ஒரு கணம் தவறாகி..
மாலை நாலு மணி
இருக்கும். ஆனந்தி
ஆபீஸில் ஏ டி ம் லோட் செய்வதற்காக
கட்டுகட்டாக பணத்தை டிரேயில்
அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.
அப்போது
பெங்களூரில் இருக்கும்
மகளிடமிருந்து போன்.
மகள் அஞ்சலி
சாதாரணமாக போன் செய்ய மாட்டாள்.
அவள் செய்தாள்
என்றால் ஏதாவது அவசரமாகத்தான்
இருக்கும். ரிடையராகியிருந்த
அவளது கணவன் மகள் வேலைக்குச்
செல்லும் நாட்களில் பேத்தியைப்
பார்த்துக்கொள்வதற்காக
பெங்களூர் சென்றிருந்தான்.
ஒருவேளை குழந்தை
பள்ளியிலிருந்து வரவில்லையோ,
அல்லது அவளுக்கு
உடம்பு சரியில்லையோ,
என்னவோ ஏதோ
என்ற கவலையில் போனை எடுத்து
என்னம்மா? என்று
கேட்டாள்.
அப்பா
போனே எடுக்கலைம்மா.
குழந்தை அப்பவே
ஸ்கூல்லேந்து வந்துட்டாளாம்.
அவளோட ஃப்ரெண்டு
வீட்லதான் இருக்காளாம்.
அவளோட அம்மா
போன் பண்ணினா. ஏன்
அவளோட தாத்தா இன்னிக்கு
வரலையான்னு கேட்டா..
எனக்கு
கவலையாயிடுச்சு. நானும்
ஏழெட்டு தடவைக்கு மேலயே
கிட்டத்தட்ட மாத்தி மாத்தி
அரை மணிநேரமா போன் பண்ணிட்டேயிருக்கேன்…
கவலையாயிருக்கே.. என்றாள்
மகள். நிலைமையின்
தீவிரம் புரிந்ததும் உறைந்தாள்
ஆனந்தி.
ஆனந்தியின்
கணவன் ஆனந்த் ரிடையர் ஆனதே
கல்லூரிகளில் வாரத்தில் சில
நாட்கள் மட்டுமே ஃப்ரீலான்ஸ்
முறையில் வகுப்பு நடத்தும்
தன் மகளுக்கு உதவி செய்வதற்காகத்தான்.
ஒவ்வொரு வாரமும்
இரண்டு அல்லது மூன்று நாட்கள்
பெங்களூர் சென்று மகள் வீட்டில்
இல்லாதபோது பேத்தியைப்
பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
அவன் எடுத்துக்கொண்டிருந்தான்.
குறிப்பாக
முதல் வகுப்பில் படிக்கும்
தன் பேத்தி அபர்ணா காலையில்
பள்ளிக்குச் செல்லும்போதும்
மாலை பள்ளியிலிருந்து
வரும்போதும் பஸ் ஏற்றி,
பஸ்ஸிலிருந்து
இறக்கி அழைத்துக்கொண்டு
வருவதும், வந்த
பின் பேத்திக்கு பூஸ்ட்
மற்றும் ஏதாவது சிற்றுண்டி
தயார் செய்து தந்து பின்னர்
அவளது தாய் வரும்வரை பேத்தியை
டிராயிங் கிளாஸ், பாட்டு
கிளாஸ் அல்லது வீட்டுப்பாடம்
என்று ஏதாவது முறையில் பொழுது
போகுமாறு பார்த்துக்கொள்வதும்
அவனது வேலை. அதை
சரியாகவே செய்துகொண்டிருந்தான்.
ஆனால்
கடந்த சில மாதங்களாக அவனது
உடல்நலத்தில் சிறு தொய்வு
ஏற்பட்டிருந்தது.
மருத்துவப்
பரிசோதனையில் அவனது இரத்த
ஓட்டத்தில் எங்கோ தடை இருப்பதாகத்
தெரிந்தாலும், சில
மாதங்கள் மருந்தால் சரிப்படுத்த
முடிந்தால் பார்க்கலாம்,
இல்லாவிட்டால்
ஆஞ்ஜியோ செய்வது நல்லது என்று
அவனது டாக்டர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில்தான்
இன்று மகளிடமிருந்து போன்.
ஆனந்திக்கு
ஒரு கணம் உலகமே ஸ்தம்பித்தது
போல் இருந்தது. கண்ணை
இருட்டுகிறாற்போல் தோன்றிற்று.
சட்டென்று
பணம் அத்ததையையும் காஷ்
அறையிலேயே வைத்து பூட்டிவிட்டு
தன் ஸீட்டுக்கு வந்து அமர்ந்தாள்.
எண்ணம் எதுவுமே
ஓடவில்லை. ஏன்
அவர் போன் எடுக்கவில்லை?
ஒருவேளை உடல்நிலை
மோசமாகி மயக்கமாகி
விழுந்துவிட்டிருப்பாரோ?
மூளை ப்ரேக்
போட்டாற்போல் நின்றுவிட்டது.
ஒரு கணம் கண்ணை
மூடி ஸ்வாமியைத் தியானித்துக்கொண்டு
சட்டென்று சுதாரித்துக்கொண்டு
அடுத்த நடவடிக்கைகளில்
இறங்கினாள்.
மகளுடைய
கல்லூரி எலக்ட்ரானிக் சிட்டியில்
இருப்பதால் என்னதான் உடனடியாக
டாக்ஸி பிடித்து வந்தாலும்
குறைந்தது ஒரு மணி நேரமாவது
ஆகும். அது
வேலைக்கு ஆகாது.
இங்கிருந்தபடியே
பெங்களூரில் தன் மகள் வீட்டருகில்
யாரெல்லாம் தெரியுமோ
அவர்களுக்கெல்லாம் ஒவ்வொருவராக
போன் செய்யத் தொடங்கினாள்.
முதலில் மருமகன்.
அவர் ஐந்தாறு
கிலோமீட்டர் தூரத்தில்
வேலைசெய்வதால் சீக்கிரம்
வீட்டிற்கு வந்து பார்க்க
முடியும். அடுத்தது
வேலைக்காரி. ஒரு
வேளை அவள் அதே பிளாக்கில்
வேறு ஏதாவது ஃப்ளாட்டில்
இருந்தால் அவளையாவது போய்
பார்க்கச் சொல்லலாம்.
அடுத்தது
இன்னும் தூரத்தில் இருக்கும்
அவர்களது மகன். இவ்வாறாக
துரிதமாக காரியத்தில்
இறங்கினாள்.
***
சரியாக
மூன்றறை மணிக்கு எழுந்தான்
ஆனந்த். மூன்று
நாற்பதுக்கு ஸ்கூல் பஸ்
வந்துவிடும். அபர்ணாவைக்
கூட்டிக்கொண்டு வர புறப்பட்டான்.
அபார்ட்மெண்ட
வாசலில் வந்து காத்து நின்றான்.
ஐந்து நிமிடங்கள்
ஆயிற்று. பஸ்ஸும்
வரவில்லை. குழந்தைகளை
அழைத்துச் செல்ல வரும் மற்ற
பெற்றோரையும் காணவில்லை.
ஒரு வேளை பஸ்
சீக்கிரமாக வந்து விட்டதா?
போன
முறை ஒரு தடவை இந்த மாதிரி
ஆகியிருந்தது நினைவுக்கு
வந்தது. அப்போது
மகள்தான் போன் செய்தாள் -
குழந்தை
வந்துட்டாளாமே அப்பா?
நீங்க எங்கே
இருக்கீங்க? என்று
அவள் கேட்டபின்தான் அன்றைய
தினம் ஸ்கூல் பஸ் வழக்கத்தைவிட
ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே
வந்ததும், தான்
லிப்டில் இறங்கி வெளியில்
செல்லும் அதே நேரத்தில்
பக்கத்து லிப்டில் குழந்தை
வந்ததால் அவள் வந்ததை கவனிக்க
முடியாமல் போனதும் அவனுக்குத்
தெரிய வந்தது.
அந்த
சம்பவம் நினைவுக்கு வந்ததும்
இப்போதும் மகளிடமே கேட்கலாம்
என்று போனை எடுக்க முயற்சிக்கும்போதுதான்
அவனுக்குத் தெரிந்தது
பாக்கெட்டில் போன் இல்லை
என்பது. மதிய
உணவுக்குப் பின்னர் போன்
பேசும்போது பேட்டரி மிகவும்
குறைவாக ஆகியிருந்ததால்
சார்ஜில் வைத்ததை மறந்தே
போயிருந்தான்.
அடடா,
இவ்வளவு நேரம்
ஆயிற்றே, ஒரு
வேளை பஸ் வந்திருக்குமோ என்று
கேட்டில் உள்ள செக்யூரிட்டியிடம்
கேட்டால் அந்த வடநாட்டுச்
சிறுவன் ஹிந்தியில் அபி ஆயா
நஹி என்று சமாதானம் சொன்னான்.
சிறிது தவிப்புடனே
இன்னும் ஐந்து நிமிடங்கள்
காத்திருந்தான் ஆனந்த்.
இன்னமும் பஸ்
வராததால் செக்யூரிட்டியிடம்
பஸ் வந்தால் பேத்தியை இறக்கி
அங்கேயே வைத்துக்கொள்ளச்
சொல்லிவிட்டு வீட்டுக்குப்போய்
போனை எடுத்துக்கொண்டு
வந்துவிடலாம் என்று எண்ணி
செக்யூரிட்டி பூத்தை நோக்கிச்
சென்றான்.
அங்கு
செக்யூரிட்டி சூப்பர்வைஸரிடம்
விஷயத்தை விளக்கிக்கொண்டிருக்கும்போதே
அவர் தன்னுடைய மொபைல் போனில்
பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தி,
நீங்கள்
ஏ-பிளாக்கிலிருந்து
வருகிறீர்களா? என்றார்.
ஆமாம் என்றான்.
உங்கள் மகள்தான்
போன் செய்திருக்கிறார்.
அவர்கள் எல்லாம்
உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்கே இருந்தீர்கள்?
ஏன் போன்
எடுக்கவில்லை? என்று
அவனைக் கேட்டார்.
நடந்ததையெல்லாம்
விவரித்துவிட்டு, அவரிடமே
போனை வாங்கி மகளுக்கு போன்
செய்தான் ஆனந்த்.
பதட்டத்துடன்
பதிலளித்தாள் அஞ்சலி.
அப்பா… எங்கே
போனீர்கள் அப்பா? ஏன்
போனே எடுக்கவில்லை?
உங்களுக்கு
என்ன ஆயிற்றோ என்னவோ என்று
தவித்துப்போய்விட்டோமே இங்கு
எல்லாருமே? மாப்பிள்ளையைக்கூட
ஆபீஸில் தொந்தரவு செய்ய
வேண்டியதாய்ப் போயிற்று
தெரியுமா? அவர்
வேறு மீட்டிங் நடுவில் டிஸ்டர்ப்
செய்ததற்கு கோபித்துக்கொண்டிருக்கிறார்.
இருந்தாலும்
எமர்ஜென்சியைப் புரிந்துகொண்டு
வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்.
குழந்தை
பி-பிளாக்கில்
அவள் ஃப்ரெண்ட் வீட்டில்
இருக்கிறாள். நீங்கள்
அவளை அழைத்துக்கொண்டு முதலில்
வீட்டுக்குச் செல்லுங்கள்…
என்று படபடவென அழுதுகொண்டே
தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
செக்யூரிட்டியில்
மீண்டும் விசாரித்ததில்
அவர்களுக்கும் ஸ்கூல் பஸ்
வந்ததை எப்படி கவனிக்க
மறந்தார்கள் என்பது சரியாக
விளங்கவில்லை. இன்றும்
வழக்கத்தைவிட மிக முன்னரே
பஸ் வந்துவிட்டிருந்தபடியால்
அன்றுபோல் தான் ஒரு லிப்டில்
இறங்கிக்கொண்டிருக்கும்போதே
பேத்தி பள்ளியிலிருந்து
வந்து தாத்தாவைக் காணாததால்
அவளது ஃப்ரெண்டு கூட அவளது
வீட்டிற்கே சென்றுவிட்டிருக்கிறாள்.
வீட்டைவிட்டுப்
புறப்படுமுன் ஒரு கணம் மறதியில்
போனை எடுத்துக்கொள்ளாமல்
வந்ததால் இத்தனை குழப்பம்
ஆகியிருக்கிறது என்பதைப்
புரிந்து கொண்டான்.
அங்கிருந்து
பி-பிளாக்
சென்றான். அங்கு
அவளது ஃப்ரெண்ட் வீட்டில்
ஏற்கெனவே குழந்தையின் தந்தை
அவளை அழைத்துச் சென்றதாகக்
கூறினார்கள். குற்ற
உணர்ச்சியுடன் மறுபடியும்
லிப்டில் ஏறி தன் வீட்டுக்குச்
சென்றால் அங்கு வாசலில்
மருமகன் போனில் பேசியபடியே
காத்திருந்தார். என்ன
மாமா? என்ன
இவ்வளவு கலாட்டா ஆகிவிட்டது
இன்று? என்று
விசாரித்தபடியே,
இந்தாருங்கள்,
அத்தைதான்
போனில் இருக்கிறார்கள்..
பேசுங்கள்..
என்றார்.
***
ஒரு
வித துரித கதியில் எந்தவித
கலக்கமோ குழப்பமோ இல்லாமல்
மாற்றி மாற்றி அடுத்து என்ன
செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த
ஆனந்திக்கு மாப்பிள்ளையிடமிருந்து
போன் வந்தது. எடுத்தாள்.
இந்தாங்க
அத்தை… மாமாவிடம் பேசுங்க
என்றார் மாப்பிள்ளை.
பின்னாடியே
ஆனந்தின் குரல்… சாரிம்மா…
போனை வீட்டிலேயே
விட்டிருச்கேன்…அதுவுமில்லாம
பஸ் வேற இன்னிக்கு ரொம்பவே
சீக்கிரமா வந்திருக்கு..
அதான்..
என்று அவனின்
குரலைக் கேட்டவுடனேயே இத்தனை
நேரம் பற்றியிருந்த தைரியம்,
உறுதியெல்லாம்
கரைந்து முதல் முதலாய் நடுங்கும்
குரலில் அழத்தொடங்கினாள்
ஆனந்தி.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home