Sunday, April 22, 2018

விழிப்பு



காலை மணி ஏழை நெருங்கிக்கொண்டிருந்தது.  இரவு முழுவதும் இயங்கிக்கொண்டிருந்த ஏசியால் அறையில் இன்னமும் இதமான குளிர் வியாபித்திருந்தது.  அருகில் என்னை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள் என் பேத்தி.

எனக்கே அலுவலகம் செல்லத் தோன்றாதவண்ணம் ஒரு அலுப்பு.  ஆனால் போகவேண்டிய ஒரு கட்டாயம்.  அரை நிமிடமாவது எழுப்பி சிறிது கொஞ்சிவிட்டு பின்னர் குளிக்கச் செல்லலாம் என்ற நினைப்பில் மெதுவாக அவளை எழுப்பத்தொடங்கினேன்.

“குட்டிம்மா… எழுந்துக்கிறயா இல்லையா சொல்லு கண்ணா…”

“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா..” என்று கண்களைத் திறக்காமலே பதில் சொன்னாள் அவள்.

“நான் ஆபீஸ் போகணுமேடா கண்ணா…”

“இன்னிக்கு நீ போகாதயேன், ப்ளீஸ்”

“சரி…அப்போ நானும் நீயும் வெறுமனே படுத்துண்டே இருக்கலாமா?”

“ம்….இப்படியே கொஞ்ச நே…….ரம் படுத்துண்டே இருக்கலாம்…” என்று சொல்லிவிட்டு சற்று புரண்டு படுத்து இன்னும் இறுக்கமாக போர்த்திக் கொண்டாள்.  அவளுக்கு படுக்கையை விட்டு எழாமலேயே நீண்ட நேரம் சும்மா இருப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.

“சரி.  அப்படின்னா நாம ரெண்டு பேரும் இன்னிக்கு மத்தியானம் வரைக்கும் இப்படியே தூங்கிண்டு இருந்துட்டு அதுக்கப்புறம் எழுந்துக்கலாமா, சொல்லு”

“ம்..”

“அப்போ அதுக்கப்புறம் பல் தேய்ச்சு சாயந்திரம் தான் காப்பி… சரியா?”

“ஊஹும்……”

என் மனதுக்குள் சின்னதாக ஒரு மகிழ்ச்சி.  பரவாயில்லை, பேத்தி மாலை வரை தூக்கத்தை நீட்டிக்க விரும்பவில்லை போலும் என்ற நினைப்பு சற்று ஆனந்தத்தைத் தந்தது.

“பின்னே?” என்றேன், என்ன பதில் சொல்லப்போகிறாள் பார்க்கலாம் என்ற ஆவலுடன்.

“சாயந்திரம் காப்பி இல்லை….பூஸ்ட்....” என்று என் தவறை திருத்தி மீண்டும் புரண்டு படுத்தாள்!