கணபதி
விந்தைமிகு வியனுலகில் வேகமான வாழ்வதனில்
சிந்திப்பதற்கும் கணமில்லாமல் ஓடிக்களைத்தே காலத்தை
நிந்திக்கும் நிலைமாறி நிம்மதியுடன் நின்னடிதொழ
தொந்திக் கணபதியே துணைபுரிவாய் துதியேற்றே
பெற்றோரும் பிள்ளைகளும் பாசத்துடன் வலம்வரவே
உற்றாரும் கற்றாரும் உறுதுணையாய் விளங்கிடவே
வற்றாத அன்பினையெங்கள் உள்ளத்தில்ஊற்றியருள்
குற்றாலநாதரின் குறைவில்லா குணக்கொழுந்தே
வானம்தொடும் வாழ்விடங்கள் வகைவகையாய் வாகனங்கள்
மானத்துடன் ஈட்டும் செல்வமாய் அமைந்திடவும்
தானதருமத்திற்கும் தாராளமாய் தடையின்றி தந்திடவும்
ஆனதாவையும் ஆக்கிடுவாய் அருளே ஆனைமுகத்தோனே
பொருள்தேடி பாரெங்கும் பணியாற்றி பவனிவரும்
அருந்தவப் செல்வங்கள் ஆழ்மனதில் இனிதுறைந்து
அருள்தேடவும் அன்புடனே ஆக்ஞை பிறப்பித்து
இருள்நீக்கி ஒளிசேர்க்க அருள்புரிவாய் இளம்பிறையே
யாம்பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவென்று
தாமீட்டும் பொருளினை தரணிமக்களுடன் பகிர்ந்து
பிரிவினை பாராட்டாது ஒற்றுமையாய் சேர்ந்துவாழும்
அறிவினைப் புகட்டுவாய் ஆறுமுகன் அண்ணனே
இவ்வுலக வாழ்வதனில் தலைசிறந்து திறம்படவும்
அவ்வுலகப் பயணமும் அவதியின்றி வலம்வரவும்
ஞானம்பெற வழிகாட்டும் குருவாய் விளங்கிடய்யா
ஞாலமுதல்வனே நானிலத்து நாயகனே
செப்.27, 2023
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home