(தேவையற்ற) ஊடக வெள்ளம்
நான் சென்னைக்கு வந்து அம்பத்தூரில் குடியேறி ஐம்பது ஆண்டுகளுக்கு
மேல் ஆகிவிட்டது. நான் நான்காம் வகுப்பில் சேரும் சமயம் இரயில்வேயில் பணியாற்றி வந்த என் தந்தைக்கு
இடமாற்றம் நேரிட்டதால் இங்கு வந்தோம்.
பின்னர் அவர் மற்ற பல ஊர்களுக்கு மாற்றலாகிக்கொண்டே இருந்ததாலும்
எங்கள் படிப்பு தடைப்படவேண்டாமென்று எங்கள் தாத்தா பாட்டியுடனேயே என் தாய் மற்றும்
என் இரு சகோதரிகளும் இங்கேயே இருந்துவிட்டோம்.
அப்போதுமுதல் இன்று வரை பல பெரிய மழைகளைக் கண்டிருக்கிறோம். சுமார் ஒரு கிலோமீட்டருக்கும் மேலான தூரத்திலிருந்த எங்கள் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்றுவந்தோம். பத்து, பதினொன்றாம்
வகுப்புகளில் படிக்கும்போது மதிய உணவுக்காகவும் இன்னொருமுறை வீட்டுக்கு வந்து செல்வதையும்
வழக்கமாக்கிக்கொண்டோம்.
அப்போதெல்லாம் மழைக்காலம் என்பது சற்று நீண்டதாக இருந்தது. பல நாட்கள் சேர்ந்தாற்போல் வானம்
மூட்டமாகவே இருக்கும். மெல்லிய தூறல் இருந்துகொண்டே இருக்கும். சிற்சில நாட்களில் மட்டும் பலத்த
மழை இருக்கும். ஊரெல்லம்
நேநீர் நிறத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும். கிணற்றில் தாம்புக்கயிறு கொண்டு சேந்தாமல்
(இறைக்காமல்) வெறும் கையினாலேயே குனிந்து வாளியில்
தண்ணீர் மொண்டுகொள்ளலாம்.
பாதி தூரம் சாலை, மீதி தூரம் வயல்வரப்பு
என்று மழைக்காலத்தில் முழங்கால் அளவு தண்ணீரில் நீரை காலால் அளைந்து கொண்டேதான் நடப்போம்.
மாலை இருட்டினால் போதும், தவளைகளின் சப்தம் மற்ற
எல்லா ஓசைகளையும் அடக்கும் அளவுக்கு இருக்கும். காலையில் பள்ளிக்குச் செல்லும்போது லாரிகள் அதிகம் செல்லும் நெடுஞ்சாலையைக்
கடக்கும்போது அந்த வெட்ட வெளியில் ஆயிரக்கணக்கான தவளைகள் மற்றும்
சிலஆமைகள் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி ஒருவிதமான வாடை வீசும். மூக்கைப் பொத்திக்கொண்டு கடப்போம்.
புயல் சமயங்களில் நாட்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படும். ஹரிக்கேன் (புயலின்போதும் அணையாமல் இருந்து பயன்படுவதனால் அந்தப் பெயர்) எனப்படும் லாந்தர் விளக்கின் (லான்டர்ன் என்னும் ஆங்கிலச்
சொல்லின் தமிழாக்கம்) துணையோடுதான் இரவுகள் கழிந்தன. நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவிகிதம் கன்னியாகுமரிக்கு 600 கிலோமீட்டர் தென்கிழக்கில் உருவான புயல்கள் மெதுவாக மேற்று வடமேற்கு திசைநோக்கி
நகர்ந்து கடலூருக்கும் சென்னைக்கும் இடையே கடக்கப்போவதாக பயமுறுத்தி பின்னர் ஆந்திராவுக்கும்
ஒரிசாவுக்கும் சென்றுவிடும். அல்லது வங்காளத்தில் சென்று கொட்டும். வானொலியில் புயல்
பற்றிய எச்சரிக்கை இரவு முழுவதுமாக ஒலிபரப்பிக்கொண்டே இருப்பார்கள் . ஒவ்வொரு மணிக்கும் சுமார் ஐந்து நிமிடம்
அறிவிக்கும் எச்சரிக்கையை இடையே ஒலிபரப்பப்படும் திரை இசைப் பாடல்களினால் விழித்துக்கொண்டேயிருந்து
கேட்பது அந்நாட்களில் மிக சுவாரஸ்யமான அனுபவம்.
சற்று பெரியவனாகி பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியைத்
தொட்டும் தொடரமுடியால் திசை மாறி அருகில் உள்ள
டி வி எஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபின் நீண்ட விடுமுறை
என்பது இல்லாமல் போய் மழைக்காலத்திலும் வேலைக்குச் செல்லும்போதுகூட கடும் மழையிலும்
உற்சாகமாய் சைக்கிளின் சக்கரத்தில் பாதியளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தபோதும் விடாமல்
நீரைக் கிழித்தவாறே பயணித்தோம், பணியாற்றினோம்.
எதற்கு இத்தனையும் சொல்கிறேன் என்றால், இப்போது காலம் மாறிக்கிடக்கும் நிலையைக் கண்டால் சிரிப்பும் எரிச்சலும்தான்
வருகிறது. அந்தக் காலத்தில் அவ்வளவு மழை பெய்ததோடு அல்லாமல் அந்த நீர் நின்று நிலத்தில் ஊறி மண்ணின்
கீழே தேங்கியதால் வருடம் முழுவதும் குடிக்க நீர் இருந்தது. பயிர்கள் தழைத்தன, உயிர்கள் பிழைத்தன, வளர்ந்தன. மழையை
விரும்பினோம். மழையை
வரவேற்றோம். மழையில்
நனைந்து குதூகலித்தோம்.
எண்பதுகளிலிருந்து வேலை வாய்ப்புக்காகவும் மற்ற வசதிகளுக்காகவும்
மக்கள் பெருமளவில் சென்னைக்குக் குடியேறியதிலிருந்து நிலைமை மாறத் தொடங்கியது. புறநகர்களின் வளர்ச்சி திட்டமிடப்படாமல்
நடந்தது. விளைநிலமோ தரிசோ இடம் கிடைத்தால் போதுமென்ற மனோபாவத்தில்
மக்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நிலம் வாங்கி எலி வலையானாலும் தனி வளை என்ற சொல்லுக்கிணங்க
ஆங்காங்கே தத்தம் வசதிக்கேற்ப சுண்டெலி முதல் பெருச்சாளி வளை வரையிலான வீடுகள் கட்டிக்கொண்டனர். இவற்றில் பெரும்பாலான இடங்கள் முற்காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களாகும். இந்த இடங்கள் மெதுவாக நிரம்பியவுடன்
சிறிது சிறிதாக குளங்கள் மற்றும் ஏரிகளின் ஓரத்திலும் பின்பு அவற்றின் மத்தியிலுமாகவே
வீடுகள் முளைக்க ஆரம்பித்தன. அரசாங்கம் ஆரம்பித்திலிருந்தே இதனை கவனித்து தவிர்த்திருக்க வேண்டும். வீடு கட்ட அனுமதிக்காக மக்கள் லஞ்சம்
தரத் தயாராக இருந்ததும், அனுமதி கொடுக்கப்படக்கூடாத இடம் என்று
தெரிந்தும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுக்க ஊழல் அதிகாரிகள் அதைவிடத் தயாராக
இருந்ததும் இன்றைய நிலைக்கு முக்கிய காரணங்களாகும். அவ்வாறு கட்டும்
வீடுகளைச்சுற்றி மழைநீர் நிலத்தில் இறங்கவும் மரங்கள் நடவும் இடம் விடுகின்றார்களா
என்றால் அதுவும் இல்லை. சுற்றிலும் இடம் விட்டு இரண்டு வீடுகள் இருந்த இடத்தை வாங்கி பழைய வீடுகளை
இடித்து மரங்களையும் வெட்டி அந்த இடத்தில் சரியாக சாலையை முட்டும் அளவுக்கு சிறிது
கூட இடம் விடாமல் அடுக்கு வீடுகளாக இருபத்திநான்கு வீடுகள் கட்டினால், மழை எப்படிப் பெய்யும்? அப்படியே பெய்தாலும் மழைநீர்
எப்படி நிலத்தினுள் செல்லும்?
எட்டாம், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம ஒரு மணி நேர உணவு இடைவெளியில் ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு மீதி நேரத்தை பள்ளிக்கு அருகில், இரயில் தண்டவாளங்களுக்கு இருபுறமும் பரந்து விரிந்திருந்த ஏரியைப் பார்க்கச் செல்வோம். அங்கு தூண்டிலில் மீன் பிடிப்பார்கள். மீன் தூண்டிலில் சிக்கியதும் அதை அப்படியே தூக்கி கையில் பிடித்து மீனின் தொண்டையைக் கிழித்து தூண்டில் முள்ளை வெளியே எடுப்பார்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அன்று இருபுறமும் கடல்போல் காட்சியளித்த அந்த ஏரிக்குள் இன்று ஒருபுறம் முழுவதும் வீடுகள் காட்சியளிப்பதைக் காணும்போது வேதனையாக உள்ளது.
எட்டாம், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம ஒரு மணி நேர உணவு இடைவெளியில் ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு மீதி நேரத்தை பள்ளிக்கு அருகில், இரயில் தண்டவாளங்களுக்கு இருபுறமும் பரந்து விரிந்திருந்த ஏரியைப் பார்க்கச் செல்வோம். அங்கு தூண்டிலில் மீன் பிடிப்பார்கள். மீன் தூண்டிலில் சிக்கியதும் அதை அப்படியே தூக்கி கையில் பிடித்து மீனின் தொண்டையைக் கிழித்து தூண்டில் முள்ளை வெளியே எடுப்பார்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அன்று இருபுறமும் கடல்போல் காட்சியளித்த அந்த ஏரிக்குள் இன்று ஒருபுறம் முழுவதும் வீடுகள் காட்சியளிப்பதைக் காணும்போது வேதனையாக உள்ளது.
அடுத்த பெரிய முறைகேடு சாலைகள் அமைப்பதில் காணப்பட்டது. நகரம் பெருகப்பெருக ஏற்கெனவே அமைக்கப்பட்ட
சாலைகள்மீதே மீண்டும் மீண்டும் சாலை அமைக்கப்பட்டு சாலைகளின் உயரம் கண்ணுக்குத்தெரியாமல் ஐந்தாண்டுகளுக்கு சுமார் முக்கால் அடி என்ற அளவில்
உயரத்தொடங்கியது. இதனால் வீடுகள் சாலையைக்காட்டிலும் கீழே இறங்கத் தொடங்கின. இன்றும் நீங்கள் நகரில் ஒரு வலம்
வந்தால் இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டின கட்டடங்கள் அனைத்துமே சாலைமட்டத்திற்கும்
கீழே இருப்பதைக் காணலாம்.
எல்லாவற்றையும் விடப் பெரிய கேடு விளைவித்தது பிளாஸ்டிக்
பைகளின் அறிமுகமாகும். ஆரம்பத்தில் மிகவும் உபயோகமானதாகவும் வசதியானதாகவும் உணரப்பட்ட பிளாஸ்டிக்
பைகள் மற்றும் இதர பொருட்களின் அசுர வளர்ச்சி இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதகமாக
அமைந்துள்ளது. நகரம்
கிராமம் என்ற பாகுபாடில்லாமல் பரவியிருக்கும் இந்த அசுரன் நீர் வடிகாலுக்கு மிகப்பெரிய
சவாலாக இருக்கிறது.
ஆக, நீர் தேங்கும் இடத்திலெல்லாம் வீடு
கட்டிக்கொண்டும், உபரிநீர் வெளியே போக வழியில்லாமல் உயரமான சாலை
மற்றும் மக்காக் குப்பைகளின் அடைப்பினால் தடைகளை ஏற்படுத்திக்கொண்டும் இன்று ஓரிரு
நாட்கள் மழை பெய்தாலே தண்ணீர் ஆங்காங்கே தேங்கி வடிய வழியில்லாமல் வீடுகளுக்குள் நுழையும்
அவலத்தைக் காண்கிறோம்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் சுமார் 25 சதவிகிதமே நிறைந்துள்ள நிலையில் இப்போது பெய்துள்ளதைப்போல் இன்னும் குறைந்தது
மூன்று மடங்காவது பெய்தால்தான் ஏரிகள் நிரம்பும், அடுத்த வருடம்
தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் இருப்போம்.
ஆனால் இந்த ஒருவார மழைக்கே தாழ்வான பகுதிகளின் பிரச்சினையை பூதாகாரமாகப்
பெரிதாக்கி இந்த ஊடகங்கள் ஓலமிடும் நாராசத்தைத் தாங்க முடியவில்லை. மழை முடிந்த பின் அடுத்த மழைக்காலத்திற்குள்
இந்த தற்காலிகப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இந்த ஊடகங்கள் ஏன் முயல்வதில்லை? நீரின்றி அமையாது உலகு என்பதை மறந்து
மழையை மாரி என்று போற்றாமல் பேய் மழை என்று ஒன்று விடாமல் அனைத்து ஊடகங்கள் மற்றும்
செய்தித்தாட்கள் பழிக்கின்றன, வசைபாடுகின்றன. இன்று காணப்படும் இடர்கள் அனைத்திற்கும்
ஒவ்வொரு தனிக்குடிமகனின் சுயநலம்தான் காரணம். ரியல் எஸ்டேட் மற்றும் அரசு அதிகாரிகள்
இந்தச் சுயநலத்தை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு மேலும் தவறிழைக்கிறார்கள்.
இன்றும் நிலைமை கைமீறவில்லை. காலம்காலமாகத் தண்ணீர் தேங்கும் இடங்களான
குளங்கள் மற்றும் ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு அவற்றைத் தூர்வாரி மழைநீர் சேகரிக்க
வழி செய்யவேண்டும். குடியிருப்புகளில்
மழைநீர் வடிகால்கள் செவ்வனே அமைத்து மழைநீர் அருகிலுள்ள நீர்நிலையில் சேருமாறு வழியமைக்க
வேண்டும். குப்பைகள்
சேராமல் தினமும் அகற்றி குப்பைகளை சரியான முறையில் கரைக்கவேண்டும். மக்களும் ஆடம்பரத்துக்கு அடிமையாகாமல் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே
வாங்கி அவற்றையும் உரிய முறையில் மட்டுமே உபயோகிக்க முன்வரவேண்டும். நாம்இருப்பது முடியரசல்ல,
குடியரசு. எனவே, மக்கள் எவ்வழி, மந்திரி அவ்வழி
என்று அரசாள்பவர்களுக்கு அவர்கள் தவறு செய்ய இடம் கொடுக்காமல் நம்மை வழிநடத்திக்கொண்டாலே
போதும், வருங்காலம் பொற்காலமாக நிச்சயம் மாறும். முக்கியமாக,
கூடுமானவரை மரங்களை வெட்டாமல் இருக்க வேண்டும். முடிந்தவரை மேலும் மரங்கள் பயிரிடவும்
வேண்டும்.
இயற்கையை நேசிப்போம். இயற்கையை சுவாசிப்போம். மழையைப் போற்றுவோம். மழைநீரை சேமிப்போம். மக்களோடு
சேர்ந்து மரங்களையும் வளர்ப்போம். சுகாதாரம் பேணுவோம். சுயநலம் களைவோம். ஆடம்பரம் அகற்றுவோம். சிக்கனம் காப்போம். இயன்ற அளவு தர்மம் செய்வோம்.
வாழ்க வளமுடன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home