பிராந்தி
புறநகர் பகுதியையும்
தாண்டியிருந்த ஊரில் வசித்துக்கொண்டிருந்தான் அவன். சிறுபிள்ளையும் இல்லாத இளைஞனும் இல்லாத பதிமூன்று
வயது. நகரத்தின் வாசனை பரவத்தொடங்கியிருந்த
கிராமம் என்று சொல்லலாம். குளிர் காலமாதலால்
வேலைக்குச் சென்றவர்கள் சீக்கிரமே வீட்டிற்குள் அடைந்துவிட்டிருந்த முன்னிரவு நேரம்.
தந்தை, தாய் மற்றும் அவன் மூன்றே பேர். அவனுடைய தாய் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வெளியூர்
சென்றிருந்தாள்.
எதிர்வரிசையில் இரண்டு
வீடுகள் தள்ளியிருந்த விளக்குக் கம்பத்தின்கீழ் சுருண்டு விழுந்திருந்தார் அந்த மனிதர். அதைப் பார்த்ததும் அவன் மனதில் பயம் பிடித்துக்கொண்டது. அந்த விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் அவர் யாரென்று
அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும்
அவருடைய தோற்றம் மற்றும் வயதைக் கொண்டால் கிட்டத்தட்ட அவனுடைய தந்தையின் உருவத்தையொத்தியிருந்தது
அவனை கவலைப்படவைத்தது.
ஒரே குழந்தையாக பெரும்பாலும்
தாயின் கவனிப்பில், நண்பர்களும் அதிகம் இல்லாமல்
குறைந்த சுற்றத்துடனே தனியாக வளர்ந்ததாலோ என்னவோ, ஏற்கெனவே பயந்த சுபாவம் கொண்டிருந்தான். அரையிருட்டில் தந்தையைப்போலவே ஒரு உருவம் தெருவிளக்கின்
அடியில் விழுந்திருந்தது அவனுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. அன்று பார்த்து வீட்டிலும் யாரும் இல்லை. யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு அருகில் சென்று
பார்க்கலாமா என்று மனதில் எண்ணம் தோன்றியது.
ஆனால் யாரைக் கூப்பிடுவது? அப்படியே யாராவது வந்தாலும் அருகில் சென்றபின் ஒருவேளை
அது தன் தந்தையாகவே இருந்துவிட்டால் என்ன செய்வது? அந்த அவமானத்தை எப்படி எதிர்கொள்வது? சலனமற்று விழுந்திருந்த அந்த மனிதர் ஒருவேளை இறந்தே
போயிருந்தால் நிலைமை இன்னும் விபரீதமாக அல்லவா போய்விடும்? மிகுந்த குழப்பத்துடன் அருகில் சென்று பார்க்கலாமா
வேண்டாமா என்ற முடிவுக்கு வரமுடியாமல் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று
அந்த மனிதரையே தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
சென்ற சில வருடங்களாகவே
தந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
என்னதான் தனியார் கம்பெனியில் ஷிப்ட் வேலை பார்த்தாலும், ஒரு நேரம் காலம் என்றில்லாமல்
சில மாதங்களாகவே கண்ட நேரத்திற்கும் வருவதும் போவதுமாக இருந்தார் அவன் தந்தை. வருமானம் கூட முழுவதுமாக வீட்டிற்குத் தராத நிலையிலும்,
வரும்போதும் போகும்போதும் ஆட்டோவில் செல்வதை புதிய வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்து இறங்குவார். காபி குடித்துவிட்டு குளித்துவிட்டு சூடாக சமையல்
செய்யச்சொல்லி சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கிவிட்டு உடனே வெளியில் செல்வது புதிய
வழக்கமாக இருந்தது. வீட்டில் இருப்பு இரண்டு
அல்லது மூன்று மணிநேரம் தான். அதுவும் தினமும்
என்றில்லாமல் சில நாட்கள் வராமலும் இருக்கத் தொடங்கியிருந்தார். ஆட்டோக்காரன் அவரை இறக்கிவிட்டு உடனே திரும்பாமல்
யார் கண்ணிலும் படாமல் சற்றுத் தொலைவில் நின்றிருப்பான். அவர் புறப்படும் நேரம் சட்டென்று வந்து ஏற்றிக்கொண்டு
பறந்துவிடுவான்.
இந்நிலையில் கடந்த சில
மாதங்களாக திடீரென்று வீட்டிற்கு சற்று தாராளமாக பணம் கொடுக்கத் தொடங்கியிருந்தார்
. தாயார் ஏன் எப்படி என்று கேள்வி கேட்டால்
பதில் இருக்காது. அல்லது கோபமாக ஏதாவது கத்துவார். அதனால் அவருடன் பேசுவதற்கே பயமாக இருந்தது. இந்த மர்மமான நடத்தைக்கு அவர் விளக்கமே கொடுக்காதது
அவனது பயத்தை மேலும் அதிகப்படுத்தியது. கடந்த
மூன்று நாட்களாக அவர் வீட்டிற்கும் வரவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது உருவத்தையொத்த ஒருவர் சுயநினைவின்றி தெருவிளக்கின்கீழ்
விழுந்துகிடந்தது அவன் வயிற்றைப் புரட்டியது.
தந்தையிடம் அவ்வப்போது ஒருவித வாடை வருவது அவன் உணர்ந்திருக்கிறான். ஏதோ தவறான வழியில் செல்கிறாரோ என்ற சந்தேகமும் அவனுக்கு
உண்டு. ஆனால் அவனுக்கோ அவனது தாயாருக்கோ தந்தையிடம்
தைரியமாக கேட்கவோ சண்டையிடவோ திராணியில்லாமல் இருந்தார்கள்.
இன்று விழுந்துகிடக்கும்
மனிதர் தன் தந்தையாகவே இருக்கநேரும் பட்சத்தில் எப்படியாவது மற்றவர் பார்க்கும்முன்
தண்ணீர் தெளித்து தெளிவித்து வீட்டிற்குள் அழைந்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று
அவன் மனம் மிகவும் விரும்பினாலும் அவர் அருகில் செல்லக்கூட தைரியம் வராமல் தவித்தான். இப்படி அவ்வப்போது பயந்து சாவதைவிட தானோ அவரோ ஒரேயடியாகச்
செத்துவிட்டல்கூட பரவாயில்லை என்று தோன்றியது.
கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதரையைத் தாண்டியிருந்தது. ஊர் முற்றிலுமாக அடங்கியிருந்தது. நல்லவேளையாக அவன் அவரைப் பார்த்தபிறகு வேறு யாரும்
அவ்வழியாகச் சென்றதாகத் தெரியவில்லை. ஒருவாறு
மனதை திடமாக்கிக்கொண்டு டார்ச் விளக்கைத் தேடி ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக்கொண்டு
அவரை எப்படியாவது எழுப்பிவிடலாம் என்ற திட்டத்துடன் வாசலில் இறங்கினான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தெருவிளக்கை நோக்கித்
திரும்பினால், அங்கு அவரைக் காணவில்லை. அவனுக்கு
அதிர்ச்சியாக இருந்தது. தைரியம் வரவழைத்துக்கொண்டு
சற்று அந்தப்பக்கமும் இந்தப்பக்குமுமாக சென்று பார்த்தான். யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை.
ஒரு வேளை தான் காண்பது
பிரமையா என்ற கிள்ளிப் பார்த்துக்கொண்டான்.
ஒரு வேளை தான் முன்பு கண்டது பிரமையா என்றும் குழம்பினான். நான்கைந்து முறை தெருவில் சென்று பார்த்த நினைவு
வந்ததால் தான் முன்னர் கண்டது பிரமையல்ல என்னும் தெளிவுக்கு வந்தான். விழுந்து கிடந்தவர் யாரோ, தன்னால் நினைவு திரும்பி
எழுந்து போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அவர் யாரோ எவரோ, எப்படியோ அது தன் தந்தை இல்லை என்ற
நினைப்பு அவனுக்கு நிம்மதியைத் தந்தது.
இன்றைய இரவு தந்த தன்நம்பிக்கையில்
நாளையோ, மறுநாளோ அல்லது என்றைக்கு வருவாரோ அன்றைக்கு நிச்சயமாக தந்தையிடம் தங்கள் உள்ளக்கிடக்கையை
உணர்த்தியேயாகவேண்டும் என்று உறுதி கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டு நிம்மதியாக உறங்கச்
சென்றான்.