அப்புசாமி
நம் வயதினருக்கு அப்புசாமி-சீதா பாட்டி கதைகள் பரிச்சயம் ஆகியிருக்கும். அதில் ஒரு கதை. ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் வீட்டில் பொழுதை வீணாகக் கழித்துக்கொண்டிருச்கும் அப்புசாமியை ஒரு நாள் பாட்டி "இப்படி ஒரு பைசா சம்பாதிக்க துப்பு இல்லாமல் வெட்டியாய் இருக்கிறீர்களே? வெட்கமாக இல்லை?” என்று ஏதோ கோபத்தில் பேசிவிட, அப்புசாமிக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
“என்னையா சம்பாதிக்க துப்பில்லை என்கிறாய்? ஒரு பத்து ரூபாய் கொடு. நாளைக்குள் இதை வைத்து இதற்கு மேல் குறைந்தது ஒரு ரூபாயாவது சம்பாதிக்கிறேனா இல்லையா பார்!” என்று சவால் விட்டார். அதிசயமாக அப்புசாமிக்கும் ரோஷம் வந்ததைக் கண்டு வியந்த சீதாப்பாட்டி, ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு புத்தம்புது பத்து ரூபாய் தாளை எடுத்து, “பார்க்கலாம் உங்கள் சாமர்த்தியத்தை" என்றபடி அவரிடம் கொடுத்தாள்.
தான் காண்பது கனவா அல்லது நனவா என்ற கிள்ளிப்பார்த்துக்கொண்ட அப்புசாமி, சலவை நோட்டை சட்டைப்பையில் போட்டுக்கொண்டு பீமா ராவ் வீட்டுக்கு, அவனிடம் இதை வைத்து மேலும் எப்படி பணம் பண்ணுவது என்று ஆலோசனை கேட்கக் கிளம்பினார். அவர் எதிர்பார்த்ததுபடியே அங்கே ரசகுண்டுவும் இருந்தான். ஏனு தாத்தா இல்லி யாகே பந்தித்தீரு? என்று கேட்டவனிடம் வீட்டில் நடந்ததை ஒப்பித்தார் அப்புசாமி. டேய் பீமா, இதை வைத்துக்கொண்டு எப்படியாவது இன்னும் ஒரு ரெண்டு ரூபாயாவது சம்பாதிக்கணும்டா...அதுவும் நாளைக்குள்ளாக...என்ன பண்ணலாம்? என்று கேட்டார்.
பலவிதமான ஐடியாக்களுக்குப்பின் இந்தி சினிமா டிக்கட் வாங்கி ப்ளாக்கில் விற்பது என்று முடிவு செய்தனர். அதன்படி நகரில் இந்தி சினிமா எங்கெங்கெல்லாம் ஓடுகிறத என்பதைப் பார்த்து ஒரு தியேட்டருக்குச் சென்று அங்கு கவுண்ட்டரில் முதல் ஆளாக நின்று ரூ.2.50 வீதம் நான்கு டிக்கட் பத்து ரூபாய்க்கு வாங்கிக்கொண்டார் அப்புசாமி தாத்தா. சீக்கிரம் ஹவுஸ்-ஃபுல் போர்டு மாட்டிவிடுவான். அப்புறம் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் லாபம் வைத்து விற்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டே வெளியில் வந்து ஆசையுடன் நின்றார். அவருடைய அதிர்ஷ்டம், அன்று பார்த்து கூட்டமே இல்லை. நேரம் ஆக ஆக யாரும் வராமல் முதலுக்கே மோசமாகிவிட்டால்? அப்புசாமிக்கு பயம் தொற்றிக்கொண்டது. லாபமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். வாங்கிய டிக்கட்டை அப்படியே திருப்பிக்கொடுத்துவிடலாம் என்ற கவுண்ட்டர் ஆளிடம் பேசினால் அவன் அதெல்லாம் திருப்பி வாங்க முடியாது, வேண்டுமென்றால் இனி வருபவர்களிடம் சாமர்த்தியம் இருந்தால் விற்றுக்கொள் என்று சொல்லிவிட்டான். சரி இனிமேல் வருபவர்களிடமாவது அதே விலைக்கு விற்றுவிடலாம் என்றால் வந்த ஒரு இரண்டு பேரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்து அகன்றுவிட்டனர். வேறு வழி தெரியவில்லையே, என்ன செய்வது என்ற கவலையுடன் இருந்தவருக்கு பீமாராவ் ஆறுதல் சொன்னான். “தாத்தா இன்னிக்கு சேட்டுக் காரங்களுக்கு ஏதோ பண்டிகையாம்..அதான் யாரும் வரல்லை...பேசாம 2.50 டிக்கட் 2 ரூபாய் 2 ரூபாய் அப்படின்னு கத்தி வித்துடுங்க தாத்தா...என்றான். அவனை முறைத்தவாறே வேறு வழியில்லாமல் அதையும் செய்ய முயன்றார் அப்புசாமி தாத்தா.
அப்போது அவர் தோளின் மேல் ஒரு கை விழுந்தது. சந்தோஷத்துடன் திரும்பி, “வா ராஜா...எத்தினி டிக்கட் வேணும் ஒனக்கு?” என்று கேட்டவரை முறைத்துப் பார்த்தார் அந்த போலீஸ்காரர். “இன்னாய்யா… பாத்தா இவ்ளோ வயசாவுது..ஆனா நீ பண்ற வேலை டீசன்ட்டா இல்லியே….பிளாக்லேயா டிக்கட் விக்கிற? நட ஸ்டேஷனுக்கு" என்றார் போலீஸ். “டேய் பீமா, ரசகுண்டு, உங்க ஐடியாதானேடா இது? காப்பாத்துங்கடா…”என்று கதறியபடியே சுற்றுமுற்றும் பார்த்தார். அவர்கள் அங்கே இருந்தால்தானே? எப்போது பறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. போலீஸிடமே கெஞ்சினார். “சார், நான் ப்ளாக்ல டிக்கட் விக்கல சார்.. பாருங்க பத்து ரூபாய் டிக்கட்டை எட்டு ரூபாய்க்குத்தான் வித்திட்டிருந்தேன்…” என்று சொல்ல, போலீஸோ, “அதெல்லாம் தெரியாது...கவுன்ட்டர் வெலையைவிட வேற வெலைல வித்தா, ஜாஸ்தியோ கம்மியோ அது பிளாக்தான்" என்று அவருடைய கருத்தை தெளிவாகச் சொல்லி அப்புசாமி தாத்தாவை கழுத்தைத் தள்ளி ஜீப்பில் ஏற்றினார்.
அப்புறம் சீதாப்பாட்டி வந்து இன்ஸ்பெக்டரிடம் பேசி அவரை விடுவித்ததும், வீட்டிற்குச் சென்றபின் அன்றிலிருந்து சுமார் ஒரு வாரம் அவர் பாட்டியிடம் செம டோஸ் வாங்கியதும், பாட்டிக்கு பயந்து நீண்ட நாள் ரசகுண்டுவும் பீமாராவும் அவர் வீட்டுப்பக்கமே வராதிருந்ததும் தொடர் கதையின் மற்ற அத்தியாயங்கள்.
ஏனோ, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக ஆவின் நிர்வாகத்தில் கை வைப்பார்கள் என்பதும். எதிர்பார்ப்புக்கு மாறாக ஆவின் பால் விலையைக் குறைத்திருப்பதும் இப்போது ஞாபகம் வந்து தொலைக்கிறது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home