விழிப்பு
விழித்தும் விழிக்காதிருக்கும் வித்தையை
வித்தையெனப் பெற்றதில்லையெனினும் - அவ்
விந்தையை என்றாவதொருநாள் உணர்ந்ததுண்டு
விழிதிறவா விடியலின் மயக்கத்தில்தானோ!
எழுந்தாக வேண்டிய இலக்கென இல்லையாயினும்
விழுந்த உடலின் அயர்வை நீக்கி
அழுந்திய விழிகளை அகலத் திறந்து
வழங்கும் விடியலும் அவனருள்தானோ!
படுக்கையை விட்டகலாமல் உலகையே
நொடிக்குள் கடக்கும் சித்திகைகூடி மனதில்
கிடக்கும் அழுத்தத்தை அழுத்திப்பறந் தவனின்
இடத்தை நாடச் செய்வதுவும் அவன்செயலோ!
அனைவரும் ஆழ்ந்துறங்கும் அதிகாலைப்போதில்
எனைமட்டும் எழுப்பி எண்ணத்தைக் கிளறி
துணையேதுமின்றித் தனியாய்த் துழாவியே
நினைவுகளை நெருடும் நேயம்தான் ஏனோ!
அள்ளிமாளாத எண்ணக் குவியலில்
புள்ளியாய்க் கரைந்து புள்ளினக் கரையொலியால்
பள்ளியெழுந்து பக்கமனைத்தும் பார்த்தால்
எள்ளிநகைவதும் எனையாளும் அவனேயன்றோ!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home