Thursday, September 30, 2021

விடியல்

 

விடியல் (நிஜ விடியல் - அதிகாலைப் பொழுது) மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஒரு சுகமான நேரம். இயற்கையின் இயக்கம் தொடங்கும் நேரம். அலாரம் கடிகாரத்தின் தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டிவிட்டு, அல்லது சிணுங்கும் கைபேசியை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு சிரமம் பார்க்காமல் எழுந்து வெளியிலோ, அல்லது கொடுத்து வைத்தவர்கள் தத்தம் வீட்டு மொட்டை மாடிக்கோ சென்று விட்டால் பொழுது புலர்வதை ஏகாந்தமாக ஒட்டுமொத்தமும் நாமே அனுபவிக்கலாம்.


அந்த நேரத்திலும் நம்மை முந்திக்கொண்டு புள்ளீங்கோ - அதுதான் பறவையினங்கள் - விழித்துக்கொண்டு செய்யும் அமர்க்களம் இருக்கிறதே, அதைக் கேட்டு அனுபவிப்பதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும். பறவைகளின் இரைச்சல் பொறுக்காமல் போர்வையை இன்னும் இழுத்து முக்காடு போட்டுக்கொண்டு உறங்குபவர்கள்தான் அதிகம். நான் இதில் சிறுபான்மையினத்தவன்.


வெளியில்தான் எத்தனை எத்தனை சப்தங்கள்! ஒரு பக்கம் மைனாக்கள் ஒலி சாந்தமாக இருக்கும். மீன்கொத்திகளோ ஓரிடத்தில் நிற்காது அங்கும் இங்குமாகத் தாவிக்கொண்டே உரத்த குரல் எழுப்பிக்கொண்டே சஞ்சரிக்கும். எப்போதாவது கரிச்சான்குருவிகள் இனிமையாக பேசிக்கொள்ளும். பெரும்பாலும் அவை துணையோடே காணப்படும். சற்று வெளிச்சம் பாயத்தொடங்கும் சமயத்தில் காக்கைளும் அணில்களும் பெருமளவில் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியே நடமாடத் தொடங்கும். அதுவும் ஓயாத சப்தத்தோடு. அவை ஏன்தான் விடாமல் குரல் எழுப்புகின்றனவோ என்று பல நாட்கள் நான் வியந்ததுண்டு. இன்றுவரை சரியான விடை கிடைக்கவில்லை. இவை போதாதென்று தையல்சிட்டுகளும் கச்சேரியில் சேர்ந்துகொள்ளும். இயற்கையின் விந்தை, உடல் அளவிற்கு சற்றும் பொருத்தமில்லாத அதிக குரல் கொண்ட இந்த குட்டியூண்டு பறவை கும்பகர்ணனையும் எழுப்பிவிடும் ஆற்றல் படைத்தது என்றே நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து தவிட்டுக்குருவிகள் கூட்டமாக கிச்கிச்சென்று அரட்டையடித்துக்கொண்டே தரையில் விழுந்திருக்கும் இலை தழைகளினூடே உணவு தேடும். இவைகளுக்கு இடையில் அவ்வப்போது சாலைகளில் மேயும் மாடுகளும் கன்றுகளும் எழுப்பும் ஓசையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.


இவையெல்லாம் மனித சஞ்சாரம் தொடங்குவதற்கு முன்னர் கேட்கும் ஒலிகள். பின்னர் வரிசையாக பால்காரர்களின் வாகனங்கள், செய்தித்தாள் விநியோகிக்கும் சிறுவர்கள் மிதிவண்டி மணியோசை, கீரை, காய்கறிக்காரர்களின் கூப்பாடு, அதுவும் இப்போதெல்லாம் கையடக்க ஒலிபெருக்கியோடு வேறு, இவையெல்லாம் வேறு சேர்ந்துகொண்டால் அதற்கப்புறம் யாராலுமே தூங்க முடியாது.


இப்படியாகப்பட்ட சப்தஸ்வரங்களில் (சப்தம் - ஓசை, ஏழு அல்ல) சிறிது நாட்களாக எங்கள் கவனத்தை ஈர்த்தது காக்கைகளின் குரலேயாகும். எப்போது கதவைத் திறந்து வெளியே வந்தாலும் ஜோடியாக இரு காக்கைகளின் கா கா என்னும் குரலோடு, கா-வும் இல்லாமல் கே-வும் இல்லாமல் இடைப்பட்ட ஓசையில் சற்று சன்னமாக இன்னொரு குரலும் சேர்ந்து ஒலித்தது. என்னவென்று பார்த்தால் காக்கைக் குஞ்சு. பார்ப்பதற்கு ஏறக்குறைய பெரிய காக்கையின் அளவில் பாதிக்கு மேல் இருந்தாலும் அது பறக்க முடியாமல் தத்தி தத்தி அங்கும் இங்குமாக நகர்கையில் அதற்குக் காவலாக பெற்றோர் காக்கைகள் அதன் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தோம்.


காக்கை குஞ்சு பொரித்து அது பெற்றோர்களின் கவனிப்பில் வளர்வதை பலமுறை கண்டிருக்கிறோம் என்றாலும் இந்த குடும்பத்தின் நடவடிக்கை சற்று வித்தியாசமாகவே தென்பட்டது. உற்று கவனித்ததில்தான் தெரிந்தது, அந்தக் குஞ்சு சற்று குறைபாடுகள் உள்ள பிறவி என்பது. அதன் கண்பார்வை முழுமையாக இல்லை என்பது அதன் நகர்விலேயே தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் அதன் ஒரு காலும் சற்றே ஒடிந்தோ வளைந்தோ இருந்ததால் அது தன் மற்ற காலை மட்டுமே ஊன்ற முடிந்தது என்பதையும் கண்டோம். அதனால்தானோ என்னவோ பாவம், தாய் தந்தையர் இருவரும் முடிந்தவரை இந்தக் குஞ்சின் அருகிலேயே இருந்து அதை கண்காணித்துக்கொண்டிருந்தன. மனித நடமாட்டம் தென்பட்டால் அதிக இரைச்சலோடு குரல் எழுப்பி குட்டியை எச்சரித்துக்கொண்டேயிருந்தன. எனவே நாங்கள் அவைகளுக்கு கஷ்டம் தரக்கூடாது என்று கூடியமட்டும் எங்கள் வெளிவேலைகளை சுருக்கமாக முடித்து கதவை அடைத்துக்கொண்டு உள்ளே வந்தபின் சன்னல் வழியாக மாத்திரம் அவ்வப்போது அவைகளை பார்த்துக்கொண்டேயிருந்தோம். அவ்வப்போது அவைகளுக்கு உணவு வைப்போம். அந்த காக்கைள் அவைகளை உண்டு குஞ்சுக்கும் வாயில் ஊட்டியதையும் கண்டோம்.


காலை, மதியம், மாலை என இடைவிடாது இந்த மூன்று காக்கைகளின் குரல் தொந்தரவாக இருந்தாலும் எங்களுக்கு ஓரளவு பழகிவிட்டிருந்தது. இடையில் என் மனைவி இன்னொரு செய்தியையும் சொன்னாள் - அந்த காக்கைக் குஞ்சின் சிறகுகளிலிருந்து அவ்வப்போது இறகு இறகாக பிரிந்து விழுந்துகொண்டிருந்ததையும் அவள் கவனித்திருக்கிறாள். எனவே அதற்கு உடல்நலம் சரியில்லை என்பதைத் தெரிந்துகொண்டு நாங்கள் எங்கள் வெளி நடவடிக்கைகளை இன்னமும் குறைத்துக்கொண்டோம்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு காலையில் நான் எழுந்திருக்கும்போதே வித்தியாசம் தெரிந்தது. காக்கைகளின் கூப்பாடு காதில் விழவில்லை. அந்த நிசப்தமே ஒருவித கலக்கமாக இருந்தது. எங்கே போயின என்று பார்த்தேன். மரக்கிளைகளில் அவைகளைக் காணவில்லை. வேறு எங்கேயும் நகர்ந்துவிட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டே என் அலுவல்களில் ஈடுபட்டேன்.


எப்போதும்போல் குளித்துவிட்டு அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல வீதியில் கால்வைக்கும்போதுதான் அதைக் கண்டேன். மின் கம்பத்துக்கு அடியில் மல்லாந்து விழுந்து கிடந்தது அந்த உயிரற்ற காக்கைக் குஞ்சின் உடல். கம்பத்தின் மேலே இரு காக்கைளும் அமைதியாக அமர்ந்திருந்தன. வழக்கமாக ஒரு காகம் மின்சாரம் பாய்ந்து இறந்தால் அருகில் உள்ள காக்கைகள் அனைத்தும் கூட்டமாகக்கூடி அங்கும் இங்கும் பெரும் இரைச்சலோடு பறந்துகொண்டேயிருக்கும். பார்த்திருக்கிறோம். ஆனால் இது எப்படி இறந்தது என்று தெரியவில்லை. அருகில் மற்ற காக்கைளும் கூடவில்லை. ஆனால் பெற்றோர் மட்டும் பிரியாமல் அமைதியாக மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது இதயத்தைப் பிசைந்தது.


காகங்களுக்கும் சோகம் உண்டு.



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home