புறநகர்ப் புழுக்கத்தில் புலம்பல்
வெய்யிலில் நின்றாலும் வெப்பத்தில் வியர்க்காமல்
வீசித்தணித்த குளிர் காற்றுதான் எங்கே?
முற்றத்தில் அமர்ந்து முனைந்தே படிக்கும்போது
முதுகை வருடிய மென்காற்றுதான் எங்கே?
இயற்கையே, ஏனிந்த வெப்பம்?
அழுத கண்ணாய் நீர்கோர்த்த மேகங்கள்
அசையாமல் அடம்பிடித்து அங்கேயே நின்றபடி
ஆதவனைக் கொஞ்சமும் கண்ணில் காட்டாமல்
அடைமழையாய்ப் பொழிந்த அந்நாட்கள்தான் எங்கே?
இயற்கையே, ஏனிந்த மாற்றம்?
ஒருமாத மழையை ஒரேநாளில் கொட்டி
ஒருகத்திரி வெய்யிலை அரையாண்டு நீட்டி
இன்பமான பருவங்களை இல்லாததாக்கி
இயற்கைச் சீற்றங்கள் காட்டி
அச்சுறுத்துகின்றாய்.
இயற்கையே, ஏனிந்தக் கோபம்?
அதோ தெரியுதுபார் அடுத்த வீடென்று
அரைகாத தூரத்துக் குடிசையைக் காட்டி
விளையாடிக் களிப்புடன் வெகுதூரம் நடந்த
வெட்டவெளிகள்தான் மாயமானது எங்கே?
இயற்கையே, ஏதோ புரிகிறது கொஞ்சம்.
பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்து பின்
பெரும் திரளாய் ஓரிடத்தில் திரண்டு
நகரம் என்ற நெருக்கடியில் நசுங்கி
நரகத்தையே கண்கூடாய்க் காண்கிறோம் இங்கே.
இயற்கையே, நீ என்செய்வாய் பாவம்?
சுயநல வேகத்தில் இயற்கையை மறந்து
வருவாய் மோகத்தில் வரம்புகள் மீறி
நாகரிக தாக்கத்தில் தன்நிலை மறக்கும்
பாதக மனிதனை ஏன் படைத்தாய்?
உன் முடிவு எங்களிடமா? எங்கள் முடிவு உன்னிடமா?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home