குண்டல கேசவன்
அனுதினமும் யாரிந்த அபவாதம் செய்வதென
சினந்தேதுடைத்தார் கேசவன் காதோரச் சாணத்தை
தனக்குந் தெரியாமல் எப்படியிது நிதமும்வந்ததென
மனத்தினில் இம்மாய விந்தையை நொந்தபடியே
அந்நாளின் வைபவங்கள் முடியுந் தறுவாயில்
பின்நின்ற மூதாட்டியை அன்புடன் வினவினார்
இன்றென்ன வேண்டுதல் வைத்தாய் கேசவனிடம்
என்னிடம் பகர்வாயோ உள்ளக் கிடக்கையை!
சாதலை நோக்கும்நான் எனக்கென்ன வேண்டுவேன்!
பாதகச்சிறுவன் வெண்ணெய் மிகுதியாய் உண்டுவிட்டான்
சீதளம் தாக்காமல் போர்த்திக்கொளத்தான் கேட்டேன்!
யாதளவிவள் கண்ணன் பக்தியென வியந்தாரே.
இறைவன் அவர்கனவில் எழுந்தருளி மொழிந்தான்
குறைவாக எண்ணாதேயென் காதோரச் சாணத்தை!
நிறைவான பிரசாதமிது அறியவேண்டுமெனில் மூதாட்டியை
மறைந்திருந்து பாரவள் பக்தியின் செய்கைகளை!
சூட்சுமவுடலெடுத்து மூதாட்டி இல்லத்தில் அவர்கண்ட
காட்சியோ எந்நேரமும் பரவசத்தில் அவள்நினைவை
ஆட்சிசெய்தது கண்ணனே! அவள்மெழுகி வீசிய
வீச்சினில் பறந்தசாணம்தான் கண்ணன் காதோரமே!
மறுநாள் சாணத்தை மதிப்புடனே நீக்குங்கால்
அருளினான் கண்ணன் அதையென்றும் பாதுகாக்க.
ஒருநாளும் இனிகிடைக்காது! அவளில்லம் அடைந்தவள்
திருவுடல் நீங்குங்கால் நடப்பதைப் பாரென்றான்.
அப்பழுக்கற்ற அன்பினளை அவ்வுலகம் அழைத்துச்செல்ல
புப்பகவிமானம் வந்தும்மறுத்து கண்ணனையே வேண்டினள்
எப்பொழுதும் அவள்குரல் கேட்கவிரும்பிய பரமனும்
அப்போதே மகரகுண்டலங்களாய் ஆக்கினானவளை.
தூயஅன்பினால் மூதாட்டி துயர்நீங்கி பெற்றபெரும்பேறு
ஆயவற்றுள் அதிசிறந்ததென அகமகிழ்ந்து ஆலயத்தின்
ஆயத்தப்பணி செய்ய அடைந்தவரை வரவேற்றன
மாயவன் காதுகளில் மகர குண்டலங்களே!