Saturday, November 30, 2019

திருட்டு




ஐயையோ, திருடன்.. திருடன்.. என்று கூச்சலிட்டாள் காந்தி. தெருவிளக்கு எரியாத இருட்டான வீதி. ஓரிரண்டு பழைய தனி வீடுகள் தவிர புதிதாக கட்டப்பட்டிருந்த அடுக்கு மனைகள் நான்கைந்து இருந்தன அந்த வீதியில். சிறிது தூரம் சென்று திரும்பினால் நுறு அடியில் அம்மன் கோவில் ஒன்று இருந்தது. அந்தக் கோவிலுக்குத்தான் சென்று கொண்டிருந்தாள் காந்தி. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறிது கூட்டம் இருக்கும். மற்ற நாட்களில் அவ்வளவாக இருக்காது. எனவே, அந்த வியாழக்கிழமையும் அரவமற்றதாகவே இருந்தது அந்த வீதி.

மீண்டும் ஒருமுறை உரத்த குரலில் கூச்சலிட்டாள் காந்தி. திருடன், திருடன், பிடிங்க.. பிடிங்க… பைக்கில வந்து செயின் அறுத்துக்கிட்டு ஓடறாங்க… பிடிங்க என்று கத்தினாள். மெளன ராகத்தில் மூழ்கியிருந்த மக்கள் சப்தம் கேட்டு சுதாரித்துக்கொண்டு வெளியில் வரவே சற்று நேரமாயிற்று. நடுவயதைத் தாண்டியிருந்த நான்கைந்து ஆண்கள் வேட்டி பனியனோடு வெளியில் வந்து என்ன? என்ன? என்று கேட்டனர். பெண்கள் சிலர் சிறு சிறு தனித்தனி கூட்டமாக அவரவர் வீடு அல்லது அடுக்குமனை வாசல்களில் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

ஐயோ, செயின் போச்சே, செயின் போச்சே என்று அரற்றினாள் காந்தி. என்னம்மா ஆச்சு? சொல்லு என்று அந்த ஆட்கள் வினவ, ஐயா, கோவிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன் ஐயா… அப்போ வேகமா பைக் ஒண்ணு ரொம்ப பக்கத்துல கிராஸ் ஆச்சு.. ஏற்கெனவே இருட்டா இருக்கேன்னு பயந்துகிட்டு ஓரமா போய்க்கிட்டிருந்தேனா… அதுக்கு மேல ஒதுங்க முடியல… பக்கத்துல வந்து பைக்கில பின்னாடி ஒக்காந்திருந்தவன் சட்டுண்ணு என் கழுத்துல கைபோட்டு என்னோட செயினை பிடுங்கிட்டு வேகமா போய்ட்டாங்கய்யா… என்ற அழுதாள். இழுத்த இழுப்புல கழுத்துகூட சிராய்ச்சிருக்கய்யா… வலிக்குதுய்யா… என்று அழுதாள்.

இப்போ ரெண்டு நிமிஷம் முன்னாடி ரேஸ் வண்டி மாதிரி சத்தமா ஒரு பைக் போன சத்தம் கேட்டதே, அதுவா? என்று ஒருவர் கேட்க, ஆமாம் ஐயா.. அதுதான்… என்று கழுத்தைப் பிடித்துக்கொண்டு விக்கி விக்கி அழுதாள் காந்தி.

அவனுங்களைப் பாத்தியாம்மா, வண்டி நம்பர், ஆள் அடையாளம் ஏதாவது சொல்ல முடியுமா? என்று இன்னொருவர் கேட்க, அதெல்லாம் எப்படீங்கய்யா இந்த இருட்டுல முடியும்? என்று அழுதுகொண்டே பதில் கேள்வி கேட்டாள் காந்தி.

இரும்மா.. இரு. நான் போலீஸுக்கு போன் பண்ணறேன் என்று ஒருவர் முன்வந்தார். விவரம் கேட்டு சிறிது சிறிதாக கூட்டம் சேர, பத்து நிமிடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பில்லியனில் கான்ஸ்டபிளோடு பைக்கில் வந்தார். என்னப்பா கூட்டம்… எல்லாரும் நகருங்க மொதல்ல… என்று அதட்டினார். இந்தம்மாவுக்கு யாராவது காப்பி, தண்ணி ஏதாவது மொதல்லே குடுத்தீங்களா இல்ல சும்மா வேடிக்கை மாத்திரம் பாத்துக்கிட்டு இருக்கீங்களா… என்று உரத்த குரலில் கேட்க… இதோ தண்ணி கொண்டு வாரேன் என்று இரண்டு பெண்கள் உள்ளே ஓடினர்.

இன்ஸ்பெக்டர் காந்தியைப் பார்த்து, சொல்லும்மா… எப்படி நடந்தது என்று விவரம் கேட்க, அழுதுகொண்டே பதில் சொன்னாள் காந்தி. அவள் சொல்லச் சொல்ல கையேட்டில் விவரம் குறித்துக்கொண்டார் கான்ஸ்டபிள். அடையாளம் ஏதாவது சொல்ல முடியுமாம்மா? என்று இன்ஸ்பெக்டர் கேட்க, காந்தி, ஐயா, அவங்க ஒடனே வேகமா போய்ட்டதால நான் பின்னாடி ஒக்காந்திருந்தவனை மட்டுந்தான் பாக்க முடிஞ்சது… அவன் வரிவரி டி-சர்ட் போட்டிருந்தான்… மொகத்துல கர்சீப் கட்டிட்டிருந்ததால மொக அடையாளம் தெரியலீங்கய்யா…ஆனா கையில இரும்பு வளையம் மாட்டிக்கிட்டிருந்தான்.. அதை நான் பார்த்தேன்.. என்று விசும்பினபடியே சொன்னாள்.

இப்போல்லாம் பாதி பசங்க வளையலும் கம்மலுந்தான் போட்டுக்கிட்டிருக்காங்க… இன்னுஞ்செலபேர் முடி சீவி பின்னல்கூட போட்டுக்கிறாங்க… காலம் அப்படியிருக்கு…. என்னத்தச் சொல்ல…. என்று தனக்குள் பேசியபடியே, சுமாரா என்ன வயசிருக்கும் அவனுக்கு? என்று கேட்டார். அவனப்பாத்தா சின்ன வயசுக்காரனாத்தான் தெரிஞ்சது ஐயா… இருவது இருவத்தஞ்சி போலத்தான் இருக்கும்…ஒல்லியா மீடியம் ஒயரமாத்தான் இருந்தான் ஐயா.. என்றாள். சரி சரி, என்ன செயின் போட்டிருந்தே… உன்னோட வெவரமெல்லாம் சொல்லு.. யோவ் ஏட்டு … எழுதிக்கய்யா… என்று காந்தியை கான்ஸ்டபிளிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கு சேர்ந்திருந்த மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர். உடனேயே மக்கள் கலையத்தொடங்கினர். ஏன்ய்யா, உங்க லொக்காலிட்டிலே செயின் ஸ்நாட்சிங் ஆயிருக்கு...விசாரிக்கலாம்ன்னா ஒடனே ஓடரீங்களே.. அப்புறம் எப்படிய்யா எங்களால ஒங்களுக்கு ஒதவ முடியும்…. கொஞ்சமாவது ஒத்துழைக்கணுமில்ல… என்று நிந்தித்தபடியே சற்று பொறுப்பானவர்களாகத் தெரிந்தவர்களை இருக்கச் சொன்னார்.

யாராவது இந்த சம்பவத்தைப் பாத்தீங்களாய்யா? என்று கேட்க, எல்லோரும் ஒருமித்த குரலில் இல்ல சார்.. என்றனர். ஒருவர் முன்வந்து, எல்லாரும் வீட்டுக்குள்ளாற இருந்தோம்.. இந்தம்மா கூச்சல் கேட்ட பெறகுதான் வெளியே வந்து பாத்தோம்… இதோ இவர் மாத்திரம் அந்த பைக் போன சத்தம் கேட்டிருக்கார்… அவ்வளவுதான்… யாரும் யாரையும் பாக்கல… அந்த அம்மா கூட இந்த லொக்காலிட்டி இல்ல போலத்தான் தெரியுது பாருங்க… அவங்களை யாரும் இங்க பாத்ததில்லைன்னுதான் லேடீஸ்கூட பேசிக்கறாங்க… என்று சாமர்த்தியமாக மீண்டும் விசாரணைக்கு உட்பட வேண்டாதபடி பதிலளித்தார். அப்படியா… சரி, பார்க்கலாம்… அது சரி, இந்த ஏரியா இப்படி இருட்டா இருக்கே, கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கீங்களா… தெருவுலதான் வெளக்கு இல்லேன்னா நீங்களாவது எல்லாரும் வாசல்ல பிரகாசமா லைட் போட்டா போறவர்றவங்களுக்கு, ஏன், ஒங்களுக்கேகூட உபகாரமா இருக்குமில்லே? அதெல்லாம் ஏன் பண்ணறீங்க…. ரெண்டு மணி நேரம் லைட் போட மாட்டீங்க… எட்டு மணி நேரம் டிவி ஓட்டுவீங்க… என்று காட்டமாக புலம்பியபடியே கான்ஸ்டபிளிடம் வந்தார்.

இதற்குள் கான்ஸ்டபிள் காந்தியிடமிருந்து ஓரளவு விவரம் சேகரித்திருந்தார். அவளது கணவன் தினக்கூலி வேலைக்காரன். குடிகாரன். குழந்தை குட்டி இல்லை. பக்கத்திலிருக்கும் கன்னிகாபுரத்தில் தான் வாடகை வீட்டில் குடியிருக்கிறாள். அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்துகிறாள். கணவனுடன் பிணக்கு இருக்கும் நாட்களில் மாலையில் வீட்டில் இல்லாமல் எங்காவது கால்போன போக்கில் சிறிது நேரம் நடப்பது வழக்கம். அதுமாதிரிதான் இன்று இந்தக் கோவிலுக்குப் போகலாம் என்று வந்திருக்கிறாள். தன்னிடம் இருப்பது தாய் வீட்டில் போட்ட ஒரே நகை. ஒரு சவரன் செயின். அதைத்தவிர இத்துப்போயிருந்த தாலிக்கயிறு. அதையும் சேர்த்து பறித்துப்போயிருந்தான் அந்த பைக் களவாணி. இதற்கு மேல் அவளிடம் கேட்க ஒன்றும் இல்லை. அவளது விலாசம் கொடுத்திருந்தாள்.

சரிம்மா… ஒரு பேப்பர்ல இதை எழுதிக்குடு...கம்ப்ளெயிண்ட் எடுத்துக்கறோம்… நீ சொன்ன அடையாளம் வெச்சு தேடறது கஷ்டம்… வெவரம் போதாது… ஏதாவது துப்பு கெடச்சதுன்னா ஒன்ன கூப்புடறோம்… என்று கூறி கான்ஸ்டபிளிடம், யோவ் யாராவது வீட்ல போய் ஒரு பேப்பர் வாங்கி எழுதிக்கினு நீ ஸ்டேஷனுக்கு வந்துடு… நான் கெளம்பறேன்.. என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.

இரண்டு நாட்கள் ஆயின. அன்று மாலை அவள் வீட்டிற்கு அந்த கான்ஸ்டபிள் வந்தார். இந்தாம்மா… இன்ஸ்பெக்டர் ஒன்ன கூட்டியாரச் சொன்னாரு… வா ஸ்டேஷனுக்கு… என்று அழைத்தார். போலீஸைக்கண்டு அரண்ட அவளது கணவன் உள்ளேயிருந்து மெதுவாக எட்டிப்பார்த்து, என்னாடி விஷயம், எதுக்கு ஒன்ன போலீசு கூப்புடுது? ஏதாவது தப்பு தண்டா பண்ணியா? என்று மெதுவாக் கேட்டான்.

ஆமாம்… நீ குடிச்சிட்டு பண்ற கலாட்டா போதாதுன்னு நான் வேற தப்பு பண்ணனுமா? அன்னிக்கு என்னோட செயின் திருட்டுப்போச்சுன்னு புகார் குடுத்திருக்கேனில்ல… அதெ வெசாரிக்கத்தான் கூப்புடறாங்கன்னு நான் நெனக்கறேன்… நீ சோத்தத் தின்னுட்டு சொம்மா கெட… என்று கூறிவிட்டு கான்ஸ்டபிளோடு புறப்பட்டாள். செயின் திருட்டுப்போச்சா? எந்த செயின்? எப்போ? எங்கிட்ட சொல்லவேயில்லியே நீ? என்று சன்னமான குரலில் கேட்டாலும் அது கான்ஸ்டபிள் காதில் நன்றாகவே விழுந்தது. என்னாம்மா? அன்னிக்கு நடந்ததெல்லாம் ஒம்புருஷனுக்கு தெரியாதா? என்னா நடக்குது உங்களுக்குள்ளே? இல்ல அவனையும் விசாரிக்கணுமா? என்று மிரட்டல் தொனியில் கேட்டார்.

ஐயையோ, அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க… அந்தாளு எப்பப்பா குடிச்சிட்டு மப்புல இருப்பான்.. அதனால நான் அவங்கிட்ட ஒண்ணுமே சொல்றதில்ல… நீங்க தப்பா நெனக்காதீங்க…. குடி தவிர வேற கெட்ட பழக்கம் எதுவும் அவங்கிட்ட இல்லய்யா… அதனால் தான் நான் தைரியமா அந்த ஒரு தப்ப சொல்லிச்சொல்லியே அவன திட்டி அடக்கி வெச்சிட்டிருக்கேன்.. நீங்க உள்ள பூந்து குடும்பத்தக் கெடுத்துப்புடாதீங்க… ஒங்கள என் அண்ணனா நெனச்சு கெஞ்சிக் கேட்டுக்கறேன்…. என்று கையெடுத்துக் கும்பிட்டாள். மனம் இரங்கிய கான்ஸ்டபிள், சரி வா… லேட்டானா இன்ஸ்பெக்டர் திட்டுவாரு.. என்று அவசரப்படுத்தி அழைத்துச் சென்றார்.

தயக்கத்துடன் உள்ளே நுழைந்த காந்தியைப் பார்த்த இன்ஸ்பெக்டர், வாம்மா…. பயப்படாதே… நீ சொன்ன அடையாளம் மாத்திரம் வெச்சிக்கிட்டு அந்தத் திருட்டுப்பசங்களப் பிடிக்க முடியாதுன்னு ஒனக்கே தெரியும்.. ஆனா பாரு… எங்க கெட்ட நேரம்… எல்லா கேசையும் சீக்கிரம் முடி முடின்னு மேலிடத்திலருந்து வெரட்டறாங்க…. டெய்லி இன்னிக்கு எவ்வளவு கேஸ் பைசல் பண்ணேன்னு கேட்டுக் கொடையறானுங்க.. அதனால நான் ஒண்ணு சொல்றேன் … கேப்பியா? என்று பூடகமாக அவளைப் பார்த்தார்.

சற்று குழம்பினாலும், ஏதோ நல்லதுதான் நடக்கப்போகிறது என்ற நம்பிக்கையுடன், என்ன பண்ணணும் சார்? என்று மெல்லிய குரலில் கேட்டாள் காந்தி. ஒண்ணுமில்லம்மா… அவனப் பிடிக்கலேன்னாலும் ஏற்கெனவே நடந்த நாலைஞ்சு திருட்டையெல்லாம் பிடிச்சுருக்கோமில்ல… அதில மாட்டின நகையெல்லாம் வெச்சிருக்கோம்… ஒன்னோட செயின் ஒரு சவரன் தான சொன்னே? இங்க இருக்கிற செயின்ல ஒரு சவரன் இருக்கிறாமாதிரி செயின் ஏதாவது ஒண்ணு எடுத்திக்கிட்டு செயின் கிடைச்சுடுச்சு அப்படின்னு சொல்லி ஒன்னோட கேஸை குளோஸ் பண்ணிடறோம்.. நீயும் அதை ஒத்துக்கிறாமாதிரி எழுதிக்கொடுத்திடு.. அந்த செயின் போனா என்னா? ஒனக்கு நஷ்டமில்லாம இன்னொரு செயின் கிடைக்குதில்ல.. இதுகூட இல்லன்னா எப்படியிருக்கும்? யோசிச்சுப்பாரு…. இது ஒனக்கும் நல்லது … எங்களுக்கும் நல்லது… என்னா சொல்லறே? என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

அவள் மொனமாக இருக்கவே, என்னா யோசிக்கறே? என்று கேட்டார். காந்தி, இந்தச் செயினோட ஓனர்ன்னு யாராவது வந்து கேட்டா என்னா சொல்லுவீங்க சார்? என்று அப்பாவியாக அவரைக் கேட்டாள். அவர் சற்றே கோபமாகி, அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். ஒனக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. என்னா சொல்றே? சீக்கிரம்! என்று அவளை அவசரப்படுத்தினார்.

சிறிது நேரம் தயங்கி, பின்னர் சரியென்று ஒப்புக்கொண்டு கான்ஸ்டபிள் நீட்டிய பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டு இன்ஸ்பெக்டருக்கும் கான்ஸ்டபிளுக்கும் கும்பிடு போட்டு அவர்கள் கொடுத்த செயினை வாங்கி கழுத்திலும் போட்டுக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினாள் காந்தி. கால்கள் முன்னே நடக்க அவளது நினைவுகள் பின்நோக்கி நடந்தன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேறுவேறு இடங்களுக்கு நடப்பது எவ்வளவு நல்லதாயிற்று? இல்லாவிட்டல் இவ்வளவு தோதான இடம் கிடைத்திருக்குமா? அதுமட்டுமில்லாமல், வெறும் உழைப்பை மட்டும் நம்பிப் பயனில்லை. மூளையையும் சற்று கசக்கினால்தான் பணம் பண்ண முடியும் என்று முடிவெடுத்ததை எண்ணி தன்னைத்தானே மெச்சிக்கொண்டாள். அவளது கை தன்னையறியாமல் அவளது கழுத்தை தடவிக்கொடுத்தது. சட்டென்று கையை எடுத்து முன்னால் வைத்து விரல்களைப் பார்த்தாள். யாரும் சந்தேகப்படும்முன் இந்த நகத்தையெல்லாம் உடனே வெட்டிவிட வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு வேகமாக நடையைக் கட்டினாள்.

போலீஸ் வந்து சென்றபின் கொஞ்சநஞ்ச போதையும் முழுவதுவாக அகன்றுவிட்டிருந்த அவளது கணவன், அவளிடம் இருந்த ஒரே செயினையும் தான் என்றோ அடகு வைத்து ஏப்பம் விட்டதையும், பல மாதங்களாக வெறுங்கழுத்தோடுதானே இருக்கிறாள்? திருட்டுப்போக அவளிடம் எப்படி செயின் இருந்தது என்றும் விளங்காமல் மூளையைக் கசக்கிக்கொண்டிருந்தான்.

x

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home