Thursday, December 12, 2019

ஜிங்லி
ஆரம்பத்தில் எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. என் சம்மந்தி வீட்டில் சம்மந்தியும் சரி, சம்மந்தியம்மாவும் சரி, மாப்பிள்ளையும் சரி, மாப்பிள்ளையின் தம்பியும் சரி, வீட்டில் எந்த சாமான் தேடினாலும்அவரைத்தான் கேட்பார்கள். அவரும் சளைக்காமல் எல்லோருக்கும் எது வேண்டுமோ அதைக் கொண்டு வந்து தருவார், அல்லது வீட்டில் எங்கு இருக்கிறது என்று சரியாகச் சொல்லுவார். அனைவரும் அவரை "காகா" என்று தான் அழைத்தார்கள். அதாவது, என் சம்மந்தியின் சிற்றப்பா அவர். எங்கள் மொழியில் காகா என்பது வழக்கம். அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது. நானும் என் மனைவியும் கூட அவரை காகா என்று அழைக்கத்தொடங்கிவிட்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

என் மாப்பிள்ளை அப்போது இங்கிலாந்திலும் அவரது தம்பி அமெரிக்காவிலும் இருந்தனர். அவர்கள் வந்துசெல்லும்போதெல்லாம் அவர்கள் வந்தவுடனே அவர்களது பாஸ்போர்ட் மற்றும் இதர முக்கிய பொருட்கள் எல்லாம் வாங்கி பத்திரப்படுத்திவிடுவார். இந்தக்காலத்து இளைஞர்களைப்பற்றி அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எங்காவது வைத்துவிட்டு கிளம்பும் நாளன்று இங்கேதான் வைத்தேன் இப்போது காணோம் என்று தையா தக்காவென குதிப்பார்கள். இதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் மிகப் பொறுப்பாக முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவார்.


ஏதோ காரணத்தினால் திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை முறை. நேரத்திற்கு சாப்பாடு, அதுவும் மிதமான அளவில் மட்டுமே. மாலையில் சிறிய சிற்றுண்டி, இரவில் சிறிதளவு மோர்சாதம் மட்டும். இதில் மாற்றமே இருக்காது.

வயது எழுபதைத்தாண்டியிருந்தாலும் அவரது சுறுசறுப்பு இளைஞர்களையே வியப்பிலாழ்த்தும். ஒரு நாளைக்கு பலமுறை மாடி ஏறி இறங்கி நிற்காமல் இயங்கிக்கொண்டிருப்பார். உலக விவரங்களில் மிகவும் ஆர்வமுள்ளவர். வீட்டில் ஜெனரல் நாலெட்ஜ் போட்டி வைத்தால் நிச்சயம் அவர்தான் ஜெயிப்பார். எந்த மாநிலத்தில் எந்த நாட்டில் யார்யார் ஆள்கிறார்கள், அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது, ஜி எஸ் டி நல்லதா கெட்டதா, எல்லாவற்றையும் அக்குவேர் ஆணிவேராக அலசுவார். லேட்டஸ்ட் படம், சீரியல் எதுவும் விடமாட்டார். ஆன்லைனில் பொருட்கள் வாங்கித்தள்ளுவதில் அவருக்கு அலாதி இன்பம். கைநிறைய பென்ஷன் வந்ததால் செலவைப் பற்றி எப்போதும் அவர் கவலைப்பட்டதில்லை. அதே சமயம் பொருட்களுக்கான சரியான விலையைப்பற்றி நான்கைந்து இடங்களில் தேடி ஒப்பிட்டு யார் குறைந்த விலையில் விற்கிறார்களோ அதையே வாங்கும் சாமர்த்தியம் அவருக்கு இருந்தது. இளைஞர்களுக்குப் போட்டியாக, இதோ பார்… என்னாலும் முடியும் என்று மொபைல் போன், அமெசான் ஸ்டிக், -பேட் என்று எல்லாவற்றிலும் தன் வித்தையை காண்பிப்பார்.
விருந்தினர்களின் போனில் சார்ஜ் குறைவாக இருந்தால் அவர்களுக்கு ஏற்ற சார்ஜரையோ கேபிளையோ ஒரு நொடியில் எடுத்துத் தருவார்.

தண்ணீருக்கு மோட்டார் போடுவதும் அவர்தான். ஓவர்ஃப்ளோ ஆகி டாங்க் வழியும்போது ஓடிச்சென்று மோட்டாரை நிறுத்துவதும் அவர்தான். காகா, ஸ்கூட்டர் சாவி பாத்தியா என்று என் சம்மந்தி கேட்டால், நீ தானேடா கடைசியா மார்க்கெட் போய்வந்தே, கிச்சன் டேபிளில் பார் என்று அவருக்கு ஞாபகமூட்டுவார் அது சரியாகவும் இருக்கும். சம்மந்தி வீட்டில் வைஃபை பாஸ்வேர்டு அடிக்கடி மாற்றும் வழக்கம் இருந்தது. அதை சரியாக ஞாபகம் வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உதவுவார். யாருக்காவது சிறிது உடல்நிலை சரியில்லை என்றால்கூட அவசரத் தேவைக்கான அனைத்து மருந்துகளையும் வீட்டில் வைத்திருப்பார், அல்லது குறிப்பிட்ட உபாதைக்கான சரியான மருந்தையும் சொல்வார்.

ஏதாவது ஊர்களுக்குச் செல்லவேண்டும் என்றால் அதற்கு சரியான வழி எது, வண்டி எது என்பது முதற்கொண்டு வழிகாட்டுவார். சிறுவயதில் இந்தியாவின் அனைத்து முக்கிய இடங்களுக்கும் சென்ற அனுபவம் கொண்டு, எந்தெந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும், அங்கு விட்டுவிடாமல் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன, வாங்கவேண்டிய பொருட்கள் என்னென்ன என்று அனைத்தையும் அறிந்த நடமாடும் என்சைக்ளோபீடியாவாகத் திகழ்ந்தார்.

எங்களுக்கு பேத்தி பிறந்தபின் அவளிடம் அவருக்கு அலாதி ஈடுபாடு. அவள் பிறக்கும்போதே ஆஸ்பத்திரிக்கு வந்து கவலையுடன் காத்திருந்தார். குழந்தை பிறந்தவுடன் நர்ஸ் வெளியில் கொண்டுவந்து காண்பிக்கும்போது ஆர்வத்துடன் முட்டிக்கொண்டு முன்னால் வந்து பார்த்து மகிழ்ந்தார். அவள் வளர வளர அவளுக்கு வேண்டிய பொருட்களின் பாதுகாப்பையும் பார்த்துக்கொண்டார். அவள் பேச ஆரம்பித்தவுடன் அவரும் மழலையில் இறங்கி, அவளுக்கு ஜிங்லி என்று பெயர் சூட்டினார். அதனால் அவள் அவரை ஜிங்லி தாத்தா என்று அழைக்க, கடைசியில் அவரது பெயர் ஜிங்லியாக மாறியது! அவளுக்குப் பாடுவதில் ஈடுபாடு இருப்பதைக் கண்ட அவர், குழந்தைதானே, பொழுதுபோக்குதானே என்று பார்க்காமல் நூற்றுக்கணக்கில் செலவு செய்து ஒரு மைக் செட்டை ஆன்லைனில் வரவழைத்து பரிசளித்து அவளது வியப்பில் அகமகிழ்ந்தார்.

நாளடைவில் நுரையீரல் நோயால் மிகவும் அவதிப்பட்டார். சிறிதுகூட மாசு தாங்கமுடியாமல் எப்போதுமே ஆக்ஸிஜன் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானதால் அவரால் முன்மாதிரி வெளியில் செல்ல முடியவில்லை. ஆனாலும் வீட்டு நிகழ்ச்சிகள் வெளியிடத்தில் நடந்தாலும் சிரமப்பட்டு கொஞ்சநேரமாவது இருந்து கலந்துகொண்டுவிட்டுத்தான் செல்வார்.

காலத்தின் கட்டாயத்தால் என் மாப்பிள்ளை பெங்களூருக்கு மாற்றலாகி பேத்தி அங்கு செல்ல நேரிட்டாலும் அவளுடனும் சரி. அமெரிக்காவில் இருக்கும் பேரனோடும் சரி, அவ்வப்போது வீடியோ கால் மூலம் தொடர்பில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். என் சம்மந்தியும அவர் மனைவியும் சேர்ந்து வெளியில் செல்ல இயலாதபடி அவரைப் பார்த்துக்கொள்ளும்பொருட்டு யாராவது ஒருவர் இவருடனேயே இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் அடிக்கடி உடல்நிலை மோசமாகி அவசரம் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. அவர்கள் படும் கஷ்டத்தைப் பொறுக்காத அவர், மிகவும் வற்புறுத்தி தன்னை ஒரு நல்ல முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிட வலியுறுத்தி சேரவும் சேர்ந்தார்.

அவரை கடைசியாக நான் அந்தக் காப்பகத்தில் சென்று பார்த்தபோது என்னிடம் உற்சாகமாகவே பேசிக்கொண்டிருந்தார். அங்க ஒரே அறையில் மூன்று பேர் இருந்தனர். அனைவரையும் பார்ப்பதற்கும் பார்த்துக்கொள்வதற்கும் பலதரப்பட்ட ஆட்கள் அடிக்கடி போய்வந்துகொண்டிருப்பதால் தன்னுடைய ஸ்மார்ட் போனை அங்கு வைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. என்னிடம், வீட்டில் மாடி அலமாரியில் நான் முதலில் வைத்துக்கொண்டிருந்த நோக்கியா இருக்கிறது. அது வேலை செய்யும் நல்ல நிலையில்தான் இருக்கிறது. குறும்பாக, என்ன, டச் (touch) விட்டுப்போய், திரும்பவும் பட்டன் அமுக்கணும்.. அதைக் கொண்டுவந்து வைத்துக்கொள்ளலாம் என்ற இருக்கிறேன் என்று சொல்லிச் சிரித்தார். அவரது pun எண்ணி வியந்தேன்.

அவர் விருப்பத்தின்பேரிலேயே சேர்ந்தாலும், அதன்பிறகு அவரது உடல்நிலை மிகக்குறுகிய காலத்தில் மிகவும் மோசமடைந்து இரண்டு மாதத்திற்குள்ளாகவே இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு திரும்பியபின் அவர் நினைவாகவே உறங்கியிருக்கிறேன். அந்த நோக்கியா போனில் "arrived safely” என்று அவரிடமிருந்து மெஸேஜ் வந்ததுபோல் ஒரு கனவு!0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home