கேளுங்கள் கொடுக்கப்படும்
முதுமை என்பதால் ஒதுக்க நினைத்தாயோ?
அருமை என்பதை உணர்ந்துகொள்.
முடிவின் தொடக்கம் என்று நகர்கிறாயோ?
முடிவின் கரகோஷத்திற்கு எழுந்து நில்.
வாழ்ந்து முடித்தவள் என நினைக்கிறாயோ?
வாழ்க்கையை பிரதிபலித்தவள் என்பதை நினைத்துப் பார்.
காலத்தைக் கடத்தியவள் அல்ல நான்
காலங்களை இணைத்தவள் மறக்காதே.
வெற்று இடத்தை நிரப்பியவள் நானல்ல
இருப்பை முழுவதுமாக அனுபவித்தவள் நான்.
அழிவை நோக்கி காத்திருக்கவில்லை நான்.
அறிந்துகொள்பவருக்காகக் காத்திருக்கிறேன்.
பசுமை காய்ந்த பயிரல்ல நான்.
புதையல் கொண்ட பொக்கிஷம்.
கிறுக்கிய வெற்றுக் காகிதமும் அல்ல
வழிகாட்டும் அரிய வரைபடம்.
சருமத்தின் சுருக்கங்கள் மூப்பின் வரவல்ல
சுதந்திரமாய் சுற்றிய பயணத்தின் சுவடுகள்.
மீண்டும் சொல்கிறேன் கேட்டுக்கொள்.
முடிந்து நினைவில் வைத்துக் கொள்.
முதியவள் என்று ஒதுக்காமல்
முதிர்ந்தவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home