Monday, February 18, 2019

வலி

கவலையோடு காத்திருந்தார் சத்யமூர்த்தி.  குமாரின் வேதனையைத் தீர்க்கும் வழி இன்றாவது கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நாற்காலியில் குமாரின் அருகில் அமர்ந்திருந்தார்.  ‘என்னப்பா நினைக்கறீங்க நீங்க, இன்னிக்காவது ஏதாவது விடை கிடைக்குமா?” என்று அவரின் கவலையை மேலும் அதிகரிக்கும் விதமாக வினவினான் குமார்.  குமார் சத்தியமூர்த்தியின் மகன் அல்ல.  அவரது முதலாளி..அதாவது முதலாளியின் மகன்.  அவர் சிறுவனாக இருந்தபோதே மில் ஓனர் கண்ணன் வீட்டில் ஒரு எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக வீட்டில் தனது பொறுப்பான வேலையாலும், சுறுசுறுப்பாலும் நல்ல பெயர் சம்பாதித்து எல்லா வேலையாட்களையும் மேய்க்கும் மூத்த வேலையாளாக உயர்ந்தவர்.  அவருக்கு இருபது வயதாக இருக்கும்போது பிறந்தவன் குமார்.  தந்தையைவிட அதிக நேரம் அவருடன் பழகியதாலோ அல்லது குழந்தைப் பருவத்திலிருந்தே தூக்கி வளர்த்த பாசத்தினாலோ என்னவோ குமார் எப்போதும் சத்யமூர்த்தியை அப்பா என்றே அழைப்பான்.   அவர் அவனை நேரத்திற்கேத்தாற்போல் தம்பி அல்லது சின்னமுதலாளி என்றே அழைப்பார்.  இப்போதெல்லாம் பெரும்பாலும் தம்பிதான்.குமார் சாதாரணமானவன் அல்ல.  செல்வந்தர் வீட்டில் பிறந்த செருக்கு நிறையவே உண்டு.  சிறுவயது முதலே யாருக்கும், ஏன் அவனது தந்தைக்கும்கூட அடங்காதவனாகவே வளர்ந்தான்.  அவனுடைய போக்கு சற்றும் பிடிக்காத அவனது தந்தை சிறிது சிறிதாக அவனை கண்டிப்பதை விட்டுவிட்டார்.  அதனால் மேலும் கெட்டுப்போனான் குமார்.  அனைவரையும் பாடாய்ப் படுத்தினான்.  வீட்டிலும் சரி, மில்லிலும் சரி,வேலையாட்கள் அவனைப் பார்த்தாலே நடுங்கி ஓடினர்.  அவனிடம் சத்யமூர்த்தி வாங்கிய வசவும் அடியும் உதையும் ஏராளம்.  ஆனாலும், தன் குழந்தைபோலவே பாசத்துடன் வளர்த்ததால் சத்யமூர்த்தி அவனது குறைகளை பொருட்படுத்தாமல் அவனது மனப்போக்கு அறிந்து அவனுக்கு அணைப்பாகவும் ஆதரவாகமவும் பக்குவமாக தகுந்த சமயத்தில் புத்திமதி சொல்லிஅவன் போக்கில் விட்டுப்பிடித்து நடந்தபடியானல் அவர்மேல் மட்டும் அவன் நிறைய மரியாதை வைத்திருந்தான்.  அவர் சொல்லை ஓரளவு கேட்பான்.  இப்போது குமாருக்கே ஐம்பது வயதாகிவிட்டது.  சில வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தையார் நோய்வாய்பட்டு காலமானார்.  தாயார் அவருக்கும் முன்னமே மறைந்துவிட்டார்.  மனைவியும், மகனும் மகளும் பண்டிகை மற்றும் வீட்டு விசேஷங்களில் மட்டும் கூடியிருந்தனரே தவிர,

குமாரின் கோபமான போக்கால் இன்றளவும் எப்போது எதனால் யார் முன்னால் எப்படி ஏசுவானோ என்ற பயத்துடன்  சற்று தள்ளியே ஒட்டாமல் இருந்தனர்.  குமாருக்கு கடந்த நான்கைந்து வருடங்களாக வயிற்றில் ஒருவித வலி இருந்துகொண்டே இருந்தது.  ஊரில் உள்ள அத்தனை வைத்தியர்களையும் பார்த்தாகிவிட்டது, அவர்கள் சொன்ன அத்தனைவித வைத்தியங்களையும் எடுத்துக் கொண்டாகிவிட்டது.  ஆனாலும் அவன் வயிற்றுவலி மட்டும் சற்றும் அடங்காமல் எந்நேரமும் அவனுக்கு சங்கடம் கொடுத்துக்கொண்டே இருந்தது.மூளைக்கு எட்டிய வழிகளையெல்லாம் ஆராய்ந்தும் பலன் இல்லாதபடியால் அதற்கு அப்பால் என்ன செய்யமுடியும் என்று முதல் முறையாக சற்று தணிந்து உறவினர்களில் மூத்தவர்களையும் தன் மனைவியையும் கலந்தாலோசித்தான் குமார்.  அவர்கள் தந்த யோசனைகளுள் ஒன்று ஒரு நல்ல ஜோசியர் அல்லது மலையாள தந்திரி யாரிடமாவது அவனுடைய ஜாதகத்தை காண்பித்து அவர்கள் ஏதாவது தீர்வு தருவார்களா என்று பார்ப்பது.  அனுபவ அறிவால் இதுவும் நல்லதென்று தோன்றவே, சத்யமூர்த்தியும் குமாருக்கு இந்த யோசனையைப்பற்றி பரிந்து பேசி, தான் கேள்விப்பட்டிருந்த ஒரு நம்பூதிரியைப் பார்க்க ஒருவாறு சம்மதிக்க வைத்தார்.  அவரைப் பார்க்க மூன்று மாதங்களுக்கு முன்னமே விண்ணப்பித்திருந்தனர்.  இப்போதுதான் அவர் நேரம் கொடுத்திருந்தார்.  சேலத்திலிருந்து திருச்சூருக்கு காரிலேயே வந்துவிட்டனர் சத்யமூர்த்தியும் குமாரும்.  பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தாலும் நாராயண நம்பூதிரியின் வீட்டிற்கு ஒன்பது மணிக்கே வந்துவிட்டனர்.  முன்னமே இன்னும் இரண்டு பேர் காத்திருந்தபடியால் இவர்களை நாற்காலியில் உட்காரவைத்துவிட்டுச் சென்றிருந்தனர் பணியாட்கள்.பத்து என்பது பதினொன்றரை வரைக்கும் நீண்டது. ஒரு வழியாக உள்ளே அழைத்தனர்.  உள்ளே ஒரு பெரிய அறை நடுவில் கம்பீரமாக பலகைமேல் வீற்றிருந்தார் நம்பூதிரி.  எதிரில் இரண்டு பக்கம் குத்துவிளக்குகள்.  இடையில் கோலமிட்டு அதன் நடுவில் ஒரு பெரிய கலசத்தில் சந்தனம் குங்குமம் பூசப்பட்டிருந்த தேங்காயும், ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு மற்றும் சில பூஜைப் பொருட்களும் இருந்தன.  நம்பூதிரிக்கு எதிர்ப்பக்கமாக இன்னொரு மனைப்பலகை இருந்தது.  புன்னகைத்தபடியே அவர்களை வரவேற்ற நம்பூதிரி, “யாருக்கு?” என்று கேட்க, சத்யமூர்த்தி குமாரை முன் நிறுத்தினார்.  “ஒக்காருங்கோ” என்று குமாருக்கு ஆணையிட்டவிட்டு, சத்யமூர்த்தியை அறையின் ஓரத்தில் இருந்த பாயில் அமரச்சொல்லி சைகை காட்டினார் நம்பூதிரி.  குத்துவிளக்கின் திரியை சற்று மேலே வரும்படி ஒரு தீக்குச்சியால் தூண்டிவிட்டு சுடரை பிரகாசப்படுத்தினார்.  கைகளை கோர்த்துக்கொண்டு “அம்மே பகவதி….” என்று கண்களை மூடியபடியே பிரார்த்தித்துக்கொண்டு ஐந்து நிடங்கள் மந்திர உச்சாடனம் செய்தார்.  பின்னர் குமாரை தீர்க்கமாக நோக்கியபடியே “என்ன வினை?” என்று கேட்க, தன் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, தன் தீராத வயிற்று வலியைப் பற்றி விவரமாகக் கூறினான் குமார்.  ஜாதகத்தை ஆராய்ந்த நம்பூதிரி மேலும் அவனது சரித்திரத்தையே அறிந்துகொள்ளும்விதமாக பல கேள்விகள் கேட்டபின் ஒரு எலுமிச்சம்பழத்தையும் சில கொட்டைப்பாக்குகளையும் குமாரின் கையில் கொடுத்து இரண்டு கைகளாலும் அவற்றை இறுக்கமாக மூடியபடியே தேவியைப் பிரார்த்தனை செய்யும்படி பணித்தார்.  பின்னர் அவற்றை வாங்கி ஒரு தாம்பாளத்தில் கையைச்  சுழற்றியபடியே வீசி, எலுமிச்சம்பழம் மற்றும் பாக்குக் கொட்டைகள் விழுந்திருந்த இடங்களைக் குறித்துக்கொண்டு தன் கைகளிலேயே விரல்களை நீட்டி மடக்கி நிறைய கணக்குகள் போட்டுக்கொண்டார்.   மீண்டும் மந்திர உச்சாடனம் செய்தார்.  சற்ற நேரத்திற்குப் பின் கண்களைத் திறந்து, “ஒன்னும் சரியில்லா.  தாராள குழப்பங்ஙளுண்டு. வளர தோஷமுமுண்டு.  பக்ஷே  மார்க்கம் ஒண்ணு இருக்கு.  நிங்ஙளால் முடியுமா எனிக்கறியில்லா” என்றார்.  வழி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட குமார், என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள், நிச்சயமாக செய்கிறேன் என்றான்.  மீண்டும் சில நிமிடங்கள் தியானம் செய்த நம்பூதிரி, எழுந்து சென்று ஒரு நோட்டுப்புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து, அதில் ஏதோ எழுதினார்.  அதை மடித்து ஒரு கவரில் போட்டு குமாரிடம் கொடுத்து, “இவிடேயில்லா....ஊருக்குப்போய் பூஜையில் அதவா கோவில் போய் படிச்சு என்ன எழுதியிருக்கோ அதைச் செய்” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று அவர்களைப் போகலாம் என்பதுபோல் சைகை செய்தார்.    செய்வதறியாது குமார் நிற்க, சத்யமூர்த்தி சுதாரித்துக்கொண்டு “ஸ்வாமி நிங்கள் கட்டணம்…..” என்று கேட்க, அவர் நிங்ஙளிஷ்டம் என்று உண்டியலைக் காண்பித்தார்.ஏதோ வழி காண்பித்திருக்கிறரார் என்ற திருப்தியில் நினைத்ததைவிட சற்று அதிகமாகவே பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு நம்பூதிரியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு வெளியே வந்தான் குமார்.  ஆர்வத்தை அடக்க முடியாதவனாக சட்டைப் பையிலிருந்து அந்தக் கவரை எடுத்து படிக்க முயன்றான்.  உடனே அவனைத் தடுத்தார் சத்யமூர்த்தி.  வேண்டாம் தம்பி.  நல்ல தீர்வு கிடைக்கணும்னா அவர் சொல்றதை அப்படியே கேக்கணும்.  அவசரப்பட்டு தொறந்தோம்னா அதுல எழுதியிருக்கறதுகூட மாறலாம்.  ஒரு நாள்ல என்ன ஆயிடப்போகுது.  கொஞ்சம் பொறு நாளை காலைல நம்ம வீட்டிலேயே பாத்துக்கலாம் என்று சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றார்.  அன்று மாலையை சேலத்திற்குத் திரும்பினர்.நடந்ததையெல்லாம் வீட்டில் மனைவியிடம் ஒன்றுவிடாமல் விவரித்தான் குமார்.  ஒண்ணும் கவலைப்படாதீங்க..காலைல சீக்கரம் எழுந்து குளிச்சு பூஜை பண்ணி பெரியவர் கையாலேயே பிரிச்சுப் பாத்துடலாங்க என்று அவனைத் தேற்றியபடியே படுக்க அழைத்துச் சென்றாள் அவன் மனைவி.பொழுதும் விடிந்தது.  மிகுந்த ஆர்வத்துடன்  சீக்கிரம் எழுந்து அனைவரையும் விரட்டி குளித்து முடித்து பக்தியுடன் பூஜை அறைக்குள் நுழைந்தான் குமார்.  அவனது மனைவி அவனுக்கு மிக முன்னமே எழுந்து பூஜை அறையை தகுந்தபடி தயார் செய்திருந்தாள்.  அனைத்து கடவுள் படங்களையும் வணங்கி கண்ணைமூடி பிரார்த்திக்கொண்டு சத்யமூர்த்தியிடம் அந்தக் கவரைக் கொடுத்து பிரித்துப் படிக்கும்படி கேட்டுக்கொண்டான் குமார்.  சத்யமூர்த்தியும் மிகுந்த அக்கறையுடனும் பக்தியுடனும் கடவுளைப் பிரார்த்திக்கொண்டு கவரைக் கையில் வாங்கி தட்டில் வைத்து கடவுள் படங்களுக்குக் காட்டிவிட்டு பின்னர் மணியடித்து கற்பூர தீபம் காட்டிவிட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு மெதுவாக கவரைப் பிரித்து உள்ளே இருந்த காகிதத்தை வெளியில் எடுத்து குமாரிடம் கொடுத்தார்.திகிலுடன் காகிதத்தை வாங்கிப் படித்தான் குமார்.  ஒரே வரிதான்.  ஆனால் அதை நம்பாதவனாக, என்னப்பா இப்படி எழுதியிருக்கு என்று சத்யமூர்த்தியிடம் அதைக் காணபித்தான்.  அதைப் படித்த சத்யமூர்த்திக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.  நெற்றி முழுவதும் வேர்க்க, பகவதி சரியாத்தான் சொல்லியிருக்கா தம்பி...ஒன்னாலதான் முடியாமான்னு தெரியல…. என்றவாறு துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு பூஜை அறையைவிட்டு வெளியே வந்தார்.மெளனமாக முக்காலியின்மீது அமர்ந்தவர் மனதில் பழைய நாட்கள் மீண்டும் விசுவரூபம் எடுத்தன.  குறிப்பாக அந்த நாள்..கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் ஒரே நாளில் நடந்த நிகழ்வுகள்.  தந்தையிடமிருந்து சிறிதுசிறிதாக பொறுப்புகளை தன்வசம் எடுத்துக்கொண்டு புதிய முதலாளியாய் வலம் வந்தான் குமார்.  வேகம், தைரியம், அலட்சியம், அனைத்தும் அவனிடம் சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தன.அன்று காலை மில்லிற்கு புறப்படத் தயாராக இருந்தபோது கார் டிரைவர் அருணாச்சலம் காலை வணக்கம் சொல்லிவிட்டு தலையைச் சொறிந்துகொண்டே நின்றான்.  புதிய பிஸினஸ் ஒன்றை கைப்பற்றும் நினைப்பில் குமார் சற்று படபடப்பாகவும் இறுக்கமாகவும் இருந்ததை சத்யமூர்த்தி கண்டுகொண்டு சற்று விலகியே இருந்தார்.  ஆனால் அருணாச்சலம் பாவம் கவனிக்கவில்லை.  சைகையால் என்ன என்று கேட்டான் குமார்.  அருணாச்சலம் தயங்கியபடியே “ஐயா, சம்பளம் பத்தமாட்டேங்குது ஐயா..கொஞ்சம் போட்டுக் குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்று சொன்னான்.  குமாருக்கு சட்டென்று கோபம் வந்தது.  மத்த மில் டிரைவரெல்லாம் எவ்வளவு வாங்கறாங்கன்னு தெரியுமில்லே? என்று கேட்டான்.   சத்யமூர்த்தி பின்னாலிருந்து அவனை சும்மா இருக்குமாறு சைகை செய்தார்.  ஆனால் அருணாச்சலம் அதை கவனிக்கவில்லை.  நான் இல்லேன்னு சொல்லலீங்கையா… பின்னே என்ன?சம்பளத்துக்கேத்த வேலையும் இங்க இருக்குங்க எஜமான்..என்ன நான் உன்னை கசக்கிப் பிழியறேன்னு சொல்றியா? நாள் பூரா ஏசி கார்ல சொகுசா ஒக்காரவெச்சாகூட இப்படி பேசறியே?ஐயா கார் ஏசிதான்..ஆனா பொறுப்பு பாருங்க..உங்கள ஆபீஸ்ல விட்டு வந்தவொடனே அம்மாவுக்கு காய்கறி வாங்க ஓடணும்..பின்னாலேயே பசங்கள லேட்டாகாம ஸ்கூலுக்கு போய் சேக்கணும்..ஒடனே உங்களுக்கு திருப்பி சாப்பாட்டுக்கோசரம் ஒரு தடவ மில்லுக்கு வரணும்.  திரும்பற வழியிலேயே பசங்களை திருப்பி ஸ்கூல்லேருந்து கூட்டிக்கிட்டு வரணும்.  அதுக்கபறமாவது கொஞ்சம் ஒக்காரலாம்ணு பாத்தா அம்மா தோட்டவேலை, அது இதுன்னு ஏதாவது குடுத்துக்கிட்டே இருப்பாங்க..  நான் கொறயா சொல்லலீங்கய்யா.. எல்லாத்தையும் பொறுப்பா செஞ்சிக்கிட்டுதான் இருக்கேன்.. ஆனா வெலவாசி முன்னமாதிரி இல்லய்யா..  பணம் பாத்து பாத்து செலவு பண்ணாக்கூட பத்தலய்யா.. அதனால்தான்…  ஒனக்குப் பத்தலேங்கறதால நான் குடுத்துண்டே இருக்க முடியுமா? நீதான் வாங்குற சம்பளத்துல சரியா செலவு பண்ணனும்.. அத விட்டுட்டு சும்மா எம்பிராணனை வாங்காதே..சரி, சரி, வண்டி எடு..இன்னிக்கு எட்டரைக்குள்ளே பார்ட்டி வந்துடுவாங்க..பாருங்கையா...இந்த மாதிரி அவசரம்னா நான் எவ்வளவு கூடுதல் பொறுப்பா இருக்கணும்?  நான் கொஞ்சம் அசந்தேன்னா அப்புறம் உங்க கதி என்னாகும்ணு யோசனை பண்ணுங்கையா..ஓஹோ...நீ தான் எங்களையெல்லாம் காப்பாத்திட்டிருக்கியா?விஷயம் வேறுவிதமாகத் திரும்புவதை கவனித்த சத்யமூர்த்தி உடனே குறுக்கிட்டுஅருணாச்சலத்தை எச்சரித்தார்.  அடேய் ஆபீஸுக்குக் கெளம்பும்போதா இதெல்லாம் பேசுவாங்க...இத அப்புறம் பாத்துக்கலாம்...மொதல்ல ஐயாவ ஆபீஸ்ல விட்டுட்டு வா...போ… என்று அதட்டினார்.அதற்குள் குமார் உக்கிரமாகியிருந்தான்.  இனிமே இவன் வேணாம்ப்பா…. இன்னிக்கு நானே ஓட்டிக்கிட்டுப் போயிடறேன.  எப்போ இப்படி பேசறானோ அப்ப என்னவேணா பண்ணினாலும் பண்ணுவான்...பசங்களகூட வேற டிரைவர் போட்டு அனுப்புங்க… இவன சாயந்தரம் வந்து வெச்சுக்கறேன்… என்று பொறிந்துவிட்டு அருணாச்சலத்தை கையால் ஒதுக்கிவிட்டு வேகமாக அவனே வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.மதியம் அவனை சாந்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சத்யமூர்த்தி தானே சாப்பாடு எடுத்துக்கொண்டு சென்றார்.  அவர் குமாரின் கேபினில் கேரியரை வைக்கச் செல்லும் நேரத்தில் அங்கே ஈரோடு சூப்பர்வைசர் மாணிக்கத்துடன் வாக்குவாதத்தில் இருந்தான் குமார்.  மாணிக்கத்தின் கீழ் வேலைபார்க்கும் பத்து பேரும் நூறு ரூபாய் அதிகம் கொடுத்தால்தான் நாளையிலிருந்து வருவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.  எப்படி சமாளிக்ப் போகிறாய் என்று மாணிக்கத்தைக் கேட்டான் குமார்.  அத்தனை பேரும் வேலையில நல்ல கெட்டிக்காரங்க ஐயா..இப்போ குடுத்தாதான் நமக்கும் நல்லது..அடுத்த ரிவிஷன்ல ரொம்ப கேக்கமாட்டாங்க..என்றவனை விஷமமாகப் பார்த்தான் குமார்.  ஓஹோ...அவங்கள ஒனக்குச் சாதகமா திருப்பிக்கிறியோ?  எனக்கு ஒண்ணுமில்லே… அத்தனை பேருக்கும் ஆளுக்கு நூறென்ன  இருநூறாகவே குடு...ஆனா அதை நான் உன் சம்பளத்திலேந்து பிடிச்சுக்குவேன்.. ஆளாளுக்கு ஆடறீங்களா..நான் ஒருத்தன்தான் கிடைச்சேனா உங்களுக்கெல்லாம்..என்று கோபமாக கத்தினான்.  மாணிக்கமும் விடவில்லை.  நான் சொல்றதை சொல்லிட்டேன் ஐயா...அப்புறம் புரொடக்ஷன் வரலைன்னு என்னை விரட்டாதீங்க..என்று சொல்லவே மேலும் கோபமுற்ற குமார் அவனைப் பார்த்து வேலக்காரங்கள சமாளிக்க முடியலேன்னா எதுக்கு சூப்பரைவைசரா இருக்கீங்க...கெளம்புங்க என்று உரத்த குரலில் கத்தினான்.  சரி ஐயா..என்னால முடியல...நீங்க வேற ஆள பாத்துக்குங்க என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறினான் மாணிக்கம்.  இதை எதிர்பார்க்காத குமார் சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.சாப்பாட்டு கேரியரை மேஜையில் வைக்கப்போன சத்யமூர்த்தியிடம்… அப்பா இன்னிக்குக் காலையிலேயிருந்தே எதுவும் சரியாகவே இல்ல...எனக்குத் தலை வலிக்குது...நான் வீட்டுக்கே வந்து அங்கேயே சாப்பிடறேன்...இதை எடுத்திண்டு வந்திடுங்க என்று கூறி புறப்பட்டான்.  குமாரைப் பின்தொடர்ந்து வீடு வந்து சேர்ந்தார் சத்யமூர்த்தி.காரின் கதவை படார் என்று கோபமாக மூடியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் குமார்.  அங்கே அவன் வீட்டுத் திண்ணையில் பின்புறம் கட்டிட வேலை செய்யும் சித்தாள்கள் இருவர் தங்களது சாப்பாட்டுப் பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.  யார் நீங்க இங்க என்ன பண்ணறீங்க என்று கேட்ட குமாரிடன் ஐயா உங்க வீட்டு கொளத்துவேலதான் பண்றோமுங்கய்யா...தெனம் மதியம் வெயிலுக்கு இங்கதான் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்திண்டு திரும்பவும் வேலைக்குப் போய்விடுவோம் ஐயா.. என்றனர்.  எங்கிருந்து வந்ததோ அந்த ஆக்ரோஷம் குமாருக்கு..  ஏண்டா...கூலி வேல செய்யற உங்களுக்கு சாப்பிட மில் ஓனர் வீட்டுத் திண்ணை கேக்குதோ..  எழுந்திருங்கடா…  எழுந்து போய் ரோட்டுல வெச்சுத் தின்னுங்க என்று சட்டென்று அவர்களுடைய சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்து வீசியெறிந்தான்.  சத்யமூர்த்தி உட்பட அனைவரும் வெவெலத்துப்போய்விட்டனர்.  கோபமாக கண்களெல்லாம் சிவந்து பெருமூச்செறிந்துகொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டான் குமார்.  என்னாங்க இது… என்னதான் ஓனரா இருந்தாலும் மனுஷனா இவரு?  அவரு வீட்டுக்கு வேல செய்றவங்க சாப்பாட்டை தூக்கி வீசராறே?  இவரா எங்களுக்கு சம்பளம் குடுக்குறாரு?  மேஸ்திரி குடுக்குறாரு… இந்த வீடு இல்லன்னா வேற வீடு...நாங்க எங்கயும் ஒழச்சுப் பொழச்சிப்போங்க… இவருகிட்ட கையைக்கட்டித்தான் சாப்பிடனும்ணு இல்ல…. திங்கிற சோத்த அலட்சியம் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவாங்க…. மண்ணுல விழுந்த அந்த சாப்பாட்டை இனிமே யார் சாப்பிடுவாங்க… .நாய்க்குத் தான் போடனும்…. இன்னிக்கு நம்ம வயித்துல அடிச்சுட்டாரு… இது மாதிரி இன்னும் எத்தனை பேர் வயித்தெரிச்சலை வாங்கியிருக்காரோ… எவ்வளவு பணம் இருந்தா என்னங்க.... இத்தனை திமிரு கோபமெல்லாம் நல்லதுக்கில்லீங்க… என்று மிகவும் வருத்தத்துடன் சத்யமூர்த்தியிடம் முறையிட்டனர்.  அவர் தன் கையிலிருந்து ஐம்பது ரூபாய் எடுத்துக்கொடுத்து பக்கத்தில் உள்ள ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டார்.  ஆனால் அதை அவர்கள்  நாங்கள்ல்லாம் சாப்பாடே இல்லாமல் ரெண்டு மூணு நாள்கூட இருப்போங்க...என்று கூறி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர்.அந்த சம்பவம் அவர் மனதில் அழியா வடுவாக பதிந்துவிட்டது. குமார் தூங்கினானோ என்னவோ, சத்யமூர்த்தியால் அன்றிரவு தூங்க முடியவில்லை.  அன்று மட்டுமல்ல.  அடுத்த சில இரவுகள் முழுவதும் நிம்மதியில்லாமல் அவதிப்பட்டார்.  தான் எடுத்து வளர்த்த பிள்ளை இப்படி ஊரே ஏசும்படி நடந்துகொள்கிறானே என்று கவலைப்பட்டார்.  கண்ணீர் சிந்தினார்.  கடவுளிடம் வேண்டினார்.மறுநாள் காலையில் கட்டாயமாக அவனை சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துக்கொண்டு சென்றார்.  போகும் வழியில் கடந்த நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவனுடன் அலசினார்.  முதலில் சிறிது கோபமாகத்தான் இருந்தான் குமார்.  பின்னென்ன அப்பா..எங்கயோ மூலைல ஒக்காந்திருந்தவங்கள கூட்டிட்டு வந்து வேலை கொடுத்து நல்ல சம்பளமும் குடுத்தாக்கூட இன்னமும் எங்கிட்ட எப்படி கறக்கலாம், என் சொத்த எப்படி அனுபவிக்கலாம்ன்னுதான் இருக்காங்களே தவிர நமக்கு இவ்வளவு பண்ணறானேங்குற நன்றி கொஞ்சமாவது இருக்கா பாரு இவனுங்களுக்கொல்லாம் என்று அனைவரையும் சாடினான்.  அப்படியில்ல தம்பீ...காலம் ரொம்ப மாறிக்கிட்டு கெடக்கு.  அவங்க கேக்கறது தப்போ ரைட்டோ, அதை நாம பேசித்தான் சரி பண்ணிக்கிணுமே தவிர இத்தனை நாள் நம்மகிட்ட வேலை பாத்தவங்கள எடுத்தோம் கவுத்தோம்னு பகைச்சிக்கக்கூடாது தம்பி..அவங்களும் பாவம், வேற வழியில்லாம தான நம்ம கிட்ட கேக்கறாங்க?  நீயே யோசிச்சுப்பாரு...நீ என்ன சும்மாவா அத்தனை காசு தர்றே?  அதுக்கேத்த சரக்கு அவங்ககிட்ட இருக்கறதுனால தான அவங்கள வேலைக்கு வெச்சுக்கிட்டிருக்கே?  அருணாச்சலத்தையே எடுத்துக்கோ..  அவனளவு பொறுமையா அத்தனை வேலையும் சுணங்காம பண்ணற டிரைவர் யாரு இருக்கா இப்போ?  மத்த மில் டிரைவரெல்லாம் இவனோடு பொறுப்புல பத்துல ஒரு பங்கு பண்ணமாட்டாங்க.  மாணிக்கம்கூட அப்படித்தான்.  அந்த பத்துபேர் பண்ணற வேலையை இன்னிக்கு வேற ஆள் வெச்சு பண்ணனும்னா கொறஞ்சது இருபது போராவது வேணும்..அதுவும் தப்புந்தவறுமா பண்ணுவானுங்க.  நீதான் இன்னும் கொஞ்சம் பொறுமைய கத்துக்கிடனும் தம்பி..இப்பவாவது நான் இருக்கேன்...இன்னும் எத்தனை நாள் இருப்பேனோ தெரியாது...எனக்கப்புறம் ஒனக்குப் பக்கத்தில நின்னு தைரியமா புத்தி சொல்றத்துக்கு யாரும் இருக்கமாட்டாங்க தம்பி.. நீயே மாறிட்டாதான் நல்லது... என்று குமார் தன் தவற்றை உணரும்படியாக அறிவுரை கூறினார்.அவருடையநல்ல மனதுக்கேற்ப காலம்  மாறியது, குமாரையும் சிறிது மாற்றியது.  குமாரின் பிஸினஸ் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தது.  குமாரும் தன்னுடைய மில் மட்டும் என்றில்லாமல் ரோட்டரி, லயன்ஸ், பெடரேஷன் என்று பல அங்கங்களில் உறுப்பினரானான்.  முக்கிய புள்ளி என்பதால் அவனைச் சுற்றி எப்போதும் அவனைப் புகழ்ந்தபடியே ஒரு வட்டம் இருக்கத் தொடங்கியது.  அந்த வட்டத்தினர் பழக்கத்தில் ஏற்பட்ட மயக்கத்தில் அவனும் மூழ்கி, வீட்டில் இருக்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினான்.  ஓரு பக்கம் வீட்டிலும் ஆபீஸிலும் நிம்மதி தவழத்தொடங்கியது என்றாலும் மறு பக்கம் குமாரின் உடல்நிலை தளரத் தொடங்கியது.  சிறிதுசிறிதாக எடை கூடியது.  தூக்கம் குறைந்தது.  வெளியூர் பயணம் சென்று வந்தால் வயிற்று வலி வரத்துவங்கியது.  படிப்படியாக பயணத்தைக் குறைத்தும்கூட இப்போதெல்லாம் வயிற்று வலி நிரந்தரமாக இருந்தது.  கொஞ்சமாக இருந்த வலி நாளாக நாளாக அதிகமாகவே அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும்படி ஆகியது.  அப்படியும் குறையாததால் தான் தற்பொழுது திருச்சூர் நம்பூதிரியிடம் ஜாதகம் காட்டி பரிகாரப் பிரார்த்தனை.சந்தன ஊதுபத்தியின் அடர்ந்த வாசம் நாசியைத் தாக்க, திடுக்கிட்டு விழித்தார் சத்யமூர்த்தி.  கையிலிருந்த காகிதத்தை மீண்டும் ஒருமுறை பிரித்துப் படித்தார்.  “சூலை சரியாக ஒரு  மண்டலம் நடுமதியம் நடுத்தெருவில் வெயிலில் நின்னு ஊணு கழிக்கணும்”.  அந்தச் சித்தாள்கள் அவருடைய மனக்கண்ணில் நிழலாடினர்.  பெருமூச்சுடன் குமாரையே பார்த்துக்கொண்டிருந்தார் சத்யமூர்த்தி.
1 Comments:

Blogger Unknown said...Super. Simple moral conveyed in an interesting mode. Keep writing Raghu. Sharing with my brother too.yes reminded of do e one.god bless that person 😁

February 19, 2019 at 9:20 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home