Monday, March 23, 2020

தடுக்கு தக்கு..







சுப்பு தாத்தா

(1928 - 2020)


தடுக்கு தின்னா ..
கு .. தின்னா .. தடுக்கு தக்கு
கு .. தின்னா .. தடுகுடு தக்கு

மெல்லிய, ஆனந்தமான தாளம். எங்கே ஒலிக்கும்? மென்மையான மண்டையில் தட்டப்படும்போது. ஆம், குழந்தைகளுக்கு எண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பாட்டும்போது ஒரு சீரான வேகத்திலும் வலிக்காத அழுத்தத்திலும் தலையில் இந்த தாளத்துடன் தட்டும்போது எந்தக் குழந்தையும் ரசித்துக் குளிக்கும். இந்தத் தாளத்திற்கு சொந்தமானவர் எங்களால், என் தந்தை வழிக் குடும்பத்தால் பாவோஜி என்றும், அனைத்துப் பேரக் குழந்தைகளால் சுப்பு தாத்தா என்றும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்பட்ட என் அத்திம்பேரும் (அத்தையின் கணவர்), மாமனாருமான திரு சுப்பு ராவ் அவர்கள்.

மிக மென்மையானவர். எல்லோராலும் மிகவும் விரும்பப்பட்டவர். எந்த விஷயத்திற்கும் அவரிடமிருந்து எதிர்மறையாகவோ, காட்டமாகவோ பதில் எதிர்பார்க்கவே முடியாது. முடியாது என்பதைக்கூட மென்மையான தொனியில் புன்முறுவலுடன் இப்போது வேண்டாம் என்பது போன்று தவிர்த்து விடுவாரேயன்றி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுத்து எதிராளிகூட முகம் கோணவைக்க மாட்டார். கோபம் என்றால் என்ன என்று அவருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. அவர் யாரையும் கோபித்துக்கொண்டோ, அல்லது எதற்காகவாவது சினந்துகொண்டோ நாங்கள் அறிந்ததில்லை.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால்என்
என்னும் குறளுக்கிணங்க, கோபம் ஏற்படும் வேளையிலும், அந்தக் கோபம் செல்லுபடியாகும் என்ற நிலையிலும் சினம் தவிர்த்து புன்னகையாலும் பொறுமையாலும் குறை தீர்க்கும் குணம் கொண்ட பெரியவர் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய ஆகும்.

அனைவருக்கும் உதவும் தாராள குணம். அவரால் உதவிபெற்றவர்களுக்கு கணக்கே இல்லை என்று சொல்லலாம். பண உதவி என்றில்லை. பொருளுதவி, சரீர உதவி, சிபாரிசு உதவி, கல்வி உதவி என ஏராளமானோருக்கு அவரால் முடிந்தவரை தாராளமாக உதவி செய்துள்ளார். சிறு வயதில் பணவசதி இல்லாமல், வேலை இல்லாமல், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்த பலபேருடைய வாழ்க்கை அவருடைய உதவியால் சீரடைந்திருக்கிறது. அத்தகையோர்கள் இன்றும் அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள்.

அரசு வேலையில் இருந்துஓய்வுபெற்ற பின்னரும் தன்னுடைய அனுபவ அறிவை மற்றவர்களுக்கு உதவும்வகையில் ஆலோசகராகவோ அல்லது மத்தியஸ்தராகவோ பணியாற்றி அவரவர்களுடைய வேலைகளை நல்லபடி முடித்துக்கொடுத்துள்ளார்.

எனக்கு மணமான புதிதில் அதுவரை அவரது மைத்துனன் மகனான என்னை நீ வா போ என்று ஒருமையில் அழைத்துவந்த அவர், அவரது மகளை மணந்த காரணத்தால் மாப்பிள்ளை என்றானவுடன் சட்டென்று ஒருமையில் அழைப்பதை நிறுத்தி நீங்க வாங்க போங்க மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினார். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவரிடமே இந்தப் பழக்கம் வேண்டாம் என்று பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த நொடியில் சரிப்பா...இனிமே அப்படிப் பண்ணல… என்று சமாதானம் சொன்னாலும் மரியாதையுடன் அழைப்பதையோ நடப்பதையோ அவர் நிறுத்தவில்லை. நாட்கள் செல்லச்செல்ல மேன்மக்களின் பண்பு மாறாது என்பதையும், மாறாக அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பு அது என்பதையும் உணர்ந்து அவர்போக்கில் இருக்க விட்டுவிட்டேன்.

மரியாதை கூடிற்றே தவிர அன்பு சற்றும் குறையவில்லை. அவர் எங்களுக்கெல்லாம் நண்பராகவே பழகினார். எப்படிப்பட்ட விஷயத்தையும் அவருடன் தாராளமாக தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளலாம் என்னும் அளவிற்கு அவர் அனைவருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாக வாழ்ந்து காட்டினார்.

கேரம் போர்ட் விளையாடுவதிலிருந்து காய்கறி வாங்குவது வரை அனைத்து விஷயங்களுக்கும் அவரிடமிருந்து நல்ல ஆலோசனைகள் பெறலாம். ஐலோ பக்கடியாமா முதல் மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா வரை அனைத்து பாடல்களையும் அவருடன் பகிர்ந்து ரசிக்கலாம். தக்காளி சூப்பிலிருந்து தயிர்வடை வரை எந்தெந்த உணவு வகை எப்படி இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். வாழ்க்கையை எப்படி ரசிக்க வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் அலாதி இன்பம் கண்டார் அவர். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. சிறு வயதில் அவர் ஈரோட்டில் இருக்கும்போது கோடை விடுமுறைக்கு அவர் வீட்டுக்குச் செல்லும்போது மல்கோவா, நடுசாலை போன்று சுவைமிக்க மாம்பழங்களை அவர் கூடையாகத்தான் வாங்குவார். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கூடை காலியானால் அடுத்த கூடை உடனே வந்துவிடும். தின்பண்டம் என்றில்லை. மற்றவர்களுக்கு பிடித்த விஷயம் எதுவாக இருந்தாலும் அதை தேடிப்பிடித்து வாங்கிக் கொடுத்து அவர்கள் திருப்தி அடைவதைப் பார்த்து மிகவும் ரசித்தவர் அவர்.

ஸ்ரீரங்கத்தில் அவரது சகோதரர்களுடன் அவர் வாழ்ந்த வாழ்க்கை அலாதியானது. ஒவ்வொருவருடைய குடும்பமும் வேறுவேறு பாதையில் பயணித்தாலும், நான்கு சகோதரர்களுக்கிடையே அப்படிப்பட்ட ஒற்றுமை. வெளியில் செல்லும்போது, டேய், என்னோட கீரைக்காரி இன்னிக்கு எவ்வளவு இளசான கீரை குடுத்தா தெரியுமா? என்பார் ஒருவர். அடப்போடா, என்னாட கறிகாய்க்காரி எனக்கோசரமே பரங்கிக்கொட்டை பறிச்சிண்டு வந்தா தெரியுமா? என்பார் இன்னொருவர். மற்றவர் இவர்கள் வியக்கும் வண்ணம் வேறு செய்தி ஏதாவது சொல்வார். இப்படி தனித்தனியாக இருந்தாலும் ஒற்றுமையாக அவர்கள் இருந்த காலம் ஊரே வியந்த ஒன்று.

அவர் தன் மனைவியைப் பிரிந்து நாங்கள் பார்த்ததில்லை. பணியில் இருக்கும் காலத்தில் ஓரிரண்டு நாட்கள் வேலை விஷயமாக வெளியூர் சென்று வருவார். மற்றபடி அவர்கள் என்றைக்கும், எங்கு சென்றாலும் ஒன்றாகவே இருந்தனர். மனைவியை அன்புடன், மராட்டியில் "பாயி" என்று அழைப்பார். பாயிக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் தவித்துவிடுவார்.

அவர்கள் ஒன்றாக புனேவில் உள்ள இளையமகள் வீட்டிற்குச் சென்றிருக்கும்போது நாங்களும் அங்கு சென்றிருந்தோம். அப்போது எதேட்சையாக அவர்களை அவருடைய குலதெய்வமான ஜெஜூரி கண்டோபா கோவிலுக்கு அழைத்துச்செல்லும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அவர்களுக்கு சற்று சிரமமான பயணமாக இருந்தாலும், என் வற்புறுத்தலிலும் உந்துதலிலும் அவர்கள் ஒருவாறு தங்களால் முடியும் என்ற நம்பிக்கை பெற்று எங்களோடு சேர்ந்து மெதுவாக அடிமேல் அடிவைத்து சில நூறு படிகள் ஏறி அந்தக் கோவிலுக்குச் சென்றதை அவர்கள் ஒரு சாதனையாகவே கருதினர். அங்கு தரிசனம் முடிந்தபின் அவர் உணர்ச்சிவசப்பட்டு பரவச நிலையில் இருந்த சில நிமிடங்கள் எங்கள் வாழ்வில் நாங்கள் அதுவரை காணாத நிலை.

அவரது எண்பதாம் ஆண்டுநிறைவு முடிந்ததும் திருஷ்டி விழுந்தாற்போல் அந்த வயதில் ஒரு சாலை விபத்தில் அவருக்கு காலில் பலத்த அடி விழுந்து அதனால் அவரது நடமாட்டம் தடைப்பட்டது. சில மாதங்கள் ஒரே இடத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தினாலோ என்னவோ, அல்லது மூப்பு காரணமாகவோ, சிறிது சிறிதாக இருவருக்கும் சர்க்ரைவியாதி வந்தது. அப்போதும் ஒன்றாக டாக்டரிடம் சென்றுவந்து சந்தோஷமாகவே இருந்தனர்.

வாழ்க்கையில் மாற்றம் ஒன்றுதான் நிலையானது என்பதை நன்கு புரிந்துகொண்டவர். வயதிற்கேற்ற முதுமைக் கஷ்டங்கள் வரும்போது அவற்றை துளியும் சலனமில்லாமல் ஏற்றுக்கொண்டவர். காது சற்று மந்தமானவுடன் சில மாதங்கள் காது கேட்கும் கருவி (ஹியரிங் எய்ட்) பொருத்திப் பார்த்தார். ஆனால் அது ஒத்துவரவில்லை. அந்த சமயத்தில் நான் அவருக்கு மற்றவர்களுக்கு இடைஞ்சலில்லாமல் தான் மாத்திரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க உதவும் ஹெட்போன் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தேன். அதை மிக ஆனந்தத்துடன் நீண்ட நாட்கள் உபயோகித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் கண்பார்வை மங்கத்தொடங்கியது. சர்க்கரைநோய் காரணமாக ஒரு கண் கிட்டத்தட்ட சரிசெய்யமுடியாத அளவிற்குக் கெட்டுவிட்டிருந்தபோதும், ஒரு சிறிய சுணக்கம்கூட இல்லாமல் அதை அப்டியே ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தன் நடமாட்டத்தை மாற்றிக்கொண்டு தன்னால் மற்றவர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாதபடி வாழ்க்கையை நடத்திவந்தார்.

தன் தோற்றத்தைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டவர். நன்கு சுத்தமாக முகம் கழுவி, பொட்டு வைத்து, புன்னகையுடன்தான் படுக்கை அறையைவிட்டு வெளியே வருவார். எந்த நிகழ்ச்சியிலும் எப்பொழுதும் நன்கு சுருக்கமின்றி மடித்து இஸ்திரி செய்யப்பட்ட தூய ஆடையுடனேயே காட்சியளிப்பார். சவரம் செய்யாத முகத்துடனோ, அல்லது அழுக்கான உடைகளுடனோ நாங்கள் அவரைப் பார்த்ததேயில்லை. அதேபோல், தன்னுடைய துணிகளை தானே துவைத்துக்கொள்வது என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று தான் நல்லதாக நினைக்கும் பண்புகளை மற்றவர்களும் பின்பற்றும்படி உதாரணமாக வாழ்ந்தார்.

அவரைப்பற்றி, அவருடன் பழகிய நாட்களைப்பற்றி, அவர் செய்த நற்செயல்கள் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவரைத் தெரிந்த எல்லோருக்கும் அவருக்கும் தமக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறப்பான, சந்தோஷமான நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது என்பது என் எண்ணம். அப்படி எல்லோர் வாழ்விலும் ஏதாவது சிறப்பினை செய்துவைத்திருப்பார் அவர்.

கடந்த சில மாதங்களாக மிகவும் பலவீனமடையத் துவங்கி, கடைசி ஒரு மாதம் மருத்துவமனையிலேயே இருக்கவேண்டிய நிலை வந்தபோதும், சற்றும் கலக்கமடையாமல் எப்போதும்போல் புன்னகையுடனும் நம்பிக்கையுடனுமே இருந்தார். திடீரென்று மறைந்தால் ஏற்படும் அதிர்ச்சி அவர் குடும்பத்தினரை மிகவும் பாதிக்கும் என்பதற்காகவே எங்களையெல்லாம் அவரது பிரிவிற்கு தயார் செய்யும் விதமாக கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக அவரை கையாளும்படி அவர் விருப்பத்தின்பேரில் இறைவன் அமைத்துவிட்டானோ என்றுகூடத் தோன்றுகிறது.

அவர் இல்லையே தவிர, அவரது நினைவுகள் அவர் எப்போதும் நம்முடன் இருப்பதைப்போன்ற உணர்வையே தருகின்றன. எப்போதும் சிரித்துப்பேசி, யாரையும் கடிந்துகொள்ளாமல், நல்லன எல்லாவற்றையும் தானும் ரசித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து சந்தோஷமாக வாழும் வாழ்க்கையை இறைவன் எத்தனை பேருக்குத் தருகின்றான்? அவன் அருள் முழுவதும் பெற்றவராகவே அவர் திகழந்தார் என்பதற்கு அவரை இயற்கையோடு கலக்கவிட்டு வெளிவரும்போது எதிர்பாராமல் கண்ட அவரது குலதெய்வமான முருகனின் வாகனமான மயில்களே சாட்சி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்