Friday, January 17, 2020

மலர்களே...மலர்களே...


அவன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவனது வயதான தந்தை கோவிலில் அர்ச்சகர். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்குச் சென்று ஸ்வாமி சிலை மீதிருக்கும் பூக்களையெல்லாம் களைந்து அபிஷேகம் செய்வித்து மீண்டும் அலங்கரித்து பூஜை செய்வது தினமும் நடப்பதுதான். கூடவே உதிரி புஷ்பங்களை சந்நதியில் உள்ள மற்ற சிலைகளுக்கும் படங்களுக்கும் சார்த்தும் வேலை வேறு.

பார்ப்பதற்கு சுலபமாக இருப்பதுபோல் தோன்றினாலும், செய்வது மிகவும் கஷ்டம். அதிலும் சற்று உயரத்தில் இருக்கும் படங்களுக்கு புஷ்பம் சார்த்தும்போது அவை சரியாக உட்காராது. மெல்லிய, மிருதுவான மலர்கள்தாம். ஆனால் காம்பில் ஒரு விரைப்புத்தன்மை இருக்கும். அழுத்தி உட்காரவைத்தாலும், சுருள்கம்பி போல எதிர்த்து நின்று படத்தில் இருந்து கீழே விழுந்து விடும். அல்லது முற்றிலுமாக காம்பே இல்லாமல் இருக்கும். அல்லது காம்பு சட்டென்று உடைந்து பூ தொங்கி விடும். சொருக வசதியாக இருக்காது. என்ன, உன் இஷ்டத்திற்கு வளைந்து கொடுப்பேன் என்று நினைத்தாயா? நானாக நினைத்தால் தான் உன் எண்ணப்படி உட்காருவேன். இல்லையென்றால் நீ எவ்வளவு முயன்றாலும் மறுபடி மறுபடி விழுந்துகொண்டுதான் இருப்பேன் என்று புஷ்பங்கள் அவரை கேலி செய்வது போல் தோன்றும்.

அவைகளோடு சண்டைபோட முடியாது என்று அவருக்குத் தெரியும். அதனால் ஜாக்கிரதையாக கவனித்து ஒவ்வொரு சிலைக்கும் படத்திற்கும் தோதான புஷ்பங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து மூச்சை அடக்கி முயற்சி செய்து எட்டி அணிவிப்பார். நிதானமாக மரியாதையோடு செய்தால் சரியாக உட்காரும். சற்ற அவசரப்பட்டால் விழுந்து விழுந்து வேலை வாங்கும். பகவானே, இவைகளோடு மல்லுக்கட்ட மட்டுமாவது எனக்கு பலத்தைக் கொடு என்று பல சமயம் வேண்டியிருக்கிறார்.

காலையும் மாலையும் ஒருமுறை கோவிலில் கொண்டு விட்டுவிட்டு, நடை சாத்தியபின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருவது அவன் வேலை. எத்தனை நாள் அப்பா இன்னும் இந்த மாதிரி கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள், ஓய்வுக்கு சொல்லிவிடுங்களேன் என்ற அவன் பலமுறை கேட்டிருக்கிறான். நான் என்ன பணத்துக்காகவா செய்கிறேன்? ஸ்வாமிக்கு செய்ய கொடுப்பினை வேண்டும். அது கிடைத்திருக்கும்போது தட்டக்கூடாது. முடியவே முடியலை என்கிற நிலை வரும்போது பார்த்துக்கலாம் என்ற பதில் சொல்வார். அட்லீஸ்ட் உதவிக்காவது ஒரு பையனையோ யாராவது ஆளையோ வெச்சிக்கோங்களேன்… இந்த பூக்களோட போராடவே உங்களுக்கு நேரம் சரியா இருக்கு போலிருக்கே… என்பான். அவர் சிரித்துக்கொண்டே, இதெல்லாம் ஒரு பிரச்சினையா...வேலைன்னா எல்லாம் தான் இருக்கும் என்று சொல்லி மழுப்பிவிடுவார்.

***

பசியோடு வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தார்கள் தந்தையும் மகனும். அந்த தயிர் மாத்திரம் பிரிட்ஜிலேர்ந்து எடுத்து வெச்சிக்கோடா… என்று தாயின் கட்டளை. சரியென்று எடுக்கப்போனவனின் கண்ணல் பட்டது மேலே வைத்திருந்த பால்பாக்கெட். அதன் வண்ணம் கண்ணை உறுத்தியது. நேற்றல்லவா பண்டிகை விடுமுறை? இன்றைக்கு எப்பொழுதும்போல் நீல வண்ண பாக்கெட்தானே வந்திருக்க வேண்டும் என்று சிந்தித்தபடியே, அம்மா, ஏன் நேத்திக்குப் போட்ட பாக்கெட் இன்னமும் பிரிட்ஜிலே இருக்கு? காலைல காச்சலையா? என்று கேட்டான்.

காலங்காத்தால எதுக்கு பழைய பால் காச்சணும்ன்னு நான்தான் புதுப்பாக்கெட்டை எடுத்துக் காய்ச்சினேன்… அதுக்கு என்னடா இப்போ? என்று எதிர்க்கேள்வி கேட்டாள் அம்மா. என்னவா? இப்படியே புதுசு புதுசுன்னு எடுத்துண்டே இருந்தா இந்த பழைய பாக்கெட் வீணாயில்ல போகும்? இது ஒண்ணும் சும்மா கிடைக்கல்லே.. காசு கொடுத்து வாங்கறோம். இருவது ரூபாக்கு மேல. தெரிஞ்சுக்கோ.. என்றான். சரிதான் சும்மா இருடா… எப்பப் பாத்தாலும் குத்தம் சொல்லிண்டே…. சரி வா.. சாப்பிட ஒக்காரு என்று அழைத்தாள் அம்மா.

என்ன சமையல்? என்று கேட்டுக்கொண்டே தந்தையின் அருகில் உட்கார்ந்தவனுக்கு கத்திரிக்காய் கறி தட்டில் வைத்தாள் அம்மா. ஆஹா...என்று ரசித்துக்கொண்டே ஒரு காய் எடுத்து வாயில் வைத்துக்கொண்டவனுக்கு மீண்டும் சந்தேகம். ஏம்மா? நேத்தி சாயந்திரம் வாங்கி வெச்ச கீரையில்லை இன்னிக்கு சமைச்சிடலாம்ன்னு சொல்லிண்டிருந்தே? அதை என்ன பண்ணே? கொழம்பு வெச்சிட்டியா? என்ற கேட்டான். இல்லடா… அது அப்படியேதான் இருக்கு. காத்தாலே கூடைக்காரி கிராமத்திலே வெளஞ்சது இப்பதான் பறிச்சதுன்னு இந்தக் கத்திரிக்காய்ன்னு சொல்லிக் குடுத்தா… பாத்தா நெஜமாவே புதுசா பிஞ்சா ரொம்ப நல்லாயிருந்தது… உனக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டேன்… என்றாள் அம்மா.

அதெல்லாம் சரி.. கீரை இன்னிக்கும் பண்ணல்லேன்னா வேஸ்ட்டாத்தானே போகும்? அதை இன்னிக்குப் பண்ணிட்டு இந்த கத்திரிக்காயை நாளைக்குக்கூட பண்ணியிருக்கலாம் இல்லையா? என்று கேட்டதற்கு, இல்லடா… இதுதான் இருக்கேண்ணு அதை மாட்டுக்குப் போட்டுட்டேன்… என்று நிதானமாக பதிலளித்தாள் அம்மா. அவனுக்கு எரிச்சலாக வந்தது. ஏம்மா… நாம என்ன டாடா பிர்லாவா.. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசுல வாங்குற சாமானையெல்லாம் இப்படி வீணடிக்கலாமாம்மா? என்று கேட்டான்.

ஆமாண்டா… நீங்க செய்யற செலவெல்லாம் உங்களுக்குத் தெரியவே தெரியாது. நான் ஒருநாள் ஏதாவது பண்ணிட்டா அதை இப்படி பெரிசா குத்தம் சொல்றதே உன் வேலையாப் போச்சு… என்று கோபத்துடன் முணுமுணுக்கத் தொடங்கினாள் அம்மா. இதை இப்படியே விட்டால் தனக்குத்தான் தலைவலி என்ற அனுபவத்துடன்… சரி சரி… எதுக்குச் சொல்லறேன்னு புரிஞ்சிண்டா சரி… என்று பிரச்சினைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தான்.

தான் உண்டு தன் வேலையுண்டு என்று சாப்பிட்டுக்கொண்டிருந்த தந்தை லேசாக புன்னகைத்தாற்போலத் தோன்றியது அவனுக்கு. திரும்பி சரியாகப் பார்ப்பதற்குள் மீண்டும் மெளனமாக சாப்பிடத் தொடங்கியிருந்தார். வேறு வழியில்லாமல் அவனும் சாப்பாட்டில் கவனம் வைத்தான்.

***

பூக்களைத் தொடுத்து மாலை கட்ட கற்றுக்கொண்டிருந்தாள் கலா. அக்கா ராணிதான் அவளுக்கு டீச்சர். இதப்பாருடீ, நூலை எடுத்து இப்பிடி ரெண்டு விரலைச் சுத்தி பிடிச்சிக்கணும். அப்புறம் கொஞ்சம் நீளமான காம்பு இல்லாட்டி காம்பு தெரியறமாதிரியாவது பூவை எடுத்து இப்படி வெக்கணும். கையை சொழட்டி பூ காம்பை நூல் சுத்திட்டிருக்கிறாமாதிரி திருப்பனும். அப்பறம் மெதுவா அது டைட்டா கவ்விப்பிடிக்கிறாமாதிரி இறுக்கணும்… அப்புறம் அடுத்த பூவை எடுத்து இப்பிடி வெக்கணும்… என்று வரிசையாக கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தாள் அக்கா ராணி.

போ அக்கா… இந்த பூ சரியாவே நிக்க மாட்டேங்குது.. வழுக்கி வழுக்கி வந்துடுது… என்னால கட்டவே முடியல… என்ற அழ ஆரம்பித்தாள் கலா.

ராணி சிரித்துக்கொண்டே சமாதானப்படுத்தினாள். செம்பகத்துக்கே இப்பிடி கஷ்டப்பட்டேன்னா இன்னும் டிசம்பர், அரளி. மல்லிக்கெல்லாம் என்ன பண்ணப்போறே நீ… அரளி எப்பிடி வழுக்கும் தெரியுமா? மல்லிலே பாதி பூவுக்கு காம்பே இருக்காது. ஆனா கட்டினாத்தான் காசு. நீ என்னா பூ கட்டறது சுளுவுன்னு நெனச்சியா? நா எத்தினி நாளா கட்டிக்கிட்டிருக்கேன்… எனக்கே போக்கு காமிக்கும் தெரியுமா? ஆனா இங்க இருக்கறதுலேயே நாதான் ஸ்பீடா கட்டுவேன் தெரிஞ்சுக்கோ. என்னைப் பாத்துட்டு பூ கட்டறது சுளுவுன்னு நெனக்காதே. அதே சமயம் சரியா பழகிட்டா அது கஷ்டமும் இல்லே தெரிஞ்சிக்கோ… என்று சரமாரியாக அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள் ராணி. வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் கலா.

ஏன் அக்கா… ஒவ்வொரு பூவும் தொட்டா எப்படி நைஸா பஞ்சு மாதிரி இருக்கு? ஆனா கட்டும்போது மாத்திரம் ஏன் நம்ம சொல்றத கேக்காம மொரண்டு பிடிக்குது? என்று கேட்டாள் கலா.

ஏன்னு கேட்டா? அது அப்பிடித்தான்… என்று தனக்கு பதில் தெரியாவிட்டாலும் சாதுரியமாக சமாளித்தாள் ராணி.

அவள் நினைவு வீட்டிற்குத் தாவியது.

***

ராணியின் தாய் மங்கா அழகானவள், அன்பானவள். மிகவும் சுறுசுறுப்பு. அவள் உறங்கி ராணி பார்த்ததில்லை. அவள் விழிக்கும் முன்னரே மங்கா பாதி வேலைகளை முடித்திருப்பாள். அதேபோல், கலாவும் ராணியும் தூங்கிய பின்னரே அவள் தூங்குவாள். அக்கம்பக்கத்து வீடுகளில் வேலை செய்தும் கோயம்பேட்டில் இருந்து பூக்களை மொத்தவிலையில் இரண்டு கூடை வாங்கி அதை சரமாக கட்டி விற்பனை செய்தும் தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணம் ஏனோ அவளுக்கு வரவில்லை. அதைவிட பூ வியாபாரத்தில் ஒரு பெயர் எடுத்துவிட்டால் படித்த பிள்ளைகளைவிட அதிக அளவு சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை அவள் மனதில் எழுந்துவிட்டிருந்தது. அதையே முழுமூச்சாக மனதில் பதித்துக்கொண்டு நல்ல எதிர்காலத்தை நோக்கி உழைத்துக்கொண்டிருந்தாள்.

ராணிக்கு அவளது தந்தையின் ஞாபகம் வந்தது. அவர்கள் எல்லோரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வசித்துவந்த காலம் நினைவிற்கு வந்தது. அப்போது கலா கைக்குழந்தை. ஒரு நாள் என்ன காரணமோ தெரியவில்லை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகப்பெரிய சண்டை. காலையில் ஆரம்பித்த சண்டை மாலைவரை ஓயவில்லை. வாக்குவாதத்திற்கு மேல் வாக்குவாதம். மாலையில் அப்பாவின் பெற்றோர் வந்து சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அன்று தன் அம்மா-பாட்டியுடன் அந்த வீட்டைவிட்டு அழுதுகொண்டே வெளியேறியதுதான் ஞாபகம். அதற்குப்பின் அந்த வீட்டுக்குப் போகவில்லை. அம்மா பாட்டி வீட்டிலேயே தங்கிவிட்டனர். இரண்டு வருடங்களில் பாட்டியும் போய்ச்சேர்ந்துவிட்டாள். சொந்த வீடாகையால் வாடகைச் செலவு இல்லாமல் ஓரளவு கைக்கும் வாய்க்கும் எட்டிக்கொண்டிருந்தது.

எப்போதாவது அப்பா வீட்டுவாசலில் வந்து கூப்பிட்டு குழந்தைகளை மாத்திரம் பார்த்து ஐந்து நிமிடம் பேசிவிட்டுப் போவார். ஆனால் அப்பா இல்லாததைப் பற்றி அம்மா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வப்போது அவள் கண்ணில் கண்ணீர் தளும்பும். கேட்டால் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவாள். வாம்மா, நிறைய வேலை இருக்கு என்று சொல்லி பூத்தொடுக்க உட்கார்ந்துவிடுவாள். எப்போதும் வேலை, சம்பாத்தியம் என்றே கவனமாக இருந்தாள்.

ஆனால், குழந்தைகளுக்கு ஒரு கஷ்டம் வந்தாலோ, அல்லது உடம்பு சரியில்லை என்றாலோ மங்கா துடித்துப்போய்விடுவாள். ராணிக்கு வயிற்றுவலி என்றால் மங்காவுக்கு கண்ணில் நீர் கொட்டும். கலாவுக்குக் காய்ச்சல் என்றால் மங்கா சாப்பிடமாட்டாள். அப்படி ஒரு பாசம்.

ஆனால் கண்மூடித்தனமான பாசம் இல்லை. கண்டிப்பான பாசம். வேலையில் சோம்பேறித்தனத்தைக் காட்டினாலோ அல்லது நண்பர்கள் மூலமாக வந்த பழக்கத்தில் மரியாதைக் குறைவாக நடந்தாலோ மங்காவின் சொரூபம் மாறிவிடும். வெளுத்துவாங்கிவிடுவாள். பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து தானும் உட்கார்ந்து அழுவாள். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.. இப்போலேர்ந்தே ஒழுங்கா இருக்கக் கத்துண்டாத்தான் உழைச்சி முன்னேறும்போது நாலுபேர் நம்மை நம்ப நடத்தையை வெச்சி நம்புவாங்க… கை கொடுப்பாங்க… நாம நிச்சயம் ஒரு நாள் நல்லா வருவோம்டா… என்று குழந்தைகளை அணைத்துக்கொண்டு பாச மழை பொழிவாள்.

கடைவீதியில் சிங்காரியின் மகள் சிநேகலதாவுடன் பழகாதே என்று மங்கா எச்சரித்திருந்தும் ராணி அவளோடு விளையாடுவதற்காகவும் பேச்சுத்துணைக்காகவும் தொடர்பில்தான் இருந்தாள். ஒரு நாள் இரவு ராணியின் வீட்டுக்கு ஒரு ஆள் போலீசுடன் வந்து ராணியை வெளியில் அழைத்து சிநேகலதா பற்றி விசாரிக்க, ராணியும் மங்காவும் மிகவும் பயந்துவிட்டனர். சிநேகலதா கடைவீதியில பழக்கமான ஒரு பையனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போனதாக மறு நாள் தெரியவந்தது. ராணிக்கு சில நாட்கள் கலக்கமாக இருந்தாலும் அம்மாவின் மக்களை எடைபோடும் திறனை நினைத்து வியந்தாள்.

அன்று ஒரு நாள் இரவு மெல்ல அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தாள் ராணி. அம்மா, இன்னிக்கு அப்பாவைப் பார்த்தேன்ம்மா… நம்ம எல்லாரையும் வந்து அவர்கூட நம்ம பழைய வீட்டில இருக்கச்சொல்றார்மா… என்றாள். மங்காவின் முகம் இறுகியது. கண்ணில் கோபம் பற்றிக்கொண்டது. இதப்பாரு ராணி… நீ பெரிய பொண்ணு ஆகிண்டு வர்றே. உனக்குச் சொல்ல வேண்டியது என் கடமை. எல்லாரையும் நம்பாதே. முக்கியமா உன் அப்பாவை நம்பாதே. அவர் நம்பிக்கையானவரா இருந்திருந்தா என்ன கஷ்டமானாலும் நான் அவரோடயே இருந்திருப்பேன். ஆனா அவர் அப்படியில்ல. இதோட இந்தப் பேச்சை விட்டுடு… என்றாள். ராணியின் முகம் வாடியது.

ஏம்மா… அப்படி என்ன தப்பு பண்ணார்ம்மா? நம்ப எல்லாரும் அந்த வீட்டில கலா பாப்பாவா இருக்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? மறுபடியும் அப்படி இருக்கலாமுண்ணு எனக்கு ஆசையா இருக்கேம்மா… என்றாள் ராணி.

மறுபடி சொல்றேன்… நீ பெரிய பொண்ணு ஆகிண்டு வர்றே… நல்லது கெட்டது எல்லாம் உன் அனுபவத்திலே தெரிஞ்சிப்பே… வசதிக்கு ஆசைப்பட்டு அப்படி அவர்கூடப் போகணும்னா நீ போ…. சந்தோஷமா இரு… நான் தடுக்கல…. ஆனா எங்களை மறந்துடு… நானும் கலாவும் இங்கதான் இருப்போம்… என்று தீர்மானமாகக் கூறினாள் மங்கா. மறுத்துப்பேச முடியாமல் கண்ணில் நீர் வர அம்மாவைக் கட்டிக்கொண்டாள் ராணி. சாரிம்மா… எனக்கு நீதான் வேணும்… நான் போகல்ல…இனிமே அப்பிடி நெனக்கவும் மாட்டேன்.. என்று அம்மாவை சமாதானப் படுத்தினாள்.

அம்மா மாறமாட்டாள் என்பது அவளுக்குத் தெரிந்தது. அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அப்பாவோடு வாழும் ஆசையைஎப்படியாவது மெதுவாக மறக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

***

கிறிஸ்தபர் அந்த பூங்கொத்திலிருந்த காரனேஷன் மலர்களை ரசித்துக்கொண்டிருந்தார். சிகப்பும் வெள்ளையும் மாறி மாறி சொருகி அலங்கரித்திருந்த அந்தக் கொத்து அவரது எண்பதாவது பிறந்த நாளுக்கென மகள் டயானாவும் மருமகன் ஜோஸப்பும் நேற்று காலையில் வந்து அவருக்கு அன்பாக அளித்திருந்தனர். மறுநாள் ஆகிவிட்டதால் அதிலிருந்து ஒவ்வொன்றாக கர்த்தர் படத்தின் கீழ் வைக்கலாம் என்று பிரித்துக்கொண்டிருந்தார்.

பார்க்க ரோஜாவைப்போன்று இருந்தாலும், இதழ்கள் இன்னும் அடர்த்தியாகவும் மெல்லியதாகவும் இருக்கும் காரனேஷன் அவருக்கு மிகவும் பிடித்த மலர். அதிலும் சிகப்பு வெள்ளை காம்பினேஷன் அவரது ஃபேவரிட் என்பது டயானாவுக்குத் தெரிந்திருந்தது. ஒவ்வொன்றாகப் பிரித்து கர்த்தர் படத்தின் கீழே வைக்கலாம் என்று முயற்சித்தால் அந்தச் சிறிய பலகையில் வாட்டமாக இருக்க இடம் இல்லை. எப்படி திருப்பி வைத்தாலும் கீழே விழுந்துகொண்டிருந்தன அம்மலர்கள். சிறிது நேர முயற்சிக்குப் பின் அதில் நேரத்தை செலவிட விரும்பாமல் மீண்டும் அது வந்த கொத்திலேயே வைக்கலாம் என்று பார்த்தால் அங்கும் சரியாக முன் மாதிரி உட்காரவில்லை.

பார்க்கத்தான் மென்மை.. பழகினால் முரடுபோலத்தான் தெரிகிறது … என்று முணுமுணுத்துக்கொண்டே பொறுமையில்லாமல் அறையை விட்டு வெளியேறினார்.

***

அடுத்த மாதம் அதே நாள் கிறிஸ்தபர் மிகவும் கடுப்பில் இருந்தார். மகளும் மருமகனும் பேத்தி மரியானாவை அவர் வீட்டில் விட்டுவிட்டு பத்து நாட்கள் சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து சுற்றுலா சென்றிருந்தனர். குழந்தை மிகவும் சமர்த்தாக இருந்தாள். அப்பா அம்மாவைப் பற்றிய நினைப்போ இல்லாமல் தாத்தா, பாட்டி என்று இருவரையும் கொஞ்சிக்கொண்டு அவர்களுக்கு சற்றும் சிரமம் தராமல் எதை செய்தாலும் சாப்பிட்டுக்கொண்டு வேளா வேளைக்கு தன்னுடைய வேலைகளையெல்லாம் சரியாகச் செய்துகொண்டு அவர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தாள். இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்ன கஷ்டம் என்று இருவருமே ஆனந்தத்தில் இருந்தனர்.

அன்று மாலை அவரது கிளாஸ்மேட் பிரான்ஸின் பேரனுக்கு திருமண வரவேற்பு. மரியானாவுக்கு அவரும் அவரது மனைவியும் கடைக்குச் சென்று இரண்டு மணி நேரம் அலசி அழகான ஆடை ஒன்றை செலக்ட் செய்து வாங்கி பரிசளித்திருந்தனர். அதை அணிந்துகொண்டு மாலை அந்த ரிசப்ஷனுக்கு செல்லலாம் என்று அவளை முடுக்கி விட்டனர். அவளும் ஆசையாக எடுத்து அணிந்துகொண்டாள். ஆனால், நிலைக்கண்ணாடியில் பார்த்தவுடன் என்ன தோணிற்றோ, பாட்டீ, தாத்தா…. இந்த டிரஸ் எனக்கு வேண்டாம்… வேற எடுத்துக்குடுங்க என்று அழ ஆரம்பித்தாள்.

ஏம்மா, இதுக்கென்ன கொறச்சல், இதப்போட்டா பிரின்சஸ் மாதிரி இருக்கே… என்றார் தாத்தா.

இல்ல தாத்தா… இதப்பாருங்க…. இதப்போட்டா நான் பாய் மாதிரி இருக்கேன்… எனக்கு இது பிடிக்கல தாத்தா…. இது வேணாம்….. என்று சிணுங்கினாள் மரியானா.

கிறிஸ்தபர் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். எல்லோரும் அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டுத்தான் அவருக்கு பழக்கம். தனது எண்ணப்படிதான் மற்றவர்களை செயல்பட வைப்பார். பேத்தியிடமும் முயன்றார். இல்ல கண்ணு… இதப்பார்…. இது என்ன வெல தெரியுமா? இதப் போட்டுண்டு போனா அங்கே வந்திருக்கிறவங்களோட டிரஸ்லயே உன்னோடதுதான் சூப்பரா இருக்குன்னு எல்லாரும் ப்ரெய்ஸ் பண்ணப் போறாங்க… எங்கே சீக்கிரம் ரெடியாகு பாக்கலாம்…. என்று தட்டிக்கொடுத்தார்.

அவரது இரத்தம்தானே அவளுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும்? முரண்டுபிடித்தாள் குழந்தை. நீங்க சும்மா இருங்க… உங்க அதிகாரத்தையெல்லாம் அவளிடம் காட்டாதீங்க… அவளை எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும்… என்று பாட்டி கிரேஸ் குழந்தையைத் தன்னிடம் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அரை மணி நேரம் ஆகியும் வெளிவரவில்லை. நேரமோ ஆகிக்கொண்டிருந்தது. டைம் ஆக ஆக டிராஃபிக்கும் அதிகமாகும். சீக்கிரம் சென்றால் சீக்கிரம் திரும்பலாம் என்ற கணக்குப் போட்டிருந்த அவருக்கு மெதுவாக டென்ஷன் அதிகமாகத் தொடங்கியது. எவ்வளவு நேரம்ம்மா… சீக்கிரம் வாங்க என்று மூடியிருந்த கதவில் வாக்கிங் ஸ்டிக்கினால் தட்டினார் கிறிஸ்தபர்.

இதோ, வந்துட்டோம் என்று இரண்டு நிமிடத்தில் கதவைத்திறந்தனர் பாட்டியும் பேத்தியும். பேத்தியைப் பார்த்தார். வேறு உடை. பாட்டியைப் பார்த்தார். உங்க பேத்தி சாதாரணமான ஆளா? மனசுல ஒண்ண முடிவு பண்ணிட்டா அவ்வளவுதான். என்ன சொன்னாலும் கேக்க மாட்டா. அதான் அவ போக்குலேயே விட்டுட்டேன்… என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள் கிரேஸ்.

***

பெண்கள் மலர்களைப்போல. மலர்களும் பெண்களும் ஒரேமாதிரிதான். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வாசம், வண்ணம், எல்லாம். மேனியால் மென்மையானவை. ஆனால், உள்ளத்தால் உறுதியானவை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home