Tuesday, August 4, 2020

முடக்கம்


இந்த வயதானவர்களுக்கு ஏன்தான் விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கம் வந்ததோ தெரியவில்லை. முந்தின நாள் என்னதான் அலைச்சலோ கடினமான வேலைகளோ இருந்தபோதிலும், எவ்வளவு நேரம் கழித்தே தூங்கப்போனாலும், அலாரம் அடிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னே தானாக விழிப்பு வந்துவிடுகிறது.

அதிலும் இந்த நான்கு மாதங்களாக அதிக வேலை, அலைச்சல் வேறு. ஐதராபாத் மற்றும் மும்பாயிலிருந்து வந்த அவரது இரு மகன்களும் மருமகள்களும் குழந்தைகளுமாக வீடு நிரம்பியிருந்தது. மார்ச் மாதம் இறுதியில் ஒரு குடும்ப விசேஷத்திற்காக வந்தவர்கள் திடீரென்று அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் இங்கேயே தங்கவேண்டி வந்துவிட்டது.

அவர்களைப் பொறுத்தவரையில் இது எதிர்பாராத போனஸ் என்றே கருதினார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் அவரவர்கள் வேலைபார்த்த நிறுவனங்களும் சரி, குழந்தைகள் படித்துக்கொண்டிருந்த பள்ளிகளும் சரி, ஆன்லைன் தொடர்பு மூலம் அவரவர்களிடமிருந்து பெறவேண்டிய பங்களிப்பை நேரம் தவறாமல் பெற்றுக்கொண்டுதான் இருந்தன.

இதனால் வீட்டின் அனைத்து அறைகளும் நீண்ட நாட்களுக்குப்பின் முழு உபயோகத்திற்கு வந்தது மட்டுமின்றி, வைஃபை, ஏசி போன்ற நவீனகால அத்தியாவசியங்களின் அவசியம் மிகவும் அதிகமாகிவிட்டது. பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி, எப்போது பார்த்தாலும் தங்கள் கணினிகளுடனோ, மொபைல் ஃபோன்களுடனோதான் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். கூப்பிட்டால் பதில் கொடுப்பதுகூடக் கிடையாது.

ஏழு வருட ஓய்வில் எல்லாவற்றிலும் சற்று நிதானமாகவும் சிக்கனமாகவுமே வாழப் பழக்கப்பட்டுவிட்ட அவருக்கு இந்த ஆடம்பர, பரபர வாழ்க்கை மிகவும் சிரமமாக இருந்தது. கம்ப்யூட்டர் கில்லாடிகளான மகன்களும், மருமகள்களும் பேரக்குழந்தைகளும் என்னதான் ஆன்லைனில் தத்தம் விருப்பத்திற்கேற்ப பொருட்களை வாங்கிவாங்கி அடுக்கி வைத்தாலும், நாள்தோறும் மாறுபடும் தினசரித் தேவைகளும் கடல் அலை போல் ஓயாமல் வந்துகொண்டேதான் இருந்தன.

ஆரம்பத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்திற்குள் காலை ஒருமுறையும் தேவைப்பட்டால் மாலை மற்றொருமுறையும் போய் வரிசையில் நின்றோ அமர்ந்தோ பொருட்களை வாங்கி வருவதில் சற்று பொழுதும் போனாற்போல் தோன்றினாலும் வரவர நேரம் காலம் மாறி சமயங்களில் நண்பகல்வரை தாமதமாகும்போது அவருக்கும் வெய்யிலில் சென்று வருவது சற்று சிரமாகவே இருந்தது.

அவராவது பரவாயில்லை. அவரது மனைவிக்குத்தான் பாவம் இத்தனை பேருக்கும் சேர்த்து சமைப்பது ஒரு சவாலாகவே மாறிவிட்டது. மருமகள்கள் அவ்வப்போது உதவிசெய்தாலும், வேலை வேலைதானே! உதவிக்கு வந்தார்களேயன்றி சமைப்பதற்கு இறங்கவில்லை. அம்மா, உங்கள் கை ருசியே ருசி! உங்கள் கைமணம் போல் எங்கும் கிடைக்காதம்மா! எப்படியம்மா கற்றுக்கொண்டீர்கள் இத்தனை சமையலும்! என்று அவளை வாயாரப் புகழந்தே மயக்கத்தில் தள்ளிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். போகட்டும் போ… இன்னும் எத்தனை நாளைக்கு இதுகள் இங்கேயே இருக்கப்போகிறதுகள்… நாம் நன்றாக இருக்கிறவரைக்கும் செய்துவிடுவோம்… முடியவில்லை என்றால் இவர்கள்தானே செய்ய வேண்டும்? அப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று மனதைத் தானே தேற்றிக்கொண்டு சிரமம் பார்க்காமல் அடுத்த நாளைக்கு புதிதாக அவர்களுக்கு பிடித்தமாதிரி என்ன செய்யலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிடுவாள்.

மதிய உணவுக்குப் பிற்பட்ட நேரத்தில் கணவன் அருகில் சற்று நேரம் படுத்திருக்கும்போது அவரை கை, கால் பிடித்துவிடும்படி கேட்க ஆசையாக இருந்தாலும். குழந்தைகளோ மற்ற யாராவதோ அருகில் இருந்தால் அதையும் கேட்காமலே இருந்துவிடவும் நேர்ந்தது.

இப்படித்தான் ஒருநாள் காலை. மனைவி அவரை எழுப்பினாள். இதோ பாருங்க.. இன்னிக்கு என்னமோ எல்லாருக்கும் முக்கியமான ஆன்லைன் மீட்டிங் இருக்காம்.. நேத்து ராத்திரியே சொல்லிட்டாங்க… கொழந்தைங்களைக்கூட நம்ம தான் பாத்துக்கணுமாம்… நீங்க கொஞ்சம் சட்டுணு போயி எக்ஸ்ட்ராவா மூணு பாக்கெட் பாலும், ஒரு பாக்கெட் தயிரும் கொஞ்சம் தக்காளி வெங்காயமும் மாத்திரம் வாங்கிண்டு வந்திடுங்க… அவங்க கம்ப்யூட்டர்ல வாங்கற காய்கறி கொஞ்சம்கூட நல்லா இல்ல… இதை வெச்சிண்டு இன்னிக்கு நான் சமாளிச்சிடுவேன்… நாளைக்குப்பாடு அப்புறம் மத்தியானம் மேலே பாத்துக்கலாம்… என்றாள்.

மனைவியை ஏற இறங்கப் பார்த்தபடி, சரி...இதுங்கள்லாம் கொஞ்சம் சீக்கிரம் எழுந்தா இவங்களே ஒரு வாக்கிங் போறாமாதிரி போய் பக்கத்தில இருக்கிற மார்க்கெட்லேந்து ஃப்ரெஷ்ஷா இவங்களுக்குப் பிடிச்சாமாதிரி வாங்கிண்டு வரலாம்..நாம் சொன்னா எங்கே கேக்கிறதுங்க…. என்று அங்கலாய்த்துக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டார்.

சும்மா கம்ப்ளைன் பண்ணாதீங்க… அவங்க ராத்திரி ஒரு மணி ரெண்டு மணி வரைக்கும் முழிச்சிண்டு இருக்காங்க தெரியுமா? அதுக்கப்புறம் தான் பாவம் தூங்கறாங்க… எப்படி சீக்கிரம் எழுந்துக்கிறது? என்று அவரது மனைவி இளசுகளின் பக்கம் பேசினாள்.

அதுதாண்டி நானும் சொல்றேன்… எதுக்கு ரெண்டு மணி வரைக்கும் முழிக்கணும், அப்புறம் ஒம்பது பத்து வரைக்கும் தூங்கிட்டு திரும்பி குளிக்கக்கூட பண்ணாம கம்ப்யூட்டர் முன்னாடியே கதியாக் கெடக்கணும்? கொஞ்சம் பிளான் பண்ணி வாழ்ந்தா இதெல்லாம் அவாய்ட் பண்ணலாமில்ல?

சரி.சரி… நான் ஒண்ணும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கலே.. நீங்க வேணா ஒங்க ஃப்ரெண்டுகளை எல்லாம் கேட்டுப் பாருங்க…. இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் இப்படித்தான் இருக்காங்க… அவங்களை மாத்தனும் சொல்றதவிட நாம் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போறதுதான் புத்திசாலித்தனம்...தெரிஞ்சுக்கோங்கோ…

அம்பது வருஷம் ஒன்னோட அட்ஜஸ்ட் பண்ணியாச்சு… இப்போ இன்னும் முப்பது வருஷம் இவங்களோட அட்ஜஸ்ட் பண்ணணுங்கிறியா? சரிதான்…. என்று சொல்லிக்கொண்டே வெளியில் சென்றார்.

அரை மணிநேரத்தில் திரும்பிவந்தார். இந்தா, நீ சொன்னதெல்லாம் சரியா வாங்கி வந்திருக்கேனா பாத்துக்கோ...இல்லைன்னாகூட இதுக்குள்ளே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… நீதான் அட்ஜஸ்ட் பண்றதிலே கெட்டிக்காரியாச்சே….

க்கும்… இந்த பேச்சுல ஒண்ணும் கொறச்சல் இல்ல….உங்களோட குணத்துக்கு நான் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கல்லைன்னா நம்ம குடும்பமே இப்படி வளர்ந்திருக்காது தெரிஞ்சுக்கோங்க… அட்ஜஸ்ட்டாம் அட்ஜஸ்ட்டு….

கோவிச்சுக்காதேடீ….. நான் ஒண்ணும் தப்பா சொல்லலியே...நீ நல்லா அட்ஜஸ்ட் பண்ணி சமாளிக்கறேன்னுதான் சொன்னேன்...இப்ப பாரு...வெளியில போய் நின்னு வாங்கி வந்ததுல கொஞ்சம் டயர்டா இருக்கு… அட்ஜஸ்ட் பண்ணி ஒரு கப் காப்பி தர முடியுமா? .. என்று அவர் கேட்டவுடனே அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கொஞ்சம் உக்காந்து பேப்பர் படிச்சிண்டிருங்க… இதோ புது டிகாக்ஷன் போட்டுத் தறேன்… என்று சொல்லி உள்ளே சென்றாள். அவர் செய்தித்தாளை விரித்தார். ஆனால் மனம் செய்தியில் இறங்கவில்லை.. சென்று வந்த ஆயாசமும் இளங்காலைக் குளிர்காற்றும் அவரை மெல்லத் தூக்கத்தில் ஆழ்த்தின.

பக்கத்தில் யாரோ உட்காரும் சத்தம் கேட்டு விழித்தார். மூத்த மகன் ராஜேஷ். என்னப்பா, பேப்பர் படிச்சிட்டே தூங்கிட்டீங்க? ஒடம்பு சரியில்லையா? நீங்க வேணா உள்ள போய் படுத்துக்குங்க..இன்னிக்க உங்க வேலையெல்லாம் நான் பாத்துக்கறேன்….என்றான்.

தான் காண்பது நிஜம்தானா? அல்லது கனவா? வியந்தார். உங்களுக்கெல்லாம் ஏதோ ஆன்லைன் மீட்டிங் இருக்குன்னு அம்மா சொன்னாளே? என்று கேட்டார். ஆமாம்ப்பா...ஆனா அது மத்தியானம் மூணு மணிக்கு மேலதான்… வித்யாவுக்கு மாத்திரம்தான் காலைல ஒரு இண்டர்வியூ… மத்தபடி எதுவும் இல்லை… என்ன என்ன பண்ணனும் சொல்லுங்க….நான் பண்ணிடறேன்…. என்றான்.

இந்த நான்கு மாதத்தில் அவன் இப்படிப் பேசுவது இதுதான் முதல் முறை. நீ சொன்னதே போறும்ப்பா… இன்னிக்கு வேணுங்கறதை நான் காலைலயே முடிச்சிட்டேன்.. மீதி ஏதாவது இருந்தா சாயங்காலம் பாதுதுக்கலாம்ன்னு அம்மா சொல்லிட்டா… நீ உன் வேலையைப் பாத்துக்கோ… எனக்கு ஒண்ணும் இல்ல…. என்றார்.

அதற்குள் மற்றோர் அறைக்கதவு திறந்து இளைய மகன் ஹரீஷ் வந்து சேர்ந்துகொண்டான். என்னடா ராஜேஷ். அதிசயமா அப்பாகூட பேசிட்டிருக்கே? ஏதாவது விசேஷமா இல்ல பிரச்சனையா? என்று கலாய்த்தான்.

அவருக்கு சிரிப்பு வந்தது. ஏம்ப்பா….ஏதாவது விசேஷம் இல்லை பிரச்சனைன்னா மாத்திரம்தான் என்கூட பேசுவீங்களா? மத்தபடி நான் தேவை இல்லையா உங்களுக்கு? என்றார்.

அப்படி இல்லப்பா...உங்க லைஃப்ஸ்டைல் வேற..எங்க லைஃப்ஸ்டைல் வேற...நீங்க சீக்கிரம் எழுந்து குளிச்சி பூஜை புனஸ்காரம் அப்படின்னு இருக்கிறவங்க...நாங்கள்ளாம் க்ளையண்ட் நேரத்திற்கு ஏத்தாப்போல எப்பவேணா வேலை செய்ய வேண்டியிருக்கிறதால நேரம் காலமே கிடையாது… எப்ப வேணா எழுந்துப்போம். எவ்வளவு நேரம் வேணுமானாலும் வேலை செய்வோம்… ஒரு நாள் பன்னெண்டு பதினஞ்சு மணி நேரம் வேலை செய்வோம் இன்னொருநாள் ரெண்டு மணி நேரம்கூட செய்ய மாட்டோம்...எப்போ வேணுமுன்னாலும் தூங்குவோம்… இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காம இருக்கும்.. ஏன், புரியாமக்கூட இருக்கலாம்..அதனாலதான் நாங்க உங்க ஆக்டிவிட்டில குறுக்கே வர்றதில்லைப்பா...மத்தபடி உங்களுக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னெல்லாம் ஒண்ணும் இல்ல...என்றான்.

சேச்சே...நான் எப்போ நீங்க ஹெல்ப் பண்றதில்லைன்னு சொல்லியிருக்கேன்…. இன்னிக்கு ஏதோ கொஞ்சம் டயர்டா இருந்தது… கொஞ்சம் அம்மாகிட்ட புலம்பிட்டிருந்தேன்…. அவ்வளவுதான்…. இதோ அம்மா போடற காப்பியை குடிச்சா எல்லாம் சரியாயிடும்…. நீங்க போங்கோ….உங்க உங்க வேலையைப் பாத்துண்டு சந்தோஷமா இருங்கோ….. இப்படி சேந்தாப்பல இருக்கற பாத்தியதை திரும்ப எப்ப கிடைக்கும்னு தெரியாது….என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, காப்பி வாசனை வந்த பக்கமாய் திரும்பினார்.

டொக்...என்று காப்பியை முன்னே வைத்தாள் அவர் மனைவி. அப்போலேந்து சித்த கைவேலையாயிருக்கேன்..காப்பி கலந்தாச்சு வந்து எடுத்துக்கோங்கோன்னு கத்திண்டிருக்கேன்...அதுக்குள்ள என்ன தூக்கம்? இன்னும் எவ்வளவு வேலை பாக்கியிருக்கு? இன்னிக்குப் பூரா குழந்தைகங்களை நாம தான் மேய்க்கணும்...அவங்களுக்கு டிபன் ரெடி பண்ணிண்டிருக்கேன்...காப்பி குடிச்சிட்டு நீங்க கொஞ்சம் டைனிங் டேபிள் ஒத்தாசைக்கு வாங்கோ…இவங்க எப்ப எழுந்திரிச்சி எப்ப மீட்டிங்ல உக்காருவாங்கன்னு தெரியாது…. என்று கட்டளையிட்டு நகர்ந்தாள் அவர் மனைவி.

அவர் திரும்பிப் பார்த்தார். அறைக் கதவுகள் மூடித்தான் இருந்தன.
0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home