Thursday, October 24, 2024

ஸ்ரீ ராகவேந்திரர்

 

ஆகவேண்டியதை மனதில் வைத்து

ராகவேந்திரரைத் துதி மனமே - வேண்டுதல்

தகுதியுள்ளதாக இருந்திட்டால் அவர்

மிகுதியாகவே தருவாரே


பக்தி தூய்மை இருந்தால் போதும் நம்

சக்தி எள்ளளவும் வேண்டாமே - உள்ளத்து

உறுதியுடன் அவர் பதம்பணிந்தால்

அறுதியுடன் ஆசி கிடைத்திடுமே


நேர்மையான நிஜ உழைப்பிருந்தும்

கூர்மையான வினை பாதிப்பால் - கடும்

துன்பமே வாய்த்தாலும் அவர் கருணை

அன்புடனே அதை விலக்கிடுமே


ஜீவ சமாதியில் அமர்ந்திருந்தும் நம்மை

தீவினையிலிருந்து மீட்பாரே - அவரருள்

உண்மையென்பதை உணர்ந்தாலே

உய்யும் வழிதான் கிடைத்திடுமே


நல்லவையே என்றும் நினைத்திருப்போம்

நற்செயல்களையே என்றும் நடத்திடுவோம் - மனம்

மந்த்ராலயத்தை நிதமும் வலம் வந்தால்

மகானின் தரிசனமும் வாய்த்திடுமே


சத்திய தர்ம ரதமேறி நம்மை

நித்தியமும் நல்வழி நடத்தும் - குருராஜரின்

ராஜ்ஜியப் பிரஜையாகிட விழைந்தாலே

பூஜ்யரின் அருள் நம்மைப் பிணைத்திடுமே


Aug 25, 2021


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home