Sunday, August 20, 2023

மெட்ராஸ் டு பாண்டி (நாட்டு திவ்யதேசங்கள்)

 

மெட்ராஸ் டு பாண்டி (நாட்டு திவ்யதேசங்கள்)

12-15 ஆகஸ்ட் 2023


சேவித்த ஸ்தலங்கள்.


முதல் நாள் (12.8.23 சனி)


திருமெய்யம்

திருக்கோஷ்டியூர்

திருமாலிருஞ்சோலை

திருமோகூர்


இரண்டாம் நாள் (13.8.23 ஞாயிறு)


திருப்புல்லாணி

நவதிருப்பதிகள்

- வரகுணமங்கை

- திருப்புளிங்குடி

- திருக்குளந்தை என்னும் எபருங்குளம்

- இரட்டை திருப்பதி (திருத்தொலைவிலிமங்கலம்)

- தென் திருப்பேரை

- திருக்கோளூர்

- ஆர்வார்திருநகரி


மூன்றாம் நாள் (14.8.23 திங்கள்)


நவதிருப்பதிகள்

- ஸ்ரீவைகுண்டம்

திருக்குறுங்குடி, சுற்றியுள்ள ஸ்தலங்கள்

வானமாமலை எனும் நாங்குநேரி


நான்காம் நாள் (15.8.23 செவ்வாய்)


ஸ்ரீவில்லிப்புத்தூர்

திருத்தங்கல்

கூடலழகர்


இந்த பாண்டி நாட்டு திவ்வதேசதரிசன சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆகஸ்ட் 11 வெள்ளி இரவு 8 மணிக்கு ICF பேருந்து நிலையத்தில் கூடும்படி ஏற்பாடு. சரியான நேரத்தில் நானும் என் மனைவியும் சென்றடைந்தோம். உண்மையில், இவ்வளவு நீளமான பேருந்து வாகனத்தை நான் இதுவரை பார்த்ததில்லை, அதில் பயணித்ததும் இல்லை. வோல்வோ டபுள் ஆக்ஸில் பேருந்தின் முன் பகுதியில் அமைந்திருந்த எங்கள் இருக்கை வசதியாக இருந்தது. பயணமும் குலுங்கல்கள் அதிர்வுகள் இல்லாமல் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. வாகனத்தின் பின்பாகத்தில் அமர்ந்தவர்களுக்கு குளிர்சாதனம் சரியாக வேலை செய்யாததால் பகல் நேர பயணத்தின்போது மிகவும் அசெளகர்யம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், திவ்ய தேச ஆலயங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்க வைத்து சற்று முன்பின் ஆனாலும் வேளா வேளைக்கு குழுவினரே தயாரித்த திவ்யமான உணவும் கிடைத்தது மிகப் பெரிய விஷயம் என்றே சொல்ல வேண்டும்.


இப்போது பயண அனுபவத்தின் சில நினைவுகள்.


2019-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு அரிய சூரியக் கிரகணம் நிகழ்ந்தது. Annular eclipse என்று அழைக்கப்படும் அந்த கிரகணம் தென் இந்தியாவை கடந்த போது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் அதன் உச்சநிலை தெரியும் காலம் 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் பாதை சரியாக திருமயத்தை கடந்தது. திருச்சியில் 10-15 வினாடிகள் தான், சென்னையில் இல்லவே இல்லை. அந்த நிகழ்ச்சியை நேரில் காண அப்போது நான் வந்த இடம் இந்த திருமயம் கோட்டையின் மேல் இருந்த பீரங்கி மேடைதான். ஆனால், அன்று கிரகணம் காரணமாக அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டிருந்ததால் என்னால் ஆலயங்களுக்கு செல்ல முடியவில்லை. அந்த குறை இப்பயணத்தால் தீர்ந்தது எனக்கு பெரு மகிழ்ச்சி. மேலும், இங்குள்ள பெருமாள் மற்றும் சிவன் கோவில் இரண்டும் குடைவரை கோவில்கள் - அதாவது மலைப் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோவில்கள். இந்தக் கோவில்களின் தோற்றம், சிற்பங்கள் அனைத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ஆரம்பமே அமர்க்களம் என்ற விதத்தில் முதல் தரிசனமே இந்த இடத்திற்கு வந்தது எனக்கு நிறைவை கொடுத்தது.

 


அடுத்து நாங்கள் சேவித்த ஸ்தலமாகிய திருக்கோஷ்டியூர் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலம்
. இங்கு தான் உடையவர் என்று மிக்க பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ ராமானுஜர் தனக்கு ரகசியமாக உபதேசிக்கப்பட்ட ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை தனது குரு திருக்கோஷ்டி நம்பியின் ஆணையை மீறி பாமரனும் பரமனடி அடைய வேண்டி அனைத்து மக்களின் நன்மை கருதி கோவில் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து அனைவரையும் அழைத்து பகிரங்கமாக உபதேசித்தார். குருவும் முதலில் கோபமடைந்தாலும் சிஷ்யனின் உன்னத நோக்கம் கண்டு வியந்து மனமிளகி மன்னித்தது மட்டுமல்லாமல், அவரை எம்பெருமானார் என்றழைத்து ஆலிங்கனம் செய்துகொண்டார். மிகக் குறுகிய பாதை வழியாக கோவில் கோபுரத்தில் குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து ஏறி அங்கிருக்கும் அவரது திருமேனியை தரிசிக்கும்போது ஏற்படும் பரவச உணர்ச்சி விவரிக்க இயலாத ஒன்றாகும்.






அங்கிருந்து அழகர்கோவில் வந்தபின்னர் அங்கிருந்த பூங்காவில் மதிய உணவிற்குப் பிறகு கள்ளழகரை சேவித்தோம்
. அற்புதமான சிற்பங்கள் நிறைந்த கோவில் இது. உண்மையில், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் காணப்படும் சிற்பங்கள் நம்மை வியக்கவைக்கும் வேலைப்பாட்டுடன் திகழ்கின்றன. சிறிது ஓய்விற்குப் பிறகு நேரம் கிடைக்கப்பெற்றவர்கள் அங்கிருந்து இயக்கப்படும் சிறிய பேருந்தில் பயணித்து பழமுதிர்ச்சோலை ஸ்ரீ முருகனையும் வழிபட்டு வந்தனர். ஒரு சில காரணங்களால் என்னால் முடியவில்லை.





கள்ளழகரைக் கண்டபின் அடுத்து திவ்யதேசமாக திருமோகூர் சென்றோம். மோகினி வடிவமெடுத்த பெருமாளை நினைவுகூரும் வகையில் பெயர்பெற்ற இத்தலத்தின் கோவில் மிகவும் அழகு வாய்ந்தது. சதுர வடிவிலான விமானம் கண்ணைக் கவர்கிறது. விமானம் மட்டுமல்ல, இக்கோவிலில் உள்ள மற்ற சிற்பங்களும் பிரதான வாயிற்கோபுரமும் மிக்க அழகு வாய்ந்தவை. மோகினியாய் மயக்கிய மோகனனைக் கண்ட மயக்கத்திலேயே திருப்புல்லாணி போய்ச் சேர்ந்தோம்.




இந்தப் பகுதிகளில் காலை நம்மை எழுப்புவது சேவலோ, காக்கைகளோ அல்ல. மயில்கள்! ஆம், அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்து கொண்டிருக்கும் மயில்களின் அகவல் கேட்டு தான் இரண்டு நாட்கள் நான் கண்விழித்தேன்.

இரண்டாம் நாள் அதிகாலை எழுந்து குளித்து சேதுக்கரை சென்று
, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைதிகப்பெரியவர் மூலம் அவரவர் வழக்கப்படி சங்கல்பம் செய்துகொண்டு ராமரை வழிபட்டு கடல்நீராடி தங்குமிடம் திரும்பி ஆதி ஜகந்நாதப் பெருமாளை வழிபட்டோம். இங்குள்ள கோவில்களில் சிற்பச் சிறப்பை கண்டு மாளாது. குறிப்பாக, துவார பாலகர்கள் அசத்துகிறார்கள். நிஜமாகவே சர்வ வல்லமை பெற்ற அரசனுக்கு மெய்க்காப்பாளராக இருப்பர் ஆஜானுபாகுவாக இருந்தால் எப்படி சிறக்குமோ அதுபோல அத்தனை கோவில்களிலும் துவாரபாலகர்கள் மிக அழகாக வடிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காலத்து கலைத்திறனைக் காண்கையில் இப்போது அந்த திறமைகள் சிறிதுசிறிதாக மறக்கப்பட்டுவருகின்றன என்பது கசப்பான உண்மை. அங்குள்ள தர்ப்ப சயன ராமர் சந்நிதியில் மனதார ஓ ராமா நீ நாமம் பாடல் பாடியது மனதுக்கு மிக்க நிறைவை அளித்தது.





காலைச்சிற்றுண்டி முடித்து தென்நாட்டு நவதிருப்பதி தலங்களை தரிசிக்க ஆயத்தமானோம்
. செல்லப்போகும் இடங்கள் குறுகிய பாதைகளிலும் சிற்றாறுகளின் இரு பக்கங்களிலும் அமைந்திருப்பதால் எங்கள் பெரிய பேருந்திலிருந்து இறங்கி ஐந்து சிற்றுந்துகளில் (van) பயணித்து நவ திருப்பதிகளில் இரண்டாவதான வரகுணமங்கை ஆலயத்திற்கு முதலில் சென்றோம். சந்திரனுக்குரியதான இத்தலத்தின் நாயகர் விஜயாசனப் பெருமாள் மிகவும் அழகாக சிறப்பான தோற்றத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். பெருமாளையும் வரகுணவல்லி தாயாரையும் சேவித்துக் கொண்டோம்.





இரண்டாவதாக நவதிருப்பதிகளுள் நான்காவதான புதனோடு சம்மந்தப்பட்ட திருப்புளிங்குடி காய்சின வேந்தர் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். சயன கோலத்தில் இருக்கும் இப்பெருமாளுக்கு அருகில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் கண்ணைக் கவரும் பெரிய உருவில் அமைந்திருக்கிறார்கள். கர்ப்க்கிரக வாயிலில் இருந்து காணக்கிடைக்காத பெருமாளின் பாத தரிசனம் பெற வெளியில் வடக்கு பக்கத்தில் உள்ள துவாரம் மூலமாகக் காண வழி செய்திருக்கிறார்கள்.



அடுத்து மூன்றாவதாக நவதிருப்பதிகளுள் ஏழாவதான சனிபகவானுக்கு தொடர்பான திருக்குளந்தை (பெருங்குளம்) வேங்கடவாணன் என்னும் மாயக்கூத்தர் கோவிலுக்கு சென்றோம். அற்புதமான அழகான திருவுருவம். தரிசனம் முடித்துக்கொண்டு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் மதிய உணவு அருந்தினோம். நான்காவதாக இரட்டைத் திருப்பதிகளுள் இரண்டாவதானதும் நவதிருப்பதிகளுள் ஒன்பதாவதுமான கேது ஸ்தலமான திருத்தொலைவிலி மங்கலம் அரவிந்தலோசனரை சேவித்தோம். பிறகு ஐந்தாவதாக ராகு ஸ்தலமான இரட்டைத் திருப்பதிகளுள் முதலானதானதும் நவ திருப்பதிகளுள் எட்டாவதுமான தேவர்பிரான் என்றழைக்கப்படும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் தரிசனம் முடித்துக்கொண்டோம்.





ஆறாவதாக நாங்கள் சென்ற இடம் நவ திருப்பதிகளுள் ஆறாவதான சுக்கிரனுக்கான ஸ்தலமான தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் ஆலயம். மீன்வடிவ நெடிய குழைகளை காதில் அணிந்திருப்பதால் மகர நெடுங்குழைக்காதன் என்று பெயர். குழைக்காது நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என இரு தாயார்கள். அடுத்து ஏழாவதாக நாங்கள் தரிசித்தது நவ திருப்பதிகளுள் நான்காவதான புதன் ஸ்தலாகிய திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள். அழகிய திருவுருவம் கொண்ட பெருமாள் இங்கு சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். குமுதவல்லி, கோளூர்வல்லி என இரண்டு தாயார்கள்.



பின்னர் எட்டாவதாக நாங்கள் தரிசித்தது நவதிருப்பதிகளுள் ஐந்தாவதான வியாழனுக்கான ஸ்தலமான திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆலயம். மிகப்பெரிய ஆலயம். அற்புதமான சிற்பங்கள். இங்குள்ள ஐந்தாயிரம் வருடத்திற்கும் மேலான உறங்காப்புளி மிகவும் புனிதமானதாகவும், லக்ஷ்மணரின் அவதாரமாகவே கருதப்படுகிறது. நம்மாழ்வார் இங்கு தஙகி அருள்பாலிக்கிறார்.

இவ்வாறு சற்று அதிக க்ஷேத்திரங்கள் தரிசனம் செய்த நல்ல நாளாக இரண்டாம் நாள் அமைந்தது. இரவு ஆழ்வார்திருநகரியில் எம்பெருமானார் சந்நிதியில் ஜீயர் ஸ்வாமிகளின் திருக்கையால் பிரசாதம் கிடைக்கப் பெற்றோம். அங்கேயே வானமாமலை ஆஸ்ரமத்தில் அறையில் தங்கி மூன்றாம் நாள் காலை மீண்டும் பெரி..ய்ய பேருந்தில் ஏறி நவதிருப்பதிகளுள் முதலலாவதான சூரியனுக்கான ஸ்தலமான ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டோம்.

இப்பயணத்தில் நாங்கள் கண்ட கோவில்களிலேயே மிகப் பெரியது இந்த ஸ்ரீவைகுண்டம் கோவில்தான். எவ்வளவு பெரியது, எத்தனை சிற்பங்கள், வேலைப்பாடுகள். இன்று வெறுமனே பராமரிக்கவே சிரமமாக இருக்கிறது. அந்த காலத்தில் எப்படித்தான் இவ்வளவு பெரிய கோவில்களைக் கட்டி பராமரித்தார்களோ தெரியவில்லை. தீவிர பக்தியும், இறைவன் சேவையில் நாட்டமும்தான் அக்கால மக்களை கோவில் திருப்பணிகளில் முழுவதுமாக ஈடுபடுத்தியிருக்கும். பக்திதான் அக்காலத்தில் ஆன்மிகத்தையும் தமிழையும் வளர்த்தது என்று சொன்னால் மிகையாகாது.

இங்குள்ள ஸ்ரீவைகுண்டநாதர் அழகாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கள்ளன் வடிவில் வந்ததாலும், உள்ள்த்தைக் கவர்வதாலும் கள்ளபிரான் என்று அழைக்கப்படும் வைகுண்டநாதருக்கு வைகுந்த நாயகி என்ற பிராட்டியார். க்ஷேத்திர வரிசை முன்பின் மாறினாலும் ஆண்டவன் அருள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒன்றாகவே அமையும் என்பது பெரியவர்கள் கண்ட உண்மை.

காலைச் சிற்றுண்டிக்குப் பின் திருக்குறுங்குடி பயணமானோம். போய் சேரும்போதே பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அவசரம் அவசரமாக பயணிகள் அனைவரும் அங்கு இருக்கும் சிறிய ஜீப்களில் ஒரு வண்டிக்கு எட்டு பேராக ஏறி திருமலை நம்பி கோவிலுக்குச் சென்றோம். கரடு முரடான பாதையானாலும் ஓரளவுக்கு அங்கங்கே கான்கிரீட் தடங்கள் அமைத்து ஓரளவு செளகரியம் செய்து தந்திருக்கிறார்கள். அஹோபிலம் பாவன நரசிம்மர் கோவிலுக்குச் சென்றவர்களுக்கு அந்த அளவு ஆட்டம் இல்லாத இந்தப் பாதை அவ்வளவு சிரமம் தராது எனலாம். இயற்கை நிறைந்த களக்காடு வனப்பகுதியில் ரம்யமான சூழலில் இருபது நிமிடம் மலைப்பாதை ஏறி, குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் நடந்தே ஏறவேண்டும். மலைமேல் நம்பியை மனதார வேண்டிக்கொண்டபின் திரும்பும் வழியில் இளைஞர்களும் ஆர்வலர்களும் நம்பியாற்றில் இறங்கி நீராடினர். மீண்டும் ஜீப்பில் வந்தவழியே இறங்கி பாற்கடல் நம்பிப் பெருமானை தரிசித்த பின்னர் திருமங்கையாழ்வார் சந்நிதிக்குச் சென்றோம். குளிர்ந்த காற்று உடலெங்கும் உரச, பச்சைப் பசேல் என்று நெற்பயிர் ஒருபுறம், முற்றிய நெற்கதிர் தாங்காது தலைகவிழ்ந்து மஞ்சளாக மாறிக்கொண்டிருக்கும் வயல் ஒரு புறம், வாழை மரங்கள் மற்றொரு புறம் என வியக்கும் இயற்கையின் நடுவில் அமைந்த சிறு அழகான சந்நிதி இது. எங்கும் பார்த்திராத அதிசயமாக நான்கு கிளைவிட்டு வளர்ந்த தென்னை மரத்தையும் இங்கு கண்டோம்.









பின்னர் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வட்டப்பாறை ராமானுஜர் சந்நிதிக்குச் சென்று வழிபட்டோம். ராமானுஜர் உறக்கத்தில் இருக்கும்போது அனந்தபத்மநாபப் பெருமானின் ஆணைப்படி பெரிய திருவடி கருட பகவனால் திருவனந்தபுரததிலிருந்து மீண்டும் திருக்குறுங்குடிக்கே கொண்டுவரப்பட்ட ராமானுஜருக்கு திருக்குறுங்குடி நம்பியே அவருடைய சிஷ்யர் வடுக நம்பியாக அவதரித்து தன் குருவுக்கு திருமண் காப்பு இட்டு அலங்கரித்த விசேஷ ஸ்தலம் இது. யாருக்கு கிடைக்கும் இத்தகைய பாக்கியம். இந்தப் புண்ணிய ஸ்தலத்தை தரிசிப்பதற்கே நாமும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து திருக்குறுங்குடி நம்பி கோவிலருகே உள்ள ஒரு மண்டபத்தில் சற்று தாமதமாக மதிய உணவு அருந்தினோம்.





உணவுக்குப் பின்னர் நம்பி கோவில் சென்று தரிசித்தோம். அற்புதமான இக்கோவிலில் வழிபடும்போது மறுபடியும் ஜீயர் ஸ்வாமிகள் தரிசனமும் தீர்த்தம் சடாரி பிரசாதமும் கிடைத்தது எங்கள் பாக்கியம். அழகான இரண்டு யானைகளையும் இங்கு கண்டு மகிழ்ந்தோம். சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்குறது இக்கோவிலின் வழிபாட்டு முறை. பெருமாள் கோவில் என்றாலும் உள்ளேயே ஒரு சிவன் ஆலயமும் பைரவர் சந்நிதியும் உள்ளது மட்டுமல்லாமல், கோவிலின் சாவியை இரவு பைரவரிடம் ஒப்படைத்து மீண்டும் காலையில் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நடைமுறை தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது.




தரிசனம் ஆன பின்னர் நாங்குநேரி என்று இன்று அழைக்கப்படும் வானமாமலைக்கு பயணமானோம். இங்குள்ள தோதாத்ரி பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு தினசரி செய்யப்படும் தைலாபிஷேகத் தைலமானது ஒரு கிணற்றில் சேகரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நம்பிக்கையுடன் உபயோகித்தால் எத்தகைய நோயும் தீரும் என்பது இங்குள்ள மக்களின் திடமான கருத்து.



அங்கிருந்து புறப்பட்டு பின்னிரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைந்தோம். கோவிலின் எதிரிலேயே உள்ள தனியார் தங்கும் அறைகளில் தங்கி காலையில் குளித்து முடித்து புஜங்க சயன கோலத்தில் உள்ள வடபத்ர சாயி பெருமாளை சேவித்துக்கொண்டு ஆண்டாள் நாச்சியாரையும் சேவித்துக்கொண்டோம். புகழ்பெற்ற கோபுர வாயிலை நிழற்படம் எடுக்கும் வழியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவையும் வாங்கிக்கொண்டு பின்னர் காலைச் சிற்றுண்டி முடித்துக்கொண்டு திருத்தங்கல் நோக்கி பயணமானோம்.

திருத்தங்கல் ஸ்தலமானது போக்குவரத்து மிக்க நெடுஞ்சாலையில் இருப்பதனால் அவசரமாக இறங்கி நுழைவாயில் சென்றடைய சாலையில் சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது. அதற்குள் கால் சூடு தாங்காமல் திணறிவிட்டோம். இங்குள்ள நின்ற நாராயணப் பெருமாளுக்கு நான்கு தேவியர். திருமார்பில் உள்ள தேவியையும் சேர்த்து அர்ச்சகர் ஐந்து தேவியர் (பஞ்ச பார்யாள்) என்று குறிப்பிட்டார். வேறு தளத்தில் உள்ள சந்நிதியில் மகாலட்சுமி தாயாரும் நல்ல உயரமாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களிலேயே இவ்வளவு உயரத்தில் நின்ற கோலத்தில் உள்ள தாயார் இவர்தான் என்று சொல்கிறார்கள். தினமும் திருமஞ்சனம் இவரது சிறப்பு. இங்கு புடவை சார்த்துவதாக வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். நெரிசல் மிகுந்த சாலையாதலால் தரிசனம் முடித்து பேருந்து சாலையில் வருவதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே கோவிலை விட்டு புறப்பட்டோம். மீண்டும் மதிய உணவுக்காக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே சென்று உணவு உட்கொண்டோம்.


உணவு என்று அங்கங்கு எளிதாக குறிப்பிட்டேனே தவிர ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு வகையாக சுவையாக சில இடங்களில் இனிப்பும் சேர்த்து அங்கங்கு பிரத்யேகமாக தயாரித்து வண்டியில் சிரத்தையாக ஏற்றி இறக்கி அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைத்த இடத்தில் அனைவரையும் அமர்த்தி அது ஒரு கூடமானால் இலையிலோ அல்லது வெளியிடமானால் தட்டிலோ சரியாக வினியோகிப்பது என்பது எத்தனை சிரமம் என்பது இப்படி ஒரு பெரிய குழுவோடு சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்
. அவ்வகையில் இக்குழுவினருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டியது நம் கடமை என்றே எண்ணுகிறேன். நான்கு நாட்கள் பயணத்தில் உணவினால் யாருக்கும் எந்த சிக்கலும் எழவில்லை என்பது இவர்களின் தரமான உழைப்புக்கு சான்று. வாழ்க இவர்களின் சீரிய பணி. இறைவன் இவர்களுக்கு வேண்டிய வரத்தை அருளட்டும் என்று வேண்டுவோம்.



உணவுக்குப் பின்னர் மதுரைமாநகருக்கு புறப்பட்டோம். நான்மாடக்கூடலானாலும் நெடுஞ்சாலை தவிர மற்ற சாலைகளெல்லாம் இனியும் பெரிதுபடுத்து முடியாத அளவுக்கு ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பேருந்திலிருந்து இறங்கி பரபரப்பான போக்குவரத்துக்கிடையே எச்சரிக்கையுடன் கவனமாக சாலைகளைக் கடந்து கூடலழகர் கோவிலுக்குச் சென்றோம். வெளியுலகின் பரபரப்பை சிறிதுகூட காட்டிக்கொடுக்காத அமைதியான சூழலில் உள்ளே கம்பீரமாக வீற்றிருக்கிறார் கூடலழகர். கூடுதல் அழகாக மிக அற்புதமான விமானம் மற்றும் இதர சிற்பங்கள். காண கண் கோடி வேண்டும் இக்கோவிலை அணுஅணுவாக ரசிப்பதற்கு. தரிசனம் முடிந்து வெளியே வரும்போது லேசாக மழை ஆரம்பித்தது. சாலை ஓரத்தில் மூடியிருந்த கடைகளுக்கு வெளியில் அத்தனை கூட்டமும் தஞ்சமடைந்தோம். சிறிது நேரத்தில் பேருந்து வரவே அத்தனை பேரும் மன நிறைவோடு வண்டி ஏறினோம்.

திரும்பும் வழியில் திருச்சி அருகே ஒரு பெட்ரோல் நிலையத்தில் கடைசி இரவு உணவு உட்கொண்டோம். அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் சென்னைக்கு வந்துவிடவே ஒவ்வொருவராக அவரவர்களுக்கு அருகில் உள்ள நிறுத்தங்களில் இறங்கிக்கொள்ள வெள்ளி இரவு தொடங்கிய பயணம் புதன் விடியற்காலை இனிதே நிறைவடைந்தது. மிகத் திறமையான ஓட்டுநர். வேகத்தடைகளை முன்கூட்டியே கவனித்து சீராக வேகத்தை கட்டுப்படுத்தியும், இவ்வளவு நீளமான வாகனத்தை வளைவுகளில் சிரமமின்றி அவர் கையாண்ட விதமும் வியக்கவைத்தது. அவருக்கும் எங்களது பாராட்டுகள், நன்றிகள்.

மத்வ மதத்தைச் சேர்ந்த எனக்கு இப்பயணம் இன்னமும் அதிகமான நிறைவு ஏற்படுத்துகிறது. ஏனென்றால், சாந்திரமான வருஷம் என்று அழைக்கப்படும் சந்திரனின் சுழற்சியைப் பின்பற்றி அமைந்த எங்கள் வருடக்கணக்கில், முப்பத்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரே வருடத்தில் அதிக மாஸம், நிஜ மாஸம் என்று ஒரு மாதம் இரண்டு முறை அனுசரிக்கும் வழக்கம் உண்டு. இவ்வருடம் அது இப்போது நிகழ்கிறது - அதிக ஸ்ராவண (ஆவணி) மாதம், பின்னர் நிஜ ஸ்ராவண மாதம் என ஒரே மாதம் இரண்டு முறை வரும். அப்படி வரும் அதிக மாஸம் மிகவும் புண்ணிய காலமாக கருதப்பட்டு ஏகப்பட்ட தான தருமங்கள், பூஜைகள், திருத்தலப் பிரயாணங்கள் ஆகியவை நடைபெறும். அப்படிப்பட்ட இந்த விசேஷ காலத்தில் திருப்புல்லாணி, மலைமேல் நம்பி, ஸ்ரீவைகுண்டம் உட்பட்ட பல திவ்ய தேசங்களை தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கும், நடத்திக்கொடுத்த ஸ்ரீ நாராயணன், அஷோக் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்பன்

ரகுநாதன்.