தும்பி
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ பழியியது
கெழீஇய நட்பின் மயிலியற் செரி எயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீயறியும் பூவே
சொல் பார்க்கலாம்...என்று சீண்டினான் கணவன்
என்ன, நேத்திக்கு திருவிளையாடல் பாத்ததுக்கு இன்னனிக்கு மூடு வந்திருக்கோ ஐயாவுக்கு? அது பழியியது இல்லை, பயிலியது! இப்போ அது எதுக்கு? காலைல ஏகப்பட்ட வேலை கெடக்கு.. வேலைக்காரி வேற வருவாளா மாட்டாளா தெரியல.. ஏதாவது டவுட்டுன்னா நேரா அந்த தும்பிகிட்டயே கேட்டுக்குங்க...நான் வரலை இந்த விளையாட்டுக்கு..என்று படபடவென பொரிந்தாள் கல்பனா.
ஏண்டா டென்ஷனாகுற? என்ன ஹெல்ப் வேணும் சொல்லு..நான் செய்யறேன்.. ஆமாம்.. இன்னிக்கு ஹாலிடேதானே .. மூடு வந்தா என்ன தப்பு .. எப்படியும் லாக்டவுனாலயும் கொரோனாவாலயும் அவனவன் பயந்துக்கிட்டு வீட்டோட இருக்கான்...யாரும் வரப்போறதில்ல...இன்னிக்கு நம்ம ராஜ்யம் தானே... வேலையெல்லாம் நிதானமா செஞ்சிக்கிட்டா போச்சு...என்று வம்புக்கிழுத்தான் முரளி.
அவர்கள் இளம் தம்பதி. திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றது. இன்னமும் குழந்தை இல்லை. முரளி ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறான் . கல்பனாவும் படித்தவள்தான் ஆனால் என்னவோ இன்னொருவரிடம் வேலைக்குப் போகும் எண்ணம் அவளுக்கு ஆரம்பித்திலிருந்தே இல்லை. ஒன்றோ இரண்டோ பெற்றுக்கொண்டபின் வீட்டோடு இருந்துகொண்டு ஏதாவது தொழில் செய்யலாம் என்பது அவள் எண்ணம். அதற்கான அறிவும் திறமையும் நம்பிக்கையும் அவளுக்கு நிறையவே இருந்தது. எனவே தனிக்குடித்தனத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்
ஆனால் இந்த லாக்டவுன் அறிவிப்புக்குப் பின் நடைமுறைச் சிக்கல்கல்கள் அவ்வப்போது வந்ததன. அவர்கள் இருக்கும் கேட்டட் கம்யூனிட்டியில் கொரோனா வந்துவிடக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். எந்த பிளாக்கில் யாருக்கு சிறிது அறிகுறி வந்தாலும் உடனே டெஸ்ட் எடுக்க வேண்டும், வேலையாட்களை நிறுத்த வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள். அவை மிகத் தற்காலிகமாக இருந்தாலும் அவளுக்கு எரிச்சலைத் தந்தது.
அப்படித்தான் இன்றும் வேலைக்காரி வரப்போவதில்லை என்ற அனுமானத்தில் அவள் சிறிது பதட்டமாக இருந்தாள். ஆனால் முரளி கெட்டிக்காரன். வேலையிலும் சரி, வீட்டிலும் சரி சக மனிதர்களை சரியாக எடைபோட்டு அவர்களுக்குத் தக்கமாதிரி நடந்துகொண்டு எல்லா இடத்திலும் நல்ல பெயர் பெற்றிருந்தான். மனைவிமீது மிக்க அன்பு கொண்டிருந்தான். விளையாட்டுக்கு சீண்டினாலும் அவள் கண்ணில் நீர் வழிந்தால் நிஜமாகவே அவன் நெஞ்சில் உதிரம் கொட்டும். அவளும் அவன்மேல் உயிராக இருந்தாள்.
ஐயாவுக்கு அவ்வளவு அக்கறை இருந்தா சூப்பர்வைஸர்கிட்ட கேட்டு இன்னிக்கு வேலைக்காரியை விடுவாங்களா இல்லையா கேட்டு ஒருவேளை விடல்லைன்னா எல்லா பாத்திரத்தையும் தேச்சுக் குடுத்திடுவீங்களாம்...என்றாள் கல்பனா.
அதுக்கென்ன.. தாராளமா... ஆனா அதுக்கு மோட்டிவேட் பண்றாமாதிரி சூப்பரா ஸ்ட்ராங்கா ஒரு காபி மாத்திரம் போட்டுக்குடேன்...அது சரி, நீ என்ன பண்ணப் போறியாம்?
நீங்கதான் ஏதோ தும்பிகிட்ட கேக்கச் சொல்லிருக்கீங்களே...நான் மொட்டை மாடிக்குப் போய் அங்கே ஏதாவது தும்பி இருக்கா பாத்துட்டு அங்க இல்லன்னா ...கார்டனுக்கும் போய் பாத்துட்டு வரேன்... என்று சீண்டினாள்.
சரி...நீ என்ன வேணும்னாலும் பண்ணு.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு இப்போ காப்பி கிடைக்குமா கிடைக்காதா?
அப்படி வாங்க வழிக்கு...காப்பி இல்லேன்னா..அதுவும் நான் போடலைன்னா உங்களுக்கு வேலையே ஓடாதே...என்று செல்லமாய் கன்னத்தில் கிள்ளு கிள்ளிவிட்டு காப்பி போடச் சென்றாள்.
அப்போது அவனுடைய போன் ஒலித்தது.
இன்னிக்கு யாரு போன் பண்றாங்க என்று சலித்துக்கொண்டே போனை எடுத்தான் முரளி. அவனது முகம் மாறியது குட் மார்ணிங் சார்....யெஸ் சார்...ஆமாம் சார்.. ஆபீஸ்ல செக்யூர்டா லாக் அண்ட் கீலேதான் இருக்கு.. ஆமாம் சார்....என் கண்ட்ரோல்லதான் சார் இருக்கு....
கல்பனா காப்பி கொண்டு வந்து வைத்தாள் அவளைக்கூட பார்க்காமல் போனிலேயே கவனமாக இருந்தான் முரளி.
ஹண்ட்ரெட் பர்ஸண்ட் சேஃபாத்தான் சார் இருக்கு... ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் சார்...
அவள் காப்பியை எடுத்துக்கொள்ளும்படி சைகை காட்டினாள் அவன் சற்றுப் பொறு என்பதுபோல் பதில் சைகை காட்டி போனில் பேச்சைத் தொடர்ந்தான்
இன்னிக்கே வேணுமா சார்? ஆபீஸ் மூடியிருக்குமே சார்.. நம்ம ப்ளோர் செக்யூரிட்டி யார் இருப்பாங்கன்னு தெரியாது...என்று மெல்ல இழுத்தான் உடனேயே, நோ ப்ராப்ளம் சார்..நான் காண்டாக்ட் பண்ணிக்கறேன்.. நீங்க எப்போ வர்றதா இருக்கீங்க சார்?...பதினொண்ணா சரி சார்...நான் பத்தரைக்கே அங்கே போய் சேஃபைத் தெறந்து டாக்குமெண்ட் எடுத்து வைக்கறேன் சார்..சுமாரா எவ்வளவு நேரம் வேலையிருக்கும் சார்? உங்களுக்கு ப்ரஞ்ச், மீல் ஏதாவது வேண்டியிருக்குமா ரெஸ்டாரண்டெல்லாம் எவ்வளவு சேஃப்ன்னு தெரியல சார்.... என்று பதட்டமாகப் பேசினான்
அவ்வளவுதான்...முரளி ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்கு ஜூட்..என்பதைப் புரிந்துகொண்ட கல்பனா சற்று சோகமானாள் அதைக் கவனித்த முரளி உடனேயே அவளை சமாதானப்படுத்தினான் நீ கவலைப்படதே பேபி..இதோ பத்து நிமிஷத்துல பாத்திரம் நான் ரெடி பண்ணிக் குடுத்திடறேன்..ஒரு ரெண்டு இல்ல மூணு மணி நேரம் சமாளிச்சிக்கோ..நான் சட்டுண்ணு ஆபீஸ் போயி எம்டியோட வேலையை முடிச்சிக் கொடுத்திட்டு வந்துடறேன்...அவரே வரும்போது நான் போகமாட்டேன்னு சொல்லமுடியாதில்லையா அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா கண்ணா..என்றபடி எழுந்தான்
அரை மணி நேரத்திற்குள் வேலைகளை முடித்து குளித்து உடை மாற்றி ஆபீஸுக்கு கிளம்பிச் சென்றான் முரளி. கல்பனாவுக்கு போரடித்தது முரளி திரும்பி வந்தபின் சமையலைப் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி துணிகளை மாத்திரம் மடித்து வைக்க நினைத்து பால்கனிக்குச் சென்றாள். பால்கனியின் இரண்டு ஓரத்திலும் வைக்கப்பட்டிருந்த பூத்தொட்டிகள் அவள் கவனத்தைக் கவர்ந்தன
எப்போது வந்தன இந்தத் தொட்டிகள் என்று ஆச்சரியப்பட்டாள் அவற்றில் ஒன்றிரண்டு பட்டு ரோஜா பூக்கள் மலர்ந்திருந்தன மேலும் நிறைய மொட்டுக்கள் அரும்பியிருந்தன அவளுக்கு பட்டு ரோஜா என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் இவை எப்போது, எப்படி வந்தன? முரளிதான் தனக்குத் தெரியாமல் சர்ப்ரைஸாக இருக்கவேண்டும் என்று வைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்து மகிழ்ச்சியில் மூழ்கினாள் தன் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் கணவன் வாய்க்க எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டாள் அந்தக் கணத்தில் அவன் அங்கிருக்க வேண்டும் என்று விரும்பினாள் உடனே அவனுக்கு போன் செய்தாள்
அடுத்த நொடியே முரளி போனை எடுத்தான். ஆனால், எடுத்தவுடனே, கண்ணம்மா, ஆபீஸ்ல எம்டி இருக்கும்போது நிதானமா பேச முடியாது கண்ணா, ஏதாவது அவசரம்னா மாத்திரம் சொல்லு..இல்லாட்டி வேலை முடிஞ்ச உடனே நானே போன் பண்றேன்..என்றான்
ஏமாற்றமடைந்த கல்பனா, ஒண்ணுமில்லீங்க, வீட்டுக்கு வந்தப்புறம் பார்த்துக்கலாம்...சாப்பிட வந்திடுவீங்கதானே என்று கேட்டுக்கொண்டு போனை வைத்தாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி வரை நெட்டி நிமிர்த்திவிட்டார் எம்டி. நம்ம ஊர்லதான்யா லாக் டவுனெல்லாம். ஸ்வீடன் க்ளையண்ட்டுக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது கொஞ்ச காலம் டிலே ஆகிறதுக்கே காம்பென்ஸேஷன் அது இதுன்னு பேசறான்...அது தான் அவனோட காண்ட்ராக்ட்ல என்னவெல்லாம் கமிட் பண்ணியிருக்கோம், இது வரைக்கும் பண்ணதுக்கு அவன் சரியா பேமெண்ட் குடுத்திருக்கானா எல்லாம் பார்க்கிறதுக்குத்தான் உன்னை வரச்சொன்னேன். நல்ல வேளை, நம்ம பக்கம் ஏதும் ஃபால்ட் இல்ல..இது வரைக்கும் கமிட்மெண்ட் கீப் அப் பண்ணியிருக்கோம்...இனிமே அவன் பணம் ரிலீஸ் பண்ணாத்தான் அடுத்த ஸ்டேஜ் எடுத்துப்போம்னு தைரியமாச் சொல்லலாம்....ரொம்ப தேங்க்ஸ் முரளி, சாரி உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்....ஐ லைக் யுவர் வொர்க் அண்ட் ஆட்டிட்டியூட்...கீப் இட் அப்...என்று பாராட்டி கைகுலுக்க வந்து பின்னர் வேறு வழியில்லாமல் கும்பிட்டு வணக்கம் சொல்லி விடைபெற்றார்.
எம்டியையே கும்பிட வைத்த கொரோனாவை நினைத்து சிரித்தபடியே வீட்டுக்குப் புறப்பட்டான் முரளி.
காலிங் பெல் அழுத்தியவுடனேயே விரைவாய் வந்து கதவைத்திறந்தாள் கல்பனா. முரளி உள்ளே
நுழைந்தவனை அழுத்தி கட்டிக்கொண்டாள் ஏய், என்ன ஆச்சு இன்னிக்கு? ஆபீஸுக்குத் தானே போனேன் என்றபடியே அவளது தலைமுடியை கோதிவிட்டான்
அதை எப்போ கொண்டுவந்து வெச்சீங்க?
எதை?
எதை? ஒண்ணும் தெரியாத பாப்பா..பதில் சொல்லாட்டி உதைதான்!
யம்மாடி, நீ செஞ்சாலும் செய்வே...உனக்குப் பிடிக்குமேன்னு தான் செஞ்சேன்...உன்னை நான் முதல்ல பாத்து பேசும்போது உனக்கு எது ரொம்ப பிடிக்கும்னு கேட்டேன்...ஞாபகமிருக்கா? அப்போ நீ சொன்ன பதிலை வெச்சுத்தான் இதை வாங்கி வெச்சேன்... ஏன் பிடிக்கலையா?
ஆமாம்..பிடிக்கலை...
பிடிக்கலையா? அப்போ நீ அன்னிக்கு சொன்னது பொய்யா?
சேச்சே...நான் பொய்யெல்லாம் பேசறதில்லை..
அப்போ இது பிடிச்சிருக்குத் தானே?
இல்லை...பிடிக்கலை...
அது தான் கேக்கறேன், ஏன்?
ஏன்னா அதை நான் காலைல மொதல்ல ஆசையாப் பாக்கும்போது நீங்க பக்கத்தில இல்லை...
அடிப்பாவி..இவ்வளவுதானா நான் பயந்தே போயிட்டேன் இப்போதான் நான் வந்துட்டேனே..வா போய் பாக்கலாம்..இப்போ பிடிக்கும்தானே?
இப்பவும் வேணாம்...
சரியாப்போச்சு....ஏன்?
இப்போதான் நீங்க வந்திட்டீங்களே....அது வேணாம்!
முரளிக்கு தலை சுற்றியது இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது! இறுக்கி அணைத்துக்கொண்டே, சரி இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே
உங்க தும்பிகிட்டயே கேளுங்க...பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் உள்ளதா என்பதைப் போல பெண்களுக்கு எது ஏன் எப்போது பிடிக்கும் என்பதற்கும் பதில் இருக்கிறதா என்று!
கல்பனாவின் விழிகளின் ஓரம் நீர் தளும்பியதைப் பார்த்த முரளிக்கு ஒன்று மாத்திரம் நன்கு புரிந்தது அவள் இதயத்திலும் நிறைய ஈரம் இருக்கிறது!