கடவுள்
கருணா கவலையோடிருந்தான். அவனது தந்தை கந்தசாமியின் உடல்நிலை சிறிது நாட்களாகவே சரியில்லை. ஐந்தாறு மாதங்களாகவே கொஞ்சநஞ்சம் நடப்பதையும் மெதுவாகக் குறைத்துக்கொண்டு பெரும்பாலும் உட்கார்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோதான் இருந்தார் கந்தசாமி. சென்றவாரத்திலிருந்து அதுவும் இல்லை. எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. பத்து அடி தூரத்தில் உள்ள பாத்ரூமுக்குக்கூட நடக்கத் திராணி இல்லாமல் அவதிப்பட்டார். கைத்தாங்கலாக அழைத்துச்சென்றாலும் மூன்று அடி வைத்தாலே மூச்சு முட்டியது.
இப்போதெல்லாம் ஹோமியோ அல்லது ஆயுர்வேதம் தான். அதுவும் கந்தசாமி நேரில் செல்வதில்லை. கோட்டக்கல் ஆயுர்வேத பார்மசி மேனேஜர் கருணாவின் நண்பனாக இருந்ததனால் கந்தசாமியின் அப்போதைக்கப்போதைய உபாதையை விவரித்து கருணாதான் மருந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அலோபதி டாக்டரிடம் காண்பிப்பதை விட்டு பல மாதங்கள் ஆகியிருந்தன. அதற்குக் காரணம் இருந்தது.
ஏற்கெனவே ஏழெட்டு வருடங்களுக்கு முன் திடீரென்று நெஞ்சுவலி வந்தபோதே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியிருந்தான் கருணா. அப்போதே அவர்கள் அனைத்து பரிசோதனைகளும் செய்து இதய மருத்துவரிடம் காண்பிக்க பரிந்துரைத்திருந்தனர். இதய மருத்துவர் கந்தசாமியைப் பரிசோதித்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாலன்றி கந்தசாமியின் உடல்நலன் சீராகாது என்றும் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உடல்நிலை மேலும் மோசமாகும் என்று எச்சரித்தார். தற்காலிகமாக சமாளிக்க மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்திருந்தார்.
கந்தசாமி மிகவும் நல்லவர் மாத்திரம் அல்ல, மிகவும் சாது, பயந்த சுபாவம் உள்ளவர். ரத்தத்தைப் பார்த்தாலே அவருக்கு மயக்கம் வந்துவிடும். அதனால் ஆஸ்பத்திரியில் படுப்பதையே அவர் மிகவும் அச்சத்துடன்தான் பார்த்தார். அறுவை சிகிச்சைக்கெல்லாம் ஒத்துக்கொள்ள அவருக்கு தைரியம் வரவில்லை. என்ன ஆனாலும் சரி. மருந்து மாத்திரையிலேயே சரிசெய்து கொள்கிறேன். எதைச் சாப்பிடு என்றாலும் சாப்பிடுகிறேன்...எதை சாப்பிடக்கூடாது என்றாலும் நிறுத்திவிடுகிறேன்… தயவுசெய்து என்னை ஆப்பரேஷன் டேபிளுக்கு மாத்திரம் அனுப்பிவிடாதே என்று மகனிடம் அடிக்கடி வேண்டிக் கொண்டிருந்தார். தந்தையில் வேண்டுகோளை கூடியவரை தட்டாமல்தான் இருந்தான் கருணா. எப்படியும் ஒரு சமயம் போய்த்தான் ஆகவேண்டும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு தப்புக் கணக்கு போட்டுவிட்டிருந்தான்.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் மீண்டும் நெஞ்சுவலி வந்து அதே டாக்டரிடம் காண்பித்தபோது, அவர் கன்னாபின்னா என்று திட்டியதோடு மட்டுமல்லாமல் உடனடியாக அறுவை சிகிச்கைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் இனிமேல் கந்தசாமிக்கு தான் வைத்தியம் பார்க்கப்போவதில்லை என்று எழுதியே கொடுத்துவிட்டார். கந்தசமியோ அறுவை சிகிச்சையைவிட சாவதே மேல் என்று பயந்த சுபாவத்திலும் இதில் உறுதியாக இருந்தார்.
கருணாவின் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்தது தான் ஆயுர்வேத வைத்தியம். அதில் அனுபவம் மிக்க வைத்தியர் ஒருவரிடம் காண்பித்ததில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது, ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பயப்படுபவரை கட்டாயப்படுத்துவதில் பயனில்லை, பயத்திலேயே அவர் இறந்துவிடுவார் என்று கூறி தன்னால் முடிந்த மாற்று வைத்தியம் செய்து பார்த்தார். அதில் சற்று பலன் தெரியவே பின்னர் அதையே தொடர்ந்தான் கருணா. நல்ல வேளையாக அவனது நண்பனே ஆயுர்வேத பார்மஸியும் வைத்திருந்ததால் அதற்குப்பின் ஓரளவுக்கு பிரச்சினை இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர்.
இப்போது தந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகிவிட்டதை உணர்ந்துகொண்ட கருணா அவனது நண்பனிடம் ஓடினான். அவனோ, இதோ பார் கருணா, உனக்கே தெரியும்…. உன் அப்பாவின் நிலைமைக்கு இவ்வளவுநாள் ஆயுர்வேதத்தால் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்… இனிமேல் அப்படி முடியாது...நீ உனக்குத் தெரிந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பதுதான் நல்லது என்று அறிவுரை கூறி அனுப்பிவிட்டான்.
மீண்டும் அதே இருதய டாக்டரிடம் ஓடினான் கருணா. அவர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். சாரி கருணா, நீ அப்போதே நான் சொன்னபடி கேட்டிருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும். இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னால் மட்டுமல்ல, வேறு எந்த டாக்டராலும் முடியாது. அவரது வேளை நெருங்கிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். வேறு எங்காவது பார்த்துக்கொள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்த கருணா என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினான். அப்போது அவனது மாமாவின் மகன் அருண் ஞாபகம் வந்தது. அருண் நாலும் தெரிந்தவன். நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கையோடு அருணுக்கு போன் செய்து விவரத்தைச் சொன்னான்.
கேட்டுக்கொண்ட அருண், நீ ஒன்றும் கலங்காதே கருணா… எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார்..அவரை அழைத்துக்கொண்டு வருகிறேன். அவர் வந்து பார்த்தபின் மேற்கொண்டு யோசிக்கலாம்...என்று கூறி டாக்டரரை அழைத்தும் வந்தான்.
கந்தசாமியை நிதானமாக பரிசோதித்தபடியே அவரிடம் பொதுவாக பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார் டாக்டர் கிரி. கந்தசாமியும் டாக்டரிடம் தன் பயத்தையெல்லாம் ஒப்பித்துவிட்டு, நான் மட்டும் கொஞ்சம் தைரியமா இருந்திருந்தா எல்லாரையும் இப்படி கஷ்டப்படுத்தியிருக்க மாட்டேன்… எனக்கு இனிமே சரியாகாதுன்னு உங்களுக்குப் பட்டா சீக்கிரம் போகிறா மாதிரி ஏதாவது மருந்து குடுத்திடுங்க டாக்டர்...ஆப்பரேஷன்லாம் வேண்டாம்…. என்று கேட்டுக்கொண்டார்.
சேச்சே… ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...என்னோட அப்பாவோட நண்பர் ஒருவருக்கு இப்படித்தான் சின்ன வயசில ஒரு விபத்தில மாட்டி பலமா அடிபட்டு இனிமே தான் பொழைக்க மாட்டோம் என்கிற முடிவுக்கு வந்திருந்தார். அப்போ அவரோட ஆபீஸில் கூட வேலை பார்த்துக்கொண்டிருந்த நண்பர்தான் அவருக்கு தைரியம் சொல்லி பக்கத்திலே இருந்து பாத்துண்டாராம்...கொஞ்ச நாளைக்கப்புறம் அப்பா சரியான பிறகு அவர் பயந்ததை நெனச்சு அவருக்கே வெக்கமா இருந்ததாம்...இப்படித்தான் சிலபேர் வெவரம் புரியாமலே அனாவசியமா பயப்பட்டே கஷ்டப்படறாங்க.. என்றார்.
நான் கூட சின்ன வயசிலே செங்கல்பட்டிலே வேலைபார்க்கும் போது என் கூட வேல செஞ்ச கிருஷ்ணதாஸ் பஸ் ஆக்சிடென்ட்ல அடிபட்டு இருந்தப்போ கூட இருந்து ஹெல்ப் பண்ணினேன்..ஆனா பாருங்க..அப்ப ஆஸ்பத்திரியேலே நான் பாத்த ஒண்ணுரெண்டு கேஸ்னாலேயே எனக்கு ஆப்பரேஷன் ஆஸ்பத்திரின்னாலே பயம் வந்திடுச்சு….என்றார் கந்தசாமி.
என்னது, செங்கல்பட்டு கிருஷ்ணதாஸா? சார்! அவர் எங்க ஃபேமிலிக்கு ரொம்ப குளோஸ் ஃப்ரெண்டு சார்….அவருக்கு உதவி செஞ்சது நீங்கதானா? உங்களைப் பார்த்தேன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவார் சார் அவர்… நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க…. நான் ஆப்பரேஷன் பண்ணமாட்டேன்… ஆனா இப்போ நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க… வீட்டுல வெச்சு வைத்தியம் பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்… ஒரு மூணு நாலு நாள் என்னோட ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணி ஒங்கள சரி பண்ணி அனுப்பிச்சிடறேன்… வாங்க…. என்று கூறி கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு தன்னுடைய காரிலேயே உட்காரவைத்து கூட்டிச் சென்றார். கருணா அருணுடன் பின் தொடர்ந்தான்.
போகும் வழியில் அருண் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தான். இந்த டாக்டர் யார் தெரியுதா உனக்கு கருணா? நான் கூட ஒங்கிட்ட சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன். நான் எங்க ஊர் சோஷியல் சர்வீஸ் க்ரூப்பிலே இருக்கேன்னு உனக்குத் தெரியும். அதிலதான் இவர் எனக்கு அறிமுகமானார். ரொம்ப நல்ல மனுஷன். நெஜமாகவே ஆதரவு இல்லாதவங்கன்னு தெரிஞ்சா அவங்ககிட்ட ஒரு பைசா வாங்க மாட்டார்ங்கறது மாத்திரமில்லே, அவங்களுக்குத் தேவையான மருந்தெல்லாம்கூட தன்னோட ஆஸ்பத்திரி கணக்கிலேயே குடுத்திடுவாரு. காலைல, சாயந்திரம் ரெண்டு மணி நேரம் மட்டும் க்ளினிக்கில அப்பாயின்ட்மென்ட்டோட கன்ஸல்டேஷன். மீதி நேரம் இந்த மாதிரி வெளியே வர வசதியில்லாதவங்கன்னு இருக்கிற பேஷண்ட்டுகளை அவங்கவங்க வீட்டிலேயே போய் பாப்பாரு. இவரு மாத்திரம் பணம் பண்ணனும் நெனச்சிருந்தாருன்னா இந்நேரம் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியே கட்டியிருக்கலாம். ஆனால் பாரு, அவங்க அப்பாவோட அட்வைஸ்தானாம் படிச்ச படிப்பால எத்தனை பேருக்கு உதவமுடியுமோ அவ்வளவு செய்யின்னு அவரு சொன்னத வேதவாக்கா எடுத்திண்டு பணத்தைவிட தர்மம் தான் அதிகம் பண்ணிட்டிருக்காரு… அதனாலதானோ என்னமோ இவரை தேடி வந்து இவரோட ஆஸ்பத்திரிக்கு பணமாவோ பொருளாவோ நெறய பேர் தர்றாங்கன்னு கூடி கேள்விப்படறேன்… ஆகமொத்தம் நல்ல மனுஷன்….மறுக்க மாட்டார்ன்னு நம்பித்தான் உங்கப்பா கண்டிஷன் சொல்லி கேட்டேன்… நம்ம நல்ல நேரம் உடனே மறுக்காம ஒத்துண்டு வந்துட்டார் பாறேன்… என்றான்.
ரொம்ப தேங்க்ஸ்டா அருண்…. இவரோட கண்டிஷனுக்கு எல்லாரும் கைவிரிச்சப்போ எங்க போறதுன்னே தெரியாம கலங்கிட்டிருந்தேன்… நல்ல வேள நீ ஹெல்ப் பண்றே என்று மனதார நன்றி கூறினான் கருணா. அதற்குள் ஆஸ்பத்திரி வந்தது. இருவரும் உள்ளே சென்றனர். ஆஸ்பத்திரியில் அட்மிஷனுக்கான வேலைகளையெல்லாம் முடிக்கவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. சிறிய தனி அறை ஒதுக்கப்பட்டு அதில் கட்டிலில் படுக்கவைத்து கையில் சலைன் மற்றும் மருந்து ஏற்றுவதற்கான டியூப்புகளெல்லாம் பொருத்தப்பட்டு தந்தையை அந்தக் கோலத்த்தில் பார்க்கவே சிரமாமாக இருந்தது கருணாவுக்கு.
கவலைப்படாதீங்க கருணா… உங்கப்பாவை நான் என்னோட அப்பா போலவே நெனச்சி பாத்துக்கறேன்..நீங்க போயிட்டு வாங்க… இங்கே ஒரு கவலையும் இல்லை...வேளா வேளைக்கு மருந்தும் சரி சாப்பாடும் சரி, டியூட்டில இருக்கிற சிஸ்டர்ஸ் ரொம்ப கரெக்டா பாத்துப்பாங்க...நான் அதெல்லாம் ரொம்ப மெனக்கெட்டு ட்ரெயின் பண்ணி வெச்சிருக்கேன்...சாயந்திரம் விஸிட்டர்ஸ் நேரத்தில மாத்திரம் உங்க வீட்டிலேருந்து யாராவது ஒருத்தரோ அல்லது ரெண்டு பேர் மாத்திரமோ வந்து பாருங்க..மத்தபடி யாரும் வேண்டாம்.. மொதல்ல அரை நாள் அவருக்கு தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கும்…. அப்புறம் பழகிடும்…. சரியான போஷாக்கும் கவனிப்பும் ரெஸ்ட்டும் குடுத்தாப் போறும்...சீக்கிரமே சரியாகிவிடுவாரு ..ஒண்ணும் பயப்படாதீங்க….எப்ப தேவைப்பட்டாலும் என்னோட மொபைல் நம்பருக்கு போன் பண்ணுங்க...நீங்க போன் பண்ணும்போது எடுக்கலைன்னாலும் கொஞ்சநேரத்தில நானே உங்களுக்கு கால் ரிடர்ன் பண்ணுவேன்.. என்று தைரியமும் சமாதானமும் கூறி அனுப்பிவைத்தார் டாக்டர் கிரி.
ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்….இப்ப எவ்வளவு பணம் கட்டணும் … என்று கொஞ்சம் தயக்கத்துடனே கேட்டான் கருணா. ஏனெனில் இருப்பதையெல்லாம் புரட்டினாலும் பத்து பதினைந்தாயிரத்துக்கு மேல் தேறாது என்று அவனுக்குத் தெரியும். டாக்டர் அவனை நேராக கண்ணில் பார்த்து, நான் இப்போ பணம் கேட்டேனா? எப்ப கேக்கணுமோ அப்போ கேட்டு வாங்கிக்கறேன்….நீங்க மொதல்ல உங்கள ஆசுவாசப்படுத்திக்கோங்க….பாத்தாலே தெரியுது...நாலு நாளா கஷ்டப்பட்டுட்டிருக்கீங்கன்னு...என்றார்.
அதுக்கில்லே டாக்டர், சுமாரா எவ்வளவு செலவாகும்னு ஒரு ஐடியா கிடைச்சா அதுக்கேத்தா மாதிரி ரெடி பண்ணலாம்னுதான் கேட்டேன்...என்றான் கருணா. அதான் சொல்றேனில்ல, பணம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்...மொதல்ல அவர் சரியாகட்டும்…ஒண்ணும் பயப்படாதீங்க…அப்படியெல்லாம் ஜாஸ்தி வாங்கிட மாட்டேன்.. சரி, எனக்கு வேலையிருக்கு...நான் கிளம்பறேன் ...என்று கூறி நர்ஸிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு விடைபெற்றார் டாக்டர்.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு டாக்டரா என்று வியந்தபடியே அருணின் பின்னால் உட்கார்ந்து வீட்டுக்குத் திரும்பினான் கருணா.
மறுநாள் காலை ஆஸ்பத்திரியிலிருந்து போன். பதட்டத்துடன் எடுத்தான் கருணா. நர்ஸதான் பேசினார். மிஸ்டர் கருணா...உங்கப்பாவுக்கு வைடல்ஸ் எல்லாம் பரவாயில்லை...கொஞ்சம் B P இருக்கு. சுகர் இல்ல...வீக்னஸ்தான் அதிகமாயிருக்கு...ரொம்ப அனீமிக்கா இருக்காரு...ஹீமோகுளோபின் ஆறுக்கும் கீழே இருக்கு...ஒரு பாட்டில் ரத்தம் ஏற்றிப் பார்க்கலாம்னு இருக்கோம்… ரத்தம் ஏத்தினால் கொஞ்சம் ஃபீவர், ஷிவரிங் வர சான்ஸ் இருக்கு...பயப்படாதீங்க … நாங்க இருக்கோம்… பாத்துக்கறோம்…. உங்களுக்குத் தகவல் குடுத்துட்டு ஆரம்பிக்கச் சொன்னார் டாக்டர்… அதனால்தான் போன் பண்ணறோம்….நீங்க சாயங்காலம் வந்தாப் போறும்…. என்று விளக்கினார். கவலையுடன் சரி சிஸ்டர் என்று கேட்டுக்கொண்டான் கருணா.
மாலை வரை பொழுது நகர்வதே பெரும் பாடாக இருந்தது கருணாவுக்கு. சரியாக நான்கு மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்தான். கந்தசாமி அவனைப் பார்த்து புன்னகைத்தார். என்னப்பா … எப்படி இருக்கீங்க...என்று கேட்டான். எனக்கென்ன...நான் நல்லாத்தான் இருக்கேன்...வேளா வேளைக்கு சரியா கவனிச்சிக்குறாங்க...என்ன..இத்தனை பேர்கிட்ட பண்ணிக்கிடறமாதிரி ஆயிடுச்சேன்னுதான் கஷ்டமா இருக்கு… என்று வருத்தப்பட்டார்.
அதுக்கு என்னப்பா பண்ணறது...ஒடம்பு சரியில்லேன்னா அப்படியே விட்டுட முடியுமா? டாக்டர்கிட்ட வந்துதானே ஆகணும்...இப்ப பாத்தீங்களா….நீங்க பயப்பட்டா மாதிரியெல்லாம் ஒண்ணுமே இல்ல...இன்னும் ரெண்டு நாள்ல தேத்தி அனுப்பிச்சிடுவாங்க..நாங்கள்ளாம் இருக்கோம்...பயப்படாதீங்க...என்று ஆறுதல் சொல்லி அவர் அருகிலேயே இரண்டு மணிநேரம் உட்கார்ந்திருந்தான் கருணா.
விஸிட்டர்ஸ் நேரம் முடிந்து கிளம்பும் நேரம் டாக்டர் வந்தார். கருணாவை அவரது அறைக்கு அழைத்தார். இங்க பாருங்க கருணா...உங்க அப்பா நெலமை அப்படியும் சொல்ல முடியாது இப்படியும் சொல்ல முடியாதுங்கிற ஸ்டேஜுலதான் இருக்கு...ஏன்னா அவரோட ஹார்ட் ரொம்ப வீக்காயிடிச்சு...உங்க டாக்டர் சொன்னாமாதிரி அப்பவே ஆப்பரேஷன் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கலாம்...ஆனா இனிமே ஆப்பரேஷன்லாம் அவரோட உடம்பு தாங்காது...இன்னும் ரெண்டு மூணு நாளோ இல்ல இன்னும் கொஞ்சம் மேலயோ இங்க இருக்கட்டும்...கொஞ்சம் தெம்பு வந்தப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணறேன்...குடுக்கற மருந்தை சரியா எடுத்திட்டு இருக்கிற வரைக்கும் இருக்கட்டும்… நான் கொஞ்சம் ஃப்ராங்க்காகவே சொல்றேன்...இப்போ இருக்கிற நிலைமைக்கு அவர் இன்னும் ஒரு ஆறு மாசம் இல்லாட்டி ஒரு வருஷம் வரைக்கும்தான் இருப்பார்...அவரை நிம்மதியா, சந்தோஷமா வெச்சுக்கப் பாருங்க.. அவருக்கு பிடிச்சதைக் குடுங்க...அவருகூட பேசிட்டிருங்க...மத்தபடி பெரிசா ஒண்ணும் இனிமே எதிர்பார்க்க முடியாது…. எப்ப கொஞ்சம் சீரியஸ்ன்னு தோணினாலும் எனக்கு போன் பண்ணுங்க… என்றார்.
கருணாவுக்குக் கண்ணில் நீர் முட்டியது. மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திணறினான். சரி டாக்டர், எங்களால முடியற மட்டும் அவரை நல்லா பாத்துக்கறோம்… என்று சொல்லியபடியே புறப்படத் தயாரானான். டாக்டர்...உங்களுக்கு ஃபீஸ் அப்புறம் ஆஸ்பத்திரி பில்….என்று சொல்ல ஆரம்பித்தான்.
ம்….ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே….நான் காலைல கிருஷ்ணதாஸ் சாரோட பேசினேன்...இவருக்கு இப்படியிருக்கேன்னு ரொம்ப கவலைப்பட்டார்...நிறைய பழைய கதையெல்லாம் பேசினார்..அதெல்லாம் உங்ககிட்ட ஷேர் பண்றத்துக்கு இப்ப நேரம் இல்ல… அப்புறம் சொல்றேன்...என்ன சொல்ல வந்தீங்க...பில் தானே...மொதல்ல அவர் தேறி நல்லபடியா டிஸ்சார்ஜ் ஆகட்டும்...அப்புறம் நானே கேட்டு வாங்கிக்கறேன்...நான் எங்க போயிடப்போறேன்...நீங்க எங்க போயிடப்போறீங்க…. என்றார். கனத்த இதயத்துடன் வெளி வந்தான் கருணா.
சொன்ன மாதிரி ஐந்து நாட்களுக்கப்புறம் எழுந்து உட்கார்ந்து பேசும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தார் கந்தசாமி. அன்று மாலை அவரது மனைவி வந்திருந்தார். டாக்டரும் இருந்தார். வாங்கம்மா….என்ன ...புருஷனுக்கு அக்கறையா டிபன் பண்ணி எடுத்திண்டு வந்திருக்கீங்களா...ஆயில்லாம் கம்மியா போட்டு பண்ணுங்க சரியா?….என்று பேச்சு கொடுத்துக்கொண்டே கந்தசாமியை பரிசோதனை செய்தார். பரவாயில்லையே...நான் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே இம்ப்ரூவ் ஆயிருக்கீங்க…. என்ன … இன்னிக்கே வீட்டுக்குப் போயிடலாமா? என்று கேட்டு டிஸ்சார்ஜுக்கு உத்தரவிட்டார்.
பெற்றோரை அருணுடன் வண்டியில் அனுப்பிவிட்டு டாக்டரைப் பார்க்க வந்தான் கருணா. டாக்டர்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணே தெரியல…. இது வரைக்கும் ஒரு பைசா கூட வாங்காம எல்லா வைத்தியமும் பண்ணி சரியாக்கி டிஸ்சார்ஜும் பண்ணிட்டீங்க…. ஒரே வார்த்தையில சொல்லனும்னா நீங்க தெய்வம் டாக்டர்….நடமாடும் தெய்வம்…. இனிமேயும் பணம் கட்டாம இருந்தேன்னா நான் நன்றி கெட்டவன் ஆயிடுவேன் டாக்டர்...தயவு செய்து சொல்லுங்க எங்கப்பாவுக்கு எவ்வளவு செலவு ஆயிருக்குன்னு….என்று உணர்ச்சி மேலிட நா தழுதழுக்கப் பேசினான் கருணா.
ஸ்டெதாஸ்கோப்பை கீழே வைத்துவிட்டு தன் கண்ணாடியை எடுத்து துடைத்துக்கொண்டே பதிலளித்தார் டாக்டர். நான் அன்னிக்கு சொன்னேனில்ல...கிருஷ்ணதாஸ் சார்கிட்ட பேசினேன்னு...அன்னிக்கு நான் தெரிஞ்சிண்ட விவரத்தில ஒண்ணு எனக்கு மெடிக்கல் சீட் கெடைச்சப்போ பீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்ச எங்கப்பாவுக்கு உதவி செஞ்ச முதல் நபர் உங்கப்பா கந்தசாமிதான். இத்தனைக்கும் உங்கப்பாவுக்கு எங்கப்பாவை நேரடியாத் தெரியாது. கிருஷ்ணதாஸ் சார் உங்கப்பாகிட்ட இந்தமாதிரி என்னோட ஃப்ரெண்டு பையன் ஒருத்தனுக்கு மெடிக்கல் சீட் கெடைச்சும் பணம் இல்லாததனால சேர முடியாம இருக்கான்னு சொன்ன அடுத்த நிமிஷம் அது எப்படி? நம்ம வட்டத்தில இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிட அனுமதிக்கிறதே தப்பு…. அவங்களால எப்ப முடியுமோ அப்போ திருப்பிக் கொடுக்கட்டும்… ஆனா இப்போ அந்தப் பையனுக்கு அந்த சீட் கிடைச்சே ஆகணும்னு உடனேயே செக் எழுதிக் கொடுத்தவர் தான் உன்னோட அப்பா கந்தசாமி. அவ்வளவு நல்ல மனசு அவருக்கு. இப்போ சொல்லு….யாரு கடவுள்?
கண்ணில் நீர் வழிய திக்பிரமையோடு அசையாமல் நின்றான் கருணா.
ஆக.24, 2020
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home