Tuesday, February 26, 2019

பாத்திக்கும்மா


ட்டீ....வேஃபா....   ட்டீ.....வேஃபா...



சீனி மாமாவிடமிருந்து வாட்ஸப் மெஸேஜ் வந்திருந்தது.   மும்பை, போபால், ஹெளரா மற்றும் வாரணாசியில் இருந்த தன் அனைத்து உறவினர்களுக்கும் எழுதியிருந்தார்.



என்னடா..மறுபடியும் மாமாவோட லொள்ளா? என்று மும்பையிலிருந்த கணேஷ் வாரணாசியிலிருந்த தன் சித்தப்பா மகன் அருணிடம் புலம்பினான். அதேபோல் அனைவரும் அனைவரிடமும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டனர்.



விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை.  ஒரு ஆடியோ க்ளிப் அனுப்பியிருந்தார்.  அது என்னவென்று அவருக்குப் புரியவில்லையாம்.  உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்கள்.  அல்லது அனைவரும் வரும் சம்மர் வெக்கேஷனுக்கு என் வீட்டுக்கு நாலு நாள் வந்து தங்கி நீங்களே நேரில் கேட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.



ஒருத்தர் விடாமல் அனைவரும் மாற்றி மாற்றி கேட்டாலும் அது என்ன என்று யாருக்கும் புரியவில்லை.  ஒரு வயதான ஆண் தன் கனத்த, கரகரத்த குரலில் உச்சஸ்தாயியில் ட்டீ….வேஃபா (ஆங்கிலத்தில்  கிட்டத்தட்ட ddeee….. Wayfaa…..) என்று மறுபடியும் மறுமடியும் கத்திக்கொண்டிருந்தான்.  கிட்டத்தட்ட  மாமாவின் குரல் மாதிரி இருந்தது.  ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.



மாமாவின் வீடு பழைய வீடு, மிக விசாலமான இடத்தில் சுற்றி தோட்டமும் மரங்களுமாக நடுவில் சகல வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த பெரிய வீடு.   சமையலுக்கு ஆள் வைத்திருந்தார்.   அனைவருக்கும் வேளாவேளைக்கு காபி டிபன் சாப்பாடு அவர்களின் இஷ்டம்போல் கிடைத்தது.  எனவே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  மாமாவிடமிருந்து அழைப்பு வந்தாலே குழந்தைகள் போகலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.



மாமா மிகவும் நல்ல மனிதர்.  எலலோரிடமும் நன்றாகப் பழகி உறவுகளை அழுத்தமாக தக்கவைத்துக் கொண்டிருந்தார்.  சற்றே நகைச்சுவை உணர்வு மிகுதி.  கூடவே சற்று குசும்பும் வேறு.  எனவே திடீர் திடீரென்று இந்த மாதிரி ஏதாவது செய்வார்.  சரியாக பதில் சொல்லிவிட்டால் அத்தோடு விட்டுவிடுவார்.  மெத்தனமாக இருந்துவிட்டாலோ. ஒருத்தராவது சொல்லும்வரை அனைவரது உயிரையும் வாட்ஸப்பிலேயே வாங்கிவிடுவார்.  அதற்காகவே அனைவரும் (அலருக்குத் தெரியமால்) ஒன்றுசேர்ந்து அலசி ஆராய்ந்து அவர் கட்டாயமாக அடுத்த வாரம் வந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பதற்கு முன்பே எப்படியாவது கண்டுபிடித்து அவரிடமிருந்து தப்பி விடுவார்கள்.



தப்ப முடியாமல் மாட்டிக்கொண்ட அனுபவங்களும் உண்டு.  ஏண்டா, உங்களையெல்லாம் சின்ன வயசிலே எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா எடத்துக்கும் கூட்டிண்டு போயிருக்கேன், உங்க அப்பா அம்மா திட்டினாக்கூட பரவாயில்லேன்னு எத்தனை தடவை சினிமா சர்க்கஸ்ன்னு உங்களுக்கோசரம் என் பணத்தையும் நேரத்தையும் செலவழிச்சிருக்கேன்,  இப்போ என்னாலதான் வெளியே போக முடியல...நீங்களாச்சும் ஒரு ரெண்டு நாள் வந்துட்டுப் போனா சந்தோஷமா இருக்கும்னுதானே கூப்பிடறேன்...எனக்கோசரம் இதுகூட பண்ண முடியலயா உங்களுக்கு? என்று மூக்கை அறுத்தாற்போல் கேட்பார், கோபித்துக்கொள்வார்.



ஒருமுறை அனைவரும் கூடியிருக்கும்போது அவர்களே மாமாவிடம் சொல்லிவிட்டனர்.  மாமா முந்தையமாதிரி வாழ்க்கை இப்போ இல்லை. உங்களுக்கே தெரியும்.  குழந்தைகள் வளர்ந்திண்டு வராங்க.  லீவ் கிடைக்கறதெல்லாம் இனிமே கஷ்டம்.  எங்களுக்கும் ஆபீஸ் வேலையெல்லாம் ரொம்ப டைட்டாயிண்டேயிருக்கு.. என்றெல்லாம் காரணத்தை அடுக்கினார்கள்.



அதற்குத்தான் மாமா செக் வைத்துவிட்டார்.  நானென்ன ஒவ்வொரு வருஷமுமா வரச்சொல்றேன்?  மூணு வருஷத்துக்காவது ஒரு தடவ வாங்கன்னுதான் சொல்றேன்.  அதுலேர்ந்தும் தப்பிக்கனும்னா ஏதாவது புதிர் போடறேன்.  பதில் சொன்னா அந்த வருஷம் வேண்டாம்...ஆனா அடுத்த வருஷம் கட்டாயமா வரணும்….எனக்கும் வயசாயிண்டே இருக்கேடா….உங்களவிட்டா எனக்கு யார் இருக்கா?  என் சொத்துகூட எனக்கப்புறம் நீங்கல்லாம் எப்பவேணா இங்கே வந்து தங்கி அனுபவிக்கலாங்கற மாதிரி தான் எழுதியிருக்கேன். உங்களுக்கு இங்கே வரும்போது ஒரு பைசா செலவுகூட வைக்காமதான நான் பாத்துக்கறேன்?  எனக்கோசரம் இதுகூட செய்யக்கூடாதா என்று கண்ணில் நீர் முட்ட கெஞ்சினார்.



அப்போது சம்மதித்ததுதான்.  அதற்கப்புறம் கட்டாயமாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கொருமுறை அனைவரும் சேர்ந்து வந்து மாமாவையும் சந்தோஷப்படுத்தினர்.



குழந்தைகளுக்குக் குதூகலமாக இருந்தாலும் மாமா அந்த இரண்டு (அல்லது மூன்று) நாட்கள் சும்மா இருக்கமாட்டார்.  பழைய கதைகளை சொல்வதுபோல் ஆரம்பித்து அத்தனை வீட்டு ரகசியங்களையும் அனைவரின் முன்னமேயே போட்டு உடைத்து, தற்போதைய விவரங்களையும் துருவித் துருவிக் கேட்பார். 



ஏண்டா ராமா, இத்துணூண்டு மார்க்குக்கு உன் பையனுக்கு இந்த காலேஜில எப்படிடா எடங்கெட்சது?  ஏதாவது ரெகமெண்டேஷன் பிடிச்சியா இல்ல யாருக்காவது நெறய தண்டம் அழுதியா? என்று அனைவரின் முன் கேட்கும்போது ராமனுக்கு அவரை அறையலாம் போல் இருக்கும்.  இத்துணுண்டு மார்க்குன்னு இவருக்கு எப்படி தெரியும்?  தான் யாரிடமும் சொன்னதில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கையிலயே அருணை நோக்கி அடுத்த அஸ்த்திரம் பாயும்.



ஏண்டா அருண், போன மாசம் ஒம்பொண்டாட்டி இங்க வந்திருந்தாளாமே?  பாக்யா வீட்டுக் கல்யாணத்திலே யாரோ பார்த்திருக்கா, எனக்குத் தகவல் வந்தது. இவ்வளவு தூரம் வந்தவ இங்க ஒரு நடை வந்துபோக சரிப்படலையா? அவ மட்டும்தான் வந்தாளா இல்ல நீயும் கூட வந்திருந்தியா? என்பார்.  அவள் வந்ததென்னவோ வாஸ்தவம்.  ஆனால் அது அவளது தூரத்து சொந்தத்தில் கல்யாணம்.  மாமாவுக்குப் பதில் சொல்வதற்குமுன் ரகசியமாய் வைத்திருந்த அவள் பயணத்தைப் பற்றிஅவருக்கு யார் தகவல் கொடுத்தார்கள் என்றுதான் அருண் மனதில் கேள்வி ஓடும்.



பெண்களையும் அவர் விடுவதில்லை.  மைதிலி, என்னதான் சமையல்காரன் வெச்சிருந்தாலும் உன் மாமி மாதிரி ஒரு மாவடு போடத் தெரியலடி இவனுக்கு..கொஞ்சம் சொல்லிக்குடுத்துட்டுப் போயேன்… என்பார். இத்தனைக்கும் மாமியை இவர்களெல்லாம் பார்த்ததுகூட கிடையாது. அவளும் உச்சி குளிர்ந்து அவர் வேண்டுதலுக்கு செவிசாய்ப்பாள்.   சமையல்காரனுக்குத்தான் தெரியலேன்னா வீட்டுப்பெண் மைதிலிக்குக்கூட மாவடு போடத் தெரியலை என்று எல்லாரிடமும் மாமா சொல்லிக்கொண்டிருப்பதாகத் ஒரு மாதம் கழித்து வேறு யார் மூலமாகவாவது அவளுக்குத் தெரியவரும்.



பிரகாஷ் நாலு பிள்ளைங்களையும் திருப்பதி கூட்டிண்டு போய் மொட்டை போடணும்னு போன மாசம் வந்துபோனான்.  திருப்பதி போனானோ இல்லயோ தெரியல்ல...பின்னாடி தோட்டத்துக்குப்போனா அவனோட பசங்க அத்தனை மா, கொய்யா, நெல்லி மரத்துக்கும் மொட்டையடிச்சி விட்டுருந்தாங்க….என்று மகிழ்ச்சியுடன் நொந்துகொள்வார்.



கணேஷ் ஒருவாட்டி என்ன பண்ணான் தெரியுமோ...அத்தனை பேரும் வந்திருக்காங்கன்னு பட்சணம் வாங்கி தட்டுல நெரப்பிண்டு அவன்கிட்ட குடுத்து தட்டை காலி பண்ணுன்னு சொன்னா, அவன் அஞ்சே நிமிஷத்திலே அதிலிருந்த தட்டையையெல்லாம் தின்னுட்டு தட்டை காலி பண்ணிட்டேன்  அடுத்தது எதை காலி பண்ணனும் மாமா..ன்னு வந்து நிக்கறான் பாரு...நானே அசந்துட்டேன் என்று உரக்கச் சிரித்தார்.  கணேஷ் இன்னமும் அந்தக் கதை வரும்போதெல்லாம் அசடு வழிய வேண்டியிருக்கும்.



எனவே வாக்குக் கொடுத்த அவசியம் ஏற்பட்டாலொழிய மாமா வீடு என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்றே பெரியவர்கள் நினைத்தார்கள்.  தப்பிக்க என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார்கள்.  ஆனால் மாமா கெட்டிக்காரர்.  அவர் குழந்தைகள் மூலம் தான் நினைத்ததைச் சாதித்துக் கொள்வார். இப்போதுகூட அருணுடன் பேசும்போதே அவன் மகள் ஐஸ்ர்யாவிடம் தன் வீட்டில் பிறந்துள்ள ஐந்து பூனைக்குட்டிகளின் அழகை வர்ணித்துவிட்டார்.  அதிலிருந்தே அவள் குதித்துக்கொண்டிருக்கிறாள்.  ஹையா, நாம சம்மர்க்கு மாமா வீட்டுக்குப் போறோம்… என்று.



அவளிடமும் சொல்லிவைத்திருந்தார் மாமா.  இதோ பாரு ஐசுக்குட்டி...உங்கப்பா எப்படியாவது என் வீட்டுக்கு வர்றதை அவாய்ட் பண்ணனும்னு பாப்பான்.  அடுத்த வருஷம் நிச்சயமா போகாலாம்ணு பிராமிஸ் பண்ணுவான். அதுக்குத்தான் நான் ஒரு காரியம் பண்ணியிருக்கேன்.  வழக்கம்போல் குழப்பமாக அவனுக்கு ஒரு க்விஸ் அனுப்பியிருக்கேன்.  அதுக்குப் பதில் தெரியலேன்னா கண்டிப்பா எல்லாரையும் கூட்டிண்டு ரெண்டு நாள் இங்கே வந்துத்தான் ஆகனும்னு சொல்லியிருக்கேன்.  அவன்கிட்ட மாத்திரம் இல்ல….எல்லார்ட்டையும் சொல்லியிருக்கேன்.. அதனால எல்லாரும் வருவாங்க...கட்டாயம் நச்சுப் பண்ணிட்டேயிரு என்ன? என்று தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார்.



ராமன், அருண், மைதிலி, கணேஷ், சுகுமார் அனைவரும் மாமாவின் ஆடியோவை வைத்துக்கொண்டு விழித்துக்கொண்டிருந்தனர்.  தங்கள் உறவனர் மற்றும் நண்பர்களிடம்கூட ஷேர் செய்து பார்த்தனர்.  ஆனால் யாருக்கும் பதில் தெரியவில்லை.  சரி எப்படியும் இந்த வருஷம் இல்லாட்டி அடுத்து வருஷம் போய்த்தானே ஆகனும்?  அதுக்கு இப்பவே போய் வந்துவிடலாம் என்று முடிவெடுத்னர்.



மாமாவின் வீடு களைகட்டியது.  கீழே இரண்டு ரூம், மாடியில் மூன்று என ஐந்து ரூம்களையும் வெளியூர் உறவினர்கள் எடுத்துக்கொண்டனர்.  மாமா வழக்கம்போல் எந்நேரமும் ஹாலில் உள்ள அவரது தாத்தா கால ஓய்வு நாற்காலியில் இரண்டு கால்களையும் விரித்தபடி சாய்ந்து கொண்டிருந்தார். இரவானால் பூஜை அறைக்கு அருகில் உள்ள அவரது படுக்கையறைக்குப் போய்விடுவார்.



இருக்கும் இரண்டு நாட்களில் யார்யார் எங்கெங்கு போய்வருவது என்று அவரவர் திட்டம் போட்டுக்கொண்டிருக்க, மாமா மாத்திரம் எங்க வேணா போய் வாங்க ஆனால் கட்டாயம் சாயந்திரம் ஏழு மணிக்குள்ள வந்திடனும், நான் படுக்கற வரைக்கும் என்னோடதான் பேசிண்டிருக்கணும் என்று ரூல் போட்டு விடுவார்.  அனைவருக்கும் அது செளகரியமாகவும் இருந்தது. காலை முதல் வெளியில் சுற்றிவிட்டு வந்த அலைச்சல் எல்லாம் மறக்கும்படியாக அனைவரும் சேர்ந்து மாமாவுடன் கலகலவென்று பேசிக்கொண்டே சூடான சுவையான  ஹோம்-மேட் டின்னரும்முடித்துக்கொள்வதென்றால் கசக்குமா என்ன?



சாயந்திரமும் வந்தது.



அப்புறம், மாமா, சொல்லுங்க - இந்த ரெண்டு வருஷத்தில யார்யாரையெல்லாம் கட்டாயமா வரவெச்சீங்க - என்ன விஷயமெல்லாம் பேசிக்கிட்டீங்க? - இது கணேஷ்.



எனக்கு எத்தனபேர்டா இருக்கா?  - என் தங்கச்சிங்க கெளசி, துளசி  ரெண்டுபேர் - அதான் இப்போ வந்திருக்கிற உங்களோட ஃபேமிலி, என்னோட பெரியப்பா கோதண்டம் அப்புறம் என்னோட சித்தி விசாலம் இவங்களோட பசங்க ஃபேமிலி அவ்வளவுதான்.  நீங்களும்தான் பாவம் வளர்ந்தபெறகு எங்கெங்கெங்கயோ செட்டில் ஆயிட்டீங்க.  அவங்கவங்க குடும்பத்தை ஒண்ணா சேத்துவெச்சுப் பாக்கறதுல எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்.  அதனாலதான் மெனக்கெட்டு உங்களையெல்லாம் இங்க வரவெக்கறேன்.



போன தடவ நீங்க வந்து போனபிறகு கோதண்டம் பசங்க யாரும் வரல்ல.  என்னமோ சொத்துத் தகராறுல பிடிவாதமா இருந்துண்டு ஒருத்தனை ஒருத்தன் பாக்காம சண்டை போட்டுண்டு இருக்கானுங்க.  அதுக்கு விசாலம் கொழந்தைங்க உங்களைமாதிரியே தங்கம்.  அத்தனைபேரும் ஒண்ணா வந்து இருந்து ஊர்க்கதையெல்லாம் ஷேர் பண்ணிண்டு என்னையும் விசாரிச்சுட்டுப் போனா.  விசாலம் பேரன் பேத்தியெல்லாம் இப்போ அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு உலகத்தில எல்லா இடத்துக்கும் போய்வந்துண்டு இருக்கா.  அந்தக் கதையெல்லாம் நேர்ல கேக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?



வெளிநாடு போனாதான் ஒசத்தின்னு நான் சொல்லல.  வெளி நாட்டுக்குப் போனாலும் நம்ம சம்பிரதாயத்தை ஒண்ணுவிடாம ஃபாலோ பண்ணி அங்க இருக்கிறவாகிட்ட நல்ல பேர் வாங்கறா பாரு, அதைச் சொல்லணும்.  அதுக்கோசரம் இங்கேயே இருக்கிறவ தாழ்த்தின்னும் நான் சொல்லல.  இப்ப உங்க பசங்களையே எடுத்துககோங்க - அப்ப வந்து நம்ம ராமன் பையன் ரமேஷுக்கு எப்படி என்ஜிநியரிங் காலேஜ் கெடச்சதுன்னு கேட்டேன், வாஸ்தவம்.  ஆனா இப்போ பாரு - அவன் டாப் கிளாஸ்ல பாஸ் பண்ணி அமெரிக்காகாரன் கம்பெனியிலே வேல குடுத்தும்கூட இவன் வேணான்னு சொல்லி நம்ம நாட்டுக்கோசரம்தான் உழைப்பேன்னு சொல்றான்.  எனக்குப் புல்லரிச்சுப்போச்சு போ.  ..என்றதும் ராமன் முகத்தில் புன்னகை அரும்பியது.



இவ்வாறாக பல விஷயங்கள் அலசப்பட்டபின் தான் அருணுக்கு மாமா அனுப்பிய ஆடியோ ஞாபகம் வந்தது.  மாமா, கேக்க மறந்தே போயிட்டேம்பாருங்கு.  அந்த ஆடியோ ஒண்ணு அனுப்பியிருந்தீங்களே, அது என்ன மாமா...நாங்கல்லாம் மண்டைய ஒடச்சும்கூட எங்களுக்குத் தெரியல..என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கதவைத் தட்டிக்கொண்டு பிச்சுமணி உள்ளே நுழைந்தார்.



வாங்கோ பிச்சுமாமா எப்படியிருக்கீங்க என்று அனைவரும் கேட்டதும் புன்னகையுடன் பதிலளித்தார் பிச்சுமாமா.  உங்க சீனிமாமா இருக்கும்போது எனக்கென்ன குறை?  இத்தனைக்கும் நான் சொந்தம்கூட இல்ல.  அவனோட ஆறு வருஷம் ஹைஸ்கூல்ல படிச்ச கிளாஸ்மேட் மாத்திரம்தான்.  ஆனா அவன்தான் உறவு நட்பு விட்டுப்போகக்கூடாதுன்னு என்னை விடாம பிடிச்சிண்டிருக்கான்.  நீங்கல்லாம் வர்றதைக்கூட அவன்தான் சொன்னான். அதான் பாக்க வந்தேன்.. என்றார்.



அதுசரி பிச்சுமாமா, இதோ பாருங்க மாமா எங்களையெல்லாம் ஒரே ஒரு கேள்வி கேட்டு பைத்தியமாக்கிண்டிருக்கார்.  உங்களுக்காவது பதில் தெரியறதா பாருங்க… என்று சொல்லியபடியே மைதிலி அவளது மொபைல் போனை எடுத்து அந்த ஆடியோவை ஒலிக்க வைத்தாள்.



.. ட்டீ…...வேஃபா…..         ட்டீ…….வேஃபா…….



இரண்டு முறை கேட்ட பிச்சுமாமா, இதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு,ஆனா சரியா தெரியலியே…. என்று யோசிக்க ஆரம்பித்தார்.  நல்லா ஞாபகம் பண்ணுடா பிச்சு, உனக்கும் எனக்கும் இது ரொம்பப் பிடிச்ச விஷயம்… இதை வெச்சு நாம் சின்ன வயசில எல்லாரையும் சிரிக்க வெச்சிண்டிருந்தோம்… என்று உசுப்பிவிட்டார் மாமா.



சிறிது நேரம் நெற்றியைக் கசக்கியபடியே உட்கார்ந்திருந்த பிச்சுமாமா பிறகு தலையை பக்கவாட்டில் ஆட்டியபடியே தெரியலடா சீனி...நீயே சொல்லிடு என்றார்.



சரி, இதுவாவது ஞாபகம் வருதா பாரு என்று தொண்டையைச் செருகியபடியே பொய்யி…..பொய்யி…..என்றார்.    ஏய் இது அந்த அரிசிப்பொரிக்காரன் தானே, பொரிமூட்டையை தலையில் வெச்சுண்டு வெறுமே பொய்யி பொய்யின்னு கத்திண்டிருப்பான்.  நமக்குப் புரியாம வெளில போய் பார்த்தபின்தான் தெரியும் அரிசிப்பொரி..ன்னு கத்தறதுக்குப் பதிலாகஅவன் அரிசியை முழுங்கிட்டு பொரியை மாத்திரம் பொய்யி….பொய்யின்னு வித்துண்டிருப்பான்.. என்றார்.



கரெக்ட்...பரவாயில்லை கண்டுபிடிச்சிட்டியே...அதே மாதிரிதான் இதுவும்..இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணு என்று மீண்டும்  ட்டீ…..வேஃபா என்று நீ...ட்டி கூவினார்.   அப்பவும் தெரியலடா என்று பிச்சுமாமா கூறியவுடன், சரி நாம சின்ன வயசில ஸோன்பப்படி சாப்பிடது ஞாபகம் இருக்கா? என்றார்.  சட்டென்று பிரகாசமானார் பிச்சுமாமா….டேய்….அதுதானா இது...என்று சொல்லி கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்தார்.  அவர் சிரிப்பதைப் பார்த்து குழந்தைகள் எல்லாம் சிரிக்கத் தொடங்கினர்.  அவர்கள் சிரிப்பைப் பார்த்து அனைவரும் சிரிக்க, மாமா இடைமறித்து, சிரிச்சதெல்லாம் போதும் சொல்லுடா என்றார்.



சிரிப்தை ஒருவாறு அடக்கிக்கொண்ட பிச்சுமாமா...ஒண்ணுமில்லம்மா… அந்தக் காலத்திலே ஹார்லிக்ஸ் போன்வீட்டா, வாசனை எண்ணெய், டானிக் மருந்தெல்லாம் கண்ணாடி பாட்டில்ல தான் விப்பாங்க.  எல்லார் வீட்டிலேயும் எப்படியும் ஆறுமாசத்துக்கு கொறஞ்சது இருபது பாட்டிலாவது சேந்துடும்.  அத்தோடு பழைய நியூஸ் பேப்பரையும் வாங்கறதுக்கு மூணுசக்கர வண்டியிலே ஒருத்தன் சுத்துவான்.  .கிளாஸ் பாட்டிலை புட்டின்னு சொல்லுவாங்க..நீங்ககூட சோடாபுட்டி கண்ணாடின்னு கேள்விப்பட்டிருப்பீங்க….அவன்தான் புட்டியையும் பேப்பரையும் வாங்கறதுக்கு ஸ்டைலா  ட்டீ….வேஃபா…. ன்னு உரக்க கத்திண்டே போவான்.   ரொம்ப கொஞ்சமா பாட்டிலோ பேப்பரோ போட்டா அதுக்கு காசு தராம பெரிய பாட்டில்ல ஸோன்பப்படி வெச்சிருப்பான்...அதுலேந்து கொஞ்சமா எடுத்துத் தருவான்...அதுக்கோசரமே நானும் உங்க மாமாவும் கெடைக்குற பாட்டிலெல்லாம் கொஞ்சகொஞ்சமா அவன் கிட்ட வித்து ஸோன்பப்படி சாப்பிடுவோம்…  அப்பல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்..ஞாயித்துக்கெழமை ரெண்டு மணியானாலே நாங்களே ட்டீ… வேஃபான்னுதான் பாடிட்டிருப்போம்… .என்று பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார்.



பாத்திக்கும்மா….என்று திடீரென்று முரளியின் குழந்தை ஷ்யாம் உரக்கக் கத்தினான்..   எல்லோரும் திடுக்கிட்டு என்னாச்சு என்னாச்சு என்று பதறினர்.  ஒண்ணுமில்லே தாத்தா...டின்னருக்கு சப்பாத்தி குருமா பண்ணினா எனக்குப் பிடிக்கும்னு சொன்னேன்..என்று அவர்களை கிண்டலடித்தான் குழந்தை ஷ்யாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home