Tuesday, March 28, 2023

திருஷ்டி தானம்

 (கன்னட மூலம் - மூலம் திரு.பண்டரிநாத்தாச்சாரி கலகலி)



அலக் நிரஞ்ஜன் அலக் நிரஞ்ஜன்
பக்திப்பழமாய் நின்றான் பைராகி
கனிவுடன் நடந்தே கதவருகில் நின்று
பிக்ஷை கேட்டான் அ(வ்)யோகி

நெற்றியில் திருநீறும் நெஞ்சினில் சந்தனமும்
தரித்தே நின்றானே சந்நியாசி
காதினில் தேனாய் காந்தக் குரல் கேட்டு
கடைக்கண்ணால் நோக்கினாள் கயல்விழி

இதயம் தான் தவித்ததே மெய்யும் தான் சிலிர்த்ததே
மனக்கதவு திறந்து தட்டியதே
அழகனவன் வதனத்தின் அற்புதவொளி அவள்
ஆழ்மனதில் மின்னல் வெட்டியதே

இதுவரை அடக்கிய மனக்குதிரையின் கடிவாளம்
இன்று மட்டும் ஏன் தளர்ந்ததே
எண்ணித்தான் பார்க்கையில் ஏந்திழையின் மெல்லிய
கன்னம் இரண்டும் சிவந்ததே

அலக் நிரஞ்ஞன்..மறுநாள் காலையில்
மறுபடி அவன் குரல் ஒலித்ததே
ஆரணங்கு அவளின் அழகிய கண்களில்
ஆயிரம் வண்ணங்கள் ஜொலிக்குதே

மணிக்குரல் கேட்டதும் மாயாஜாலத்தைப்போல்
எண்ணிய சபதமும் மறந்ததே
வில்விட்ட மலர்க்கணை வேகமாய்ப் பாய்வது போல்
கால்களும் வெளியேற விரைந்ததே

ஆடையை சரிசெய்து ஆவலுடன் அவனருகில்
அழகாக நின்றிட்டாள் அம்மாது
ஆசையெல்லாம் திரட்டி அமுத மொழியினில்
அவனிடம் பேச்சிட்டாள் அன்போடு

நில்லுங்கள் யோகியே உங்கள் கண்களின்
ஜோதியே என்னுள் குவிகிறதே
அதில் ஆதவன் அம்புலி அல்லி மலருமே
நாணத்தில் தம்தலை கவிழ்கிறதே

வியந்த போதிலும் அமைதியாய் அங்கிருந்து
விரைவாகக் கடந்தான் வீதிவழியே
அலக் நிரஞ்ஜனவென மறுநாளும் வந்திடவே
மையலுடன் வந்தாளே மைவிழியே

தாயே பெறுகவென தன்னுடைய திருவோட்டை
அவளைநோக்கி நீட்டினவே அவள் கைகள்
தண்ணீர் என்றெண்ணியவள் தன்விழியால் கண்டதுவோ
செந்நீரில் தத்தளித்த அவன் கண்கள்!

உன் பார்வை மயங்கிட காரணமாய் இருந்திட்ட
என்புறக்கண் இன்புடனே தந்திட்டேன்
அன்புடன் பெற்றென்னை அருள்வாய் அமுதிட்டவளே
என்றவள் அகக்கண்ணை திறந்திட்டானே

அலக் நிரஞ்ஜன் அலக் நிரஞ்ஜன்
வலியின்றித் தொடர்ந்தான் சந்நியாசி
ஊனக்கண் கொண்டு ஞானக்கண் திறந்தான்
விழியின்றி வழிகாட்டிய தவயோகி

Monday, March 27, 2023

திருஷ்டி தானம்

 ஒரு அழகான கன்னட கவிதையின் தமிழ் உரை. மூலம் திரு.பண்டரிநாத்தாச்சாரி கலகலி அவர்கள் எழுதியது. அதை ஆங்கிலக் காணொளியில் அழகாக விளக்கியவர் அவரது பேரன் திரு. நவநீதம் கலகலி. அவருடைய பாட்டனாரின் கன்னடப் புலமைக்கு சற்றும் சளைக்காத ஆங்கிலப் புலமையும் உச்சரிப்பும் பார்வையாளர்-ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.


க(வி)தைக்கு வருவோம். இது நிகழ்வது வடநாட்டில். ஒரு ஊரில் ஒரு பைராகி. இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாத யோகி. அனைத்தும் துறந்த ஞானி. நெற்றியில் உள்ளிருக்கும் ஞானம் நீர்க்காமல் காக்கும் திருநீறு. நெஞ்சில் உள்ளிருக்கும் இறைவனை வேர்க்காமல் குளிர்விக்க சந்தனம். மேனியில் மானத்தைக் காக்க ஒரு கந்தல். கையில் தீண்டாமல் பிக்ஷை ஏற்க ஒரு திருவோடு. இவ்வளவே அவன் சொத்து. பார்ப்பவர்க்கு அவன் பித்து. முனிவர்களில் அவன் முத்து. ஒரு நாளில் ஒரு வேளை சில கவளம் மட்டுமே அவன் உண்ணும் சத்து.

ஒரு நாள் அந்த ஊரில் வாழும் செல்வந்தர் வீட்டு வழியாக பிக்ஷை கேட்டு வருகிறான். சும்மாவா வருகிறான்? கணீரென்ற குரலில் அலக் நிரஞ்சன் அலக் நிரஞ்சன் என இறைவன் பெயரை அற்புதமான ராகத்தில் பாடிக்கொண்டே வருகிறான்.

அவன் குரலில் கவரப்பட்ட செல்வந்தர் வீட்டு மருமகள், தன் வேலைக்காரியிடம் ஒரு தட்டில் சிறிது உணவை கொடுத்து அனுப்புகிறாள். ஜன்னல் வழியாக வேலைக்காரி அந்த உணவை அந்த யோகியிடம் அவனுடைய திருவோட்டில் சேர்க்கிறாளா என்று கண்காணிக்கிறாள்.

பிக்ஷை வாங்கும்போது ஆசீர்வதிப்பதற்காக தலையை நிமிர்த்தும்போது யோகியின் கண்களைக் காண்கிறாள். பிக்ஷை பெற்றுக்கொண்டு அவன் நகர்ந்து மறைகிறான்.

ஆனால் மின்னலைப் போன்று ஒளிரும் அவனுடைய கண்கள் அவள் எண்ணத்தை கவர்கின்றன. அவனுடைய கண்களின் அழகில், தீட்சண்யத்தில் தன் மனம் லயிப்பதை உணர்கிறாள். அவளுடைய உள்ளுணர்வு அவளை எச்சரிக்கிறது. சே! ஏன் என் மனம் இன்று தடுமாறுகிறது? இது சரியில்லை. இனி இவன் வந்தால் நான் இவனை கவனிக்காமல் உள்ளேயே இருந்துவிட வேண்டும். எந்தவித சலனத்திற்கும் இடம் கொடுத்து விடக் கூடாது என்று முடிவெடுக்கிறாள்.

ஆனால் நடப்பது வேறு. மறுநாள் தெருமுனையில் அவன் குரல் ஒலிக்கும்போதே அவளுக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்கிறாள். அதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையும் அறிகிறாள். அவளுடைய கைகள் தானாக உணவுத் தட்டை எடுக்கின்றன. அவளுடைய கால்கள் தானாக வாசல் கதவை நோக்கி பயணிக்கின்றன. அவளது மனம் வேலைக்காரியை அழைப்பதுபற்றி நினைக்கக்கூட இல்லை.

இதோ அவன் வாசலில் வந்துவிட்டான். மயக்கும் குரலில் தெய்வீக இசையில் அலக் நிரஞ்சன் அலக் நிரஞ்சன் என்று இறைவனை அழைத்தபடியே திருவோட்டை ஏந்திய கரங்களை முன்னே நீட்டுகிறான்.

பரவசத்துடன் பிக்ஷை பாத்திரத்தில் உணவிட்ட அவள், ஏதேனும் பேசியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் அவனிடமே அவனது கண்களைப் பற்றி சிலாகிக்கிறாள். சூரியனும சந்திரனும் அல்லியும் நாணுமளவுக்கு பிரகாசமாகவும் ஆனால் அதே சமயத்தில் தண்மையாகவும் மலர்ந்தும் ஒளிர்ந்து என்னைக் கவரும் கண்களை எங்கு பெற்றீர்கள் என ஆவல் மிகுதியுடன் அவசரமாக கேட்டுவிட்டு வீட்டிற்குள் ஓடி வந்து விடுகிறாள்.

மறுபடியும் அவளது மனம் அவளை அலைக்கழிக்கிறது. நாளை காதுகளை அழுத்தி மூடியே வைத்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறாள்.

ஆனால் அடுத்த நாள் காலையிலிருந்தே அவன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். ஆயிற்று. அவன் வரும் நேரத்திற்கு சற்றுமுன் அவன் குரலோடு மன்மதனின் வில்லில் இருந்து மலர்க்கணை விடுபடும் ஒலியை உணர்கிறாள். தன் மனம் அவனிடம் மயங்குவது தெரிகிறது ஆனால் அவளால் தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

சரியாக அவன் தன் வீட்டு வாசலுக்கு வரும் நேரம் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு தன் அழகை ஒருமுறை பார்த்துக்கொண்டு தன் ஆடையை சற்றே சரிசெய்து கொண்டு வாசலுக்கு விரைகிறாள்.

ஆனால் ஏதோ சரியில்லை என்று அவளுடைய உள்மனம் எச்சரிக்கிறது. குழம்பிய சிந்தனையுடன் யோகியை நெருங்குகிறாள்.

அவன் அவள் இருக்கும் திசை நோக்கி தன் திருவோட்டை நீட்டிக்கொண்டே பாடுகிறான். தாயே, என் கண்கள் தங்களைக் கவர்ந்தன ஒன்று சொன்னீர்கள் அல்லவா, எனவே அவைகளை தங்களுக்கே தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறான்.

விழிகளை இழந்த அவனுடைய முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தவாறே திருவோட்டினுள் தன் பார்வையை செலுத்துகிறாள் அவள். அங்கே அவள் கண்ட அதே பிரகாசத்துடன் மின்னிக்கொண்டிருந்தன அவனது கண்கள்.

அவனோ, எதுவுமே நடக்காதது போல, எதையுமே இழக்காதது போல, வழக்கமான அதே வேகத்தில் ஆனந்த ராகத்தில் அலக் நிரஞ்சன் அலக் நிரஞ்சன் என பாடிக்கொண்டே மறைகிறான்.




பத்து காசு இல்லாமலே பார் முழுவதும் தனது சொந்தமென எண்ணி அன்பைச் சுரந்து பிக்ஷையில் உயிர்க்கும் யோகியர்க்கு பார்க்கும் பெண்ணினம் யாவும் அன்னையே.

காணும் அனைத்திலும் கருத்தையும் சிதறுவோர் கண்ணிருந்தும் குருடரே.

பார்வை இழந்தது யார்? பார்வை பெற்றது யார்? பார்வை தந்தது யார்? பார்வை என்பது என்ன?

அலக் நிரஞ்சன்!

Thursday, March 23, 2023

தியானம் - காயத்ரி மந்திரம்

 சமீபத்தில் தியானம் பற்றிய ஒரு பிரவசனம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்து சொல்லப்பட்ட விளக்க உரை) கேட்கப் பெற்றேன். அவர் யார், எந்த சுலோகம் என்பதெல்லாம் என் சிற்றறிவில் நிற்கவில்லை. ஆனால் அவர் சொன்ன விளக்கத்தின் சாராம்சம் ஓரளவு என் மூளையில் பதிந்தது. அது ஏன் என்பதும் மேலும் படித்தால் விளங்கும்.

அவர் தியானத்தின் சிறப்பைப் பற்றி உரையாற்றினார். குறிப்பாக காயத்ரி மந்திரத்தின் மேன்மையை மிகவும் அழகாக சிருங்கேரி மஹாஸ்வாமிகள் ஒரு பக்கருக்கு உபதேசித்தது போன்ற உதாரணங்களுடன் விளக்கினார்.

ஸவிதா எனப்படும் ஆன்ம ஒளி எவ்வாறு அனைத்து ஆன்மாக்களின் உள்ளிருந்து இயங்குகிறது என்பதையும், தியானம் என்பதே நமது எண்ணங்களை உள்ளிருக்கும் ஆன்மாவை நோக்கி பயணிப்பது என்பதையும் வடமொழி சுலோகங்கள் உதவியுடன் விஸ்தாரமாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைத்தார்.

தியானம் என்பதை எவ்வாறு அணுக வேண்டும்? நமது எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி இறைவனை நினைத்து அதைவிட சிறந்தது வேறு எதுவுமே இல்லை என்று போற்றப்படும் காயத்ரி மந்திரத்தை பெரியவர்கள் சொன்னபடி தினமும் மூன்று வேளையும் தியானிக்க வேண்டும். ஏனெனில் நமது எண்ணங்களை பலவித ஆசைகள் வேண்டாத நினைவுகள் என அசுத்தங்கள் எப்பொழுதும் சேர்ந்துகொண்டு கலக்கிக்கொண்டு தான் இருக்கும். எந்த தீர்க்க சிந்தனையையும் உருப்படியாக செய்யவிடாமல் ஒரு திரை போல மறைத்தபடி மே இருக்கும்.

நீர்நிலையில் பாசி படர்ந்த மேற்பரப்பை மெதுவாக விலக்கி தெளிந்த நீரை அள்ளுவது போல இந்த எண்ணத்தில் படியும் மாசை அகற்ற தியானம் உதவி செய்யும். எவ்வளவு நேரம் ஆழ்ந்து கவனம் சிதறாமல் தியானிக்கிறோமோ அந்த அளவுக்கு நமது எண்ணங்களின் தேவையற்ற காட்சிகள் நீங்கி சிந்தனைகளும் தெளிவு பெறும். ஆன்ம ஞானம் வலுப்பெறும். மனம் பக்குவம் அடையும்.

அதிலும் காயத்ரி மந்திரம் தியானிப்பதற்கு முன் மூன்று முறை அர்க்யம் கொடுக்க வேண்டும். அந்த அர்க்யத்தை மிகவும் சிரத்தையுடன் கொடுத்துவிட்டு உடனே மந்திர உச்சாடனையில் ஆழ்ந்துவிட வேண்டும். எவ்வளவு நேரம் செய்கிறோமோ அந்த அளவு ஆன்ம பலம் பெருகும் என்பது நிதர்சனமான உண்மை.

ஆக, காலையில் எழும்போது முந்தைய இரவின்போது வந்த எண்ணங்களின் கறைகள் நீங்க காலையில் ஒரு முறை சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். அதன் பின் நாம் செய்யும் செயல்களின் தாக்கமாக எண்ணங்களில் மீண்டும் கறை படியும். அதை நீக்க மதியம் ஒரு முறையும், அதே போன்று மதியும் முதல் மாலை வேளை வரை சேரும் எண்ணக்கறைகள் நீங்க மாலை மீண்டும் ஒரு முறையும் ஆகமொத்தம் தினமும் மூன்று முறை சிரத்தையுடன் தீவிரமாக தவறாமல் சந்தியா வந்தனம் செய்பவர்களின் செயல்பாடுகளும் சிந்தனைகளும் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு அவர் விளக்கிய போது எனக்கு என் சொந்த அனுபவமே நினைவுக்கு வந்தது.

எனது சொந்த வேலைகளின் கட்டாயத்தினால் என்னால் சுமார் பத்து மணிக்குமேல்தான் குளித்து பூஜை செய்ய முடிகிறது என்றாலும் அதிகாலையில் அரை மணிநேரம் நடைப்பயிற்சிக்குப் பின் என் வீட்டு மொட்டை மாடியில் சிமெண்ட் தூணின் மேல் அமர்ந்து சந்தியா வந்தன மந்திரமும் மேலும் ஒருசில சுலோகங்களையும் சிறிய அளவில் யோக முத்திரைகளோடு தியானிப்பது என் வழக்கம். அவ்வாறு செய்யும்போது மூன்று முறை மற்றும் நேர வேறுபாட்டிற்காக மேலும் ஒரு முறை என நான்கு முறை மானசீகமாக நான் மிகவும் அனுபவித்த ரிஷிகேஷ் கங்கை, சபரிமலை பம்பை, கும்பகோணம் காவிரி மற்றும் என் வீட்டில் அறுபது-எழுபதுகளில் எங்கள் கிணற்றில் தாம்புக்கயிறு கொண்டு இழுத்து இறைத்த தெள்ளத்தெளிவான தேனினும் இனிய கிணற்றுத் தண்ணீரால் தினமும் அர்க்யம் இன்றளவும் தருகிறேன்.

இவ்வாறு அமரும் வேளையில் இடைப்பட்ட வேளைகளில் இரண்டு அல்லது மூன்று முறை கிழக்கில் நன்கு எழுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனை ஒருசில நொடிகள் தொடர்ந்தாற்போல் கண் இமைக்காமல் பார்ப்பது என் வழக்கம். காண முடியாத அளவுக்கு பிரகாசம் பெறும்முன் காண்பது ஆபத்தில்லை, அது நல்ல பழக்கமே என்று ஒரு மருத்துவர் கூறியிருப்பதை நினைவில் கொண்டு பயமில்லாமல் அதை செய்கிறேன்.




அவ்வாறு சூரியனை நேரில் பார்க்கும்போது முதலில் அதன் பிரகாசத்தில் சுற்றிலும் இருக்கும் அனைத்து வெளியிலும் ஒருவித ஒளிச்சிதறல் பரவி சூரியனே ஒரு ஒழுங்கற்ற பந்துபோலவே காட்சியளிக்கும். ஆனாலும் கண்ணை மூடாமல் பார்வையை அகற்றாமல் சில நொடிகள் நிலைநிறுத்திப் பார்க்கும்போது சுற்றிலும் படர்ந்திருந்த சிதறல் ஒளிபடிப்படியாக மறைந்து ஒளிப்பிழம்பாக நடுவில் பிரகாசிக்கும் சூரியனும் அதைச் சுற்றி நிர்மலமான ஆழ்ந்த நீலநிற வான்வெளியும்தான் கண்ணுக்குத் தெரியும். தகதகக்கும் அந்த சூரியனின் வட்டத் தகடைச் சுற்றி அதன் வெளி விட்டத்தில் மிகமெல்லிய இளஞ்சிவப்பு ஜ்வாலை மின்னும் காட்சி அற்புதமாக இருக்கும்.




ஒரு முறை பார்த்த பின் கண்ணை அகற்றி சில நிமிடங்களுக்குப்பின் மீண்டும் சூரியனைப் பார்க்கும்போதும் இதே காட்சி இதே தொடர்ச்சியில் தென்படும்.

இந்த உதாரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் அவர் சொன்ன விளக்கத்தின் உண்மை எனக்கு புரிவதுபோல இருந்தது. ஐந்து நிமிட சொற்பொழிவில் இவ்வளவு தாக்கம் ஏற்படுமானால் நமது வேதங்களும் சாஸ்திரங்களும் எவ்வளவு பழமையானவை, அவற்றில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் பொதிந்திருக்கின்றனவோ என்ற ஆச்சரியம் என் மனதில் ஓங்கி நிற்கிறது.