முக்திக்கு வழிகாட்டு மாயவனே
அரக்கனின் சிறையில் பிறந்தவனே - கண்ணா
ஆயர்பாடியில் வளர்ந்தவனே
ஆநிறை காக்கும் குலத்தவனே - உன்
அன்பர்கள் எங்களையும் காப்பாயே
வசுதேவரின் மகனாய் பிறந்தவனே - கண்ணா
வடபத்ர மஞ்சத்தில் துயின்றவனே
கோவர்தன கிரியை குடைபிடித்து - மழையில்
தேவேந்திரன் கர்வம் கரைத்தாயே
கோபியர் நெஞ்சம் கவர்ந்தவனே - கண்ணா
பாப விமோசனம் அருள்பவனே
துளசி தீர்த்தம் உன் பெயராலே - நிதம்
தூய்மை பெற்றிடத் தருவாயே
இரவல் பெற்ற அவல் தந்தும் - கண்ணா
இறவாச் செல்வம் அளித்தாயே
சுதாமர் மனதில் நின்றதுபோல் - எமையும்
சதா உன் நினைப்பில் வைப்பாயே
புன்னை மரமும் மயிலிறகும் - கண்ணா
புல்லாங்குழலும் தரும் உன் நினைவே
வாசம் மிக்க வகுளம் போல் - எங்கள்
வாழ்வும் மணக்க கருணை செய்.
பாண்டவர் பக்கம் நின்றவனே - கண்ணா
பாரினில் உனக்கு நிகரில்லையே
பார்த்தனுக்கு சாரதி நீதானே - எம்போல்
பாமரருக்கும் வழி காட்டுவாயே
கொடியோர்களை அழிப்பவனே - கண்ணா
அடியவர்களைக் காப்பவனே
சிறையின் கதவைத் திறந்ததுபோல் - எங்கள்
பிறவியின் கதவை அடைப்பாயே
அத்தத்தின் பத்தில் பிறந்தவனே - கண்ணா
இத்தைத தின்றிங்கே இராமல்
நித்தம் உன்னடி தொழ அருளி - பிறப்பிலா
முக்திக்கு வழிகாட்டு மாயவனே
Aug 21, 2021
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home