யானைக்கும்..
அன்று கூட்டம் அதிகமாக இருந்தது. நல்ல வெய்யில். இருந்த ஓரிரு மரங்களின் நிழல்களில் மக்கள் அடைக்கலம்
தேடினர். புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொண்டவர்கள்
கூட்டம் தனியாக ஓர் இடத்தில் சேர்ந்திருந்தது. ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளைச் சேர்ந்த
பயிற்சியாளர்கள் இருவர் சற்று முன்னரே வந்து அன்று ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டியவர்கள்
எல்லாம் வந்து விட்டார்களா என்று தங்களுடைய பட்டியல்களை வைத்துக்கொண்டு சரிபார்த்துக்
கொண்டிருந்தனர்.
உரிமம் வாங்கக் காத்திருக்கும் நபர்களிடையே ஒருவித அச்சம். ஏற்கெனவே பயிற்சியாளர் சொன்னதையெல்லாம் மனதில் அசைபோட்டுக்
கொண்டிருந்தனர். என்ன வேகத்திற்கு எந்த கியர்
போட வேண்டும், வண்டியை ஸ்டார்ட் செய்யுமுன் என்னென்ன சரிபார்க்க வேண்டும், வேகமாகப்
போகும்போது நமக்கு முன் போகும் வண்டி திடீர் என்று பிரேக் அழுத்தினால் நாம் என்ன செய்ய
வேண்டும், என்றெல்லாம் ஒருவருக்கொருவர் தத்தம் கற்றல்களையும் சந்தேகங்களையும் பரிமாறிக்கொண்டிருந்தனர். பயிற்சியாளர் வேறு காலையில் வந்து இன்று வந்திருக்கும்
இன்ஸ்பெக்டர் ஒரு குடைச்சல் பேர்வழி, என்ன சொன்னாலும் பதில் பேசாமல் ஒழுங்காக மட்டும்
ஓட்டிக் காட்டிவிடுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனதிலிருந்து
நேரம் ஆக ஆக இவர்களின் கலக்கம் சற்று அதிகரித்திருந்தது.
அந்தக் கூட்டத்திற்கு புதிதாக ஒரு நபர் வந்து சேர்ந்தார். வரும்போதே புல்லட் மோட்டார்சைக்கிளில் ஸ்டைலாக வந்து
இறங்கினார். பயிற்சியாளரைப் பார்த்து ஹலோ வெங்கடேஷ்
எப்படி இருக்கீங்க? இன்ஸ்பெக்டர் வந்துட்டாரா, இன்னிக்கு முடிச்சிடலாமா, நான் நாளன்னிக்கு
கோயமுத்தூர் போகனும் என்று வரிசையாக கணை தொடுத்தார். கொஞ்சம் இருங்க சீனி சார், இன்னிக்குன்னு பாத்து
அந்த முசுடு முருகேசன்தான் வந்திருக்கான்.
ரெண்டு இன்ஸ்டியூட்டுக்கும் சேத்து ஒரு வண்டிதான் வேற கொணந்திருக்கோம். காருக்கே எட்டுபேர் காத்திருக்காங்க. அதை முடிச்சுட்டுத்தான் பைக்பக்கம் வரணும். நீங்க வேணா ஏதாவது சாப்டுட்டு அப்படி அந்த மரத்தோரமா
ஒக்காந்துக்கோங்க, நான் கூட்பிடறேன். எப்படியும்
ஒண்ணரை, ரெண்டு மணி ஆயிடும் என்று சொல்லிவிட்டு வெங்கடேஷ் ஆர் டி ஓ ஆபீஸுக்குள் சென்றார்.
வெய்யில் ஏற ஏற புழுக்கம் அதிகரித்தது. இளைஞர்களும் இளைஞிகளும் இளநீர், லைம் ஜூஸ் என்று
தாகத்தையும் வெயிலையும் தணித்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தனர். நடுத்தர வயதினர் ஏனோ அந்த வெயிலிலும் டீ காபிக்கே
முன்னுரிமை கொடுத்தனர். பழக்க தோஷம் போலும்.
உச்சிவேளை நெருங்கும்போது வெங்கடேஷ் மற்றும் மற்ற பயிற்சியாளர்
இருவரும் ஓடி ஓடி வந்தனர். சீக்கிரம் சீக்கிரம்
மெயின் ரோடுக்கு வாங்க. நானோ இவரோ உங்க பக்கத்தில
உக்காருவோம், இன்ஸ்பெக்டர் பின்னாடி உக்காருவார், அவர் என்ன சொல்றாரோ அதைச் செய்ங்க. சந்தேகம் இருந்தா சும்மா இருங்க தப்பாக எதுவும்
பண்ணிடாதீங்க என்று காத்திருந்தவர்களை மிரட்டி விரட்டி சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். எட்டு பேரும் இருப்பதை உறுதி செய்து கொண்டபின்னர்
இன்ஸ்பெக்டர் முருகேசன் சற்றே உரத்த குரலில் ஏம்ப்பா எட்டு பேருக்கு ஒரு வண்டி கொணந்தா
நான் எத்தனை தடவை செக் பண்ணறது? என்று அலுத்துக்கொண்டே சரி சரி ஒரு ட்ரிப்புக்கு மூணு
பேர் ஒக்காரவை பாத்துக்கலாம் என்றார். அவரைப்
பார்க்கும்போதே சற்று பயமாகத்தான் இருந்தது.
வயது ஐம்பதுக்கு மேல் ஆகியிருக்கும். மாநிறத்திற்கும் மேல் சற்று கருமையான நிறம். நல்ல உயரம். மிடுக்கான தோற்றம். யாரு மொதல்ல என்று
அனைவரையும் பார்த்துக்கொண்டே அங்கு காத்திருந்தவர்களில் மிகவும் வயது குறைந்த யுவதியை
அழைத்து, இந்தாம்மா நீ ஒக்காரு, வா, ஒண்ணும் பயப்படாதே சும்மா கொஞ்ச தூரம் நான் சொல்றாமாதிரி
மாத்திரம் ஓட்டு பாக்கலாம் என்று சொல்லும்போதே அந்தப் பெண்ணுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு துப்பட்டாவை
சரிசெய்து கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள். கைப்பையில் இருந்து கண்ணாடியையும் கைக்குட்டையையும்
வெளியே எடுத்தாள்.
அதெல்லாம் உள்ள வைம்மா.
வண்டி ஸ்டார்ட் பண்றத்துக்கு முன்னாடி என்னா பண்ணனும்னு ஒனக்கு சொல்லிக்குடுத்திருக்காங்களோ
அதைப் பண்ணு என்றார். அவள் சரி சார் என்று
சொல்லிவிட்டு மிக அவசரமாக சாவியைத் திருகி என்ஜினை ஸ்டார்ட் செய்ய முயன்றாள். இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார். இதப் பார்ம்மா, கீயிலே கைவக்கர்த்துக்கு முன்னாடி
ரியர் வியூ மிரர் சைட் மிரர் ரெண்டும் சரி பண்ணிட்டுத்தான் ஒக்காரவே ஒக்காரணும் தெரியுமா?
நீ என்னடான்ன மூஞ்சியப் பாக்க கண்ணாடி எடுக்கற.. சரி சரி ஓட்டு என்றார்.
சற்று உதறினாலும் ஓரளவுக்கு நன்றாகவே ஸ்டார்ட் செய்து ஓட்டத்
தொடங்கினாள் அந்தப் பெண். போ போ அப்படியே ஃபோர்த்
கியர் போயி அதோ ஓரத்திலே அந்த லாரி நிக்குதே கியர் மாத்தாமே அது பின்னாடி நிப்பாட்டு
பாக்கலாம் என்றார். வெளிறிய முகத்துடன் அந்தப்
பெண் வண்டியை சாலையின் ஓரத்திற்குத் திருப்பினாள். என்னா இப்பிடி சட்டுன்னு திருப்பறே, ஏம்ப்பா இதெல்லாம்
சொல்லிக்குடுக்கலையா நீ என்று வெங்கடேஷைக் கேட்டார் முருகேசன். இல்ல சார் இவங்க இப்பதான் கடைசியா சேர்ந்தாங்க..
வெளிநாடு போறதுக்குள்ள லைசன்ஸ் வேணும்ன்னாங்க அதான்.. என்று சமாளித்தார் வெங்கடேஷ். அதற்குள் அந்தப் பெண் பிரேக்கை அழுத்தவே வண்டி
ஒரு சிறிய உதறலுடன் நின்று விட்டது. ஏம்மா
இப்பிடி நடு ரோட்டுல நிறுத்தினா பின்னாடி வர்ற வண்டி என்னா பண்ணுவான்? சரி சரி இறங்கு..அடுத்தது யார்ப்பா ஓட்டறீங்க என்று
இந்த முறை காத்திருந்தவர்களுக்குள்ளேயே மாட்டிக்கொள்ள
சந்தர்ப்பம் கொடுத்தார் முருகேசன்.
பின்புறம் உட்கார்ந்திருந்த மற்றொரு பெண் துணிச்சலாக நான்
ஓட்டறேன் சார் என்று முன்வந்தாள். முன்னேயும்
வந்தாள். அவள் மனோதத்துவம் படித்திருக்கிறாள்
போலும். ஆசாமி கெடுபிடி காட்டினாலும் மனது
இளகியது என்பதை அறிந்து கொண்டு சற்று தைரியமாகவே ஓட்டினாள். அதன் பின் மற்றவர்களுக்கும் தைரியம் வந்துவிடவே
நன்றாகவே ஓட்டிக்காட்டினர். அனைவரும் ஓரிரு தவறுகள் செய்தாலும் அசம்பாவிதம் எதுவும்
நடக்கவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்த எட்டு பேரின் ஓட்டும் திறமையை தான் வைத்திருந்த
சார்ட்டில் குறித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் கடைசியாக வெங்கடேஷையே வண்டியை ஓட்டி ஆபீஸுக்குத்
திருப்பச் சொன்னார்.
அவரை இறக்கிவிட்டு அவரிடம் காதில் இரகசியமாக ஏதோ பேசினார்
வெங்கடேஷ். இதோ பாருப்பா..காருன்னோ எப்படியோ கீழ விழாம சட்டுனு பிரேக் போட்டு சமாளிச்சிடலாம். பைக் அப்படி கிடையாது. நீ வேற கொஞ்சம் வயசானவன்னு சொல்றே. ஒழுங்கா எட்டு போடச் சொல்லு. குடுத்துடலாம். இல்லாட்டி முடியாதுதான் என்று திட்டவட்டமாகப் பேசினார். அதெல்லாம் போட்ருவாரு சார்.. இதோ கூட்பிடறேன் என்று
கூறி காலையில் புல்லட்டில் வந்து இறங்கிய சீனி
சார் என்ற சீனிவாசனைஅழைத்தார் வெங்கடேஷ். சார்,
எல்லாம் பேசி வெச்சிட்டேன். எட்டு மாத்திரம்
சரியா போட்டுக் காமிச்சுடுங்க மத்தது நான் பாத்துக்கறேன் வாங்க என்று சொல்லிக்கொண்டே சீனிவாசனை முருகேசனிடம்
அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். ஓரிரண்டு
நிமிடங்கள் பேசிவிட்டு சரி அங்கே மார்க் செஞ்ச எடத்தில போய் அப்படி ஒரு தடவ இப்படி
ஒரு தடவ ரெண்டு எட்டு போட்டுக் காமிங்க பாக்கலாம் என்று கையாலேயே வளையம் போட்டுக் காண்பித்தார்
முருகேசன்.
அவருடைய புல்லட்டை திரும்பவும் ஸ்டைலாக ஸ்டார்ட் செய்த சீனிவாசன்
மெதுவாக முதல் எட்டை சரியாக முடித்து பாதையிலிருந்து வெளியே வந்து மீண்டும் திரும்பி மாற்றுப்பக்கமாக எட்டு போட முயற்சிக்கும்போது
ஓரிடத்தில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் அந்தப் பாதையின் விளிம்பிற்கு மிக அருகில்
செல்லவே சீனிவாசன் தன்னையும் அறியாமல் ஒரு காலை தரையில் ஊன்றி வண்டியை சரியான பாதைக்குத்
திருப்பினார். இரண்டாம் எட்டையும் முடித்துவிட்டு
கம்பீரமாக இன்ஸ்பெக்டர் முருகேசன் இருந்த இடம் நோக்கி புல்லட்டை ஓட்டிக்கொண்டு வந்து
நிறுத்தினார். அவரை ஏற இறங்கப் பார்த்த முருகேசன்,
என்னா ரெண்டாந்தரம் சுத்தும்போது நீ காலை கீழ வச்சத நான் பாக்கலைன்னு நெனச்சியா..இந்த
ஸ்டைலெல்லாம் எங்கிட்ட வேணாம். ஒழுங்கா கத்துக்குனு
அடுத்த வாரம் வா என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டு வெங்கடேஷைப் பார்த்து
நீ சொன்னியேன்னு பாக்கறேன் இல்லாட்டி இந்தாளுக்கு நான் ஓகே குடுக்க மாட்டேன். அடுத்த
வாரம் ஒழுங்காப் போடச் சொல்லு என்று கூறிவிட்டு ஆபீஸுக்குள் சென்று இரண்டு நிமிடத்தில்
கிளம்பியும் சென்று விட்டார்.
திகிலாகப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் என்னாச்சு எங்களுக்கு
லைசன்ஸ் ஓகே பண்ணாரா இல்லையா என்று கேட்க வெங்கடேஷ், கொஞ்ச நேரம் இருங்கப்பா.. இந்தாளு
வந்தாலே இப்படித்தான் ஏதாவது வில்லங்கம் நடக்கும்.. யாருக்கு என்னா சொல்லிருக்கான்னு
தெரியல.. எட்டுல அஞ்சு தேறியிருந்தாலே ஓக்கேதான்…நீங்க இப்படியே இருங்க நான் போய் பார்த்துட்டு
வரேன் என்று கூறி ஆபீஸுக்குள் சென்றார்.
சீனிவாசனுக்கு முகம் பேயறைந்தாற்போல் ஆகிவிட்டது. என்னங்க இது..எனக்குத்தான் நேரம் சரியில்ல போலிருக்கு..
என்னப்பாத்தா என்னா கத்துக்குட்டி மாதிரியா தெரியிது? நான் மெடிக்கல் ரெப்புங்க..மாசத்தில ரெண்டு நாள்
ஊர்ல இருந்தா ஜாஸ்தி..டெய்லி இந்த ஊர்லந்து அந்த ஊருன்னு ஒரு நாளக்கு நூத்துக்கணக்கான
மைல் வண்டியிலே போய் வர்ரேன் .. இந்தாளு என்னான்னா என்னை எட்டு போடச் சொல்றான்.. என்று
அலுத்துக் கொண்டார்.
ஏங்க இங்க வந்தீங்க. ரினூவலா? என்று அந்த எட்டு பேரில் நாற்பது
வயதுடைய ஒருவர் கேட்டார். அதெல்லாம் இல்லீங்க…போன
வாரம் ஆம்பூர் பக்கத்தில போயிட்டிருக்கும்போது இன்னொரு வண்டி எம்மேல இடிச்சி கொஞ்சம்
சண்டையாயிடிச்சி. அப்போ வந்த போலீஸ் என்னோட
லைசன்ஸ கேட்டான். காமிச்சேன். அவன் என்னவோ யார்கிட்டயோ பேசி இது போலி லைசன்ஸ்
செல்லாது உம்மேலதான் கேஸ் போடனும்னு என்னை மெரட்டினான். எனக்கே தெரியாது. நான் பத்து பதினஞ்சு வருஷம் முன்னால புரோக்கர் மூலமா
பணங்குடுத்துத்தான் வாங்கினேன்..ஆனா அது மோசடின்னு எனக்குத் தெரியவே தெரியாது.. அத
வச்சுத்தான் இத்தனநாள் ஓட்டிக்கிட்டிருந்தேன்.
இப்போ மாட்டினத்துப்பறம்தான்தெரிஞ்சது. சரி தெரிஞ்ச பார்ட்டி மூலமா ஒழுங்கா
புது லைசன்ஸே எடுத்திடலாம்னு இவுங்க மூலமா ட்ரை பண்ணா இங்க அந்த மூலைல கொஞ்சம் சரளை
இருந்து வழுக்கறாப்போல ஆச்சுன்னு லைட்டாதான் கால வச்சேன்..அதக்கூட அந்த ஆளு வெவரமாப்
பாத்துட்டான்..இருவது வருஷமா புல்லட் ஓட்றேன் எட்டுப் போடத் தெரியலன்னு அந்த ஆளு ரிஜக்ட்
பண்ணா மனசே ஒத்துக்கல என்ன பண்றதுண்ணே தெரியல… என்று புலம்பித் தீர்த்தார்.
அரைமணி நேரத்தில் வெங்கடேஷ் வெளியே வந்தார். ஆவலுடன் அனைவரும் அவரை மொய்த்தனர். அவர் சீனிவாசனைப் பார்த்துக்கொண்டே, உங்க நேரம்
இன்னிக்கு சரியில்ல சார்..இல்லாட்டி பாருங்க ஒங்களுக்கு மாத்திரம் இண்ட்டு போட்டுட்டு
மத்த அத்தனை பேருக்கும் டிக் போட்டுருக்கான் அந்த ஆளு.. இத்தினிக்கு இன்னிக்கு ஆரம்பமே
சரியில்ல..அந்தம்மாவ அவன் வெரட்றபோவே இன்னிக்கு அவ்வளவுதான்னு நெனச்சேன்..ஆனா பாருங்க..
என்னமோ இன்னிக்கு இத்தன பேருக்கும் மச்சந்தான்..நானே எதிர்பார்க்கல.. நீங்க எட்டு பேரும்
பக்கத்துல எங்கனாச்சும்போய் சாப்டுட்டு நாலு மணிக்கு வந்து ஒரு ஒருஜினலும் ரெண்டு காப்பியும்
அவங்களே தருவாங்க ..கையெழுத்து போட்டு வாங்கிக்கங்க.. சீனி சார் ஒண்ணும் கவலப் படாதீங்க இன்னிக்கு வந்துட்டான்னா
இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு இந்த ஆள் வரமாட்டான் அடுத்த வாரம் நம்ப வேற ஆள வெச்சு
முடிச்சிடலாம்… என்று ஆறுதல் கூறி சமாளித்தார்.
இருபது வருடம் வண்டி ஓட்டும் அனுபவம் இருந்த கற்றுக்குட்டி
என்ன செய்வதென்றறியாமல் விழிக்க, இரண்டே மாதங்கள் கற்றுக்கொண்டிந்த அனுபவஸ்தர்கள் தங்கள்
கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home