Saturday, October 28, 2017

கரிசனம்


காலையிலிருந்தே எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தாள் என் பேத்தி.  சிறிய வயதுதான்.  ஆனால் மிகவும் உணர்ச்சி மிகுந்தவள்.  ஆசை எவ்வளவு அதிகமோ அதே அளவுக்கு கோபமும் அதிகம்.  ஆனால் சென்னை மழைபோல் ஐந்து பத்து நிமிடங்கள்தான்.

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை தன் தாய்வழித் தாத்தா வீட்டுக்கு வரும் வழக்கம்.  இன்றும் அதுபோல் வந்திருக்கிறாள்.  வந்ததிலிருந்து ஏதோ கோபம். எங்கே என்னுடைய பென்சில் பாக்ஸ்? போனவாரம் நான் விளையாடிய மாமி பொம்மை எங்கே? என்று மாற்றி கோபித்துக்கொண்டிருந்தரள். அதற்கேற்ப சமாதானம் செய்து சமாளித்துக்கொண்டிருந்தோம்.

இடையிடையே மற்ற வேலைகளும் நடக்கவேண்டும் அல்லவா?  முக்கியமாக உணவு.  அவளை சாப்பிட வைப்பதற்குள் எங்களுக்கு ஒரு நாள் முழுவதும் போய்விடும்.  எட்டு மணிக்கு எழுந்து ஒன்பதுக்கு பல்துலக்கி பால் குடித்தபின் உப்புமா ஊட்டி முடிக்கும்போது மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. என் மனைவிக்கோ மீண்டும் மதிய சமையல் செய்ய வேண்டுமே என்ற கவலை.  அவள் குளிக்கும் முன்பே பேத்தியையும் குளிப்பாட்டி விட்டால் ஒரு வேலையாவது முடியுமே என்ற எண்ணத்தில் எத்தனை முறை அழைத்தாலும் வராமல் போக்குக் காட்டிக்கொண்டேயிருந்தாள் என் பேத்தி.


சற்றே கோபத்துடன் ஏன் இப்படிப் படுத்துகிறாய் குட்டீ என்று சத்தம் போட்டவுடன் மீண்டும் கோபித்துக் கொண்டாள் பேத்தி.  கோபமாய் ஓடி பாட்டியின் அருகில் வந்தவள், உன் கையைக்காட்டு என்றாள்.  நேற்று மாலை சமைக்கும்போது எண்ணெய் சிதறி சிறிய காயம் உண்டாகியிருந்ததை ஏற்கெனவே அவளிடம் காட்டியிருந்தாள் என் மனைவி.  அந்தக் கையைக் காட்டியவுடன் அதை தட்டிவிட்டு மற்ற கையைப் பிடித்து இழுத்து இனிமேல் இந்த மாதிரி கோபமாய் அதட்டாதே என்று சொல்லிக்கொண்டே கிள்ளிவிட்டு ஓடி மறைந்தாள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home