Saturday, November 18, 2017

மீண்டும்.... ஒரு காய்கறிக் கதை

அன்று காலையிலேயே கவனித்தேன்.  பளபளவென்று தங்க நிறத்தில் உடல் மின்ன பச்சை நிறச் சேலை கட்டிக்கொண்டு நீளவாக்கில் வெட்டப்பட்ட இரண்டு பறங்கித் துண்டுகள் பார்வையைக் கவரும் விதமாக வாசற்கதவின் அருகே இருந்த திண்ணையில் வைக்கப்பட்டிருந்ததன. வழக்கமாக அங்கு அகத்திக்கீரைக் கட்டுகள்தான் இரண்டோ மூன்றோ இருக்கும். 

எண்பதை நெருங்கும் என் அம்மாவுக்கு இது ஒரு முக்கியமான வேலை.  விடியற்காலையில் எழுந்து பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு பின்னர் வாசலில் உள்ள துளசிமாடத்திலும் ஒரு அகல்விளக்கை வைத்துவிடுவாள்.  .

அடர்த்தியான பச்சை இலைகளால் ஆன தன் கேசத்தை இதமாக வருடும் இளங்காற்றில் கோதிவிட்டுக்கொண்டு அகல் விளக்கில் மின்னும் வைரப் பொட்டுடன் துளசி மாதா காட்சியளிப்பாள்.  விடீந்தும்விடியாத வைகறையில் அரை வெளிச்சத்தில் அதைப் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்

பின்னர் சற்று விடிந்தவுடன் வரிசையாக பசுமாடுகள் வரத்தொடங்கும்.  மாடுகளும் மனிதர்கள் போலவே ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் வலம் வரும். ஒன்று பரமசாதுவாக இருக்கும்.  இன்னொன்று சற்று முரடாக இருக்கும்.  கன்றுடன் வரும் பசு முதலில் கன்றுக்கு உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு பின்னர் நாம் நீட்டும் அகத்தித் தழையைப் பற்ற வரும். எல்லாம் ஒன்றாக வந்தால் அவற்றுக்குள் சண்டையும் நடக்கும்.

இவைகளுக்கு சற்றேறக்குறைய அதே நேரத்தில் காய்கறி விற்பவர்கள் தள்ளுவண்டியிலோ சைக்கிளிலோ அல்லது கூடையிலோ வைத்துக்கொண்டு வருவார்கள். அவர்களிடம் பேரம் பேசி காய்களை வாங்குவது அம்மாவின் வழக்கம்.  உண்மையில், அப்படி வாங்குவதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  அவர்கள் விலையையும் குறைக்காமல் தாங்கள் கொண்டுவருவதை என் அம்மாவின் தலையில் கட்டிவிடுவதைத்தான் நான் தினமும் காண்கிறேன்.

சரியாக நான் ஆபீஸுக்குப் புறப்படும் நேரத்தில்தான் இவையெல்லாம் நடக்கும்.
தோட்டத்துக் கத்திரிக்காயம்மா…ராத்திரி பறிச்சு இப்போ கொண்டு வர்றோம்..ஒரு விதை இருக்காது..வெண்ணெய் மாதிரி இருக்கும் ..வாங்கிக்கோ என்பார்கள்.  அதை நம்பி அம்மாவும் வாங்கிவிடுவாள்.  பெரும்மாலும் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் நாம் மார்க்கெட் சென்று தரம் பார்த்து வாங்கும் அளவுக்கு இவர்களிடம் இருப்பதில்லை என்பதே என் கருத்து. என்றாலும் அவளுக்குத் திருப்தி..எனக்கும் ஒரு வேலை மிச்சம் என்ற கணக்கில் இதற்குப் பழகியிருக்கிறோம்.  அவள் அப்படி வாங்கும் பொருட்கள் திண்ணை மேல் இருக்கும்.  நான் புறப்பட்டுச் சென்றவுடன் கேட்டை மூடிவிட்டு அவைகளையும் உள்ளே கொண்டு செல்வாள் அம்மா.

இந்தப் பழக்கம் மாலையில் ஸ்வாமிக்கென்று பூ வாங்குவதிலும் தொடர்ந்த்தது.  முதல் நாள் மாலை வாங்கும் பூவெல்லாம் பிரிட்ஜில் பாலுக்குப் பக்கத்தில் அடுத்தநாள் காலை வரும் பால் பாக்கெட் வைக்க இடம் இல்லாத அளவுக்கு அடைத்துக்கொண்டிருக்கும்.  கேட்டால் ஏதாவது ஒரு காரணம் சொல்வாள்… இன்று வெள்ளிக்கிழமை, நாளை பிரதோஷம்.. என்று ஏதாவது ஒரு விசேஷத்தைக் காட்டிவிடுவாள்.

கதைக்கு வருவோம். அன்று விடுமுறையாதலால் ஆபீஸ் செல்லும் அவசரம் இல்லை.  எனவே அந்த அற்புதமான பறங்கிக்காய் துண்டுகளை எடுத்துக் கொண்டு வீட்டின் உள் சமையலறையில் வைக்கலாம் என்று பார்த்தால் அங்கு ஒரு முறத்தில் ஏற்கெனவே நேற்று வாங்கிய கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் பரத்திவைக்க்ப்பட்டு இருந்தது.  சரி ஃப்ரெஷ்ஷாகத்தானே இருக்கிறது நாளைக்கு உபயோகித்துக்கொள்ளலாம் என்று  பிரிட்ஜுக்குள் வைக்க கதவைத்திறந்தால் அங்கும் காய்கறிப்பெட்டி முழுவதுமாக காரட், பீட்ரூட், செளசொள, போன்றவை நிரப்பிவைக்கப்பட்டிருந்தன.  இதற்கெல்லாம் சிகரமாக ஆப்பிரிக்கப்பெண்ணின் தலைமுடிபோல் காராமணி எல்லா திசைகளிலும் நீண்டு வழிந்துகொண்டு இருந்த்து.

என்னால் பொறுக்க முடியவில்லை.  ஏம்மா இப்படி வீடு நிறைய காய்கறி இருக்கும்போதே இன்னும் வாங்கிண்டே இருக்கே? என்ற கேட்டால் நீதானேடா சொன்னே பறங்கிக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு.. அவ நல்லதாத்தான் கொணந்து தரா..அதனால் தான் வாங்கறேன்… என்றாள்.  சரிசரி இனிமேல் இது எல்லாம் செலவழிஞ்சபிறகுதான வேற வாங்கனும்னு வெச்சிக்கோ என்று அதட்டி அறிவுறுத்தியதற்கு அவளும் சரிசரியென்று அவசரமாகத் தலையசைத்தாள் அம்மா. 

இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.  பிரிட்ஜில் மற்றும் வெளியில் இருந்த காய்கறிகள் ஒவ்வொன்றாக காலியாகத் தொடங்கின.  இப்போது காய்கறிக்குப் பதிலாக பழங்கள் அம்மாவின் திவானை அலங்கரிக்கத் தொடங்கின (அவள் திவானை உட்காருவதற்கோ படுப்பதற்கோ உபயோகிப்பதில்லை – தன்னுடைய அன்றைய உடைகள் மற்றும் இந்த மாதிரிப் பொருட்கள் வைத்துக்கொள்ளத்தான் பயன்படுத்துகிறாள்.)
என்ன செயவது? மனிதன் தன் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான்.  ஏதோ அவள் இஷ்டத்திற்கு இருந்துகொள்ளட்டும் என்று இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தோம்.

மற்றொருநாள் இரவு பொறியலுக்கு காரட் அரிவதற்காக பிரிட்ஜைத்திறந்து காரட்டை எடுக்க கையை நுழைத்தால் கையெல்லாம் மஞ்சள் நிறத்தில் வழவழப்பாக ஏதோ ஒட்டியிருந்தது.  சட்டென்று என்னவென்று தெரியவில்லை என்பதால் காய்கறி வைக்கும் பெட்டியையே வெளியில் இழுத்துப் பார்த்தால்தான் தெரியும் என்று வெளியே எடுத்தால்…. அன்று இளமையாய் அழகாய்த் தெரிந்த பறங்கித் துண்டுகள் இன்று வயதாகி நசுங்கித்தேய்ந்து தாமும் அழுகி அருகில் இருந்த மற்ற காய்களையும் அழுகவைத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

சற்றே கோபத்துடன் அம்மா இங்கே பார் நீ செய்யும் செயலால் எத்தனை கஷ்டம் என்று அந்த காய்கறிப்பெட்டியைக் காட்டி சற்று உரக்கவே கோபித்துக்கொணடேன்.  அடடே பறங்கிக்காய் பிரிட்ஜ்லே இருக்கா..அது அங்கே இருப்பதை மறந்தே போய்விட்டேனே..ஏதாவது செய்திருக்கலாமே என்று சமாதானம் சொல்லிக்கொண்டே மறுபுறம் திரும்ப எத்தனித்தாள் என் அம்மா.

நான் மீண்டும் அவளை அழைத்து இதற்காகத்தான் சொல்கிறேன்..தயவுசெய்து நீ எதுவும் வாங்க வேண்டாம்.  எல்லாம உன் தலையில்தான் கட்டுகிறார்கள். எது வேண்டுமோ சொல் நான் வாரம் ஒரு நாள் வாங்கி வருகிறேன் என்று கூறினேன்.  சரிப்பா என்னமோ நான் என்ன செய்தாலும் உங்களுக்குக் கோபம் வருகிறது.   இனி நான் ஒன்றும் வாங்கவில்லை… என்னுடைய இஷ்டத்திற்கு மாட்டுக்குக் கீரை மற்றும் ஸ்வாமிக்குப் பூ மாத்திரம் வாங்குவதோடு நிறுத்திக்கொள்கிறேன் என்றாள் அம்மா.  பார்க்கலாம் எத்தனை நாளுக்கு இந்த உறுதி நிலைக்கிறது என்று மனதுக்குள் கூறிக்கொண்டு காரட்டைக் கழுவ ஆரம்பித்தேன்.


இரண்டு நாட்கள் சென்றன.  அன்று காலையிலேயே கவனித்தேன்.  பளபளவென்று தங்க நிறத்தில் உடல் மின்ன பச்சை சேலை கட்டிக்கொண்டு நீளவாக்கில் வெட்டப்பட்ட இரண்டு பறங்கித் துண்டுகள் பார்வையைக் கவரும் விதமாக வாசற்கதவின்அருகே இருந்த திண்ணையில் வைக்கப்பட்டிருந்ததன.  (கதையை மீண்டும் முதலிலிருந்து வாசிக்கவும்).

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home