திருஷ்டி தானம்
ஒரு அழகான கன்னட கவிதையின் தமிழ் உரை. மூலம் திரு.பண்டரிநாத்தாச்சாரி கலகலி அவர்கள் எழுதியது. அதை ஆங்கிலக் காணொளியில் அழகாக விளக்கியவர் அவரது பேரன் திரு. நவநீதம் கலகலி. அவருடைய பாட்டனாரின் கன்னடப் புலமைக்கு சற்றும் சளைக்காத ஆங்கிலப் புலமையும் உச்சரிப்பும் பார்வையாளர்-ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.
க(வி)தைக்கு வருவோம். இது நிகழ்வது வடநாட்டில். ஒரு ஊரில் ஒரு பைராகி. இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாத யோகி. அனைத்தும் துறந்த ஞானி. நெற்றியில் உள்ளிருக்கும் ஞானம் நீர்க்காமல் காக்கும் திருநீறு. நெஞ்சில் உள்ளிருக்கும் இறைவனை வேர்க்காமல் குளிர்விக்க சந்தனம். மேனியில் மானத்தைக் காக்க ஒரு கந்தல். கையில் தீண்டாமல் பிக்ஷை ஏற்க ஒரு திருவோடு. இவ்வளவே அவன் சொத்து. பார்ப்பவர்க்கு அவன் பித்து. முனிவர்களில் அவன் முத்து. ஒரு நாளில் ஒரு வேளை சில கவளம் மட்டுமே அவன் உண்ணும் சத்து.
ஒரு நாள் அந்த ஊரில் வாழும் செல்வந்தர் வீட்டு வழியாக பிக்ஷை கேட்டு வருகிறான். சும்மாவா வருகிறான்? கணீரென்ற குரலில் அலக் நிரஞ்சன் அலக் நிரஞ்சன் என இறைவன் பெயரை அற்புதமான ராகத்தில் பாடிக்கொண்டே வருகிறான்.
அவன் குரலில் கவரப்பட்ட செல்வந்தர் வீட்டு மருமகள், தன் வேலைக்காரியிடம் ஒரு தட்டில் சிறிது உணவை கொடுத்து அனுப்புகிறாள். ஜன்னல் வழியாக வேலைக்காரி அந்த உணவை அந்த யோகியிடம் அவனுடைய திருவோட்டில் சேர்க்கிறாளா என்று கண்காணிக்கிறாள்.
பிக்ஷை வாங்கும்போது ஆசீர்வதிப்பதற்காக தலையை நிமிர்த்தும்போது யோகியின் கண்களைக் காண்கிறாள். பிக்ஷை பெற்றுக்கொண்டு அவன் நகர்ந்து மறைகிறான்.
ஆனால் மின்னலைப் போன்று ஒளிரும் அவனுடைய கண்கள் அவள் எண்ணத்தை கவர்கின்றன. அவனுடைய கண்களின் அழகில், தீட்சண்யத்தில் தன் மனம் லயிப்பதை உணர்கிறாள். அவளுடைய உள்ளுணர்வு அவளை எச்சரிக்கிறது. சே! ஏன் என் மனம் இன்று தடுமாறுகிறது? இது சரியில்லை. இனி இவன் வந்தால் நான் இவனை கவனிக்காமல் உள்ளேயே இருந்துவிட வேண்டும். எந்தவித சலனத்திற்கும் இடம் கொடுத்து விடக் கூடாது என்று முடிவெடுக்கிறாள்.
ஆனால் நடப்பது வேறு. மறுநாள் தெருமுனையில் அவன் குரல் ஒலிக்கும்போதே அவளுக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்கிறாள். அதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையும் அறிகிறாள். அவளுடைய கைகள் தானாக உணவுத் தட்டை எடுக்கின்றன. அவளுடைய கால்கள் தானாக வாசல் கதவை நோக்கி பயணிக்கின்றன. அவளது மனம் வேலைக்காரியை அழைப்பதுபற்றி நினைக்கக்கூட இல்லை.
இதோ அவன் வாசலில் வந்துவிட்டான். மயக்கும் குரலில் தெய்வீக இசையில் அலக் நிரஞ்சன் அலக் நிரஞ்சன் என்று இறைவனை அழைத்தபடியே திருவோட்டை ஏந்திய கரங்களை முன்னே நீட்டுகிறான்.
பரவசத்துடன் பிக்ஷை பாத்திரத்தில் உணவிட்ட அவள், ஏதேனும் பேசியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் அவனிடமே அவனது கண்களைப் பற்றி சிலாகிக்கிறாள். சூரியனும சந்திரனும் அல்லியும் நாணுமளவுக்கு பிரகாசமாகவும் ஆனால் அதே சமயத்தில் தண்மையாகவும் மலர்ந்தும் ஒளிர்ந்து என்னைக் கவரும் கண்களை எங்கு பெற்றீர்கள் என ஆவல் மிகுதியுடன் அவசரமாக கேட்டுவிட்டு வீட்டிற்குள் ஓடி வந்து விடுகிறாள்.
மறுபடியும் அவளது மனம் அவளை அலைக்கழிக்கிறது. நாளை காதுகளை அழுத்தி மூடியே வைத்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறாள்.
ஆனால் அடுத்த நாள் காலையிலிருந்தே அவன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். ஆயிற்று. அவன் வரும் நேரத்திற்கு சற்றுமுன் அவன் குரலோடு மன்மதனின் வில்லில் இருந்து மலர்க்கணை விடுபடும் ஒலியை உணர்கிறாள். தன் மனம் அவனிடம் மயங்குவது தெரிகிறது ஆனால் அவளால் தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
சரியாக அவன் தன் வீட்டு வாசலுக்கு வரும் நேரம் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு தன் அழகை ஒருமுறை பார்த்துக்கொண்டு தன் ஆடையை சற்றே சரிசெய்து கொண்டு வாசலுக்கு விரைகிறாள்.
ஆனால் ஏதோ சரியில்லை என்று அவளுடைய உள்மனம் எச்சரிக்கிறது. குழம்பிய சிந்தனையுடன் யோகியை நெருங்குகிறாள்.
அவன் அவள் இருக்கும் திசை நோக்கி தன் திருவோட்டை நீட்டிக்கொண்டே பாடுகிறான். தாயே, என் கண்கள் தங்களைக் கவர்ந்தன ஒன்று சொன்னீர்கள் அல்லவா, எனவே அவைகளை தங்களுக்கே தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறான்.
விழிகளை இழந்த அவனுடைய முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தவாறே திருவோட்டினுள் தன் பார்வையை செலுத்துகிறாள் அவள். அங்கே அவள் கண்ட அதே பிரகாசத்துடன் மின்னிக்கொண்டிருந்தன அவனது கண்கள்.
அவனோ, எதுவுமே நடக்காதது போல, எதையுமே இழக்காதது போல, வழக்கமான அதே வேகத்தில் ஆனந்த ராகத்தில் அலக் நிரஞ்சன் அலக் நிரஞ்சன் என பாடிக்கொண்டே மறைகிறான்.
பத்து காசு இல்லாமலே பார் முழுவதும் தனது சொந்தமென எண்ணி அன்பைச் சுரந்து பிக்ஷையில் உயிர்க்கும் யோகியர்க்கு பார்க்கும் பெண்ணினம் யாவும் அன்னையே.
காணும் அனைத்திலும் கருத்தையும் சிதறுவோர் கண்ணிருந்தும் குருடரே.
பார்வை இழந்தது யார்? பார்வை பெற்றது யார்? பார்வை தந்தது யார்? பார்வை என்பது என்ன?
அலக் நிரஞ்சன்!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home