Tuesday, August 4, 2020

நகை


கோபாலன் மணியின் உற்ற நண்பன். வேறுவேறு வகுப்புகளில் படித்தாலும் ஒரே பள்ளி என்பதனாலும் இரண்டு தெரு மட்டுமே தள்ளி வசித்ததனாலும் ஒன்றாகவே பள்ளிக்குப் போவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள். மணியின் வீடு தாண்டிதான் விளையாட்டு மைதானம் என்பதால் கோபாலன் எப்போதும் மணி யின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அவனுடன் விளையாடச் செல்வான். மற்ற நண்பர்களும் அதுபோலவே மணியின் வீட்டில் முதலில் ஆஜராகி பின்னர் அங்கிருந்தே மைதானத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மணியின் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் மணியின் நண்பர்களைத் தெரியும். அதுபோலவே நண்பர்கள் அனைவரும் மணியின் வீட்டில் உள்ளோருடன் நன்கு பழகுவார்கள். ஆனால் மணியின் வீட்டில் ஒன்று மாத்திரம் அவர்களுக்குப் புரியவில்லை. அவனுடைய வீட்டில் இரண்டு அம்மா. மணிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இந்த நால்வரின் தாய் தங்கம். தங்கத்தின் அக்கா ஷண்பகத்தையும் அவர்கள் அம்மா என்றே அழைத்தனர். யாரைக்கேட்டாலும், ஆமாம், எங்களுக்கு தங்கம்மா, ஷண்பகம்மா என்ற இரண்டு அம்மாக்கள் என்றே கூறினர். ஷண்பகத்தை முதலில் மணந்த மணியின் தந்தை, அவளுக்கு வெகுநாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாததால் பின்னர் அவளுடைய தங்கையான தங்கத்தையும் மணந்தார், அவளுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அக்காவும் தங்கையும் ஒரே கணவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதன் நெளிவு சுளிவுகள் எல்லாம் புரிபடாத சிறு வயதில் இருந்தே மணியின் நண்பர்கள் பழகி வந்ததால் இரண்டு அம்மாக்கள் என்பது வித்தியாசமாகத் தெரியாமல் எல்லாம் சுமுகமாகவே இருந்தது.

நாளடைவில் பள்ளிப்படிப்பு முடிந்து பாதைகள் மாறி வேலை வேறுவேறு ஊர்களில் என்றானபிறகு கோபாலனுக்கும் மணிக்குமான நேரடித் தொடர்பு சற்று குறையத் தொடங்கி, பின்னர் முற்றிலுமே நின்று போனது. எப்போதாவது சாலையில் நடந்து செல்லும்போதோ வண்டியில் போகும்போதோ பார்க்கும்போது எதிர்ப்பட்டால் ஓரிண்டு நிமிடம் நின்று பேசுவார்கள். போகப்போக அதுவும் குறைந்து கடக்கையில் வெறும் கையசைப்பதோடு சரி.

ஒரு நாள் கோபாலனின் தந்தை இறந்துபோனார். விசாரிக்க வந்த மணியுடன் உரையாடிக்கொண்டிருந்த கோபாலன், பேச்சு வாக்கில் அனைவரின் முன்னிலையிலேயே, மணி, உன்னுடைய அப்பா மற்றும் அம்மாக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டுவிட்டான். மணி முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் கோபாலன் கேட்டவுடனேயே அருகில் இருந்தவர்களில் சிலர் சிரித்தது அவனை காயப்படுத்தியிருக்கவேண்டும். அவன் முகம் சற்று இறுகியது. சட்டென்று விசாரிப்பதை முடித்துக்கொண்டு அங்கிருந்து விலகிவிட்டான். துக்கம் விசாரிக்க வந்த இடத்திலிருந்து சொல்லாமல் கிளம்புவதுதான் வழக்கம் என்பதனால் கோபாலன் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதற்கப்புறம் மணியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் கோபாலனைக் கண்டுகொள்ளாமலேயே சென்றான். ஆரம்பத்தில் வித்தியாகமாகத் தோன்றினாலும் நாளாக நாளாக வாழ்க்கையின் மற்ற அவசரங்களில் மூழ்கும்போது இது சகஜம்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான் கோபாலன்.

ஒருநாள் கோபாலன் வாழ்வில் பூகம்பம் தாக்கியது. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. மனைவியும் குழந்தைகளும் அவளுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். தனியாக இருந்தவன் காலையில் வாசலில் உட்கார்ந்து தினசரி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும்போது ஐந்தாறு பேர் கொண்ட ஒரு சிறு கூட்டம் அவன் வீட்டு வாசலில் நின்று மறைந்த அவன் தந்தையின் பெயரைச் சொல்லி விசாரித்தார்கள். இந்த வீடுதான், வாங்க என்று வெகுளியாக வரவேற்றான் கோபாலன். வந்தவர்கள், அதெல்லாம் இருக்கட்டும், நீங்கதான் அவர் மகனா? இதுதான் அவர் வீடா, எவ்வளவு ஏரியா? என்று அடுக்கடுக்காக விசாரிக்கவும், அந்தக் கூட்டத்தில் சிலர் பிரிந்து அவன் வீட்டைச் சுற்றிப்பார்க்கவும் செய்தனர்.

கோபாலனுக்கு கோபம் வந்தது. யார் நீங்க, என்ன அடாவடி பண்ணறீங்க, என்ன வேணும் சொல்லுங்க… என்று சற்று உரத்த குரலில் அதட்டினான். அந்த நேரம் பார்த்து வெளியில் சைக்கிளில் அவன் வீட்டைத் தாண்டிக்கொண்டிருந்த மணி சைக்கிளை நிறுத்தி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதுபோல் உள்ளே நோட்டம் விட்டான்.

வந்தவர்களில் ஒருவன், நிதானமா பேசுங்க தம்பி, நாங்க சும்மா வரல்ல..அடாவடி பண்ணினது உங்க அப்பா… அதுக்கு நியாயம் கேட்டுத்தான் வந்திருக்கோம்… என்றான்.

என்னது? எங்கப்பாவா? அவர் செத்துப்போய் மூணு மாசம் ஆகுது தெரியுமா உங்களுக்கு? என்று மீண்டும் கோபத்துடன் கேட்டான் கோபாலன்.

தெரியும் தம்பி… அவருக்க நீதான் வாரிசுன்னும் தெரியும்… அதுதான் வந்திருக்கோம்… என்றான்.

என்ன சொல்றீங்க… எனக்கு ஒண்ணும் புரியல்லியே… என்றான் கோபாலன்.

தம்பிக்கு ஒண்ணும் தெரியாதாம் பாவம்… நீ சொல்லு ராஜூ என்று அவன் கூட்டத்திலிருந்த இன்னொருவனைத் தூண்டினான்.

பயப்படாதே தம்பி… இப்படி வா… உக்காரு என்று ராஜூ என்பவன் கோபாலனை கையை இழுத்து உட்காரச் சொன்னான். கையை உதறிய கோபாலன், இது என் வீடு...நீ என்னை உட்காரச் சொல்ல வேண்டாம்… வந்த விஷயத்தைச் சொல்லு என்றான்.

ராஜூ தன் சட்டைப்பையிலிருந்து நடு வயதைத் தாண்டிய பெண் ஒருத்தியின் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தான். இது யாரு தெரியுதா உனக்கு? இது எப்பனாச்சும் இங்க வந்திருக்குதா? என்று கேட்டான்.

கோபாலனுக்கு அந்தப் பெண்ணையும் தெரியவில்லை.. ஒன்றும் புரியவும் இல்லை. இல்லையே. எனக்கு இவங்களைத் தெரியாது. யார் இவங்க என்ற அப்பாவியாய்க் கேட்டான்.

சொல்றோம்…. சொல்றோம்…. அதுக்குத்தானே வந்திருக்கோம்… டேய் சீனு..போய் கூட்டியாடா அதை… என்று முதலில் பேசியவனுக்கு ஆணையிட்டான் ராஜூ. சீனு என்பவன் போய் தெரு முனையில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை அழைத்து வந்தான். கோபாலனைப் பார்த்தவுடனேயே அந்தப் பெண் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவுங்களப் போலவே இருக்கீங்க தம்பி… நீங்க தான் எனக்கு நியாயம் சொல்லணும்… என்று விசும்பத் தொடங்கினாள்.

பதறிப்போய்விட்டான் கோபாலன். சட்டென்று கையை உதறிக்கொண்டு, என்னம்மா இதெல்லாம்… என்ன நடக்குது இங்கே… இதுக்கும் எங்கப்பாவுக்கம் என்ன சம்மந்தம்? என்று அவசர அவசரமாக கேள்விகளைத் தொடுத்தான்.

சீனுதான் பதிலளித்தான். இவங்க யாருன்னா கேக்குறே? இவங்களும் உன்னோட அம்மாதான் தம்பி… புரியலே? உங்கப்பாவுக்கு இவங்களும் பொண்டாட்டிதான்...அவர் போய்ட்ட சமாச்சாரம்கூட எங்களுக்குப் போனவாரம் தான் கெடச்சது.. என்னடாது…. மூணுமாசமா வரலையேன்னு அழுதிட்டிருந்தது இது..இப்பதான்தெரியுது அவரு இனிமே வரமாட்டார்ன்னு...அதான் இவளை இங்க உன்னோட பாதுகாப்புல விட்டுட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கோம் என்றான்.

கோபாலனுக்கு வியர்த்தது. சீனு சொல்வது உண்மையா? என்ன ஆதாரம்? உண்மை என்றால் எப்படி நமக்குத் தெரியாமல் போயிற்று? பொய் என்றால் என்ன தைரியத்தில் இவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்? அவன் தலையில் ஆயிரம் கேள்விகள் சுற்றின. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

சட்டென்று முதலில் வீட்டுக் கதவை மூடினான். மனைவி பிள்ளைகளுக்குத் இப்போது எதுவும் தெரிய வேண்டாம். பிறகுதான் நினைவுக்கு வந்தது அவர்கள் ஏற்கெனவே வீட்டில் இல்லை, நாளை காலைதான் வருவார்கள் என்று. முதலில் இவர்களை எப்படியாவது சமாளிக்க வேண்டும்… என்று நினைத்துக்கொண்டு.. இதப் பாருங்க… இதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது.. எங்கப்பா அப்படிப்பட்ட மனுஷனும் கிடையாது… நீங்க சொல்றதுக்கொல்லாம் என்ன ஆதாரம்? சாட்சி? இப்படியெல்லாம் மெரட்டினீங்கன்னா நான் என்னோட ஆளுங்களையும் போலீசையும் கூப்பிட வேண்டியிருக்கும்… என்று பதிலுக்கு மிரட்டினான்.

தெரியும் தம்பி… நீங்க இப்படிப் பேசுவீங்கன்னு தெரியும்… அதனாலதான் எல்லா ஆதாரங்களையும் கொண்டு வந்திருக்கோம் பாருங்க…. என்ற ஒரு பழைய பையிலிருந்து சில காகிதங்களையும் போட்டோக்களையும் எடுக்க ஆரம்பித்தான் சீனு. போட்டோக்களைப் பார்த்த கோபாலன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அது அவனது அப்பாவேதான்! எப்படி அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை முற்றிலுமாக மறைத்தார்? எப்போதிலிருந்து இது? எப்போதெல்லாம் அங்கு இருந்தார்? மீண்டும் கண்ணில் தட்டாமாலை சுற்றியது.

சுதாரித்துக்கொண்டு, இத பாருங்க சார், இது என்னோட பொண்டாட்டி கொழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம்… மொதல்ல கொஞ்சம் வெளியில அந்தப் பக்கமா போய்ப் பேசலாம் வாங்க… என்று அவர்களை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

அதுவரை அங்கு நின்றிருந்த மணி இவர்கள் வெளியில் வருவதைப் பார்த்ததும் சட்டென்று சைக்கிளை நிமிர்த்தி அங்கிருந்து விலகினான். கிளம்பும்போது கோபாலனை புன்னகையுடன் ஓரமாக ஒரு பார்வை பார்த்துச் சென்றான். கோபாலனுக்கு மனதில் ஏதோ உறுத்தியது.

வந்தவர்களை சாலையின் முடிவில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி, பிரச்சினையை அலச அவகாசம் கேட்டான் கோபாலன். இத பாருங்க, நீங்க சொல்றது எனக்கு தலைல இடி விழுந்தா மாதிரி இருக்கு. என்னால எதுவும் சட்டுன்னு முடிவெடுக்க முடியாது. அதுவுமில்லாம, நீங்க சொத்து, பணம் ஏதாவது எதிர்ப்பார்த்தீங்கன்னா அதையும் மறந்திடுங்க. நாங்க இருக்கிறதோ வாடகை வீடு, அம்மாவுக்கு ஒடம்புக்கு வந்ததுலேர்ந்து ஏகப்பட்ட கடன்ல இருக்கோம். அதனால, இப்போ எதுவும் பண்ண முடியாது. நான் கொஞ்சம் யோசனை பண்ணித்தான் இதுக்கு முடிவு எடுக்கணும். உங்க முகவரி கொடுத்துட்டுப்போங்க… நானே வந்து என்ன பண்ணறதுன்னு சொல்றேன்.. நான் எங்கேயும் ஓடிப்போயிட மாட்டேன்… என்னை நம்புங்க… என்று ஒருவாறு சமாளித்து சமாதானப்படுத்தி அவர்களை நம்பவும் வைத்து அனுப்பிவைத்தான்.

அதன் பிறகு அவன் வெளியில் போகும்போதெல்லாம் எப்போதாவது எதிர்ப்படும் மணி, அவனைப் பார்த்து ஒரு புன்னகை மாத்திரம் வீசிவிட்டு செல்வதுபோல் தோன்றியது. அதுமட்டுமல்ல, அந்த விசித்திரமான, குரூரமான, ஏளனப் புன்னகையில் ஓர் அர்த்தமும் இருப்பதுபோல் பட்டது கோபாலனுக்கு.





0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home