Friday, November 6, 2020

ரிடர்ன்

 

காலையிலிருந்தே மொபைல் ஃபோனை ஐந்து நிமிடத்திற்கொருதரம் பார்த்துக்கொண்டிருந்தாள் சுதா. போன வாரம் ஆர்டர் செய்திருந்த ஹேண்ட்லூம் ஸாரி (ஸாரி, கைத்தறிப் புடவை) அவுட் ஃபார் டெலிவரி என்று மெஸேஜ் வந்திருந்தது. ஆவலுடன் டெலிவரி பாய்-யின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்தாள். ஃப்ளாட் என்பதால் அவள் செக்யூரிட்டிக்கு தகவல் சொன்னால்தான் அவனை உள்ளே அனுப்புவார்கள்.


! வந்துவிட்டது. உடனே செக்யூரிட்டிக்கு சொல்லி ஐந்து நிமிடத்தில் டெலிவரியும் ஆகிவிட்டது. ஆசையுடன் திறந்து பார்த்தாள். பளபளவென்று பிரகாசமான வண்ணங்களில் நெய்து அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த புடவை. உடனே பிரித்து விரித்து கண்ணாடி முன் நின்று தோளில் சார்த்தி அழகு பார்த்துக்கொண்டாள். அழகான டிசைன். அதற்கேற்ப தலைப்பு. இவ்வளவு மேட்சிங்காக கடையில்கூட கிடைக்காது. அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. கூடவே தன்னையும் மெச்சிக்கொண்டாள். நல்ல வேளை. ஆன்லைன் வியாபாரம் கற்றுக்கொண்டது எவ்வளவு செளகரியம்? வீட்டிலிருந்தபடியே நினைத்த நேரத்தில் நினைத்தவற்றை நினைத்த வண்ணத்தில் வாங்குவது அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. இதுவே கடைக்குப் போயிருந்தால் எத்தனை மணி நேரம் அலச வேண்டியிருக்கும்?


மகிழ்ச்சியுடன் திரும்பி மடித்து வைக்கத் தொடங்கினாள். என்னது இது? கண்ணாடியில் கோளாறா? இல்லை நான்தான் சரியாகப் பார்க்கவில்லையா? பார்டர் நான் ஆர்டர் செய்தமாதிரி இல்லையே? சந்தேகம் வந்தது. மீண்டும் ஃபோனை எடுத்து ஆர்டரை சரிபார்த்தாள். ஆம் அவள் நினைத்தது சரி. பார்டர் கலரும் சரி, அளவும் சரி, புகைப்படத்தில் இருந்ததைவிட சற்று வேறுபட்டிருந்தது. ஐயையோ! இப்போது என்ன செய்வது? ஆயிரத்து அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கியது வீணா என்று மனம் தத்தளித்தது. உடனே தன் ஆர்டர் விவரங்களையும் டெலிவரி விவரங்களையும் சரிபார்க்கத் தொடங்கினாள். ஆஹா! இதோ இருக்கிறது நமக்கு விடை என்று மனம் குதூகலித்தது. காரணம், வாங்கிய பொருட்களை திருப்பிக் கொடுக்கவும் வசதி இருப்பதை அவள் அப்போதுதான் அறிந்துகொண்டதுதான்.


ஐந்து நிமிடம் அதிலேயே துழாவித் துழாவி எதற்காக என்ன காரணத்திற்காக எல்லாம் வாங்கிய பொருட்களை திருப்பி அனுப்பலாம் என்பதை அறிந்துகொண்டாள். புடவையை அப்படியே மறுபடியும் வந்தமாதிரியே பேக் செய்து ரிடர்னுக்கு விண்ணப்பித்தாள். அடுத்த நாள் வந்து வாங்கிக்கொள்வதாக பதில் வந்தவுடன் நிம்மதியானாள்.


மறுநாள் அதே நேரத்திற்கு அதே டெலிவரி பாய் வந்து வாங்கிக்கொண்டான். ஏன் மேடம், எதற்காக திருப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவனிடமும் ஆர்டர் செய்தது வேறு வந்தது வேறு என்று பதில் சொல்லி விஷயத்தை முடித்தாள். அவனிடம் பேசிய சில நிமிடங்களில் அவன் பெயர் மொய்தீன் என்பதையும் இந்த ஏரியாவுக்கு பெரும்பாலும் அவன்தான் வருவான் என்பதையும் அறிந்துகொண்டாள். மூன்று நாட்களில் செலுத்திய பணமும் திரும்பி வந்தது அவளுக்கு ஆன்லைன் வியாபாரத்தில் நம்பிக்கையை அதிகரித்தது.


சில வாரங்கள் உருண்டோடின. ஒரு வார இறுதியில் கணவன் குமார் வெளியில் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான். போறதுதான் போறோம், கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி ஒரு ரெண்டுமணி நேரம் ஷாப்பிங் ஏதாவது பார்த்துவிட்டு பிறது டின்னருக்குப் போகலாமே என்று வேண்டுகோள் விடுத்தாள். அவனும் ஒத்துக்கொள்ளவே ரெஸ்டாரண்ட்டுக்குப் போகும் வழியில் உள்ள மாலிலேயே ஷாப்பிங் செய்யத் தீர்மானித்தார்கள்.


மால் என்னவோ கவர்ச்சியாகத்தான் இருந்தது. எஸ்கலேட்டர் என்ன, ஃபவுன்டன்கள் என்ன, அங்கங்கே ஜோடியாகத் திரியும் இளவட்டங்கள் என்ன, மூலைக்கு மூலை ஐஸ்க்ரீம், பீட்ஸா, குக்கீஸ், ஸோடா என்று சாப்பிட குடிக்க விதவிதமான பண்டங்கள் பானங்கள் எல்லாம் கண்ணைக் கவரும் அளவு இருந்தன. எவ்வளவு பணம் இருந்தாலும் அத்தனையும் அதற்கு மேலும் செலவழிக்கப் போதுமான கடைகளும் இருந்தன.


அகல விரிந்த கண்களுடன் அவள் அத்தனையையும் நோட்டம் விட்டவாறே தனக்கு நிஜமாகவே என்ன தேவை என்று நினைத்துப்பார்த்து கடைசியில் ஒரு ஜோடி காலணிகளும் ஸ்டைலாக ஒரு ஹேண்ட் பேக்-கும் வாங்கலாம் என்ற முடிவுடன் அவற்றிற்கான கடைகளில் நுழைந்தாள். எவ்வளவு அலசியும் அவள் விருப்பத்திற்கேற்ற பொருட்கள் கிட்டவில்லை. ஓன்று, மாடலில் ஏதாவது குறை இருந்தது. அல்லது அளவு சற்று பொருத்தமில்லாமல் இருந்தது. அவள் விருப்பத்திற்கேற்ப இருந்தால், அது விலை மிகவும் அதிகமாக இருந்தது. குமார் பரவாயில்லை என்றாலும் அவளுக்கு அவ்வளவு பணம் அவற்றில் போட மனமில்லாமல் அவைகளை நிராகரித்துவிட்டாள். நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்ததனால் ஒரு வழியாக போதும் என்று முடிவு செய்தனர். அவர்களுடைய ஷாப்பிங் எதுவும் வாங்காமல் விண்டோ ஷாப்பிங்காகவே முடிந்தது.


இந்த ஏமாற்றத்தை சரிசெய்ய ஈடுகொடுத்தாற்போல டின்னர் அமைந்தது குமாருக்கு சற்று நிம்மதியாக இருந்தது. இதமான குளிரில் மென்மையான வெளிச்சத்தில் நீண்ட நேரம் எண்ணங்களையும் பண்டங்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறியபடியே சாப்பிட்டு முடித்து திருப்தியுடன் வீடு திரும்பினர்.


மறுநாள் குமார் ஆபீஸுக்குச் சென்றபின் தான் முந்தைய தினம் கடைகளில் பார்த்த காலணி மற்றும் கைப்பை முதலியவை ஆன்லைனில் கிடைக்கிறதா என்று பரிசோதிக்க எண்ணினாள் சுதா. முதலில் காலணி. என்ன ஆச்சரியம், நேற்று அவள் கடையில் விலை அதிகம் என்ற ஒரே காரணத்தால் வேண்டாம் என்று வாங்காமல் விட்ட காலணி, அதே வண்ணம் அதே அளவு கொண்ட அதே காலணி, அவள் நேற்று பார்த்த விலையில் பாதியைவிடக் குறைவாக குறிப்பிடப்பட்டிருந்தது! டெலிவரி 5 முதல் 7 நாட்கள் என்று போட்டிருந்தது. பரவாயில்லை என்று முடிவெடுத்து ஆர்டர் செய்தாள்.


பின்னர் கைப்பை. மறுபடியும் ஆச்சரியம், அவள் நேற்று பார்த்ததை விட மிக அதிக அளவிலான பலவித வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளுக்கான தெரிவுகளுடன் அமைந்திருந்தன. ஒவ்வொன்றாகப் பார்க்க அவள்தான் நேரம் செலவிடவேண்டும். அதனாலென்ன, வீட்டுக்குள் வேலைகளெல்லாம் முடித்துவிட்டு ஹாய்-யாக ஃபேனுக்குக் கீழே ஊஞ்சலில் அமர்ந்து நிதானமாகப் பார்த்து கடைசியில் அவளுக்குப் பிடித்தமான ஒன்றைத் தேர்வு செய்தாள். ஆர்டர் செய்தாள். இது 7 முதல் 10 நாட்களில் வரும்போல் குறிப்பிடப்பட்டிருந்தது. காக்கத்தான் வேண்டும். வேறு என்ன வேலை? நாட்களை எண்ணத் தொடங்கினாள்.


ஒரு சில நாட்களில் அவள் சமைத்துக்கொண்டிருக்கும்போது மொய்தீன் போன் செய்தான். காலணி வந்தது. டீ சாப்பிடறியாப்பா? என்று அக்கறையுடன் விசாரித்து வாங்கிக்கொண்டாள். மொய்தீன், இல்லை மேடம், இப்போ நிறைய பேர் ஆன்லைன்ல வாங்குறதால நிறைய டெலிவரி இருக்கு, நின்னா லேட்டாயிடும், தாங்க்ஸ் என்று பணிவுடன் மறுத்து சென்றுவிட்டான்.


சமையலை முடித்துவிட்டு ஆவலுடன் பாக்கெட்டை திறந்து பார்த்தாள். அவள் அன்று விரும்பிய அதே காலணி. ஆஹா என்று சந்தோஷத்துடன் அணிந்து கொண்டு நடந்து பார்த்தாள். சிறிது லூஸாக இருப்பதுபோல் தோன்றியது. கழட்டி அளவைப் பார்த்தாள். அவள் நினைத்தது சரி. அவளுடைய அளவு 7. இந்தக் காலணியின் அளவு 8. ஆர்டரையும் பில்லையும் திரும்பிப் பார்த்தாள். இரண்டிலுமே அவள் கேட்டிருந்தாற்போல 7ஆம் அளவுதான் பதிவாகியிருந்தது. ஆனாலும் வந்ததென்னவோ 8ஆம் அளவு. சே! ஏன் தான் நம் அதிர்ஷ்ட்டம் இப்படி இருக்கிறதோ என்று வந்த காலணியை அப்படியே மறுபடி பேக் செய்து திருப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டாள்.


மறுநாள் மொய்தீன் வந்து வாங்கிக்கொண்டான். ஏன் மேடம் திருப்பறீங்க என்று கேட்டதற்கு வேறு என்னப்பா பண்ணறது? ஏழாம் நம்பர் சைஸ்-ன்னு ஆர்டர் பண்ணா ஏழாம் நம்பர்-ன்னு பில் போட்டு எட்டாம் நம்பர் அனுப்பிச்சிருக்காங்க...வேணும்னா பாக்கெட் பிரிச்சிக் காட்டட்டுமா? என்றாள் சுதா. ஐயோ அதெல்லாம் வேண்டாம் மேடம், நாங்களும் அவங்களுக்கு என்ன காரணத்தால ரிடர்ன் பண்ணறீங்கன்னு சொல்லனும்..அதனால் தான் கேக்கறோம்...தப்பா நெனச்சிக்காதீங்க...என்று கேட்டுக்கொண்டு விடைபெற்றான். போகும்போது, சைஸ்தான் பிராப்ளம் என்கிறதாலே அவங்களே சரியான சைஸை உடனேயே அனுப்பிச்சிடுவாங்க மேடம், நீங்க கவலைப்படாதீங்க என்று ஆறுதலும் சொல்லிவிட்டுச் சென்றான்.


நான்கு நாட்கள் கழித்து மீண்டும் மொய்தீனிடமிருந்து கால். உள்ளே வர அனுமதி தகவல் சொன்னபின் வந்தான் மொய்தீன். இப்போது அவனிடம் இரண்டு பார்சல். ஒன்று அவள் கேட்ட அளவில் மாற்றுக்காலணி. மற்றொன்று அவள் ஆர்டர் செய்திருந்த கைப்பை.


இரண்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு தயங்கி நின்றான் மொய்தீன். என்னப்பா நிக்கிற, ஏதாவது வேணுமா? என்று கேட்டாள் சுதா. மேடம், நீங்க தப்பா நினைக்கலைன்னா….. என்று இழுத்தான் மொய்தீன். என்ன சொல்ல வருகிறான் இவன்...ஏதாவது கடன் கிடன் கேட்பானோ என்ற சந்தேகத்தோடு, தப்பா நினைக்க மாட்டேன், சொல்லு...என்றாள் சுதா.


மேடம், இப்பா நான் காவிரி நகர், ரயில் காலனி, மாதாபுரம் போயிட்டு அப்புறம் திரும்பிப் போவேன்..நாளைக்கும் நாளான்னிக்குமா ரெண்டு நாள் லீவு கேட்டிருக்கேன் மேடம். அப்புறம் ரெண்டு நாள் ஹாலிடே வேற… அதனால… நீங்க தப்பா நினைக்கலேன்னா… என்று மறுபடி இழுத்தான்.


உம், சொல்லு என்றாள் சுதா.


இல்ல மேடம்...இப்ப நான் போயி திரும்பறத்துக்குள்ளே பார்சல நல்ல பாத்து இதுல ஒண்ணையோ இல்ல ரெண்டையுமோ திருப்பணும்னா ஒரு ரெண்டு மணிநேரத்தில எனக்கு சொல்லிட்டீங்கன்னா நான் திரும்பும் வழியிலேயே கலெக்ட் பண்ணிப்பேன்... உங்களுக்கும் இன்னிக்கே வேலை முடியும்….இல்லாட்டி நாலு நாள் வெயிட் பண்ண வேண்டிவரும்..ன்னு சொல்றதுக்குத்தான் எப்படி சொல்றதுன்னு யோசிச்சேன் மேடம்...தப்பா நினைக்காதீங்க...என்ற சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தான் மொய்தீன்.


இதில் தப்பாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது என்ற சிந்தனையுடன் பார்சலைப் பிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திற்குள்ளானாள் சுதா.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home