Saturday, March 15, 2025

தலைவா!

 



தலைவா, என் தலைவா! அஞ்சிய பயணம் வெற்றியுடன் முடிந்தது

நாடிய பரிசுடன் நம் கலம் சேதமின்றி வந்தடைந்தது

கடல்கடந்து கரைசேர் கலத்தின் நாசி நுணியில் நங்கூரம்

கடலெனக் கரையில் திரண்ட மக்களின் மனதிலோ ஆரவாரம்

    ஆயின், இதயமே என்னுயிர் இதயமே

    கசியும் உதிரத்தில் உந்தன் நெஞ்சமே

    கலத்தினுள் மேடையில் சருகாய்க் கிடக்கிறது

    உயிர்நீத்த உந்தன் குளிர்ந்த யாக்கையே


தலைவா, என் தலைவா! விழித்தெழுந்து மணியோசை கேள்

உனக்காக பறக்கும் கொடியும் ஒலிக்கும் பறையும் பார்

கூடிய கூட்டத்தினர் கையில் கொத்து மலர் வளையங்கள் உனக்காக

கூக்குரலில் உனையழைத்து காத்திருக்கிறார்கள் வரவேற்க

    தலைவா! என் தந்தையே!

    நின் சிரத்தின் கீழிருக்கும் என் கரம்

    சீராட்டுவதென் நின் சிந்தனையா கனவா

    சில்லிட்டிருக்கும் உன் உடலையா


என் தலைவனின் உறைந்த உதடுகளில் பதிலில்லை

என் கரத்தை உணரும் உயிரும் எந்தையிடத்தில்லை

கடலோடிய கலம் கரையடைந்து நின்றிட்டாலும்

கேடுசூழ் பயணம் வெற்றிக்களிப்பில் நிறைந்திட்டாலும்

    கரையில் புரளும் உற்சாகம் என்

    கால்களின் துவண்ட நடையில் கரைகிறதே

    காரணம் என் தலைவன் கலத்தினுள்

    காலமாகிச் சவமாய் கிடக்கின்றானே



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home