அம்பத்தூர் ஏரி - கடந்த கால நினைவுகள்
சர்
இராமசாமி முதலியார் உயர்நிலைப்
பள்ளியில் சேர்ந்திருந்த
வருடம் அது. 1970-ஆம்
வருடம். ஆறாம்
வகுப்பு இங்கிலீஷ் மீடியம்.
பிரதான கட்டடத்தின்
இடதுபுறத்தில் விளையாடும்
மைதானத்திற்கு இடம் விட்டு
அதற்கும் கிழக்குப்பக்கமாய்
வேலியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த
ஓலைக்கூரை வேய்ந்திருந்த
வகுப்பறைகள்தான் எங்களுக்கு
கொடுக்கப்பட்டிருந்தன.
விநாயகபுரத்திலிருந்து
புத்தகப்பையையும் டிபன்
பாக்ஸையும் எடுத்துக்கொண்டு
பள்ளிக்கு நிதமும் இரண்டு
கிலோமீட்டருக்கு மேல் நடந்து
சென்று வருவதெல்லாம் அப்போது
ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
மதிய உணவு
இடைவேளையில் ஐந்து நிமிடத்தில்
சாப்பிட்டுவிட்டு பள்ளியின்
பின்புறம் கம்பி வேலியில்
முள் கம்பியை வெட்டி
ஏற்படுத்தப்பட்டிருந்த
இடுக்கு வழியாக வெளியில்
சென்று கிராவல் கற்களால்
அமைந்த செந்நிறக் குன்றுகளில்
ஏறி இறங்கி ரயில் பாலத்தின்
அடி வழியாக அம்பத்தூர் ஏரிக்குச்
சென்று வருவது தினமும் நடக்கும்.
ஏரி
என்றால் சாதாரண ஏரியா?
ரயில் தண்டவாளத்தின்
இருபுறமும் கடல்போல்
விரிந்திருக்கும் கண்கொள்ளாக்
காட்சி அது. இரண்டு
பக்கத்தையும் இணைக்கும்
கல்வெட்டின் சிமெண்ட் தரையின்
மேல் உட்கார்ந்து தூண்டில்
போட்டு மீன் பிடித்துக்கொண்டிருப்பவர்களை
வேடிக்கை பார்ப்பது எங்கள்
வழக்கம். தூண்டிலை
வீசும்போது எங்களையெல்லாம்
குனிந்துகொள்ளச் சொல்வார்கள்.
துண்டில்
நீரில் விழும் இடத்தில் ஒரு
தக்கை மிதக்கும். மீன்
துண்டிலில் மாட்டிக்கொண்டு
தப்ப முயற்சிக்கும்போது
தக்கை நகர்வதைக்கொண்டு மீன்
சிக்கியதை அறிவோம்.
பின்
மீன் பிடிப்பவர் தூண்டில்
நூலை மெதுவாக இழுத்து மீனை
கொக்கியிலிருந்து உருவி
எடுப்பதை அருகிலிருந்து
பார்க்கும்போது எங்களைப்போல
'ஐயர்
வீட்டுப் பசங்களுக்கெல்லாம்'
பாவமாக இருக்கும்.
அது கொடுமை
என்றால் அந்த மீனைப் பிடிக்க
தூண்டில் முள்ளில் மண் புழுவைச்
சொருகுவது இன்னும் கொடுமை.
எங்கள் மனதில்
வயலன்ஸ் முதலில் விதைக்கப்பட்டது
அப்போதுதான் என்பது என்
எண்ணம். இருந்தாலும்
சகித்துக்கொண்டு மீன் பிடிப்பதை
சுவாரஸ்யத்தோடு கண்டு மகிழ்வோம்.
அடுத்த
பொழுதுபோக்கு நீரின் பரப்பில்
தட்டையான கற்களை பல முறை
தத்திச்சென்று விழுவதுபோல்
வீசுவது. நீர்ப்ரப்பு
கிட்டத்தட்ட தரையளவிலேயே
இருக்கும் யாருடைய கல் அதிக
முறை தத்தியது என்பதில்
எங்களுக்குள் போட்டி இருக்கும்.
ஆரம்பத்தில்
சிறிய கற்கள் கூட இரண்டு
அல்லது மூன்று முறைக்குமேல்
தத்தாது. கல்
வீசும் கலை கைவந்தபின்
தண்டவாளத்தின் இடையில்
கிடக்கும் கருங்கற்களையே
கூட ஏழெட்டு முறைக்கு மேல்
தத்தும்படி வீசுவதில் திறமை
பெற்றோம்.
நேரம்
தெரியாமல் இருந்துவிட்டு
திடீரென்று பள்ளி ஞாபகம்
வந்து அவசரம் அவசரமாக பள்ளிக்கு
ஓடுவோம். வரும்
வழியில் தூரத்தில் சைக்கிள்
ஃபாக்டரியில் டயர்கள் கன்வேயர்
கொக்கி மூலமாக ஒரு கட்டடத்திலிருந்து
இன்னொரு கட்டடத்திற்கு அழகாக
அனுப்பப்படுவதைப் பார்த்து
ரசித்துக்கொண்டே ஓடுவோம்.
பள்ளியில்எங்கள்
வகுப்பு ஆசிரியர் கையில்
பிரம்போடு காத்துக்கொண்டு
இருப்பார். இங்கிலீஷ்
மீடியம் அல்லவா? யூ
ஆர் கோயிங் டு த லேக்?
என்று கேட்டுக்கொண்டே
ஆளுக்கு இரண்டு அடி கொடுப்பார்.
எங்களுக்கு
லேக் என்றால் ஏரி என்று அப்போது
தெரியாது. அவரிடமே
கேட்கும் தைரியமும் கிடையாது,
நடந்ததை வீட்டில்
சொல்லுவதும் கிடையாதாகையால்
கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பில்தான்
நான் அதை அறிந்துகொண்டேன்.
கை
அடி வாங்கினாலும் கால் மறுநாளும்
தன்னிச்சையாக ஏரிக்குத்தான்
செல்லும். படிப்படியாக
பள்ளியில் கண்டிப்பு அதிகமானதால்
ஏரிக்குச் செல்வதைத் தவிர்த்து
சில காலம் அந்த செங்குன்றுகளில்
மட்டும் விளையாடிக்கொண்டிருந்தோம்.
அவற்றின் ஏற்ற
இறக்கங்களில் ஓடுவதும்
சறுக்குவதும் அந்த மதிய
இடைவேளை வெய்யிலிலும் எங்களுக்கு
ஆனந்தமாகத்தான் இருந்தது.
அங்கு நிறைய
மண்டிக் கிடக்கும் எருக்கஞ்செடிகளில்
உள்ளங்கையைவிட பெரிய அளவிலான
பச்சை மற்றும் நீல நிறப் பட்டை
கொண்ட பெரிய பெரிய வெட்டுக்கிளிகள்
அமர்ந்திருக்கும்.
பெரிய வகுப்பு
மாணவர்கள் அவைகளைப் பிடித்து
எங்களுக்குத் தெரியமால்
எங்கள் பின்புறம் வந்து
சட்டைக் காலர் வழியாக முதுகின்மேல்
விட்டுவிடுவார்கள்.
நாங்கள் பயந்து
அலறுவதைக் காண்பதில் அவர்களுக்கு
மகிழ்ச்சி. பள்ளிக்கு
வந்து பி.டி.
மாஸ்டரிடம்
ரிப்போர்ட் செய்தால் அவர்
நீ ஏன் அங்கே போகிறாய் என்று
எங்களைத்தான் திட்டுவார்.
பின்னர்
முதலுக்கே மோசமாகிவிடும்
என்று நாங்கள் வேறு பக்கமாக
விளையாடச் செல்வோம்.
பின்னர் அங்கும்
வேலி சீர் செய்யப்பட்டு
லேட்டாக வருபர்களைப் பிடிக்க
பி.டி.
மாஸ்டர்
காவலுக்கும் நிறுத்தப்பட்டதால்
எங்கள் கொட்டம் சிறிது சிறிதாக
மொத்தமாக அடக்கப்பட்டது.
இப்போதெல்லாம்
எப்பொழுதாவது ஊருக்குச்
செல்லும்போது ரயில் ஜன்னல்
வழியாகப் பார்த்தால் ஒருபுறம்
மட்டும் தான் ஏரி தெரிகிறது.
அதுவும்
கால்பங்காகச் சுருங்கி
சுற்றிலும் கட்டடங்களால்
சூழப்பட்டு சிறையில்
அகப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.
மறு பக்கத்தில்
ஏரியைக் காணவே காணோம்.
பிளாஸ்டிக்,
பொல்யூஷன்
போன்ற பாதிப்புகள் இல்லாமல்
இயற்கையோடு இணைந்திருந்த
அந்தக்கால வாழ்வு மீண்டும்
வராதா என்றே மனம் ஏங்குகிறது.