Friday, March 24, 2017

கவிதைச்சாலை

கவிதைச்சாலை

ஆதவ ஓவியன் அகன்ற வானத்திரையை
அழகிய நீலத்தால் நிரப்புமுன் விளையாட்டாய்
இதழொக்கும் இளஞ்சிவப்பை இதமாகத் தூவியே
இன்பத்துடன் படைத்திடும் இளைய காலை

முந்தைய நாள் முழுவதும் பாவிமனிதன்
முழுமூச்சாய் வெளியேற்றிய கொடிய கரியமிலத்தை
மன்னித்தே முனகலோடு பிராணவாயுவாய் மாற்றும்
மரங்கள் இயங்கும் மந்திரக் காலை

வேண்டிய ஓய்வினைத் துயிலில் பெற்றபின்
வேண்டும் சக்தியைப் பெறுமுகமாக
உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்த
உற்சாகமாய்த் தயாராகும் உதய காலை

நண்பரோடு அளவளாவியே நடைபயில்வோர் பலரிருக்க
நண்பனில்லாக் குறை தீர்க்க நன்றிமறவாத
நாயுடனே அளவளாவி நடைபயில்வோரும் சிலரிருக்கும்
நகையுடனே நான் காணும் நற்காலை

உயிருக்கு உத்தரவாதமாய் உடல்நலம் பேண
உரிய உபகரணங்களோடு பயிற்சி செய்யவே
கருத்தாய் களமிறங்கி களிப்பினில் திளைக்கும்
காளைகள் காட்சிதரும் காரியக் காலை

நாங்களென்ன சளைத்தவர்களா நடைகூட முடியாதா-என
நங்கையரும் நறுமொழி நவின்றே நாள்தோறும்
அன்புடனே தோழியரை அழைத்துக்கொண்டு நடையுடனே
வம்பையும் முடித்திடும் விடியற்காலை

இன்று மலர்ந்தத வண்ணப் பூக்களோடு
இயற்கையும் சேர்ந்து குலுங்கும் பூங்காவில்
என்றும் மலர்ந்த இளஞ்சிறார்கள்
இரைச்சலோடு விளையாடும் இனிய காலை

தளிர்க்கொடிகள் மட்டும்தான் தாங்குமோ பூக்களை
தளராமல் நாங்களும்தான் வழங்குவோம் பாரீரென
நாசியும் நயனமும் நுகரவே நெடுமரங்கள்
நமக்கெனப் படைத்திடும் நறுமணக் காலை

அறிவும் செல்வமும் புகழும்மட்டும் போதாது
அமைதியும் சேர்ந்தால்தான் அகம் பொலிவுறும் என
அறநெறி காட்டும் ஆலயங்கள் அருகில்
அழைத்துச் சென்றிடும் அற்புதக்காலை

எத்தனையோ ஆசைகள் கவலைகள் ஏமாற்றங்கள்
எதிர்பார்ப்புகள் சுமந்துநிற்கும் எண்ணில்லா மாந்தரிடை
எதிலும் சிதறாத கவனத்துடன் நேர்த்தியாய்க்கோர்க்கும்
ஏழைப் பூக்காரியின் எளிய காலை

நித்தம் வசிக்கும் வீட்டையும் வீதியையும்
சுத்தமாக வைப்பதுவே நாட்டிற்குகந்த பணியென்று
மனிதரும் எறும்புபோல் சுறுசுறுப்பாக சுற்றத்தை
புனிதப் படுத்தும் புத்துணர்ச்சிக் காலை

ஏற்றமும் தாழ்வும் நேர்வும் வளைவும் கொண்டு சீரில்லா
மாற்றம்தான் வாழ்க்கை என்ற உண்மையை போதிக்கும்
நெடுஞ்சாலையே என்குரு எனக்கொண்டு நித்தமும்
நடையால் நான் வந்தனம் செய்யும் நன்றிக்காலை

சாலைக்கவிதை கேட்டால் மரமும்பசுவும் கதைபோல்
காலைக்கவிதை வந்ததுகண்டு மயங்க வேண்டாம்
காலையில் சாலையில் அனுதினம்நான் காணும் காட்சிகளை
மாலையாய்க் கோர்த்து படைத்திட்டேன் கவிதைச்சாலை