Friday, April 7, 2023

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - ஸ்ரீமான் உ.வே.வெங்கடேஷ்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்


தாயை தேர்ந்தெடுக்கும்
தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
(படையப்பா)

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
(சூரியகாந்தி)

நானே நானா யாரோதானா
(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

என்ன இது தலைப்புக்கு கொஞ்சம்கூட சம்மந்தம் இல்லையே என நினைக்கிறீர்களா? நிச்சயம் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக மேலே படியுங்கள்.

அம்பத்தூர் சத்சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீமான் உ.வே.வெங்கடேஷ் அவர்களின் வால்மீகி ராமாயண சொற்பொழிவு கடந்த 30.3.23 (ஸ்ரீ ராம நவமி) முதல் அனுபவிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது ஸ்ரீ ராமபிரானின் அருளன்றி வேறில்லை.

ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களின் குருபக்தியும் ஞாபகசக்தியும் நாவன்மையும் பிரமிக்க வைக்கிறது. அனைத்து இதிகாசங்களையும் புராணங்களையும் கரைத்து குடித்திருப்பது மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்தில் இருந்தும் தமிழிலிருந்தும் சமயத்திற்கு ஏற்றாற்போல் சரளமாக எதையும் பார்க்காமல் நினைவிலிருந்து அள்ளி வீசுகிற லாவகமும் நம்மை வைத்த கண் வாங்காமல் வியப்புடன் அவரையே கவனிக்க வைக்கிறது.

அது மட்டுமா, அவ்வப்போது அம்பத்தூர் மக்களையும் சத்சங்கத்தையும் தட்டிக் கொடுப்பதும் இவ்வளவு நேரம் மீதி இருக்கிறது அதற்குள் இன்றைய பிரவசனத்தை முடித்துவிடுவேன் என்று நினைவுபடுத்துவதும் மக்களை அவரது கட்டுக்குள் வைக்கிறது.

இது போதாதென்று சமயத்திற்கேற்றாற்போல் மேற்கோள் காட்ட நமக்கு நன்கு அறிமுகமான திரைப்பாடல் வரிகளையும் பொதுவழக்கில் இருக்கும் வாசகங்களையும் பிரயோகிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

ஸ்லோகங்கள் இதிகாசங்கள் புராணங்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களின் குறிப்புகளிலிருந்து அவர் காட்டும் மேற்கோள்கள் என்போன்ற சாமானியர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஜனரஞ்சகமாக வெளியில் அறியப்படும் ஒரு சில பாடல்கள் மட்டுமே. அவற்றையும் அந்தந்த பாடல்களின் இசையில் பாடினால் கவனச்சிதறல் ஏற்படலாம் என்பதால் அதற்கு இடம் தராமல் சொற்பொழிவு போகிற போக்கில் வசன நடையிலேயே குறிப்பிடுவது இன்னும் சிறப்பு. நாம் ஈடுபாட்டுடன் கவனிக்கிறோமா என்பதை சோதிப்பதாகவும் இருக்கலாம்.

அவ்வகையில் ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களின் சொற்பொழிவிலிருந்து என்னைக் கவர்ந்த சில மேற்கோள்களைச் பார்ப்போம்.

முதல்நாள் ராம ஜனனம்.

ராவணனை வதம் செய்ய ராமனாக பிறக்க முடிவெடுத்த திருமால், தான் மனிதனாக பிறப்பதற்கு உரிய தாய் தந்தையரை தேர்ந்தெடுத்தார். இப்படி பெற்றோரை தேர்வு செய்யும் உரிமை பகவான் ஒருவருக்குத் தான் உண்டு என்பதை பாமரராகிய நமக்கு விளக்க படையப்பா படப்பாடலிலிருந்து கீழ்க்கண்ட வரிகளை கையாண்டார்.

தாயை தேர்ந்தெடுக்கும்
தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை

முகத்தை தேர்ந்தெடுக்கும்
நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை

பிறப்பை தேர்ந்தெடுக்கும்
இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை

(ஆனால் நாராயணனோ தனக்கு தந்தையாக தசரதனை தேர்ந்தெடுத்தான்)

இப்போது புரிகிறதா ஏன் திரைப்பாடல்களை முதலில் வந்தன என்று? மேலும் ராமரசம் அருந்தலாம் வாருங்கள்.

இரண்டாம் நாள் சீதா கல்யாணம்.

தசரதனின் அமைச்ச்கள் பரிவாரங்களில் முக்கியமானவர்களை விவரிக்கையில் chief architect-ஆக நளன் விளங்கியது குறிப்பிட்டார். பின்நாளில் இலங்கைக்கு பாலம் அமைப்பதற்கு நளனின் பங்கு முக்கியமானது. ராமன் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார் என்று கேட்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரம் இது என் அவர் கூறும்போது பலத்த சிரிப்பும் கரவொலியும் கலந்து வெளிப்பட்டன.

அகல்யாவின் சாப விமோசனம் பற்றிய கட்டத்தில், ராமனின் சாந்நியத்திலேயே (அதாவது ராமனின் ஸ்பரிசம் படாமல் - ராமன் வேறெந்தப் பெண்ணையும் தொடக்கூட மாட்டான் என்பதால்) பிரம்மாவால் படைக்கப்பட்டபோது எப்படி இருந்தாளோ - பிரம்மன் பார்த்துப் பார்த்து "மின்னலைப் பிடித்து மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து பூமியில் விட்டான்" என்று வர்ணித்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

மூன்றாம் நாள் பட்டாபிஷேக ஏற்பாடு , கைகேயி வரம்.

ராமனுக்கு முடிசூட்ட விரும்பி அமைச்சர்களிடமும் மக்களிடமும் ராமனின் தகுதி பற்றி கேட்டறிந்தார். ஏன், தந்தையான அவருக்கு தன் மகனின் பெருமைகள் தெரியாதா என்றால், யாருடைய பெருமையை யார்யார் யாரிடத்தில் கூறலாம் கூறக்கூடாது என்று அதற்கான வழிமுறைகளை விவரித்து, குறிப்பாக எந்த தந்தையும் தன் மகனின் பெருமையை அவனிடம் மட்டுமல்ல, யாரிடமும் கூறக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட "தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்..
நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்..கூறும் அறிவுரைகள்.." என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டியது மிகப் பொருத்தமாக இருந்தது.

அதேபோல், கூனி தன் உடல் குறையை மற்றவர் ஏளனம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தான் ஒரு உயர்ந்த இடத்தில் பணியில் அமர்ந்தால் தான் அது நடக்கும் என்றுணர்ந்து கைகேயிக்கு பணிப்பெண் ஆகிறாள். "பரமசிவன் கழுத்தில் இருக்கும்"போதுதான் பாம்பு தன் எதிரியான கருடனையும் பயப்படாமல் சௌக்கியமா என்று கேட்க முடியும். எனவே இருக்கும் இடம் முக்கியம் என்பதை கூனி அறிந்திருந்தாள் என்று தனக்கே உரிய பாணியில் விளக்கினார்.

நான்காம் நாள் அயோத்தியா காண்டத்தில் ராமன் கானகம் ஏகுவதும் பின்னர் தரசதன் மறைவும் பிற நிகழ்வுகளும்.

தந்தை சொல் காக்க கானகம் செல்லும் ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதையை தமஸா நதிக்கரையில் வரவேற்ற குகன், வெறும் கால்களுடன் அவர்கள் தேரிலிருந்து இறங்குவதைக் கண்டு கண்கலங்குகிறான். அவ்விடத்தில், "காலடித் தாமரை நாலடி நடந்தால் குகன் உள்ளம் புண்ணாகும்" என்று சுவையாக வர்ணிக்கிறார்.

தசரதன் இறந்துபட்டது தெரியாமல் அழைத்துவரப்பட்ட பரதன் அயோத்தியில் நுழையும்போதே மாற்றத்தை உணர்கிறான். "இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்" மக்கள் இப்போது ஏன் மெளனமாக சோகமாக உள்ளார்கள் என்று தவிக்கிறான் என்கிறார்.

பின்னர், அரண்மணைக்குள் நுழைந்த பரதன் தசரதன் இல்லாதது கண்டு தன் தாய் கைகேயியிடம் வினவி, விவரம் அறிந்து பதறி, தாயைப் பழித்து, ராமனின் தாய் கெளசல்யையிடம் தனக்கு நடந்தது எதுவும் தெரியாது, அவற்றில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று விவரிக்கிறான். ஒரு சிறு துளி சம்மந்தம் இருந்தாலும் தான் இந்த பாவங்களை செய்ததற்கு சமம் என்று உலகில் உள்ள பாவச் செயல்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒப்பிக்கையில், மது அருந்தும் பாவத்தைப் பற்றி குறிப்பிடும்போது மது அருந்தியவர் எப்படி தன்னிலை மறந்து "நானே நானா யாரோ தானா, மெல்ல மெல்ல மாறினேனா" என்று மாறிவிடுவார்கள் என்பதை விளக்குகிறார்.

பரதன் ராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வர தன் பரிவாரங்களோடு வரும்போது அவனை சந்தேகிக்கும் லக்ஷ்மணனின் செயல்பாடு, கண்ணன் தொட்டிலில் உறங்கும்போது அருகில் வரும் எறும்பை தன்னுடைய ஈட்டியால் நசுக்கும் "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்" செயல்போல் ராமனின் மேல் உள்ள அன்பால் விளைந்த கடுஞ்சிந்தனை என்கிறார்.

ஐந்தாம் நாள் பாதுகா பட்டாபிஷேகம் பின்னர் ஆரண்ய காண்டம்.

பல்வேறு வேண்டுகோள்கள்களுக்கும் ராமன் செவிசாய்க்காமல் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதே மகனின் கடமை என்று தான் அரசாள்வதை நிராகரித்து, முடிவாக வசிட்டரின் யோசனைப்படி பரதன் தனக்காக கொண்டுவந்திருந்த பாதுகைகளை தனது பிரதிநிதியாக அரசாள சம்மதித்தான். பரதனும் ராமனின் பாதுகையை சிரமேற்கொண்டு அவைகளையே ராமனாகக் கருதி அரசாண்டான் என விவரிக்கையில், பாதுகா-வை பூ கொண்டு துதிப்பதே பாதுகா-பூ அதாவது பாதுகாப்பு என்று கூறும்போது பலத்த கரகோஷம் எழுந்தது.

பின்னர் வால்மீகி மூன்று விதமாக பொருள்படும்படி எழுதிய வியத்தகு ஸ்லோகத்தை விளக்கினார். ராம லக்ஷ்மணன் தோற்றத்தை சூர்ப்பனகை அழகுக்கு உதாரணமாகவும், அரக்கர்களின் சேனை வீரத்திற்கு உதாரணமாகவும், அவளது தமையன் கரணோ வலிமை இல்லாத மென்மைக்கு உதாரணமாகவும் அவரவர் கோணத்திலிருந்து பார்க்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், செல்வம் வேண்டி ஒருவன் கந்தர் அனுபூதி பாராயணம் செய்தாராம். ஏன்டா இப்படி செய்கிறாய், கந்தர் அனுபூதிக்கும் செல்வத்திற்கும் சம்மந்தம் இல்லயே என கேட்டபோது, "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்று வரும்படியைத்தானே குறிக்கிறது என தனக்கு சாதகமாய் பொருள் எடுத்துக் கொண்டானாம் என்று விளக்கியபோது அரங்கத்தில் சிரிப்பு அலை அடங்க நேரமானது.

ஆறாம் நாள் ஆரண்ய - கிஷ்கிந்தா காண்டம்.

மலை மேலிருந்து ராம-லக்ஷ்மணர் வருகையை கவனித்த சுக்ரீவன் இவர்கள் தோற்றத்தைப் பார்த்து ஐயமுறுகிறான். மரவுரி தரித்திருக்கின்றனர். கேசமோ ஜடாமுடி. எந்த முனிவரின் சீடர்கள் என வியக்கும்போதே உடலை கவனித்தால் "தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது" என்பதுபோல் வீரபராக்கிரமசாலிகளாகத் தோன்றுகின்றனர். ஒருவேளை தனது அண்ணன் வாலிதான் தான் வரக்கூடாத இடம் என்பதால் தன்னைக் கொல்ல இந்த மாயாவிகளை அனுப்பியிருக்கிறானோ என்று சந்தேகிக்கிறான். என்ன பொருத்தமான பாடல்!

ஹாஸ்ய ரசனை தொடர்கிறது. அவர்கள் யாரென்று விசாரிக்க அனுமனை அனுப்புகிறான் சுக்ரீவன். அனுமனும் ராமரும் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டபின் லக்ஷ்மணன் தன்னை அறிமுகம் செய்யும்போது ராமரைக் காட்டி, இவருக்கு நான் தம்பி, ஆனால் நான் இவருக்கு
எந்நேரமும் பணிசெய்யும் அடியேன் என்கிறான். அனுமன் புரியாமல் விழித்தாராம். இதை மேலும் தெளிவாக விளக்க ஒரு கதையும் சொன்னார் ஸ்ரீ வெங்கடேஷ்.

ஒருவர் கடைவீதிக்கு சென்று சமையலுக்கு கொத்தவரங்காயும் வீட்டு வேலையாக சுவற்றில் அடிக்க ஆணிகளும் வாங்கிவந்தாராம். அவரது மனைவி கொத்தவரங்காயை திருத்த அமர்ந்தால் அதில் ஒன்றுகூட வளையவில்லையாம். அத்தனையும் அத்தனை முற்றல்! அதே நேரத்தில் இவர் சுவற்றில் ஆணி அடித்தால் அத்தனையும் வளைந்நு விழுந்தனவாம். அந்த அம்மா சொன்னார்களாம், இவருக்கு வேண்டுமானால் இது கொத்தவரங்காயும் அது ஆணியுமாக இருக்கலாம். ஆனால் எனக்கோ இந்த வளையாத காய்தான் ஆணி, அதோ வளைந்து விழும் ஆணிதான் பிஞ்சுக்காய் என்றாராம்.

அதாவது, ராமனிடம் என்னைக் காட்டி இது யார் என்று கேட்டால் என் தம்பி என்று சொல்லுவார், ஆனால் நான் யார் என்று என்னைக் கேட்டால் நான் அவருக்கு என்றைக்கும் கைங்கர்யம் செய்யும் அடியார்தான் வேறில்லை வேறு ஒன்றும் வேண்டவும் வேண்டாம் என்று விளக்கினாராம் லக்ஷ்மணர்!

ஏழாம் நாள் கிஷ்கிந்தா மற்றும் (பெரும்பாலும்) சுந்தர காண்டம்

ஆஞ்சநேயரின் பல பெயர்கள் நாம் அறிந்திருந்தாலும் அவை பெரும்பாலும் காரணப்பெயர்களே, அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுந்தரன் என்பதும், சுந்தர காண்டம் மற்றுமே ராமாயண கதாபாத்திரம் ஒன்றின் பெயரோடு விளங்குவது என்பதும் இன்று நான் கற்றவை. இன்றைய சொற்பொழிவில் சுவையானவற்றை பார்ப்போம்.

அசோக வனத்தில் ராவணனின் ஆசை வார்த்தைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் பதிலாக அவனுக்கு எதிரில் ஒரு புல்லை இட்டு அதனிடம் சீதை பதிலளிப்பதாக பிரவசனம். ஒரு தாயின் அன்புடன் அவனுக்கு புத்தி சொல்வதாகவும் அமைகிறது. மந்தோதரியின் அழகையும் குணத்தையும் எடுத்துக்காட்டி, இத்தகைய பெருமையுடன் பட்டத்தரசி இருக்கும்போது, "இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழாமல்" ஏன் பிறர்மனைக்கு ஆசைப்பட்டு அழிவைத் தேடிக்கொள்கிறாய் என்று அறிவுறுத்துகிறாள். இந்தப் பாடலை ஏற்கெனவே அனுபவித்திருக்கிறோம்.

ராமனைப் பிரிந்திருக்கும் சீதையை வர்ணிக்கும் விதமாக மருதகாசியின் பாடலான "வனத்துக்கு அழகு பசுமை, வார்த்தைக்கு அழகு இனிமை, குளத்துக்கு அழகு தாமரை, நம் முகத்துக்கு அழகு புன்னகை" என்பதை நினைவூட்டி, தாமரை இல்லாத குளம் போல நிறைந்திருந்தாலும் பொலிவிழந்த முகத்துடன் சீதை விளங்கினாள் என்று அழகாக மேற்கோள் காட்டினார்.

சிம்சுபா மரத்தின் மேல் அமர்ந்துகொண்டு சீதையைப் பார்த்த அனுமனுக்கு, "எங்கேயோ பார்த்த ஞாபகம்" (சீதை தன் ஆபரணங்களை ஒரு முடிச்சாக ரிஷ்யமுக மலையில் அமர்ந்திருந்த வானரங்களின் கையில் அகப்படும்படி வீசியபோது கண்ட ஞாபகம்) வந்ததாக ஞாபகமாக குறிப்பிட்டார்.

சீதையை சிறைபிடித்து தன் ஆசைக்கு இணங்க சரியாக ஒரு வருட அவகாசம் கொடுத்திருந்த ராவணன், தற்போது பத்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், "ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா" என்று மிரட்டுவதாக வர்ணித்தார்.

அனுமன் சீதையிடம் பேச தேர்ந்தெடுத்த மொழி சமஸ்கிருதம் அல்லாத மதுரமொழி என்று வால்மீகி முனிவர் எழுதியதை மேற்கோள் காட்டி, "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று பாரதியையும் மேற்கோள் காட்டி அனுமன் பேசியது தமிழ்தான் என்று ஸ்ரீரங்கம் ஜீயர் வியாக்யானம் அருளியதைக் குறிப்பிட்டபோது அரங்கத்தில் கரவொலி அதிர்ந்ததை கூறவும் வேண்டுமோ?

எட்டாம் நாள் சுந்தர காண்டம் தொடர்ச்சி.

ராமனின் பெயர் பொறித்த மோதிரத்தை தன் கையில் வாங்கிக்கொண்ட சீதை, ராமனையே நேரில் கண்டதுபோல் அந்த மோதிரத்தை ஆலிங்கனம் செய்கிறாள். பேச்சு எழுவில்லை. கண்ணீரால் அந்த மோதிரத்திற்கு அபிஷேகம் செய்கிறாள். எப்படி தெரியுமா? "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி" என்பதுபோல்!

என்னதான் மோதிரத்தை ராமனாக பாவித்தாலும் மோதிரம் மோதிரம் தானே? ராமன் இல்லையே? மோதிரம் இங்கே இருக்கிறது, ராமன் எங்கே, நான் என்ற அவரைக் காண்பேன் என்னும் விதமாக, "கணையாழி இங்கே, மணவாளன் எங்கே? என்றும், கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ?" என்றும் உருகினாள் என்கிறார் உபன்யாசகர். மேலும், மோதிரத்தை கையில் வைத்துக்கொண்டு கண்ணை மூடினால் "கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே" என ராமனோடு வாழ்ந்த நினைவுகள் அலைமோதுவதை அழகாக விவரிக்கிறார்.

அசோக வனத்தை த்வம்சம் செய்து இலங்கையில் மாளிகைகள் அனைத்தையும் தனக்கிட்ட தீயினாலேயே எரிதத அனுமனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று ராவணன் தன் சபையினரிடம் கேட்க, ஆளுக்கொரு தண்டனையை பரிந்துரைக்கும்போது விபீஷணன் மாத்திரம் தூதுவனை தண்டிப்பது சரியல்ல என்ற ராவணனுக்கு அறிவுரை கூறுகிறான். அப்போது ராவணன், விபீஷணனைப் பார்த்து, தான் நம்பும் நான்கு உண்மைகளை கூறுகிறான் - பசுக்களை வளர்ப்பவன் ஒரு நாள் தனவானாவான் (எப்படி என்றால், ஒரு மாடு கன்று வைத்திருப்பவன் "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" பாடலை பாடி முடிக்கும் முன் கார் பங்களா என்று பணக்காரனாவது போல என்று சொல்லும்போது சிரிப்பலையுடன் கரகோஷம்), வேதம் கற்பவன் தவறு செய்தாலும் திருந்துவான், பெண்ணின் பிடிவாதம் என்றாவது ஒருநாள் மாறும், சொந்த உறவினனே முதுகில் குத்துவான் - என்று தனது கருத்துக்கு எதிராக அறிவுறுத்துய விபீஷணனனை குற்றம் சாட்டுகிறான்.

ஒன்பதாம் நாள் யுத்த காண்டம் தொடர்ச்சி மற்றும் ஸ்ரீராம பட்டாபிஷேகம். கடைசி நாள் என்பதால் சற்று அதிக நேரம் பிரசங்கம். அதற்கேற்றாற் போல் சற்றே அதிகமாக, ஆனால் சிறிய (short and sweet) மேற்கோள்கள். வாருங்கள். ராமசரம் ராமாமிர்தமாக மாறும் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இந்திரஜித் இரவு நேரத்தில் ஏவிய நாக பாசத்தால் கட்டுண்டு மயங்கிக்கிடந்த வீரர்களையும் வானரர்களையும் கருட பகவான் பொன்னொளியுடன் பறந்து வந்து தன் அருளால் உயிர்ப்பிக்கும் கட்டம். இது எப்படி உள்ளது என்றால், "நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான்" என்பதுபோல் இருந்தது என்றார்!

அடுத்த நாள் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டு மயக்கமடைந்த லக்ஷ்மணனை உயிர்ப்பிக்க ஜாம்பவான் அனுமனிடம் விசல்யகரணி என்னும் மூலிகையை மீண்டும் கொண்டுவரச் சொல்கிறார். இந்த மூலிகையின் பெயர் "எங்கேயோ கேட்ட ஞாபகம்" வருகிறதா என் சபையோர்களை வினவி, ராமன் அயோத்தியிலிருந்து வனவாசத்திற்கு புறப்படுமுன் தன் தாய் கெளசல்லையிடம் ஆசி வாங்கச் செல்லும்போது கெளசல்யை ராமனுக்கு ஆபத்துக் காலத்தில் உதவ அன்புடன் கொடுத்த பொருட்களில் ஒன்று இந்த விசல்யகரணி என்று ஞாபகப்படுத்தினார்.

"தம்பி உடையான் படைக்கஞ்சான்" என்னும் வழக்கு எப்படி வந்தது என்றால், இலகுவில் வெற்றிகொள்ள முடியாத இந்திரஜித்தை அழித்த லக்ஷ்மணனை ஆரத்தழுவி பாராட்டி ராமன் சொன்னதிலிருந்து வந்தது என்னும் செய்தியும் நான் இன்று அறிந்த புதிய தகவல்.

ராமனுக்கு வீரராகவன் என்ற பெயர் - திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் - பற்றி குறிப்பிடுகையில் அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதை விளக்கினார். ஆனானப்பட்ட ராவணனே தன் எதிரி ராமன் போர் புரியும் விதத்தை பார்க்க மிகவும் விரும்பினான், அவனே ராமனுக்கு வீரராகவன் என்ற பெயர் சூட்டினான் என்று விளக்கினார். இதுவும் இன்று நான் அறிந்த புதிய தகவல்.

போரெல்லாம் முடிந்து விபீஷணனை அரியணையமர்த்தி பின்னர் சீதைக்கு நற்செய்தி அறிவிக்க அனுமனை தூது அனுப்பினார் ராமன். சீதையிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்த பின் அனுமன் இத்தனை நாள் சீதையை துன்புறுத்திய அரக்கிகளை வதைக்க அனுமதி கோருகிறான். அப்போது சீதை "எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது" என்று கூறும்முகமாக அரக்கியர் தமக்கு இட்ட கட்டளையை செய்தார்கள் அவ்வளவுதான். அதற்காக அவர்கள்மேல் கோபம் கொள்ளக்கூடாது என்று அனுமனுக்கு புத்தி சொல்கிறாள்.

இலங்கையில் இருந்து புறப்படும் முன் சீதையின் தூய்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட அக்னிப்பிரவேசம் முடிந்து அக்கிதேவனே சீதையை மறுபடி ராமனிடம் சேர்க்க, அனைத்து தேவர்களுடன் "பூ மழை தூவி வசந்தகள் வாழ்த்தியது" போல தசரதனும் சுவர்க்கத்திலிருந்து நேரில் வந்து வாழ்த்தினான் என்று வர்ணித்தார் உபன்யாசகர்.

ராமனின் வருகை நற்செய்தியை அனுமன் மூலம் அறிந்த பரதன், ராமனை பரத்வாஜ ரிஷியின் ஆசிரமமான பிரயாகை முதல் அயோத்தி வரை சாலையை சமன் செய்ய கட்டளை இடுகிறான். அவர்கள் புஷ்பக விமானம் மூலம் தான் வருவார்கள் என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் அந்தக் காலத்திலேயே விமானத்தில் பயணிப்பவர்களுக்கு சாலையிலிருந்தே சல்யூட் அடிக்கும் பழக்கம் இருந்தது போலும் என நகைச்சுவையுடன் ஒப்பிட்டார்.

இறுதியாக ராமன்-லக்ஷ்மணன்-சீதையை அன்புடன் வரவேற்ற பரதன், ராமனிடம் "வானும் நிலவும் மாறாமல் இருக்கும்" வரை ராமன்தான் அரசாள்வான் என்று உறுதி கூறுகிறான்.

இவ்வாறாக, ராமர் பிறப்பிலிருந்து பட்டாபிஷேகம் வரை நடைபெற்ற சம்பவங்களை இதிகாசக் குறிப்புகளிலிருந்து மட்டுமல்லாமல் தற்கால வெகுஜன ரசனையிலிருந்தும் மேற்கோள் காட்டுவது ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களை அவர் மிகச்சிறந்த அறிஞர், சொற்பொழிவாளர் என்ற உயரத்திலிருந்து அனைத்த வயது மக்களிடையே அவர்களோடு தானும் ஒருவனாக பொருத்திக்கொள்ளும் திறமை மிக்கவர் என்பதை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.

இந்த பதிவு பிடித்திருந்தால் மகிழ்ச்சி. பொறுமையாக படித்ததற்கு மிக்க நன்றி.

ஸ்ரீராமஜயம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home