மூப்பு
மூப்பு
Milka Mag Torre
மூப்பைக் கண்டு நான் முனகுவதில்லை.
சுருங்கும் சருமத்தை நான் சட்டை செய்ததில்லை,
சிகைநரையைப் பற்றியும் நான் சிந்தித்ததில்லை,
ஒடுங்கும் நடை என்னை ஒதுக்கியதில்லை,
தனிமை பழகிவிட்டதால் தத்தளிப்பதுமில்லை.
என்னை அச்சுறுத்துவதென்று ஒன்றிருக்குமானால்
என்ன நடக்குமென்றறியமுடியா விதியொன்றுதானே.
சுற்றத்தினர் சூழ சுகிப்பிலும் சுழற்றும்
சற்றும் ஆதரவில்லா சூழலிலும் ஆழ்த்தும்.
யாருமெனை பாரமென எண்ணும்நிலை வேண்டேன்
யாரையும்(நான்) சார்ந்திருக்கும் பரிதாபமும் வேண்டேன்
யாதொரு பொழுதும் என்நிலை கண்டிரங்கி ஊரார்
யார்தயவில் வாழ்கிறேனோ என்றெண்ணவும் வேண்டேன்
தடைகளைக் கடந்துலாவும் சுதந்திர இளங்காற்றுபோல்
வலிகளைக் கடந்துநடமாடும் திடம்மட்டும் போதும்
நாவினில் எஞ்சிய அமுதச்சாற்றின் அகலாத் தீஞ்சுவையாய்
ஓவியத்தின் இறுதிக்கோடாய் இருக்கவேண்டும் என்மூப்பு,
வயதாவதைக் கண்டு நான் வருந்திய தில்லை.
வாழ்வின் மாற்றங்களுக்கு நான் அஞ்சியது மில்லை.
விதியின் மீதென் அச்சம் யாதெனில்
விரும்பாத சூழலில் மீளாமல் தள்ளிடுமோ!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home