Sunday, August 10, 2025

புதிய பறவை - 2

 

காலைநேரத்து அமைதியான குளிர் காற்று

கடப்பா கல்லில் கட்டிய திண்ணை

கண்ணுக்குப் போதிய சூரிய வெளிச்சம்

கருத்தைக் கவர காலைத் தினசரி


இதற்கு மேல் வேறென்ன வேண்டும் என்று

எண்ணிய படியே செய்திகளில் மூழ்கி

இருக்கும் புத்தியை மழுங்காமல் காக்க

எண்புதிர் அவிழ்ப்பது எனது வழக்கம்


சிந்தனையை ஒருமுகமாய்ப் புதிரில் குவித்து

சரியான எண்களை கட்டங்களில் நிரப்பி

சரிபார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில்

சிறிய குருவிகள் இரண்டின் புதிய குரல்


இனிமையாய் ஒலித்த கீச்சுக் குரல்

இதுவரை கேளாத இன்னிசை கீதம்

இதற்குச் சொந்தம் எந்த இனமோ?

இருக்கையை விட்டு எழுந்து தேடினேன்


மரத்தை வளர்த்தது உகந்ததே எனினும்

மரத்தின் கிளைகள் வளர்த்தவனை மறந்து

அமரும் பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்து

அவைகளை என்னிடமிருந்து மறைக்கக் கண்டேன்


சமீபத்தில் ரசித்த கவிதையைப் போல

சப்தம் கேட்டும் உருவத்தைக் காட்டாது

அலைக்கழிக்கும் சிட்டை ஆர்வத்துடன் தேடியும்

அகப்படாததால் ஆயாசத்துடன் திரும்பினேன்


சிதறிய கவனத்தில் சிதைந்தது ஒழுங்கு

சரியாக முடியாமல் சிக்கியது கணக்கு

கட்டங்களை தப்பும் தவறுமாய் நிரப்பி

குறுக்கே கோடிட்டுக் கலைத்தேன் புதிரை.


புதிர் கலைந்ததில் ஏமாற்றமே எனினும்

புள்ளினத்தின் மீது வரவில்லை கோபம்.

புதிதுபுதிதாய் பொழுதுபோக்கை மாற்றும்

பித்து மனிதரை அவை அறியுமா பாவம்!


முடிக்காத புதிரை வீசி எறிந்தேன்

முகத்தில் மெலிதான புன்னகை கண்டேன்

இனம்புரியா இம்மகிழ்சிக்குக் காரணம்

இன்றுவந்த அப்பறவைகள் நாளையும் வரலாம்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home