Wednesday, October 7, 2020

பறி

 

எநதவுயிரையுஙகொலலாதவொருசநநியாசியொருயேரிகரைமேலேபோறான. போகுமபோதநதயேரியிலேயொருசெமபடவனமீனபிடிததான. சநநியாசிசெமபடவனைபபாரததுநீயெபபோகரையேறுவாயெனறான. ஐயாயெனபறிநிரமபினாலகரையேறுவேனெனறான.


1826-ஆம வருடம் (ஆம், 1926 இல்லை, 1826! - அதாவது கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்!) அப்போதைய சென்னை தமிழ் சங்கத் தலைவராக இருந்த தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட கதாமஞ்சரி என்று நூலின் முதல் கதை இது.


தற்போதைய எழுத்துருக்களின் உபயோகத்தால் படிப்பதற்கு ஓரளவு சுலபமாக இருக்கிறது. அந்தக் கால அச்செழுத்துகளோடு படிக்க சற்று கடினமாகவே இருந்தது எனக்கு.


சுருக்கமாக (அல்லது விளக்கமாக) கதை இதுதான்: எந்த உயிரையும் கொல்லாத (அல்லது உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க விரும்பாத) சந்நியாசி ஒருவன் ஒரு ஏரியின் கரை மேல் நடந்துகொண்டிருக்கிறான். அவனுடைய பார்வை ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு செம்படவன் (மீனவன்) மேல் விழுகிறது. சுதந்திரமாக நீந்தும் மீன்களுக்கு எமனாக அவன் இருப்பதைக் கண்டு, அப்பா நீ (இந்த வேலையை விட்டு) எப்போது கரை ஏறுவாய்? எனக் கேட்கிறான். அதற்கு அந்த மீனவன். ஐயா, எனது பறி (பிடித்த மீன்களைப் போட்டுவைக்கும் கூடை) நிரம்பினால் நான் கரை ஏறிவிடுவேன் என்று பதிலளிக்கிறான். (அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை என் விளக்கம்). மீண்டும் ஒரு முறை முதல் நான்கு வரிகளைப் படித்துவிடுங்கள்.


இவ்வளவுதான். நான்கே வரிக் கதை. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று இந்தக் கதையைப் படித்ததிலிருந்து மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.


சந்நியாசி மீன்களின் துன்பம் எப்போது தீரும் என்கிறானா?


மீனவன், சந்நியாசி என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும்...தன் கூடை நிரம்பும் வரை தன் வேலை தொடரும் என்று உணர்த்துகிறானா?


அல்லது (ஒருவேளை) சந்நியாசிக்கு மீன் வேண்டுமானால் அவன் கூடை நிரம்பும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறானா?


சந்நியாசி மீன்களுக்காக பரிதாபப்படுவது சரியா? மீன் பிடித்து விற்கவில்லையென்றால் மீனவனின் குடும்பத்தினர் வயிறு காயாதா? அது துன்பமில்லையா? ஆகையால் சந்நியாசி கேட்பது தவறா?


எப்போது முடிக்கவேண்டும் என்று அறிந்தபின்கே காரியத்தில் இறங்கவேண்டும் என்று சந்நியாசி தன் கேள்வி மூலம் குறிப்புணர்த்துகிறானா?


அல்லது வயிறு நிரம்பவேண்டி (அதிக அளவில் உற்பத்தியாகும் சிற்றறிவின) உயிரைப் பறிப்பது பாவமில்லை. பறி நிரம்பினால் கரையேறிவிடுவேன், நிரம்பியதற்கு மேலும் பிடிக்கமாட்டேன் என்று செம்படவன் சந்நியாசியிக்கு பாடம் புகட்டுகிறானா?


அல்லது அவன் ஒரு சித்தனா? எந்நேரமும் எதையோ தேடும் உள்ளத்திற்கு தேடுவது கிடைத்து சிந்தை தெளிந்துவிட்டால் அதன்பின் கரையேறுவது எளிது என்று சூட்சுமம் உணர்த்துகிறானா?


சும்மா இருக்கிற மனதை இந்த மாதிரி ஒரு கதை தூண்டில்போட்டு இழுக்கிறதே!


இந்தக் கதையில் என்னைக் கவர்ந்தது பறி என்னும் சொல். அகராதியில் தேடினால் மீன்பிடிக்குங்கருவி என்ற பொருள் காணப்படுகிறது. பறிபோட, பறிவைக்க, பறிபின்ன, பறிமுடைய என்னும் வார்த்தைகள் பறி என்பது இன்னும் உபயோகத்தில் இருப்பதைக் காட்டுவதாகவே தோன்றுகிறது. நகரத்தில் வாழும் நமக்கு எலியைப் பிடிக்க '"பொறி'' வைத்துதான் பழக்கம்.


சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரம் என்ற சுற்றுலாத் தலத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு இடுப்பளவு தண்ணீரில் மீனவர்கள் ஒரு கையில் ஒருபுறம் அகன்ற பெரிய வாயும் மறுபுறம் வலை அல்லது வலைபோல் குச்சிகளால் மூடப்பட்ட குறுகிய வாயுடைய கூடை போன்ற பொறிகளை நீரின் வாட்டத்திற்கேற்ப வைத்துக்கொண்டு தண்ணீரில் பொறுமையாக அமர்ந்துகொண்டு மீன்கள் மாட்டுவதற்காக காத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். முதலில் அவர்கள் நெஞ்சளவு நீரில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்றே நினைத்தேன். அவர்கள் எழுந்தபின்புதான் இடுப்பளவைவிட குறைந்த ஆழம் கொண்ட தண்ணீரில் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் என்பது விளங்கியது.


பறிக்கு வருவோம். இந்த மீன்பிடிக்கும் பொறி(device, contraption) தான் பறியாகியதோ? அல்லது மீன்களின் உயிரைப் பறிப்பதாலோ?


எது எப்படியோ, முற்றுப்பெறாத இந்த நான்கு வரிக்கதை என் சிந்தையைப் பறிகொண்டதென்னவோ உண்மை!



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home