத்துவிட்டதில் யாரைப்பார்த்தாலும் எத்தனை மாதம் என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. 

ஒரு நாள் திடீரென்று நண்பகல் வேளையில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் மொத்த வீதிக்கும் மின்சாரம் தடைப்பட்டது. ஏற்கெனவே கஷ்ட்ட்டப்பட்டு வேலை செய்யும் (அதாவது hardly working) எங்கள் குழுவிற்குக் கேட்கவேண்டுமா?  இதற்காகவே காத்திருந்தாற்போல், போச்சுடா… கரண்ட் இல்லையா? அவ்வளவுதான்.  ஒரு சிஸ்டமும் வேலை பண்ணாது.  இன்னிக்கு ஒரு வேலை ஓடாது. இனிமே நாளைக்குத்தான். அதுகூட இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள ஈ.பி-காரங்க சரி பண்ணினாத்தான்.  இங்க சும்மா ஒக்காந்துருக்கறதுக்கு வாங்கடா எல்லாருமா போய் பஞ்சாபி தாபாவில ஒரு பிடி பிடிச்சுட்டு வந்துடலாம் என்று யாரோ முன்மொழிய, ஏழெட்டு கைகள் உயர்ந்து வழிமொழிந்தன.  மேனேஜரும் வெளியூர் போயிருந்ததனால் யாருக்கும் எள்ளளவு குற்ற உணர்ச்சிகூட இல்லை.  ஒரு மணிக்கெல்லாம் அவரவர் இருசக்கர வாகனங்களிலும் வாகனம் ஓட்டாதவர்கள் (ஆம், இன்னும் சிலபேர் இருக்கிறார்கள்!) இரண்டு மூன்று பேராக ஆட்டோவிலும் கிளம்பினோம்.

சும்மா சொல்லக்கூடாது, தாபாவில் கொடுக்கும் காசுக்கு குறைவில்லாமல் அயிட்டங்களை நிரப்பிக்கொண்டே இருந்தார்கள்.  தொடக்கத்திலேயே ஜிலேபி, ஷாஹி துக்கடா, ஸ்வீட் சாலட் என்று சுமார் அரை கிலோ அளவுக்கு ஏற்றிக்கொண்டிருந்தாலும், மற்ற ரொட்டி, புலவு மற்றும் பிரியாணி வகையறா உணவுகளும் அவற்றுக்கான அலங்கார சைடுகளும் ஒன்றுக்கொன்று போட்டிபோடும் சுவையோடு இருந்ததனால் எல்லோரும் மெய்யாகவே மூச்சு முட்டும் அளவுக்குத் தின்றுவிட்டு தண்ணீர்கூட ஆபீஸ் வந்து குடித்துக்கொள்ளலாம் என்று திரும்பிவிட்டோம்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பிறகுதான் அதன் விளைவு எங்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.  அனவைரின் வயிறும் காற்றடித்த பலூன் போல் வீங்கிக் கிடக்க, யாராலும் நாற்காலியைவிட்டு எழுந்திருக்கக்கூட முடியவில்லை.  தாகம் போல் ஒரு உணர்வு எப்போதும் இருந்தாலும் அரை டம்ளர் தண்ணீர் கூட குடிக்க வயிற்றில் இடமில்லை!

ஆபீஸில் சுவற்றில் ஃபோட்டோவில் ஒரு விஷமச் சிரிப்புடன் இருந்த வள்ளுவர் எங்களைப்பார்த்து இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்வதுபோல்தோன்றியது.  உப்புசப்பில்லாத சமாச்சாரத்தையெல்லாம் டெலிவிஷன் சானல்கள் ஊதி டமாரம் அடிக்கும்போது நாம் ஏன் தற்போதைய நிலைமையை ஒரு டிஸ்கஷன் ஆக்கக்கூடாது? எப்படியும் கரண்ட்டும் இல்லை, வேலையும் இல்லை, மேனேஜரும்  இல்லை.  ஆரம்பிக்கலாம் கச்சேரியை என்று எல்ரோரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் கலாய்க்கத் தொடங்கினோம்.

என்னடா மனோஜ், அடுத்த மாசம் ஒன்னோட மச்சினிச்சிக்கு பிரசவம்.ன்னு சொல்லிட்டிருந்தே, நீ அதுக்கு முன்னாடி வீட்டுககுப் போகும்போதே பிரசவிச்சிடுவே போல இருக்கே.. என்று நையாண்டி செய்தான் குமரேசு.

ஈயத்தைப் பாத்து இளிச்சதான் பித்தளை.  நீ ஏன் சொல்லமாட்டே?  இன்னிக்கு சாப்பாட்டுக்குப் போகும்போதே ஆட்டோக்காரன் உன்னை ஏத்திக்க யோசிச்சானே, நான் பாக்கலைன்னு நினைச்சியா? என்று 'போகும்போதே' என்பதை கொஞ்சம் அழுத்தத்துடனே உச்சரித்தான் மனோஜ்.

அப்பிடீன்னா வரும்போது எப்படி வந்தான்? ஆம்புலன்ஸுலயா? என்று கோபால் கேட்க அனைவரும் சிரித்தனர்.

அட ஏம்ப்பா ஒருத்தரை மாத்திரம் கலாய்க்கிறீங்க?  நம்மள்ள பாதிப்பேர் தொந்தி தொப்பையோட பிள்ளையார் மாதிரிதானே இருக்கோம்?  மீதியும் அப்படி ஒண்ணும் ஒல்லியில்லையே?  சும்மா கலாட்டா பண்றதை விட்டுட்டு எப்படி தொப்பையைக் குறைக்கலாமுன்னு ஒரு பிளான் போடுங்கப்பா… என்று அங்கலாய்த்தான் ராஜூ.

நல்ல ஐடியாப்பா… வந்த தொப்பையை குறைக்குறதுக்கு முன்னாடி அது எப்படி வந்துதுன்னு யோசிச்சாலே வழி தெரிஞ்சிரும்ப்பா.. என்ற முனி சொல்ல… ஆமாண்டா...நீ யோசிச்சிக்கினே இரு… அது தானா கொறஞ்சிடும்.. என்று கேலி செய்தான் கஜா.   கூடவே, எனக்குத் தெரிஞ்சு ஒடம்பக் குறைக்க பெஸ்டு வழி காலைல வாக்கிங் போறதுதான்.  நான்கூட போறேன் தெரியுமா? என்றான்.  முனி விடுவானா?  நெஜம்மாவா? உன்னைப் பாத்தா அப்படி தெரியலியே? எப்போலேந்து? நேத்துலேந்தா? என்று பதிலுக்கு கேலி செய்தான்.

இல்லடா...அவன் சொல்றது சரிதான் என்று சப்போர்ட்டுக்கு வந்தான் குமரேசு.  ஆனா அது சுலபமில்லை.  காலைல சீக்கிரம் எழுந்திரிக்கனும்.  காப்பி கீப்பின்னு வெயிட் பண்ணாம சுறுசுறுப்பா வெய்யிலுக்கு முன்னாடி எழுந்து கொறஞ்சது அரை மணி நேரமாவது நடக்கணும்.  நடைன்னா அரட்டை அடிச்சிண்டே அன்ன நடையில்லே… நல்ல மூச்சு வாங்கறாமாதிரி கையை காலை வீசி விறுவிறுன்னு நடக்கணும்.. அப்பதான் உடம்பு கொஞ்ச கொஞ்சமா கொறய ஆரம்பிக்கும்.  அது தெரியவே சுமார் மூணு நாலு மாசமாயிடும்… சும்மாயில்ல… தெரிஞ்சிக்கோ… என்றான். 

அதுதான் ஆரம்பிச்சிட்டு நம்மால முடியாதுன்னு விட்டுட்டியா? என்று இன்னொருவன் கலாய்க்க அனைவரும் சிரித்தனர்.

வெளில ரோட்டுக்கு வந்து நடக்க முடியாதவங்க வீட்டிலேயே ஒரே இடத்துல நின்னிண்டே ஸ்பாட் ஜாக்கிங் பண்ணலாம்.  வசதி இருந்தா ஓடற மிஷன்… அதான் த்ரெட்மில்ன்னு சொல்றாங்களே… ஆஸ்பத்திரி, ஜிம்முலயெல்லாம் கூட இருக்குமே… அதை வீட்டிலேயே வாங்கி வெச்சிண்டு ஃபேனைப் போட்டுண்டு அதுக்குக் கீழே காத்தாட நடக்கலாம்… ஓடலாம்…  என்றான் ஜகா. 

ஆமாம்… அப்படியே பறக்கலாம்… அது த்ரெட் மில் இல்லடா, ட்ரெட் மில்!  போடா, அவ்வளவு வசதி இருந்தா ஃபேன் எதுக்கு? ஏசியே போட்டுக்கலாமே..  அழகா  லுங்கி கட்டிக்கினு செருப்பை மாட்டிக்கினு விறுவிறுன்னு நடப்பியா… இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படறான் பாரு…. என்று அவனை மட்டம் தட்டினான் ஜமால்.

இதப் பாருங்கப்பா… இந்த மாதிரி காலைல சீக்கிரமா எந்திரிச்சி நடக்கறது ஓடறத விட எப்பவும்போல எந்திரிச்சு எங்கயும் ஓடாம இருந்த எடத்திலேயே நிதானமா யோகா பண்ணாக்கூட நல்ல பலன் கிடைக்கும் தெரியுமா?  எங்க வீட்டுப் பக்கத்திலே ஒரு பெரியவர்… சுமார் எழுவது வயசிருக்கும்… பாடிய என்னமா வெச்சிருக்கார் தெரியுமா?  அவரை எப்ப பாத்தாலும் இப்ப எந்திரிச்சமாதிரி சுறுசுறுப்பா அமைதியா அதே சமயத்தில கெத்தா இருக்காருப்பா..  நான்கூட அவர்கிட்டத்தான் போயி யோகா கத்துக்கலாமுன்னு இருக்கேன்.  இந்த வயசில முடியமான்னுதான் தெரியல… என்று ரங்கன் தன் கருத்தைச் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர். 

ஏம்ப்பா… ஒரே ஒரு லஞ்ச்சு சாப்பிட்டுட்டு சேரைவிட்டுக்கூட எழுந்துக்க முடியாத நம்மளா வாக்கிங்கும் ஜாக்கிங்கும் பண்ணப்போறோம்?   நம்ம எல்லார் வயித்தையும் பாரு?  சேட்டுப் பொம்பள இடுப்பு மாதிரி லூஸா தளதளன்னு ஆடுது… இதை மொதல்ல கொறச்சே ஆகனும்.   இப்படி சும்மா வளவளன்னு பேசறவிட எல்லாரும் சேர்ந்து ஏன் ரங்கன் சொல்ற பெரியவர்கிட்ட யோசனை கேக்கக்கூடாது? என்று இன்னொருவன் குரல் எழுப்பினான்.

அவர் என்ன சொல்லப்போறாரு?  நம்மளையெல்லாம் பாத்தவொடனே உள்ள ஓடிடுவாரு.  அப்படியே நாம போய் மேல விழுந்து கேட்டாலும் மொதல்ல மூணு மாசத்துக்கு சாப்பாட்ட கொறச்சிட்டு அப்புறம் வாங்க..ன்னு சொல்லி அனுப்பிடுவாரு..பாக்கலாமா? என்றான் ஆதில்.

அதுகூட கரெட்டுதாம்ப்பா… நாம ஏன் நம்மளே மொதல்ல சாப்பாட்டுல கண்ட்ரோல் காமிக்கக் கூடாது?  இன்னிக்கு சாப்பிட்டா மாதிரி இனிமே என்னிக்குமே சாப்பிடமாட்டமின்னு சபதம் எடுத்துக்கணும் என்றான் கோபால்.   அது எப்படிப்பா…  பசிக்கும்போது சாப்பிட்டுத்தானே ஆகணும்?  அதுவும் இப்ப பேசினா மாதிரி விறுவிறுன்னு வாக்கிங் போனா இன்னும் பசிக்காதா?  என்று அப்பாவித்தனமாய்க் கேட்ட சீனுவை பார்வையாலேயே எரித்தான்.

அவனை ஏண்டா மொறைக்கிறே?  சீனு சொல்றது ஒரு விதத்துல சரி.  ஆனா, கோபால் சொன்னா மாதிரி நம்மளா கட்டுப்படுத்திண்டு கொஞ்சமா சாப்பிட ட்ரையாவது பண்ணலாமில்லையா?   என்ன சொல்றீங்க?  நாளைலேர்ந்து ஒரு சார்ட் போட்டுண்டு  இந்தந்த வேளைக்கு இதுதான் இவ்வளவுதான் சாப்பிடனும்னு ஒரு ரூல் போட்டுக்கலாமா?  என்றான் அவனால் முடியும் என்ற இறுமாப்பில் இருப்பதிலேயே சற்று இளைத்தவனான கதிர்.

அப்போதுதான் ஹெட் ஆபீஸிலிருந்து தபால் கொண்டு வந்தான் ஜோசப்.  அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்ததை கவனித்து என்ன விஷயமென்று கேட்டு அறிந்தான்.  இதுதானா சமாச்சாரம்?  ஒடம்பு இளைக்க எனக்கு ஒரு சூப்பர் எக்ஸசைஸ் தெரியுமே?  ரொம்ப சுலபமானதுகூட.  சொல்லட்டுமா? என்றான்.

அனைவரும் ஆர்வமாக, என்ன, என்ன, சொல்லு… என்றனர்.   ஜோசப் புன்னகைத்தபடியே, நான் சொல்றதை மாத்திரம் ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணினீங்கன்னா.. ரெண்டு மாசம், ஏன் ஒரே மாசத்துல கூட எடை கொறய ஆரம்பிச்சிடும்.  இத்தினிக்கும் இதை யார் வேணா பண்ணலாம்… எப்போ வேணா பண்ணலாம்… இதுவும் ஒரு ரொம்ப ஈஸியான ஒருவித யோகாதான்… என்றான்.  சஸ்பென்ஸ் தாங்காமல் அனைவரும், சீக்கிரம் சொல்லுப்பா… அத்தனைபேரும் இதுக்குத்தான் காத்திண்டு இருக்கோம்… நீ சொல்றாமாதிரி நடந்திச்சின்னா ஒனக்கும் அதே தாபால ட்ரீட் குடுக்கறோம்… என்றனர்.

நல்லா கேட்டுக்கோங்க...இது ரொம்ப சுலபம்..  இதுல கழுத்துக்கு மாத்திரம்தான் வேலை.  தலையை நேரா வெச்சிண்டு கண்ணை மூடிண்டு கழுத்தை மாத்திரம் ஒரு தடவை இடது பக்கம், ஒரு தடவை வலது பக்கம் ஆட்டணும்.. அவ்வளவுதான்… என்றான்  ஜோசப்.   அனைவரும் அவனை நம்பாமல் பார்த்தனர்.  அவ்வளவுதானா? நெஜம்மாவா?  எப்போ, எத்தனை தடவை இதைப் பண்ணனும்? என்றனர்.

எப்பப்போவெல்லாம் உங்களுக்கு சாப்பிட ஏதாவது குடுக்கறாங்களோ அல்லது சாப்பாடு போடறாங்களோ, அப்பல்லாம் மாத்திரம் பண்ணினாப் போறும்… என்று சொல்லி, இதோ இது மாதிரி என்று, கொடுப்பதை வேண்டாம் என்ற சொல்வதைப்போல் ஒரு தடவை தலையை இடப்புறம் வலப்புறமாக அசைத்தும் காண்பித்தான் ஜோசப்.   அவர்கள் அதைப் புரிந்துகொண்டு விழித்துக் கொள்ளுமுன், அத்தனை பேரும் ஒழுங்காப் பண்ணுங்க, நான் வரேன்… என்று கூறி இடத்தைவிட்டுப் பறந்தான்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home