Wednesday, February 6, 2019

ரகுராம் அதிர்ந்து போயிருந்தான்.  மாலை ஆபீஸ் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது அவன் கண்ட காட்சி அப்படி...

“அம்மா.. ஸ்கூல்ல எரேசர் தொலஞ்சு போச்சும்மா..” என்று கண்ணீர் மல்க மருகிக் கொண்டிருந்தாள் ஏழு வயது சிறுமி ரம்யா.


“என்னது?  தொலஞ்சு போச்சா?  காலைலதானடி நீ கேட்டேன்னு புது எரேசர் பாக்கெட்லேந்து எடுத்துக் கொடுத்தேன்… அதையா ஒரு நாள்கூட போகல்ல இதுக்குள்ளே தொலச்சுட்டு வந்து நிக்கிற…” என்று அங்கலாய்த்தாள் தாய் சுமதி.


“ஆமாம்மா..அது தான்.   இப்போ எரேசர் இல்லாம நான் எப்படிம்மா ஹோம்வொர்க்கெல்லாம் பண்ணுவேன்?  எதை வச்சு தப்பெல்லாம் சரி செய்வேன்?  சொல்லும்மா! “என்று விம்மி விம்மி கேவியபடியே வினவினாள் ரம்யா.


“அதுக்கோசரம்?  தினம்தினம் புது எரேசர் கொடுக்குமுடியுமா?  நீ மொதல்ல எப்படி அது தொலஞ்சுதுன்னு யோசி”


“லஞ்ச் பீரியட்லேகூட பாக்ஸ்லதாம்மா இருந்தது.  மத்தியானம் முதல் பீரியட்டுக்கு அப்புறம்தான் அது காணம்மா”


“அப்படின்னா ஒம்பக்கத்துல ஒக்காந்திருக்கிறவ தான் அதை எடுத்திருக்குனும்.  யார்டி அது ஒனக்குப் பக்கத்துல ஒக்கார்றவ?”


“மஹா தாம்மா எம்பக்கத்துல ஒக்கார்றா..ஆனா அவ எடுத்திருக்க மாட்டாம்மா”


“யாரு மஹா?  அந்த கரிஷ்மா ஆன்ட்டி பொண்ணா?”


“கரெக்ட்மா!  எப்படி கண்டுபிடிச்சே?”


“எப்படியா?  அவதான் அன்னிக்கு யோகா க்ளாஸ்ல என்னோட தலகாணிய தெரியாம பண்ணறாமாதிரி எடுத்துண்டு போயிட்டா.  அதுவுமில்லாம அது அவளோடதுன்னு வேற சொல்லிண்டிருந்தா… நல்லவேளை நான் அதுல ஓரத்தில என்னோட இனிஷியல் எம்ப்ராய்டரி பண்ணினத வெச்சு ப்ரூவ் பண்ணி திருப்பி எடுத்துண்டு வந்தேன்.  அவதான் அவ பொண்ணுக்கும் ஒன்ன டிஸ்டர்ப் பண்ணனும்னே சொல்லிக் குடுத்திருப்பா!”


“அம்மா எப்படிம்மா உனக்கு இப்படியெல்லாம் யோசிக்க வருது?  நீ சொல்றது சரியா இருந்தாலும் இருக்கும்.  இரு இரு.. நாளைக்கு க்ளாஸ்ல அவளோட பேக் எடுத்து புரட்டிப்போட்டு இன்னும் யாரோட சாமான் என்னல்லாம் எடுத்திருக்கான்னு பாத்துடறேன்!”


ரகுராம் கொதித்துப்போனான்.  “வில் யூ போத் ஸடாப் திஸ் நான்சென்ஸ்?” என்று உரக்கக் கத்தியபடியே உள்ளே நுழைந்தான்.  “ஒண்ணுமில்லாத எரேசருக்கு இவ்வளவு கலாட்டாவா?  அதுவுமில்லாம அம்மா இப்படி பொண்ணு அப்படின்னு வம்பெல்லாமா பேசறீங்க?” என்று கோபமாகக் கேட்டான்.


அவன் நுழைந்ததை அப்போதுதான் கண்ட ரம்யாவும் சுமதியும் சுதாரித்துக்கொண்டு புன்னகைத்தனர்.  ஒன்றும் புரியாமல் விழித்த ரகுராமிடம் ரம்யா ஓடி வந்து கட்டிக்கொண்டு சிரித்தாள்.  “பயந்துட்டியா அப்பா?  எங்களுக்கு போரடிச்சா இப்படித்தான் நானும் அம்மாவும் அப்பப்போ சீரியல் விளையாட்டு விளையாடுவோம்” என்றாள்.


“சீரியல் விளையாட்டா இல்ல சீரியஸ் விளையாட்டா?” என்று கேட்டான் ரகுராம்.


“சீரியல் விளையாட்டுதாங்க… டிவி சீரியல்” என்று சிரித்துக்கொண்டே அவன் கன்னத்தைக் கிள்ளி விளக்கிவிட்டு காபி கொண்டுவர உள்ளே சென்றாள் சுமதி.








0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home