Thursday, October 24, 2024

எங்கும் கண்ணன்

 

அதிகாலையின் அற்புத மயக்கத்தில் மாடி ஏறி

ஏகாந்தமாய் இயற்கையின் இன்பத்தைப் பருகியபடியே

சுற்றி நடக்கும் கோடானுகோடி விந்தைகளில்

சிந்தையை சுழற்றும்போது தோன்றிய எண்ணங்கள் இவை


இருளில் இதமான போர்வையாயிருந்து விடியலில்

வெளிச்சத்தில் சிவக்கும் வானமும் வாமனனே

அனைத்து உயிர்களுக்கும் அளவிலாத பயிர்களுக்கும்

ஊட்டமும் ஊக்கமும் அளிக்கும் ஆதவனும் மாதவனே


வாடிய காலத்தில் எங்கிருந்தோ வந்து

வான்மழை பொழியும் மேகமும் மோகனனே

கடலிலும் கானகத்திலும் பாலையிலும் விரவி

தரணிக்கு உயிரூற்றும் காற்றும் கண்ணனே


அன்புடன் கன்றீன்று பாசமாய் பால்பொழிந்து

அகிலத்தின் பசிதீர்க்கும் பசுவும் பரந்தாமனே

இருந்தால் உழைத்திரு இல்லாவிடில் காணாதுபோவென

உயிர்ப்புடன் போதிக்கும் பறவையும் பரப்ரம்மமே


வளர்பிறையும் தேய்பிறையும் வாழ்வின் நியதியென்று

வானிருந்து வாக்குரைக்கும் நிலவும் நீலவண்ணனே

நாள்தோறும் நலிவுற்றாலும் நிலையாக நமைத்தாங்கி

பொறுமையாய் காத்தருளும் பூமியும் புருஷோத்தமனே


மாற்றாந்தாயென இல்லாமல் அனைவர்க்கும் சரிசமமாய்

தம்முயிரை தந்தருளும் மரஞ்செடியும் மதுரமாயவனே

அளக்கவியலா அகன்ற அண்ட சராசரமாய் அமைந்து நமை

பிரமிப்பில் ஆழ்த்தும் பிரபஞ்சமும் பரஞ்சோதியே


அருமையாய்ப் பெற்றெடுத்து ஆளாக்கி பெருமையுடன்

அவனியில் சேர்த்திட்ட அன்னையும் அனிருத்தனே

யார் பெற்ற பிள்ளையையோ மணாளனாய் தான்கொண்டு

மனதளவில் மன்னனாக்கும் மனைவியும் மதுசூதனனே


இன்பம் மட்டுமல்ல வாழ்க்கை இன்னொரு பக்கமுமுண்டு என

பொறுப்பை நமக்குணர்த்தும் பிள்ளைகளும் பார்த்தசாரதியே

நல்வழி தீவழி எவையென்று தெரியவைத்து பிறழாமல்

தோள்கொடுத்து தாங்கிநடக்கும் நண்பனும் நந்தகுமாரனே


எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு இன்னும் உயர்ந்திட

உற்சாகமூட்டிடும் உடன்பிறப்புகளும் உபேந்திரனே

எண்ணிலாத நற்செயல்கள் எப்பொழுதும் நலமாய் நடந்திட

எங்ஙனும் நிறைந்திருக்கும் சக்தியும் சனாதனனே


இருக்கும் வரை அடங்காமல் இயங்கி ஒரு நொடியில்

இல்லாமல் ஆக்குமுயிரை இயக்குபனும் ஈச்வரனே

ஆறறிவுக்குமேல் ஆயிரம் அறிவுகொண்டும்

ஆராயமுடியாத ஆத்மாவின் நாதனும் நாராயணனே


அக.27, 2021







0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home