Thursday, August 13, 2020

காக்கா முட்டை

 

ஐந்து ஆறு ட்ரிப் அடித்தாகிவிட்டது காலையிலிருந்து. முந்தின நாள் அலைச்சலிலிருந்து ஞாபகம் வைத்துக்கொண்டு சரியான இடங்களுக்குப் போய் பார்த்த பொருட்கள் அதே இடத்தில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொண்டு ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வந்து சேர்த்ததிலேயே களைப்பாக இருந்தது. சற்று ஓய்வெடுக்கலாம் என்று நிழலில் அமர்ந்தான் அவன்.


என்னா ஒக்காந்துட்டே…? சும்மா நாலு சுத்து சுத்திட்டு கொஞ்சம் சாமான் கொணாந்து போட்டா போறுமா? எத்தினி வேல இருக்கு இன்னும்..? என்று படபடத்தாள் அவன் மனைவி.


சும்மா கரையாதேம்மே...நா என்னா சும்மாவா ஒக்காந்திருக்கேன்? இந்த கொரோனா வந்தாலும் வந்திச்சு எங்கியுமே எந்த வேலயும் நடக்கல….சாப்பாடும் கெடைக்கல…. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கட்டமெல்லாம் திருப்பி கட்ட ஆரம்பிச்சிருக்காங்க… அங்கங்க மரம் வெட்டி, மணல் கொட்டி, கம்பி கட்டி….. இப்பத்தானே தொழிலே தொடங்கியிருக்கு? ஒன் அவசரத்துக்கு சாமான் எல்லாம் கிடைக்குமா? கொஞ்சம் பொறுமாயாய்த்தான் இருக்கணும்…. சும்மா கூவிக்கினே இருந்தா வேல நடந்துருமா என்னா? என்று பதிலுக்கு அங்கலாய்த்தான் அவன்.


நீ என்னய்யா, ஆம்பள...ஒனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல…. நான் பொஞ்ஜாதிதானே எல்லாத்தையும் சுமக்கணும்...சரி நான் போய் நீ கொணந்ததுலே எது தேறும் எது தேறாதுன்னு பாத்து வெக்கிறேன்… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திக்கினு அப்புறம் எனக்கு இன்னும் என்னான்னா வேணுமோ கொஞ்சம் சீக்கிரம் பாத்து கொணந்திடுய்யா… என்று சற்று இறங்கி வந்தாள் அவள்.


பொறு…. செஞ்சிக்கிட்டேதானே இருக்கேன்? அப்படி என்னாடி அவசரம் ஒனக்கு?


இல்லய்யா..எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்கு மேல தாங்காதுய்யா… அதுக்குள்ள வீட்ட முடிச்சிடனும்….சொல்லிட்டேன் … ஆமா….


எப்பிடிடீ முடியும்… நானும் எவ்ளோ அலயறேன்… நேத்தி பாத்துவெச்ச சாமான் காலைல போய் பாத்தா அதுக்குள்ள வேற யாரோ எடுத்துட்டிருக்காங்க….அதென்னா ரெண்டு நாள்….கொஞ்சம் பொறுமையா நாலு நாள்ளதான் ரெடி பண்ணலாமே?


அதெல்லாம் ஒனக்குப் புரியாதுய்யா….சரி நான் ஒன்ன ரொம்ப புடுங்கல… ஆனாகூட இருக்கிற சாமான் சுத்தமா போறாது…


அப்போ நா என்னதான் செய்யணுங்கறே?


ஒனக்கு அலயறது கஷ்டமாயிருக்குன்னு தெரியுது… நீ கஷ்டப்படுறியே தவிர புத்தியில்லெ உனக்கு… நான் சொன்னா கோவம் மாத்திரம் வரும்…


அப்படி என்னாடீ நான் புத்தியில்லாமே பண்ணிட்டேன்?


நீயே பாரேன்… நானும் நேத்தி காலைலிருந்து கஷ்டப்பட்டுட்டிருக்கேன்… நீ கொணந்த சாமான் ஒண்ணாவது தோதாயிருக்கா பாரு? எனக்கு எப்படி வேணும்முன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா ஒனக்கு?


யம்மா...ஒன்னோட பேசி மாளாது எனக்கு…. நீ சரியாச் சொல்லு… நான் போய் எங்கேருந்தாலும் தூக்கிக்கிணு வந்துர்ரேன்… அப்பறம் இது சரியில்லே அது சரியில்லேன்னு சொல்லாதே….


ஆமா… நா சொன்னா அப்பிடியே சொன்னாமாரி கொணந்திருவே நீ! ஒனக்கு அவ்ளோ சாமார்த்தியம் இருந்திருந்தா இந்நேரம் நா பங்களாவே கட்டியிருப்பேன்..


அப்பா என்னை என்னாதாண்டி பண்ணச் சொல்றே?


நீ ஒண்ணியும் பண்ண வேணாம்….கொஞ்ச நேரம் பத்திரமா பாத்துக்கோ….நான் ஒரு நடை போய் பாத்துட்டு வந்து என்னா வேணும் எப்படி வேணும்முன்னு சொல்றேன்… அத மாத்திரம் கரெக்டா கொணந்திருவியாம் நல்ல பிள்ளயாட்டம்… என்று சொல்லி அவள் புறப்பட்டாள்.


இந்தப் பொம்பளைங்களோடவே ரோதனைதான்…. என்று நொந்துகொண்டே காவல் காக்க அமர்ந்தான் அவன்.


இரண்டு மூன்று மணி நேரம் ஆகியும் அவள் திரும்பவில்லை.. அவனுக்குக் கவலையாயிற்று… உட்டகார முடியவில்லை. அவன் தேடப் போனாலோ அந்த சமயம் அவள் திரும்பி வந்து தான் காவலுக்கு இல்லை என்பதைக் கண்டால் அவன் கதி அதோகதிதான்...என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயும் இங்கேயும் பார்த்துக்கொண்டே அருகிலேயே நடந்துகொண்டிருந்தான்.


அப்பாடா...சற்று நேரத்தில் அவள் திரும்பினாள். கொஞ்கம் நிம்மதி...கொஞ்சம் கோபத்துடன் என்னாடீ இவ்ளோ நேரம்? நா காத்துக்கெடக்கேனேன்னு தோணலியா ஒனக்கு? என்று ஆரம்பித்தான்.


ஆங்? நிறுத்து ஒன் பொலம்பல...ஒனக்கு ஒத்தாசை செய்யனுமேன்னு பொம்பள நான் கஷ்டப்பட்டு சுத்திட்டு வந்திருக்கேன்…. என்ன வையறியா நீ….கொத்திடுவேன்… ஜாக்கிரதை… என்ற மிரட்டிவிட்டுத் தொடர்ந்தாள்..


இங்க பாரு...சரியா கேட்டுக்கோ….இம்மா நேரம் சும்மா சுத்தல நானு...கரெக்டா வெவரமா பாத்துக்கினு வந்திருக்கேன்….சால்ஜாப்பு எதுவும் சொல்லாம இப்ப போனாலுஞ்சரி, வெள்ளன போனாலுஞ்சரி, நான் சொல்ற எடத்தில இருக்கிற சாமான மாத்திரம் நீ தூக்கிட்டு வந்திட்டேன்னா போதும்…


சரி சொல்லு...நீ மாத்திரம் எவ்வளவு கெட்டிக்காரின்னு பாக்கலாம்….


கெட்டியோ பொட்டியோ...நா சொன்னத செஞ்சா ஒனக்கு அலச்சல் மிச்சம் தெரிஞ்சிக்கோ…. ஜாஸ்தியானா நாலு இல்லாட்டி மூணே ட்ரிப்புல கொண்ந்திடலாம்….அரை நாளுக்கு மேல ஒனக்கு வேலை இல்ல…. மிச்சம் எல்லாம் நீ ஒத்தாசை செஞ்சா நாள இல்லாட்டி நாளன்னிக்கு மதியத்துக்குள்ள நான் முடிச்சிடுவேன்…


சரிடியம்மா...ஒன் ஆசைப்படியே ஆவட்டும்….எங்க போவனும் என்னா பண்ணனும்….சொல்லு…


சரியா கேட்டுக்கோ...அப்பறம் சுத்தவிட்டேன்னு சொல்லாதே...தெரியுதா? மொதல்ல தெருமுனை ஆலமரத்துக்கிட்ட போ...அங்கே நேத்து நுங்கு வெட்டின இடத்துல நறுக்கிப்போட்ட பன ஓல கொஞ்சம் கிடக்கும்...அதுலேந்து நடுக்காம்போட இருக்கிற ஒல ஒரு நாலஞ்சி கொண்டுவா..


அப்புறம்…?


நம்ம அம்மன் கோயில் கொளம் இருக்கில்ல...அதோட படிக்கட்டுக்கு எதுது புது வீடு கட்டிக்கினு இருக்காங்க...இன்னிக்கு கம்பி கட்டிட்டிருந்தாங்க...வெட்டிப்போட்ட மிச்சம் மீதி கம்பி எவ்ளோ தூக்க முடியுமோ அவ்ளோவும் கொண்டா...


சரி….அப்பறம்…?


நம்ம பக்கத்து வீட்டு தென்ன மரம் புது குருத்து விட்டிட்டிருக்கு...அதுலேந்து எளசா பிச்சிக் கொண்டாரணும்...அதுவும் எவ்ளோ முடியுமா பாரு….முடியலன்னா மரம் பக்கத்தலதான இருக்கு...மீதி நான் பாத்துக்கறேன்…


அவ்ளோதானா? இன்னும் ஏதாச்சும் இருக்கா…


இத மொதல்ல முடி….அப்புறம் சொல்றேன்..


இவ்வளவு கண்டிஷனோடு முடியுமா? முடிந்தது. அவள் கெட்டிக்காரிதான். சரியாக நோட்டம் பார்த்துவிட்டுத்தான் சொல்லியிருக்கிறாள். அவள் சொன்ன மாதிரி அடுத்தநாள் மதியத்திற்குள்ளாகவே வேலை முடிந்துவிட்டது. கொண்டு வந்ததையெல்லாம் ஓரிடத்தில் கொட்டியிருந்தான். அவளும் அதைப் பார்த்துவிட்டு, பரவால்லியே, சரியாத்தான் கொணந்திருக்கே...என்று பாராட்டவும் செய்தாள்.


அவள் சொல்லித்தான் செய்தாலும், சரியாகச் செய்திருக்கிறோம் என்ற பெருமையுடன் அவளருகே ஆசையாக நெருங்கி, சரி, இப்போ சொல்லு...என்னா சமாச்சாரம், ஏன் இந்த அவசரம்? என்ற கேட்டான்.


அவள் வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, எல்லாம் நாளைக்கு காலைல உனக்கே தெரியும்… இப்ப நான் சொல்றதையெல்லாம் செய்...அதுக்கு முன்னாடி அங்கே சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன் பாரு...சாப்டுட்டு வா...என்று அன்புடன் சொல்லவே, சீக்கிரம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வந்து அவள் ஆணைக்குக் காத்திருந்தான்.


மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. கொண்டுவந்த பொருட்களை கனகச்சிதமாக உபயோகித்து தன் புத்திசாலித்தனத்தை அவனுக்கு பிரகடனப் படுத்தினாள் பத்தினி.


ஆஹா! அற்புதம்! எங்கே எப்போ கத்துண்டே இத்தனை சமாச்சாரம்? என்ற அவளை மெச்சிக்கொண்டு அந்தி சாய்ந்தவுடன் அருகருகே அடைக்கலமானர் தம்பதியினர்.


காலை வெளிச்சம் பரவும் முன்னரே அவனை எழுப்பினாள். தலையே வேகமாக அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டு, என்ன? என்ற கேட்டான் அவன். அவள் தன் பார்வையை உட்பக்கம் திருப்பினாள். அவள் பார்த்த திக்கை நோக்கி அவன் திரும்ப, அவளின் காலடியின் கீழ் ஒளிர்ந்தன நகைப்பேழையுள் போர்த்ப்பட்டிருந்த சிறு கிண்ணிகள் போன்ற மூன்று வெளிர்நீல முட்டைகள்!


அடிக்கள்ளி! இதைத்தானா என்னிடம் மறைத்தாய்? இதற்குத்தானா இத்தனை ஆட்டம் ஆடினாய்? நம் வாரிசுகளை பாதுகாக்கத்தான் வீடு கட்ட என்னை இந்த விரட்டு விரட்டினாய்? என்று ஆச்சரியமாகக் கேட்டபடி தானும் அவளும் சேர்த்துக் கட்டிய கூட்டை பெருமையுடன் நோட்டம் விட்டான் அவன், அந்த ஆண் காகம்.


இவைகளை பாதுகாத்து குஞ்சுகள் பொரித்து வளர்ந்து பறக்கும் வரையில் நீதான் என்னையும் இவைகளையும் உன் கண்ணைப்போல் காக்க வேண்டும் என்று உரிமையோடு கட்டளையிட்டு அவனருகில் நெருங்கி அமர்ந்தாள் அன்னைக் காகம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home